நிகழும் நந்தன வருடம், கார்த்திகை மாதம் 17-ஆம் தேதி (2.12.12)
ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூச நட்சத்திரம்,
சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவன் நிறைந்த
சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில்- ஆந்தை அரசாட்சி
செலுத்தும் நேரத்தில், காலை மணி 10:51-க்கு (சூரிய உதயம் புக) நாழிகை
12.71/2-க்கு விசாக நட்சத்திரம் 3-ஆம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில்
ராகு பகவானும்; கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ
ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
ஆற்றல்- சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா
கிரகங்களான ராகுவும் கேதுவும்தான். எந்த கிரகத்துடன் சேர்கிறார்களோ, எந்த
கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ, எந்த கிரகங்களால்
பார்க்கப்படுகிறார்களோ... அதற்கு தகுந்தாற்போன்று... அதேநேரம், தனக்கென
விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.
ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்

வியாபாரச்
சின்னமான தராசு குறியைக் கொண்ட சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு
அமர்வதால், பாரம்பரிய வியாபாரிகள் பாதிப்படைவார்கள். சுதேசிப் பொருட்களின்
உற்பத்தி, விற்பனை குறையும். உணவு பதுக்கல் அதிகமாகும். விலைவாசி ஏற்றம்
கடுமையாக இருக்கும். 7.6.13 முதல் 11.12.13 வரை சனியும் ராகுவும் யுத்தம்
செய்வ தால் விமான விபத்து, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, விபத்துகள்,
பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன், ஈத்தேன், ஆர்கன் போன்ற மந்த வாயுக்கள்
வெளிப்பட, அதனால் பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்வது, நரைப்பதைத் தடுக்க
புதிய மருந்து கண்டறியப்படும். முகச்சீரமைப்பு, இதய அறுவை சிகிச்சை துறை
நவீனமாகும். மலை மற்றும் கடலோர நகரங்கள் பாதிப்படையும். தங்கத்தின் விலை
2013 ஜூன் மாதத்திலிருந்து குறைய வாய்ப்பு இருக்கிறது.
மீண்டும் வளைகுடா நாடுகள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பும். சமூக
எதிர் நடவடிக்கை கும்பல்கள் புதுத் தாக்குதலை நடத்தும். போதை மருந்து,
தங்கம் கடத்தல் அதிகரிக்கும். வன்முறையாளர்களைத் தடுக்க கடும் சட்டம்
வரும். மத்தியில் கூட்டணி மாறும். ஆட்சியாளர்கள் ஆட்சியைத் தக்கவைக்க
கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும். அனைத்து துறைகளிலும் பெண்கள் கை
ஓங்கும். பெண் சாதனையாளர்கள் அதிகரிப்பார்கள். அதேநேரம் பெண்களுக்கு எதிரான
கொடுமைகளும் அதிகரிக்கும். பாமர மக்கள் பயனடையும் வகையில் புது
சட்டதிட்டங்கள் உருவாகும். சாதாரணமானவர்களும் பதவியில் அமர்வார்கள். ஆடம்பர
வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாவார்கள். உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும்.
அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டில் அதிக முதலீடு
செய்வார்கள். ஐ.டி. நிறுவனங்கள் சரியும். வங்கிகளில் வராக்கடன்களை வசூலிக்க
சட்டம் கடுமையாகும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின்
பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். புதிய கனிம- கரிம வளங்கள் கண்டு
பிடிக்கப்படும். ராணுவத்தில் புதிய ஏவுணைகள் சேர்க்கப்படும். காடுகள்
சேதமடையும்.
அயல்நாடுகளைப் போன்று இந்தியாவிலும் நவீனமான பெரிய கட்டடங்கள்
உருவாகும். பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். கம்ப்யூட்டர், ஆடியோ-
வீடியோ சாதனங்களின் விலை வீழ்ச்சியடையும். செங்கல், சிமென்ட், மணல் போன்ற
கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சில
கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள்
உருவாகும். அவற்றுக்கான மருந்துகளும் கண்டறியப்படும். அணைக்கட்டுகள்
உடையும். ஷேர் மார்க்கெட், தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருக்கும்.
வெள்ளி விலை உயரும். தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு
போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு உண்டாகும். முக்கிய தீவிரவாதிகள்
பிடிபடுவார்கள். திரைத்துறை வளர்ச்சி அடையும்.
கேதுவால் ஏற்படப் போகும் பலன்கள்

கேது
பகவான் சுக்கிரனின் ஸ்திர வீடான ரிஷப ராசியை விட்டு விலகி சர வீடான மேஷ
ராசியில் அமர்வதால், பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் பாதிப்படையும்.
நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும். புதிய நகரங்கள்
உருவாக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் போலிகளைத் தடுக்க சட்டம்
வரும். கூட்டுக் குடும்பங்கள் உடையும். மக்கள் மனதில் தன்னம்பிக்கை
குறையும். நிம்மதி தேடி புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.
ஆன்மிகத் தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். பழைய கோயில்களில்
புதையுண்டிருக்கும் மர்மங்கள் வெளி வரும். யோகாசனம், மூலிகை மருத்துவம்
தழைக்கும். விபத்துகள் அதிகரிக்கும். காலபுருஷனின் முதல் வீட்டில் கேது
அமர்வதால் ஒற்றைத் தலைவலி, மூளைக் காய்ச்சல் அதிகரிக்கும். விநோதமான முக
அமைப்பில் உள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஈகோ, சந்தேகத்தால் விவாகரத்து
அதிகரிக்கும். பூமி வெடிப்பால் நிலச்சரிவு அதிகரிக்கும். பாகப்பிரிவினை,
சொத்துத் தகராறு ஆகியனவும் அதிகமாகும்.
