Showing posts with label ரயில்.கோயம்புத்தூர். Show all posts
Showing posts with label ரயில்.கோயம்புத்தூர். Show all posts

Tuesday, March 26, 2013

கோயம்பத்தூர் -ஊர் ஜாதகம்

மெட்ரோ, மோனோ ரயில் வேண்டும் ! 
பானுமதி அருணாசலம், படங்கள்: தி.விஜய். 
யற்கை வளங்களும், தொழில்வளங்களும் ஒருசேர அமைந்திருக்கும் செழிப்பான ஊர் கோயம்புத்தூர். கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோயம்புத்தூர் கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், அன்னூர், சூளூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய எட்டு தாலுகாக்களைக் கொண்டுள்ளது. நொய்யல் ஆறு ஓடும் இம்மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் ஏராளம்.

 
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் அளவுக்கு டெக்ஸ்டைஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நகரம். ஊர் ஜாதகம் பகுதிக்காகத் தமிழகத்தின் இரண்டாம் பெரிய நகரமான கோவையைச் சுற்றி பெரிதாக ஒரு ரவுண்டு வந்தோம்.


முதலில் நாம் சந்தித்தது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கோயம்புத்தூர் தலைவர் பாலசுந்தரத்தை.


''தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தொழில் நகரமாகவும், இந்தியாவில் வளர்ந்து வரும் நகரத்தில் எட்டாவது இடத்தையும் கோயம்புத்தூர் பெற்றுள்ளது. பஞ்சாலை,

பஞ்சாலை இயந்திரங்கள், வார்ப்பு ஆலைகள், பம்ப் மோட்டார்கள், கல்வித் துறை என பல முகங்களைக்கொண்டு விளங்குகிறது. ஆறு பல்கலைக்கழகங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்கல்லூரிகள், நூறு கலைக் கல்லூரிகள், விவசாயம், சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என கல்வித் துறையில் அனைத்து அம்சங்களும்கொண்ட நகரமாகவும் திகழ்கிறது.
கோயம்புத்தூரிலிருந்து 4,000 கோடி ரூபாய் வரியும், 25,000 கோடி ரூபாய்க்கு அந்நிய செலாவணியும் நடக்கிறது. இவ்வளவு பெரிய வருவாய் ஈட்டித்தரும் மாவட்டத்தில் அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் கிடையாது. தொழில் செய்யும் ஆர்வம் இங்கிருப்பவர்களுக்கும், இங்கு வருபவர்களுக்கும் அதிகமாக இருக்கிறது.


மாதம் சுமார் 6,000 இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவாகின்றன. ஆனால், அதற்கு தகுந்த சாலை வசதிகள் இங்கு கிடையாது. கோயம்புத்தூருக்கு புறவழிச்சாலை, ரிங்க் ரோடு போன்ற நகர வளர்ச்சிக்குத் திட்டமிட்ட சாலைகள் வேண்டும். சென்னையைப் போன்று மெட்ரோ, மோனோ ரயில் வசதிகள் கொண்டு வந்தால் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு ரயில் பாதைகள் இருக்கிறது. இதனை பயன்படுத்தி இந்த ரயில் திட்டங்களைக் கொண்டுவரலாம்.


தொழில் விஷயமாக வெளிநாட்டினர் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். அதனால் இங்கிருந்து டெல்லி, மும்பை, சென்னை, துபாய்க்கு விமானப் போக்குவரத்து அதிகளவில் இயக்க வேண்டும். ஐ.சி.எஃப்., பி.ஹெச்.இ.எல். போன்ற பெரிய அரசு தொழிற்சாலைகள் இங்கு வந்தால் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மிகப் பெரிய நகரமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை'' என்றார்.


அடுத்து நாம் சந்தித்தது, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் அமைப்பின் துணைத் தலைவர் ஜேம்ஸை.


''இயற்கை வளங்கள்கொண்ட இந்த மாவட்டத்தில் இயற்கையாகவே பஞ்சு உற்பத்தி அதிகமாக இருந்ததால் அதனைக்கொண்டு பஞ்சு ஆலைகள் துவங்கப்பட்டு, பல்வேறு பஞ்சாலைகள் வந்தன. கிரைண்டர் தயாரிப்பின் பிறப்பிடம் எனச் சொல்வதில் எங்கள் ஊர் மக்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்கிறது. சுமார் 50,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு இருக்கிறது. ராணுவத்திற்கு தேவையான உதிரிபாகங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது. குண்டூசி முதல் விமானம் வரை அனைத்திற்கும் தேவையான உபகரணங்கள் கிடைக்கும் இடமாகத் திகழ்கிறது.


எனினும், கடந்த நான்கு ஆண்டுகளாக மின்வெட்டு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் குறுந் தொழில்கள் காணாமல் போய்விட்டன. தொழில்கள் வளர்ச்சி அடைய மின்சாரம் மிகத் தேவை. இந்த மண்ணின் மைந்தர்களின் சொந்த உழைப்பு மட்டுமே இந்நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


ரயில்வே துறைக்குத் தேவையான அனைத்து உதிரிபாகங்களையும் செய்யும் இடமாகத் திகழும் கோயம்புத்தூரில் ரயில்வே தொழிற்சாலையைக் கொண்டு வராமல் பாலக்காட்டில் 1,300 கோடி ரூபாய் மதிப்பில் கொண்டுவந்துள்ளனர். அதே தொழிற்சாலையை இங்கு கொண்டுவந்திருந்தால், வேலை வாய்ப்பு இன்னும் அதிகரித்திருக்கும்.


