Showing posts with label ராஜபக்‌ஷே. Show all posts
Showing posts with label ராஜபக்‌ஷே. Show all posts

Tuesday, August 02, 2011

தோற்றுப்போன ராஜபட்சேவும், இற்றுப்போன அவர் எலக்‌ஷன் டெக்னிக்குகளும்

ராஜபக்ஷேவுக்கு இது சம்மட்டி அடி!

மக்கள் மனச்சாட்சியைச் சொன்ன உள்ளாட்சித் தேர்தல்!
கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை, உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வலிமையுடன் காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்! 

இலங்கையில் கடந்த 23-ம் தேதி வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளாட்​சித் தேர்தல் நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை, வல்​வெட்டித்துறை, சாவகச்சேரிஆகிய மூன்று நகர சபைகள், 10 பிரதேச சபைகள், கிளிநொச்சியின் பச்சிலைப்​பள்ளி, கரைச்சி, பூநகரி, முல்லைத் தீவின் துணுக்காய் உள்பட 17 உள்ளாட்சி அமைப்புகளில் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ வெற்றி பெற்றுள் ளது. கிழக்கில் திருகோணமலை மாவட் டத்தின் திருகோணமலை நகர் - புறநகர், அம்​பாறை மாவட்டத்தின் திருக்கோயில், காரைத் தீவு ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழர் கூட்டமைப்புக்கே வெற்றி.  

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில், வேலணை, ஊர்க் காவல் துறை, நெடுந் தீவு ஆகிய பிரதேச சபைகளில், அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணியில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில், சிங்களர்கள் கணிசமாக வசிக்கும் செருவில, குச்சவெளி ஆகிய பிரதேச சபைகளை மட்டுமே ராஜபக்ஷே கட்சி கைப்பற்றி உள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் (கருணாவின் முன்னாள் சகாவான) பிள்ளையானின் டி.எம்.வி.பி. கட்சிக்கு, ஈழ மக்கள் நான்காவது இடத்தையே அளித்தனர். அம்பாறை மாவட்டத்தின் காரை தீவுப் பிரதேச சபையில் 1.57 சதவிகித வாக்குகளும், திருக்கோயில் சபையில் 5.28 சதவிகித வாக்குகளையும் மட்டுமே அந்தக் கட்சி பெற்றுள்ளது.

யாழ் தீவகம் எனப்படும் நெடுந் தீவு, புங்குடு தீவு, காரைநகர், இழுவை தீவு, மண்டைத் தீவு, வேலணை, ஊர்க் காவல் துறை ஆகிய ஏழு தீவுகளிலும் நீண்ட காலமாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. ஆயுதக் குழுவின் ஆதிக்கம்தான் இருந்தது. 

எந்தத் தேர்தலானாலும், அவர்களை மீறி யாரும் பிரசாரத்துக்குக்கூட அங்கு போக முடியாது. 2002 நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயரில், நான்கு தமிழர் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அப்போது, யாழ்குடா நாட்டில் இருந்து தீவகப் பகுதியை நோக்கி, கூட்டமைப்பினர் பிரசாரத்துக்காகச் சென்றபோது, அல்லைப்பிட்டி என்ற ஊரில் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில், கூட்டமைப்பின் துணைத் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு மண்டை உடைந்தது. சிவாஜிலிங்கத்தின் கை முறிக்கப்பட்டது. இப்படியான வரலாறுகொண்ட தீவகப் பகுதியில், இந்த முறையும் கூட்டமைப்பினர் முறையான பிரசாரத்துக்குச் செல்ல முடியாதபடி, ஆயுதக் குழுவின் அடக்குமுறைகள் தொடரவே செய்தன. 

 கூடவே, சிங்கள ராணுவத்தின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்குக் கிடைத்தது.  தீவகப் பகுதியின் முன்னாள் ராணுவ கமாண்டரும், இப்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநருமான நிகால் ஜெயவிக்கிரம என்பவரை, கூட்டணியின் பிரசாரத்துக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தினார் ராஜபக்ஷே. இவ்வளவையும் மீறி, தீவகத்தின் காரை நகர் பிரதேச சபையை தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது.

மொத்த யாழ்குடாப் பகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில், ராஜபக்ஷே அரசு சகல இயந்திரங்களையும் களத்தில் இறக்கியது. தமிழகத்தின் திருமங்கலம் பாணியில், பணம், இலவசப் பொருள்களைக் கொடுத்து, வாக்காளர்களை மயக்க ஏதேதோ செய்தனர்.

மகிந்தவின் தம்பியும் அமைச்சருமான  பசில் ராஜபக்ஷே, 13 அமைச்சர்கள்​கொண்ட ஒரு படையுடன் இரு மாதங்களாக யாழ்ப்பாணம் பகுதியில் முகாமிட்டு இருந்தார். இவர் அடித்த தேர்தல் ஸ்டன்ட்கள், இந்திய அரசியல் வாதிகளே மூக்கில் விரல்வைக்கக்​கூடியவை!


ஆனால் தமிழர் கூட்டமைப்பின்வேட்​​பாளர்​​​களுக்குப் பிரசா​ரக் கூட்டம் நடத்த ராணுவ அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மீறி நடத்தியவர்கள் மீது சிவில் உடையில் வந்த ராணுவம்  தாக்கியது. இதுபற்றி, நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், மனித உரிமைகளுக்கான மையம் போன்ற நடுநிலை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. 'ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தின. ஆனா லும், ராஜபக்ஷே கட்சி கூட்டணியினரின் வன்முறைகள் நின்ற பாடில்லை.


இந்தச் சூழலில், ஈழ மக்கள் வாக்களிக்க வருவார்களா என்ற சந்தேகம் எழ... அதை மீறி, நொந்துகிடக்கும் அந்த மக்கள் வாக்களித்து தமது தெளிவான முடிவைக் காட்டிவிட்டனர்.

''போர் முடிந்த ஈழத்தில் மேம்பாடுபற்றி மட்டுமே அரசாங்கம் பேசுகிறது. ஈழ மக்களுக்கு அரசியல் அதிகாரமும் வேண்டும் என்கிறோம். அதே சமயம், இலங்கை அதிபரின் மீது யுத்தக் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகளும் வலியுறுத்தின. இந்த இரண்டையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் எமது மக்கள் இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலில் உறுதி​யாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!'' என்கிறார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் யாழ்ப்பாண எம்.பி-யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.  

உண்மைதான், 'ஈழம் வேண்டுமா, வேண்டாமா?’ என உலகம் அறிய ஐ.நா. சபை வாக்கெடுப்புநடத்த வேண்டும்!

நன்றி - ஜூ வி