மாணவர்களுக்கு தேர்வு முறைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
கல்வி நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவற்றின் தரம்
மேம்படுத்தப்படும். நவீனரக க்ரேன், வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட் களின்
உற்பத்தி அதிகரிக்கும். உண்ணாவிரதம், கடை
அடைப்பு மற்றும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே அதிகமாக நடக்கும்.
ராகு கடந்து செல்லும் பாதை
2.12.12 - 2.2.13 வரை விசாகம் 3-ல்
3.2.13 - 6.4.13 வரை விசாகம் 2-ல்
7.4.13 - 6.6.13 வரை விசாகம் 1-ல்
7.6.13 - 8.8.13 வரை சுவாதி 4-ல்
9.8.13 - 11.10.13 வரை சுவாதி 3-ல்
12.10.13 - 11.12.13 வரை சுவாதி 2-ல்
12.12.13 - 13.2.14 வரை சுவாதி 1-ல்
14.2.14 - 17.4.14 வரை சித்திரை 4-ல்
18.4.14 - 21.6.14 வரை சித்திரை 3-ல்
கேது கடந்து செல்லும் பாதை
2.12.12 - 2.2.13 வரை கார்த்திகை 1-ல்
3.2.13 - 6.4.13 வரை பரணி 4-ல்
7.4.13 - 6.6.13 வரை பரணி 3-ல்
7.6.13 - 8.8.13 வரை பரணி 2-ல்
9.8.13 - 11.10.13 வரை பரணி 1-ல்
12.10.13 - 11.12.13 வரை அசுவனி 4-ல்
12.12.13 - 13.2.14 வரை அசுவனி 3-ல்
14.2.14 - 17.4.14 வரை அசுவனி 2-ல்
18.4.14 - 21.6.14 வரை அசுவனி 1-ல்
பரிகாரம்
மூளை, முயற்சி, முனைப்பு, தன்மானம், உணர்ச்சி கிரகமான செவ்வாயின் மேஷ
வீட்டில் கேது அமர்வதால் ஜாதி- மதப் பற்றை விட்டுவிட்டு நாட்டுப் பற்று,
மொழிப் பற்றை வளர்த்துக்கொள்வோம். உணவு, உடை, உல்லாசம், கலைக்கு உரிய
கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் நவீன உடைகள் அணிவதை
தவிர்த்து பாரம்பரிய உடைகளை அணிவதுடன் கலப்படமில்லா பாரம்பரிய உணவுகளையும்
உட்கொள்வோம்.
1.
மேஷம்
ராகுவின் பலன்கள்: உங்கள்
ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் ராகு. திறமைகள் வெளிப்படும்.
வீண் விவாதம், மன உளைச்சல்கள் விலகும். எந்த விஷயத்திலும் சுயமாக
முடிவெடுங்கள். தம்பதியர் இடையே சந்தோஷம் நிலைக்கும். 7-ஆம் வீட்டில் ராகு
அமர்வதால் மனைவியுடன் சிறு விவாதங்கள் ஏற்படும்.
அதைப் பெரிதுபடுத்தவேண்டாம். மனைவிக்கு ரத்த அழுத்தம், கர்ப்பப்பை கோளாறு
வந்து நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வாய்க்கும். அரசு வேலை
விரைந்து முடியும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் யோகாதிபதியான குருவின் விசாக
நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், பணப்புழக்கம்
அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். சுப
நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில்
7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால், வாகனங்களை கவனமாக இயக்கவும். வீண்
சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். வேற்றுமொழிக்காரர்கள்,
வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உங்கள்
ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை
ராகு செல்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சகோதர வகையில்
கருத்துமோதல்களும் வந்துபோகும். வீடு- மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை
சரி பார்க்கவும். சொத்து சேரும். வழக்கில் வெற்றி, பழைய நண்பர்கள்-
உறவினர்களால் ஆதாயம் உண்டு. நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். மதிப்பு கூடும். ஜாமீன், காரண்டி கையெழுத்துக்கள் போட
வேண்டாம்.
கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும்.
மாணவர்களுக்கு விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசியல்வாதிகள், தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில்,
அணுகுமுறையை மாற்றுவீர்கள். 7-ஆம் வீட்டில் ராகு வந்து அமர்வதால்
கூட்டுத்தொழிலில் குழப்பங்களும், பிரிவுகளும் வரும். புதிய முதலீடுகளில்
கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டட வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில்
மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்ளுங்கள். பதவி உயரும். கணினித்
துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத்
துறையினர், போராடி வெற்றி பெறுவர்.
கேதுவின் பலன்கள்: கேது
உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால், சமயோசித புத்தியுடன் பேச வைப்பார்.
குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்தும்,
கடன்கள் குறித்தும் கவலை எழும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும்.
இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து
நீங்கும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில்
2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், பிள்ளைகளால் அலைச்சல்
இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உங்களின்
தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13
வரை கேது செல்வதால், பண வரவு உண்டு; திடீர் செலவுகளால்
பணப்பற்றாக்குறையும் ஏற்படும். சாலைகளைக் கடக்கும்போது கவனம் தேவை. வாகனம்
வாங்குவீர்கள்; வீடு கட்டுவீர்கள். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில்
12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில்
நமைச்சல் வந்துபோகும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.
புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். குறிப்பாக, அசுவினி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடன்
செயல்படுவது நல்லது.
சொத்து வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில், கொடுக்கல்- வாங்கலில்
நிம்மதியுண்டு. பங்குதாரர்களுடன் விவாதங்கள் எழும்; பொறுத்துப் போகவும்.
புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக்கான வரிகளை முறையாக செலுத்திவிடுவது
நல்லது. உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். எனினும், மூத்த அதிகாரிகளின்
ஆதரவு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடைய வைக்கும்.
2.