என்ன ஆர்டர் கொடுத்தாலும் எல்லாத் துறைகளிலும் 20 சதவிகித ஆர்டர்களை சிறு மற்றும் குறுந் தொழிலாளர்களிடமிருந்து வாங்க வேண்டும் என மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு முழுவதுமாக நடைமுறையில் இல்லை. இந்த உத்தரவை முழுவதுமாக அமல்படுத்தினாலே கோவையில் உள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து மார்க்கெட்டிங் மூலம் ஆர்டர்களைப் பெறுகின்றனர். அதுபோல சிறு, குறு நிறுவனங்களால் செய்ய முடியவில்லை.


மத்திய, மாநில அரசுகள் புதிய தொழில்முனைவோருக்கு பல திட்டங்களைக் கொண்டுவருகின்றன. ஆனால், ஏற்கெனவே தொழில் செய்பவர் களுக்கு எந்தவிதத் திட்டங்களும் செய்து தருவதில்லை. சிறு, குறுந் தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் குறைந்த விலையில் தரவேண்டும். தொழில் நகரமான கோயம்புத்தூரில் இன்னும் பல வளர்ச்சிகள் கொண்டுவரவேண்டியது அரசின் கைகளில் இருக்கிறது'' என்றார்.


சுமார் 700-க்கும் மேற்பட்ட காட்டன் மில்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் என எப்போதும் பிஸியாக இருக்கும் கோயம்புத்தூர் பற்றி கல்வியாளரும், ரூட்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் இயக்குநருமான கவிதாசன் இப்படி சொன்னார்.


''தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் கோவை இப்போது கல்வி நிலையங்களின் ஹப்பாக மாறி வருகிறது. சுமார் 150 முதல் 200 கல்லூரிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. சென்னைக்கு அடுத்து வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து வேலை செய்பவர்கள் ஏராளம். இங்கு தொழிற்பேட்டை என்றால் சிட்கோ ஒன்று மட்டும் தான் உள்ளது. 


இந்நகரில் இருக்கும் தொழில்களுக்குத் தகுந்த உள்கட்டமைப்பு வசதி இல்லை. கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரை, கோவை முதல் மும்பை வரை விமானம் மற்றும் ரயில் வசதிகள் தேவை. மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், பாலக்காடு என கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து வந்து வேலை பார்த்துச் செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதிகளை இணைத்து மின்சார ரயில் இயக்கினால் வேலைக்கு வந்து செல்பவர்களுக்கு மிக வசதியாக இருக்கும்'' என்றார்.


கோயம்புத்தூரின் அடையாளங் களில் ஒன்றாக மாறிவிட்ட கொடிசியா கட்டடம் மிகவும் பிரமாண்டமாகவும், பல தொழில் சம்பந்தப்பட்ட கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடைபெறும் இடமாகவும் திகழ்கிறது. வேறு எங்கும் இல்லாதளவுக்கு சிறு தொழில்களின் அமைப்பு இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கொண்டது இங்கு மட்டும்தான் இருக்கும். இந்த அமைப்பின் (கொடிசியா) தலைவர் ராமச்சந்திரனுடன் பேசினோம்.


''பம்புகள், மோட்டார், பிளாஸ்டிக், வெட் கிரைண்டர், ஸ்பின்னிங் மில்ஸ் என பல தொழில்கள் கொண்ட நகரம். இத்தொழில்கள் இருக்கும் இந்த ஊரில் இப்போது இருக்கும் முக்கிய பிரச்னை வேலையாட்கள் கிடைக்காததுதான். அதனால் கிராமப்புறங்களிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து தொழிற்துறைக்குத் தகுந்த பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தவேண்டும். 

அதற்கு மத்திய, மாநில அரசுகள் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களைக் கொண்டுவந்து பயிற்சி அளிக்கவேண்டும். இப்போது எங்களுக்குத் தேவையான வேலையாட்களை வடமாநில நபர்களைக்கொண்டு சரிகட்டிக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் சில நேரங்களில் நீண்ட விடுமுறை எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இவர்களை நம்பி தொழில் செய்ய முடியவில்லை.


ஆறு மாதங்களுக்கு முன்பு வரை மின்சாரப் பிரச்னை மிக அதிகமாக பன்னிரண்டு மணிநேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது இந்த நிலை மாறி ஐந்து மணி நேரமாகக் குறைந்துவிட்டது. சூரிய மின்சக்தி பயன்படுத்த வாட் வரி அதிகமாக இருக்கிறது. இந்த வாட் வரியைத் தடை செய்தால் இங்கிருக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்துவார்கள்.


மேலும், தொழில்புரிவோருக்கு தற்போது மாநில அரசு முதலீட்டு மானியமாக 15 சதவிகிதம் மட்டுமே கொடுக்கிறது. இதனை 25 சத விகிதமாக அதிகப்படுத்தினால் புதிய தொழில்முனைவோர் அதிகளவில் வருவார்கள். பருத்தியின் விலை ஒரு நிலையில் இருப்பதில்லை. நாங்கள் ஆர்டர் வாங்கும்போது ஒரு விலையும், வேலை முடித்து தரும்போது ஒரு விலையும் இருப்பதால் அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்து பருத்தி விலையை சீரான முறையில் கொண்டுவர வேண்டும்'' என்றார்.


கோயம்புத்தூரில் இருக்கும் இன்னும் பல தொழில்கள் பற்றியும், விவசாயம் போன்ற துறைகளில் இருக்கும் பிரச்னைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.


(தொடரும்)

thanx - vikatan