ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் அரசின் கருணையை
எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல, அதே வழக்கில் ஆயுள் தண்டனை
பெற்றவர்களும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
ராபர்ட் பயாஸ்,
ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையிலும், வேலூர் பெண்கள் சிறையில் நளினியும்,
மதுரை மத்தியச் சிறையில் ரவிச்சந்திரனும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில்
உத்தரவுபெற்று 15 நாள் பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். இப்போது
மீண்டும் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத்
தொடர்ந்துள்ளார் அவரது தாயார் ராஜேஸ்வரி. இந்தச் சூழலில் வழக்கறிஞர் மூலம்
ரவிச்சந்திரனுடன் பேசினோம்.
''பரோல் என்பது சாதாரண நடைமுறைதானே? எதற்காக வழக்குத் தொடுக்கிறீர்கள்?''
''உண்மைதான். எல்லா தண்டனைக் கைதிகளுக்கும் சர்வ
சாதாரணமாகப் பரோல் வழங்கப்படுகிறது. ஏழெட்டு ஆண்டுகள் தண்டனையைக் கழித்த
சிறைவாசிகள்கூட மொத்தம் 600 முதல் 1,000 நாட்கள் வரையில் பரோலில்
சென்றிருக்கிறார்கள். ஆனால், 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நான்,
மொத்தமே 29 நாட்கள்தான் பரோலில் வந்திருக்கிறேன். சட்டம் அனைவருக்கும் சமம்
என்பதெல்லாம் சுத்தப் பித்தலாட்டம்.
குடும்பப் பிரச்னைக்காக கடந்த 2010-ம் ஆண்டு பரோல்
கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். மூன்று ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப்
பிறகு, கடந்த ஆண்டு 15 நாள் பரோலில் வெளியே வந்தேன். கூடவே, பாதுகாப்பு
என்ற பெயரில் 100 போலீஸாரும் வந்தனர். என்ன காரணத்துக்காக நீதிமன்றம்
எனக்கு பரோல் வழங்கியதோ, அதை நிறைவேற்றக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.
வீட்டையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாகத் தீர்க்க
முடியாத சில குடும்ப விவகாரங்கள், வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பேசியபோது
சுமுகமாகத் தீர்ந்தது. ஆனால், அதை சட்டரீதியில் இறுதிசெய்ய முயன்றபோது
பரோல் முடிந்துவிட்டது. சிறைத் துறை, காவல் துறை அதிகாரிகளிடம்
முறையிட்டபோது அவர்களின் இதயம் திறக்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றத்தை
நாடியிருக்கிறேன்.''
'' உங்கள் விடுதலைக்கான சாத்தியங்கள் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?''
''கடந்த 13 ஆண்டுகளாக நிறைய மனுக்களை தமிழக
முதல்வர்களுக்கு அனுப்பிவிட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்
கட்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரை விடுதலைசெய்ய வேண்டும்
என்பதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஏழு ஆண்டுகள் மட்டுமே
தண்டனையை முடித்த 1,405 கைதிகளை விடுதலைசெய்தார். அப்போது நாங்கள் 17
ஆண்டுகள் தண்டனையை நிறைவுசெய்திருந்தோம். ஆனால், சி.பி.ஐ. வழக்கு என்ற
நொண்டிச் சாக்கு சொல்லி எங்கள் நால்வரை மட்டும் விடுதலை செய்யவில்லை.
இப்போதைய முதல்வரைப் பொறுத்தவரையில், அதிகாரிகள் அந்த
மனுக்களை முதல்வரின் பார்வைக்கே கொண்டுசெல்வது இல்லை. எங்கள் நால்வரின்
விடுதலை இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையில்தான் இருக்கிறது.
கருணாநிதியை நாங்கள் நம்புவதாக இல்லை.''
''சாந்தன்,
முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவர்களை
விடுவிக்க வேண்டும் என்று இப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளாரே?''
''முதல்வர் ஜெயலலிதா தன் அமைச்சரவையைக் கூட்டி
அப்படியரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி கருணாநிதி
அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை
அமைச்சராக இருந்தபோது மூன்று தமிழர்களைத் தூக்கிலிடுவது என டெல்லி
முடிவுசெய்தது. அவர்கள் அளித்த கருணை மனுக்கள் மீது கருத்துக் கேட்டு,
கருணாநிதி தலைமையிலான அரசுக்கு ஆவணங்களை அனுப்பிவைத்தது மத்திய அரசு.
ஆனால், அப்போது அமைச்சரவையைக் கூட்டி இதேபோன்ற தீர்மானத்தை ஏன் அவர்
நிறைவேற்றவில்லை?
இதே மூன்று தமிழர்களும் நளினியும் கடந்த 2000, 2001-ம்
ஆண்டுகளில் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியிடம் கருணை மனு அளித்தனர்.
சட்டப்படி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காமல், நேரடியாக கவர்னருக்கு
அனுப்பினார் கருணாநிதி. கவர்னரோ நால்வரின் கருணை மனுக்களையும் நிராகரித்து
தூக்குத் தண்டனையை உறுதிசெய்தார்.
இதை எதிர்த்து நால்வரும் உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 'அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான்
கவர்னர் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கருணை
மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்யும்படி கவர்னருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்குப் பின், வேறு வழியின்றி கருணாநிதி தன் அமைச்சரவையைக்
கூட்டி, நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் ரத்துசெய்தார். கருணாநிதி
அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று கவர்னரும் அப்படியே ஆணை பிறப்பித்தார்.
அதிகாரத்தில் இருக்கும்போது, மூன்று தமிழர்களுக்கு
ஆதரவாக முடிவெடுக்காத கருணாநிதி, இப்போது இப்படி கோரிக்கை வைப்பதன்
நோக்கம், அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. தான் வாய் திறந்தால் ஜெயலலிதா
எதிர்மறையாகத்தான் செய்வார் என்ற கெடு எண்ணத்தில்தான். அதனால், அவர் வாய்
திறக்காமல் இருந்தாலே போதும். அந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமின்றி,
எங்கள் நால்வருக்கும் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது.''
நன்றி - விக்டன்