ரிஷபம்
ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள்
ராசிக்கு 6-ஆம் இடத்தில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். குடும்பத்தார்
பாசத்துடன் நடப்பர். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். மனைவியின் ஆரோக்கியம்
கூடும். தந்தை வழி உறவினர் களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
வருமா வராதா என்றிருந்த பணம் வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை பைசல்
செய் வீர்கள். எதிரிகளிடத்தும் உங்களின் மதிப்பு உயரும். பயணங்கள் திருப்தி
தரும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
அஷ்டம - லாபாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல்
6.6.13 வரை ராகு செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டில்
இருப்பவர்கள் உதவுவர். தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். ஷேர் மூலம் பணம்
வரும். ராகு தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை
செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். புது வேலை கிடைக்கும். வழக்குகள்
சாதகமாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம்
வாங்குவீர்கள். 14.2.14 முதல் 21.6.14 வரை, உங்களின் சப்தம-விரயாதிபதியான
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், மறைமுக எதிர்ப்புகள்
உண்டு. பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு- மனை வாங்குவீர்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். கட்டடப் பணிகளைத் தொடர பணம் கிடைக்கும்.
குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடும்
அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணம்
கைகூடும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியரின்
நினைவாற்றல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும் அரவணைப்பும்
கிட்டும்.
வியாபாரத்தில் புது யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கெமிக்கல்,
எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு.
பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். வெளிநாட்டு நிறுவனங் களுடன் ஒப்பந்தம்
செய்வீர்கள். உத்தியோகத்தில், தொந்தரவு தந்த மேலதிகாரி இனி கனிவாகப்
பேசுவார். கணினித் துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய வாய்ப்பு
தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது
இப்போது 12-ல் சென்று அமர்கிறார். உங்களின் அகமும் முகமும் மலரும்.
தயக்கம், முன்கோபம், விரக்தி விலகும். ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின்
கூடா பழக்கவழக்கங்கள் விலகும். தடைப்பட்டிருந்த மகனின் திருமணம் முடியும்.
உங்களுக்கான மருத்துவச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன்
மனஸ்தாபங்கள் ஏற்படினும், ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள்
தீரும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12
முதல் 2.2.13 வரை கேது செல்வதால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வரலாம். வேலை
அதிகரிக்கும். சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். அரசு காரியங்கள் நல்லவிதமாக
முடியும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதனும் -
சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13
வரை கேது செல்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கௌரவ பதவி தேடி
வரும். கேது, தமது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13
முதல் 21.6.14 வரை செல்வதால், சுற்றியுள்ளவர்களின் பலம்- பலவீனம் அறிந்து
செயல்படுங்கள். தூக்கம் குறையும். குடும்பத்தில் சச்சரவு எழும். கையிருப்பு
கரையும். பயணங்கள் அதிகரிக்கும். வேற்றுமொழி, இனத்தவரால் ஆதாயம் உண்டு.
சொந்த ஊரில் செல்வாக்கு உயரும்.
பிரபலங்களின் அறிமுகத்தால் சில தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
வியாபாரத்தில், பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துப்
போகவும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சம்பளம்- பதவி
உயர்வு உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களுக்கு அதிரடியான முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.
3.
மிதுனம்
ராகுவின் பலன்கள்: 2.12.12
முதல் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார் ராகு. 5-ஆம்
இடம் ராகுவுக்கு உகந்ததல்ல என்றாலும், உங்கள் யோகாதிபதி சுக்கிரன்
வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார்.
சச்சரவு எழுந்தாலும், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் நீடிக்கும்.
புத்தி ஸ்தானமான 5-ல் ராகு அமர்வதால், மற்றவர்களை சந்தேகத்துடன்
பார்ப்பீர்கள். முடிவுகளில் தெளிவில்லாத நிலை, இனம்புரியாத கவலைகள்
ஏற்படலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கர்ப்பிணிகள் நெடுந்தூர
பயணங்களைத் தவிர்க்கவும். சொத்து தாமதமாகவோ குறைவாகவோ வந்தாலும்
ஏற்றுக்கொள்ளுங்கள்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சப்தம-தசம ஸ்தானாதிபதியான
குருவின் விசாக நட்சத்திரத்தில், 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால்,
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடனாகக் கொடுத்த தொகை கைக்கு வரும். பெரிய
பதவி, கல்வியாளர்களின் நட்பு, விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
மனைவியுடன் ஈகோ பிரச்னை எழலாம். உத்தியோகத்தில் இடமாற்றங்களும்,
வேலைச்சுமையும் இருக்கும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13
முதல் 13.2.14 வரை செல்வதால் அலைச்சல், பிள்ளைகளால் செலவு கூடும். சிலர்
அயல்நாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உங்களின்
சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல்
21.6.14 வரை ராகு செல்வதால் சொத்து வாங்குவது- விற்பதில் இழப்பு வரும்.
உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவர். விபத்து ஏற்படலாம். கமிஷன்,
புரோக்கரேஜ் மூலம் திடீர் பண வரவு உண்டு. மகனின் கல்வி, வேலை தொடர்பாக நல்ல
நிறுவனத்தில் வாய்ப்பு கிட்டும். குடும்பப் பிரச்னைகளில் அறிவுபூர்வமாக
செயல்படவும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். மாணவர்களுக்கு, அதிக
மதிப்பெண்கள் மற்றும் போட்டிகளில் பரிசு-பாராட்டுக்களால் மகிழ்ச்சி உண்டு.
உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத்
தவிர்க்கவும்.
வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை நவீனமாக்குவீர்கள்.
இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், சம்பள
உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினருக்கு
சம்பள உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல
நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது
உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் வந்து அமர்கிறார். பணம் சேரும்; கடன்
அடைபடும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும். வேலையில் இருந்தாலும் சிறு
முதலீட்டில் வியாபாரம் துவங்கவும் முயற்சிப்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பை
சரியாகப் பயன்படுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வீடு கட்டும் பணி
பூர்த்தியாகி புது வீட்டில் குடிபுகுவீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12
முதல் 2.2.13 வரை கேது செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை
எடுப்பீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். வங்கி
லோன் கிடைக்கும். கௌரவ பதவியில் அமர்வீர்கள். உங்கள் பூர்வ
புண்ணியாதிபதியும் - விரயாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில்
3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், கனிவாகப் பேசி காரியம்
சாதிப்பீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
எதிர்பாராத பயணம் உண்டு. ரசனைக்கு ஏற்ற வீடு- வாகனம் அமையும். கேது, தமது
சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால்,
வழக்கு நெருக்கடிகள் நீங்கும். சொந்த தொழில் தொடங்குவீர்கள்.
புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு
கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில்... ராகு உங்களை பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.
4.
கடகம்
ராகுவின் பலன்கள்: ராகு
பகவான், 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் வந்து
அமர்கிறார். 5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், குழந்தை பாக்கியம்
கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பக்குவமான பேச்சால் காரியம்
சாதிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டில்
தடைப்பட்டிருந்த திருமணம், நடந்து முடியும்.
தாம்பத்தியம் இனிக்கும். உங்களின் குடும்பப் பிரச்னைக்குக்
காரணமானவர்களை விலக்குவீர்கள். வழக்கு சாதகமாகும். விலகிப்போன நண்பர்கள்-
உறவினர்கள், இனி வலிய வந்து உறவாடுவர். ராகு 4-ல் அமர்வ தால் தாயாருக்கு
ரத்த அழுத்தம், நரம்புக்கோளாறு ஏற்படலாம். வாகனத்தை இயக்கும்போது கவனம்
தேவை.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: சஷ்டம-பாக்யாதிபதியான குருவின்
விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், இழுபறியான
வேலைகள் முடிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு- மனை யோகம்,
மகனுக்கு வேலை, மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடன் கிடைக் கும்.
ராகு 7.6.13 முதல் 13.2.14 வரை தமது சுய நட்சத்திரமான சுவாதியில்
செல்வதால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சிறு விபத்து
கள் நிகழலாம். புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. சிலர், வீடு மாற
வேண்டியது வரும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் - தசம ஸ்தானாதிபதியுமான
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு
செல்வதால் செலவுகள் கட்டுப்படும். சொத்துச் சேர்க்கை, உத்தியோகத்தில்
உயர்வு உண்டு. சகோதர-சகோதரிகளுடனான மனக்கசப்பு நீங்கும். வெளி உணவுகளைத்
தவிர்க்கவும். கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். லேசாக
தலைச்சுற்றல் வரும் என்பதால், மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை.
கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வர். மாணவர்கள்
உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவர். அரசியல் வாதிகளுக்கு, கௌரவப்
பதவிகள் தேடிவரும். வியாபாரத்தில், ராஜ தந்திரத்தால் லாபத்தைப்
பெருக்குவீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம்
உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறார் தேவை.
உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரியை விமர்சிக்கவேண்டாம். கணினித் துறைனருக்கு
அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரின் எண்ணங்கள்
பூர்த்தியாகும்.
கேதுவின் பலன்கள்: கேது
10-வது வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு பதற்றம், வேலைகளில் அலைச்சல்
உண்டு. வி.ஐ.பி-கள் ஆதரிப்பர். மூத்த சகோதரருடனான கருத்து மோதல்கள்
விலகும். குடும்பத்தில் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அதிகரித்தாலும்
செலவுகளும் உண்டு.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
தனாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல்
2.2.13 வரை கேது செல்வதால் யதார்த்தமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். சுக லாபாதிபதியான சுக்கிரனின்
பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால்
எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர் உதவுவர். வேலை
கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். திருமணம் கூடிவரும். மூத்த
சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. கேது தமது சுய நட்சத்திரமான அசுவினியில்
12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் பணவரவு உண்டு. திடீர் செலவுகளும்
உண்டு. உத்தியோகத்தில் எதிர்ப்புகளும் இடமாற்றமும் இருக்கும். சொத்து
வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.
வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத்
தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளைக்
கையாளுவீர்கள். அரசாங்க வரிகளை முறைப்படி செலுத்திவிடுங்கள். பங்குதாரர்கள்
உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்தியோகத்தில்
அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சின்னச்சின்ன அவமானங்களைச் சந்திக்க
வேண்டியது வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி ஓய்வெடுக்க முடியாதபடி உங்களை
கசக்கிப் பிழிந்தாலும், இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரியவைப்பதாக
அமையும்!
5.
சிம்மம்
ராகுவின் பலன்கள்: ராகு
பகவான், 2.12.12 முதல் 21.6.14 வரை, உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு
வந்து அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக கடனை பைசல்
செய்வீர்கள். குடும்பத்தில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும்.
வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வரவேண்டிய
பணம் வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். மகனுக்கு நல்ல வேலை
கிடைக்கும். மகளுக்கும் நீங்கள் எதிர்பார்த்தது போன்று, வெளிநாட்டு
வேலைவாய்ப்பு கூடிவரும். சிலர், வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலன் மேம்படும். வீண் பயம்,
கனவுத் தொல்லைகள் நீங்கும். இளைய சகோதரரிடம் மனஸ்தாபம் வந்தாலும் பாசம்
குறையாது.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ
புண்ணியாதிபதியும்-அட்டமாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில்
2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வ தால் பயம், கவலை விலகும். சுப
நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம்
அதிகரிக்கும். நாடாளுவோர் அறிமுகமாவர். மகளுக்குத் திருமணம் முடியும்.
ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வ
தால், தைரியமாக முடிவெடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது முதலீடு
செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். வழக்குகள்
சாதகமாகும். உங்களின்
சுகாதிபதியும்-பாக்கியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்
14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் குடும்ப வருமானம் உயரும். பழைய
சொத்து வந்துசேரும். மீதிப்பணம் தந்து சொத்தை கிரயம் செய்வீர்கள். புதிய
பொறுப்புகள், பதவிகள் வரும்.
வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில்
இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவர். கன்னிப் பெண்கள்
பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள்.அரசியல்வாதிகள், ஆதாரம் அற்ற
குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில், புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள்
அதிகரிப்பர். ஷேர், கமிஷன், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களை அலைக்கழித்த
மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். கணினித் துறையினருக்கு
அயல்நாடு செல்ல வாய்ப்பு அமையும். கலைஞர்களுக்கு, பெரிய நிறுவனங் களில்
வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது
இப்போது ராசிக்கு 9-ஆம் இடத்தில் வந்து அமர்வதால், வேலைச்சுமை குறையும்.
குடும்பத்தில் குழப்பம் அகலும். மூத்த சகோதரர் உதவு வார். இளைய சகோதரியின்
திருமணத்தை சிறப்பாக முடித்து வைப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட
வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சம்பளம்- பதவி உயர்வு உண்டு. 9-ஆம்
இடத்தில் கேது அமர்வதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். ஜாமீன்
கையெழுத்திட வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12
முதல் 2.2.13 வரை கேது செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து
முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். உங்கள் திருதிய -
ஜீவன ஸ்தானாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல்
11.10.13 வரை கேது செல்வதால் தைரியமாக முடிவெடுப்பீர்கள். மனைவி வழி
உறவினர்கள் உதவுவர். வீடு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம்
கூடி வரும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல்
21.06.14 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். புதிய
முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்
களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பத்திரங்களை கவனமாகக்
கையாளுங்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில்
பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில், கேது அலைக்கழித்தாலும் ராகுவின் அனுக்கிரகம் அதிரடி முன்னேற்றத்தைத் தரும்!
6.
கன்னி
ராகுவின் பலன்கள்:
ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில்
வந்து அமர்கிறார். செலவுகள் கூடும். வேலைகள் தடைப்பட்டு முடியும். வாக்கு
ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. முன்கோபத்தைத்
தவிர்க்கவும். கண், காது, பல் வலி வரலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல்
மருந்து எடுக்க வேண்டாம். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் மற்றொரு
மருத்துவரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். புது நண்பர்களை
வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடனான மனக் கசப்பு நீங்கும்.
சகோதரியின் திருமணம் இனிதே முடியும். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் கடனை
திருப்பித் தருவர்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுக-சப்தமாதி பதியான
குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால்
தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு களைகட்டும். சிலர், சொந்த ஊரை விட்டு
இடம் பெயர்வீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில்
செல்வாக்கு கூடும். ராகு தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல்
13.2.14 வரை செல்வதால் ஆரோக்கியம் பாதிக்கும். கணவன்- மனைவிக்குள் வீண்
சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். உங்களின்
திருதிய -அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14
முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் நிலம், வீடு வாங்குவது- விற்பதில் கவனம்
தேவை. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். மின்சார
சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் உயர்
கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசு காரியங்களில்
வெற்றியுண்டு. பத்திரங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வழக்குகளில்
இழுபறி ஏற்படும். கன்னிப் பெண்களுக்கு அலட்சியம், பயம் விலகும். நகைகளை
கவனமாகக் கையாளுங்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.
அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள்.
வியாபாரத்தில், புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். கடையை
விரிவுபடுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், மோதல்போக்கு மறையும். புதிய பதவி வாய்க்கும். கணினி
மற்றும் கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
கேதுவின் பலன்கள்: கேது
இப்போது உங்களின் ராசிக்கு 8-ல் வந்தமர்கிறார். அலைச்சல், பயம் ஏற்படும்.
சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். மனைவியுடன்
விட்டுக்கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் பொறுமை அவசியம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
விரய ஸ்தானாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில்
2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும். சுபச் செலவுகள் உண்டு. வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம்.
உங்களின் தன- பாக்கியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13
முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம்
கூடிவரும்.
கணவன்- மனைவிக்குள் மனக்கசப்புகள் நீங்கும். வீடு- வாகனம் சேரும். கேது
தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால்,
தூக்கம் குறையும். விபத்துகள் வந்து நீங்கும். சிலர், உங்கள் மீது வீண் பழி
சுமத்தினாலும் கலங்காதீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு வரும்.
கேது 8-ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும்.
மற்றவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். சிலருக்கு வெளிநாடு
செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு.
உத்தியோகத்தில் அதிக வேலையின் காரணமாக வீட்டுக்கு தாமதமாகச் செல்ல நேரிடும்
ஆதலால், குடும்பத்தில் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்களின் பலம்- பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்!
7.
துலாம்
ராகுவின் பலன்கள்: ராகு
பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால்
பிரச்னைகள் குறையும். இடம் அறிந்து பேசும் கலையை அறிவீர்கள். செலவுகள்
சுருங்கும். பண வரவு உண்டு.ஏற்கெனவே, உங்கள் ராசிக்குள் சனியும் இருப்பதால்
நீரிழிவு, யூரினரி இன்ஃபெக்ஷன், ஹார்மோன் கோளாறு மற்றும் தலை, தோள்
பட்டையில் வலி வந்துபோகும். முன்கோபம், சிறு வேலைகளிலும் சிக்கல் ஏற்படும்.
எனினும், உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு ராகு நட்புக் கிரகமாக வருவதால்,
அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதிய- சஷ்டமாதிபதியான
குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால்
தடைகள் நீங்கும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றங்கள், இழப்பு
களைச் சந்திக்க நேரிடும். சிலர் வீடு மாறுவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய
கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான
சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள்
அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் புது
முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்களின் தன-சப்தமாதிபதியான செவ்வாயின்
சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால்,
எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்னையைத் தீர்க்க புது வழி
கிடைக்கும். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்துபோகும்.
ராசியில் நிற்கும் ராகு சலிப்பை உண்டாக்குவார். வீண் பகை, மனக்
கசப்புகள் வரும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எவருக்கும்
ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். அயல்நாட்டு பயணங்கள் தேடிவரும்.
புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப் பெண்கள், முக்கிய விஷயங்களை
பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளவும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.
மாணவர்களுக்கு, போட்டிகளில் பரிசு- பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள்
தலைமையைப் பற்றி குறைகூற வேண்டாம்.
வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும். முக்கிய வேலைகளை நீங்களே
முன்னின்று முடியுங்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். புது
ஆர்டர்களை போராடி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உரிமைகளும், சலுகைகளும் உடனே
கிடைக்கும். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள்
வரும். கலைத் துறையினரின் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்புகள் வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்: கேது
இப்போது ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். வீண் பயம்
விலகும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். மனைவியிடம்
விட்டுக்கொடுத்து போகவும். சொத்துப் பிரச்னை, பங்காளி சண்டைக்காக
நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசு காரியங்களில் கவனம் தேவை. குடும்ப
விஷயங்களை எவரிடமும் சொல்ல வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை
நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால்
பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், முன்கோபத்தால்
புது பிரச்னைகள் உருவாகும். புது முதலீடுகள், மற்றவர்களை நம்பி பெரிய
முடிவுகள் வேண்டாம். உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி
நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் புதிய பாதையில்
பயணித்து வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர். வீடு- மனை, வாகனம்
வாங்குவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். கேது, தனது சுய நட்சத்திரமான
அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் சிறுசிறு
விபத்துகள் வந்து நீங்கும். உறவினர்கள் இடையேயான மனஸ்தாபங்கள் விலகும்.
7-ல் கேது அமர்வதால், கூட்டுத்தொழிலை தவிர்க்கவும். வேலையாட்களை
விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறன்
கூடும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, நீங்கள் எதிர்நீச்சலில் வெற்றி பெற்று சாதிக்கவைப்பதாக அமையும்.
8.
விருச்சிகம்
ராகுவின் பலன்கள்: ராகு
2.12.12 முதல் 21.6.14 வரை ராசிக்கு 12-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால்
நோய் நீங்கும். சந்தோஷம் கூடும். உங்களை அலட்சியப்படுத்தியவர்களும்
வலியவந்து பேசுவர். வேலைகள் உடனடியாக முடியும். பிரிந்த தம்பதி
ஒன்றுசேர்வர். வர வேண்டிய பணம் தாமதமின்றி வரும். வீட்டில் தொடர்ந்து
நல்லது நடக்கும். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்குக் கிடைக்கும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தன-பூர்வ புண்ணியாதிபதியான
விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால்
பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள், பூர்வீகச் சொத்து, ஷேர் மூலம் பணம்
வந்து சேரும். மகளின் திருமணம்; மகனுக்கு வேலை... எல்லாம் நல்லபடியாக
முடியும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். ராகு, தனது சுய
நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை ராகு செல்வதால் அயல்நாடு
செல்ல விசா கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடிவரும். உங்கள் ராசி
நாதனும் - சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14
முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர்
யோகம் உண்டாகும். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபமாக முடியும். கடனை
அடைப்பீர்கள்.
பிள்ளைகளை உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி
வைப்பீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தந்தையுடனான மனக் கசப்புகள்
நீங்கும்; தாயின் உடல்நிலை சீராகும். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும்.
கௌரவ பதவிகள் தேடி வரும். கன்னிப்பெண்களின் மனம் தெளிவாகும்; வேலை
கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். அரசியல்வாதிகள்,
தலைமையிடம் நல்ல பெயரெடுப்பீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால்
வெல்வீர்கள். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகள் செய்வீர்கள். ஏற்றுமதி -
இறக்குமதி லாபம் தரும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். கணினித்
துறையினருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கலைஞர்களுக்கு
புகழ், வருமானம் உயரும்.
கேதுவின் பலன்கள்: கேது
பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால்
பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். ஷேர்
மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவர்.
பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்குகள்
சாதகமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12
முதல் 2.2.13 வரை கேது செல்வதால், அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை
கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பளம் உயரும். அதிகாரப் பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரைகுறையாக நிற்கும் கட்டடப் பணியைத்
தொடங்குவீர்கள். உங்களின் சப்தம-விரயாதிபதியான சுக்கிரனின் பரணி
நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் அடிப்படை
வசதிகளை மேம்படுத்துவீர்கள். ரசனைக்கேற்ற வீடு- வாகனம் அமையும்.
அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கேது, தனது சுய நட்சத்திரமான அசுவினி
நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், சிக்கல்கள் தீரும்.
எதிர்பாராத பணவரவு உண்டு. மகான்களிடம் ஆசி பெறுவீர்கள்.
கேது 6-ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்திசாலித் தனமாகப்
பேசி காரியம் சாதிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள்
வெற்றியடையும். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை
வாங்கிக் கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். கடையை வேறு
இடத்துக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும்.
உத்தியோகத்தில் பதவி-சம்பள உயர்வு உண்டு.
இந்த ராகு-கேது பெயர்ச்சி, வாழ்வில் பல ஏற்றங்களைக் காண வைப்பதாக அமையும்!
9.
தனுசு
ராகுவின் பலன்கள்: ராகு
2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசியின் லாப வீட்டுக்கு வருவதால்
தன்னம்பிக்கையையும், பண வரவையும் தருவார். செலவுகள் குறையும். சவாலான
காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி
திரும்பும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து
விலகுவர். உயர் கல்வியில் வெற்றி பெறுவர். மகளின் திருமணத்தை கோலாகலமாக
நடத்துவீர்கள். வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல வேலை
கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
ஆரோக்கியம் மேம்படும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும்- சுகாதிபதியுமான
விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால்
தாழ்வுமனப்பான்மை நீங்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
தாயாரின் உடல் நிலை சீராகும்; அவர் வழி உறவினர் மத்தியில் இருந்த மோதல்கள்
விலகும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை
செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். விரயாதிபதியும் - பூர்வ புண்ணியாதிபதியுமான
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு
செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிக்கு திருமணம்
நிச்சயமாகும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே
முடியும். குலதெய்வத்திடம் குழந்தைபேறு பொருட்டு வேண்டிக்கொண்ட
பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள்
நீங்கி கல்யாணம் நடக்கும். அரசியல்வாதிகள், இழந்த பதவியை மீண்டும்
பெறுவார்கள்.
வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புது
யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில்
அதிகாரிகளுடனான மோதல் போக்கு மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பதவி -
சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
கலைத் துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் வரும்; சம்பள பாக்கியும்
வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்: கேது
பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு
வந்து அமர்கிறார். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் உண்டு. அவர்களின் நட்பு
வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத்
தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள
வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின்
பாக்கியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில்
2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் அரசு காரியங்கள் விரைந்து
முடியும். பணப் பற்றாக்குறை ஏற்படும். தந்தைக்கு நெஞ்சு வலி, வேலைச்சுமை
வந்துபோகும். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சஷ்டம -
லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை
கேது செல்வதால் பண வரவு அதிகரிக்கும். புது வேலை அமையும். வி.ஐ.பி-கள்
அறிமுகமாவர். கௌரவ பதவிகள் தேடி வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை
சாதகமாகும். உறவினர் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். கேது, தனது
சுய நட்சத் திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால்,
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மூச்சுப் பிடிப்பு,
ரத்தசோகை, சிறுநீர்ப் பாதையில் அலர்ஜி வரக்கூடும். பூர்வீகச் சொத்துப்
பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம்
தலையிடாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில்
பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். புரோக்கரேஜ், கெமிக்கல்,
ஏற்றுமதி-இறக்குமதி வகை களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த
பதவி - சம்பள உயர்வை கொஞ்சம் போராடி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில் கேதுவால் ஞானமும், ராகுவால் வசதியும், நிம்மதியும் கிட்டும்.
10.
மகரம்
ராகுவின் பலன்கள்:
ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து
அமர்கிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடரும்.
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை
அடைக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை கிட்டும்.
உழைப்புக்கான நற்பலனை அடைவீர்கள். குல தெய்வத்தை மறக்காதீர்கள். குழந்தை
இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாடகை வீட்டிலிருந்து
சொந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும் -
விரயாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13
வரை ராகு செல்வதால், தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள்,
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில்
7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால், உத்தியோகத்தில் இடமாற்றம்
வேலைச்சுமை உண்டு. எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். எவருக்கும் ஜாமீன்,
கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சுக - லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் தாயாருக்கு ரத்த
அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துபோகும். புது வேலை கிடைக்கும். சகோதர
வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்றுவிட்டு வேறு சொத்து
வாங்குவீர்கள்.
ராகு 10-ல் வருவதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். மகனின் திருமணம் சிறப்புற
நடந்தேறும். கன்னிப்பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல
கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். பெற்றோரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போகவும்.
வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால்தான் லாபம்
கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி, நல்ல வேலையாட்களை பணியில்
அமர்த்துவீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். புது
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், முக்கிய ஆவணங் களைக்
கையாளும்போது கவனம் தேவை. கணினித் துறையினருக்கு பதவி- ஊதிய உயர்வு உண்டு.
கலைஞர்களுக்கு, புது வாய்ப்பு கதவை தட்டும்.
கேதுவின் பலன்கள்: கேது
இப்போது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், பக்குவம்
கூடும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள்
நடக்கும். மகனை படிப்பு- வேலையின் பொருட்டு வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
அஷ்டமாதி பதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில்
2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், மறைமுக எதிர்ப்பு கள் வரும்.
உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவர். அரசாங்க வரிகளை உடனடியாகச்
செலுத்துங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உங்கள் பூர்வ
புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13
முதல் 11.10.13 வரை கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் நீண்ட நாள் ஆசைகள்
நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பண உதவி, மகளுக்கு நல்ல வரன் அமையும்.
பூர்வீகச் சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். கேது தனது சுய
நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் மன
இறுக்கம், வீண் டென்ஷன் வந்துபோகும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி பெரிய
முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகைகளை கவனமாக கையாளுங்கள்.
கேது 4-ஆம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும்போது
யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே
சேமித்துக்கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. வியாபாரத்தில், உங்களின்
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும்
பாராட்டு, பதவி உயர்வு உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, தொலைநோக்கு சிந்தனையால் உங்களை வெற்றிபெற வைக்கும்!
11.
கும்பம்
ராகுவின் பலன்கள்: உங்கள்
ராசிக்கு ராகுபகவான் இப்போது 9-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். செயல்களை
எளிதில் முடிப்பீர்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சுபகாரியம் கூடி
வரும். குழந்தை இல்லாதவர்க்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். கையில் பணம்
புரளும். குலதெய்வக் கோயில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசு
அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தன-லாபாதிபதியான
குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகுபகவான்
செல்வதால் கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும். பதவி
தேடிவரும். நல்ல வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். புது சொத்து
வாங்குவீர்கள். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில்
7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பம்,
செலவினங்கள் ஏற்படும். உடம்பில் இரும்புச்சத்து குறையும். வாகனத்தை
இயக்கும்போது கவனம் தேவை. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய
வேலையை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். சேவகாதிபதியும்-ஜீவனாதிபதியுமான
செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 முடிய
ராகுபகவான் செல்வதால் பயம், படபடப்பு வந்து செல்லும். உடன்பிறந்தோருடன்
விட்டுக் கொடுத்துப் போங்கள். சொத்து வாங்கும்போது கவனமாக
இருங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு 9-ஆம் வீட்டில்
அமர்வதால் தந்தையின் ஆரோக்கியம் குறையும். பூர்வீகச் சொத்தை விற்று
வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். மதிப்பு உயரும். வி.ஐ.பி-கள் நட்பாவர். பண
உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். கன்னிப் பெண்களின் சோர்வு,
களைப்பு நீங்கும். திருமணம் இனிதே முடியும். பாதியில் விட்ட கல்வியை
தொடர்வீர்கள். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். போட்டியில் பரிசு கிட்டும்.
அரசியல்வாதிகள் மதிக்கப்படுவர்.
வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்களை விட்டுப்
பிடியுங்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். இரும்பு, பருத்தி,
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் ஆதாயம் தரும். அரசு காரியத்தில்
கவனம் தேவை. ராகு பகவான் 9-ல் நுழைவதால் உங்களின் மேலதிகாரி வேறு
இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை குறையும்.
கணினித் துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும். கலைத் துறையினரின் சம்பளப்
பாக்கி கைக்கு வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்: கேது
பகவான் இப்போது 3-வது வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.
சங்கடங்கள் தீரும். பணஉதவி கிடைக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம்
அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். தாயாரின் உடல்நிலை
சீராகும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12
முதல் 2.2.13 வரை கேதுபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் உதவுவர்.
அரசால் ஆதாயம் உண்டு. உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி
நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பணப்புழக்கம்
அதிகரிக்கும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி
உறவினர்கள் உதவுவர். தந்தை வழி சொத்து வந்து சேரும். கேதுபகவான் தன் சுய
நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை கேது
செல்வதால் தைரியம் பிறக்கும்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாட்டில் இருப்பவரால் ஆதாயம்
உண்டு. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். உங்களால்
பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவுவர். வியாபாரத்தில். வேலையாட்கள்
பொறுப்புடன் செயல்படுவர். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை
வெளிப்படும். உயரதிகாரி பாராட்டுவார். வெளிநாட்டுத் தொடர்பு உடைய
நிறுவனத்தில் இருந்து வாய்ப்பு வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
மொத்தத்தில், ராகுவால் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், கேதுவால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.
12.
மீனம்
ராகுவின் பலன்கள்: உங்கள்
ராசிக்கு 9-ல் அமர்ந்திருந்த ராகு பகவான் இப்போது, எட்டில் சென்று
மறைகிறார். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்தில் இருந்த
சிக்கல் தீரும். தம்பதிக்குள் சிறு விவாதம் ஏற்படும். ராகு 8-ல் அமர்வதால்
மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான
குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை
ராகுபகவான் செல்வதால் பணம் வரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். செலவு, வாகன
விபத்து, மறைமுக விமர்சனம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை,
இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில்
7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் எந்த விஷயத்தையும் போராடி
முடிப்பீர்கள். எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். பித்தத்தால் தலைச்சுற்றல்,
வயிற்று வலி ஆகியன ஏற்படும். உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 முடிய திடீர் பணவரவு உண்டு. சொத்து
வாங்குவது- விற்பது நல்லவிதமாக முடியும். மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.
சிறுசிறு நெருப்புக் காயங்கள், பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம்
ஆகியன வந்துபோகும். பிள்ளைகள், உயர்கல்வியில் தேர்ச்சி பெறுவர். மகளுக்கு
நல்ல வரன் அமையும். புது வீடு மாறுவீர்கள். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள்.
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு
அவசியம். திருமணம் தடைப்பட்ட பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.
மாணவர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். நண்பர்களுடன் மனஸ்தாபம்
ஏற்படும். அரசியல்வாதிகள் அவசர முடிவைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் நயமாகப் பேசி பாக்கியை வசூல் செய்யுங்கள். ஷேர்,
புரோக்கரேஜ், கமிஷன் ஆகியன ஆதாயம் தரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
பங்குதாரர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
சலுகைகளுடன் பதவியும் உயரும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து
வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவர்.
கேதுவின் பலன்கள்: உங்கள்
ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு
2-வது வீட்டில் நுழைகிறார். பல்வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும்.
கையிருப்பு கரையும். மகளின் திருமணம் நடந்தேறும். மகனுக்கு நல்ல வேலை
கிடைக்கும். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்
சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12
முதல் 2.2.13 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர் நண்பராவர்.
அரசியல்வாதிகள் உதவுவர். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல
தீர்ப்பு வரும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். கடனில் பாதியை
அடைப்பீர்கள். உங்கள் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி
நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் இளைய சகோதரர்
ஆதரிப்பார். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். விலை உயர்ந்த பொருட்கள்
வாங்குவீர்கள். வேற்றுமொழியினர் உதவுவர். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான
அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.06.14 வரை கேது செல்வதால்
பணப்பற்றாக்குறை, டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்துபோகும். அடுத்தவருக்கு
உதவுவதில் கவனம் தேவை. வழக்கில் அலட்சியம் வேண்டாம். கேதுபகவான் 2-ஆம்
வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது
கவனம் தேவை. வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் கவனமாக இருங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.
இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.
நன்றி - , சக்தி விகடன்,