Showing posts with label ரன்பீர் கபூர். Show all posts
Showing posts with label ரன்பீர் கபூர். Show all posts

Thursday, June 06, 2013

hay jawani hai deewani -சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

நண்பர்களுடன் செல்லும் இன்பச் சுற்றுலா பயணம் வாழ்வில் மறக்க முடியா தருணங்கள். இந்த அழகிய தருணங்களின் ஒரு ஆல்பமாய் “ஹே ஜவானி ஹை திவானி" படம் திகழ அதை ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன!!!

ஸோயா அக்தர் இயக்கிய ‘ஸிந்தகி நா மிலேகி துபாரா‘ படத்துக்கு பிறகு ஒரு நல்ல டிராவலிங் படத்தைப் பார்த்த திருப்தியை இப்படம் கொடுத்துள்ளது. பளிங்கைப் போல க்ளியராக அமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் வடிவம். பள்ளி, கல்லூரியில் எப்பொழுதும் டாப்பராக பெற்றோர்களைப் பெருமிதம் கொள்ளச்செய்த மகளாக தீபிகா படுகோன்.  
வாழ்க்கை முழுவதும் பறவை போல பறந்திட வேண்டுமென எண்ணும் ரன்பீர் கபூர். சூதாட்டத்திலேயே எல்லா காசையும் தொலைக்கும் ஆதித்யா ராய் கபூர். ஆதித்யாவை ஒரு தலையாக காதலிக்கும் கல்கி கொச்சைலேன்.  நான்கு நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மீதுள்ள வேறுபட்ட பார்வை. 
 


படிப்பு, படிப்பு என்று சாதாரண மனிதர்கள் பெரும் சராசரி இன்பங்களைக் கூட இழந்துவிட்டதாக வருந்தும் தீபிகா படுகோனின் மன ஓட்டம். சூப்பர் மார்கெட்டில் பள்ளித் தோழி கல்கியை காண்கிறார் தீபிகா. கல்கி எட்டு நாட்களுக்கு குலு மணாலியில் சுற்றுலா செல்லப்போவதாக சொல்வது தீபிகாவின் ஆர்வத்தைக் கீறுகிறது. 
 வீட்டில் லெட்டர் எழுதிவைத்து டூருக்கு கிளம்பும் தீபிகா ரயில் நிலையத்தில் தன்னுடன் படித்த கபீர் தாப்பரை (ரன்பீர் கபூர்)  சந்திக்கிறார். ரன்பீர், ஆதித்யா, கல்கி, தீபிகா என நால்வரும் ஒரே டீமாக குலு மணாலி செல்கின்றனர். 

தனிமையிலேயே வாழ்ந்து பழகியதால் தீபிகா ரிசர்வ்டாக இருக்க, ஜாலி பாய் ரன்பீர் கபூர் நல்ல தோழனாக தீபிகாவின் மனப்பான்மையை மாற்றுகிறார். ஆதித்யா மற்ற பெண்களுடன் நெறுங்கிப் பழகுவதைப் பார்த்து கல்கி மனம் சுக்கு நூறாக உடைகிறது. 
 
ரன்பீர் தனக்கு நியூயார்க்கில் வேலை கிடைத்ததை  அறிந்து வாழ்த்துவதற்கு மாறாக ஆதித்யா எனக்கும் சொல்லியிருந்தால் நானும் அப்ளை செய்திருப்பேனே என்று கோபப்படுகிறார் இதனால் தீபிகா ரன்பீர் மீது வந்தக் காதலை சொல்லாமல் விட்டு விடுகிறார் .
 இப்படி இந்தப் பயணத்தில் நட்பு, சந்தோஷம், சோகம், ஏமாற்றம், காதல் என பலதரப்பட்ட உணர்வுகள் . எட்டு வருடம் கழித்து, கல்கிக்கும் குணால் கபூருக்கும் நடக்கும் திருமணத்தில் இந்த நான்கு நண்பர்களும் மீண்டும் சந்திக்கின்றனர். இந்நிகழ்வில் இவர்கள் வாழ்வில் அடையும் மாற்றம் தான் மீதிக் கதை.

படம் முழுக்க இந்த நான்கு நண்பர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. கடைசி வரை கதாபாத்திரங்களின் நிறம் மாறாதிருப்பது படத்தின் சிறப்பம்சம். பெண்களிடம் வழிந்து ரன்பீர் கபூர் பேசும் வசனங்கள் பஹுத் அச்சா ஹை !! மற்ற பெண்களைப் பார்த்தால் வழிந்திடத் தோன்றும் ஆனால் உன்னைப் போன்ற பெண்ணைப் பார்த்தால் காதலிக்கத் தோன்றும் என்று தீபிகாவைப் பார்த்து இவர் கூறும்போது விழுவது தீபிகா மட்டுமல்ல படம் பார்க்கும் பல பெண்களின் இதயமும் தான்.
 


பர்ஃபி, ராஜ் நீதி, பச்னா ஹே ஹஸீனோ, ராக்கெட் சிங் இப்படி ஒவ்வொரு படத்தில் வெவ்வேறு பரிமாணங்களில் ரசிகர்களை அசத்தும் ரன்பீர் கபூர் இந்தப் படத்திலும் ஈர்க்கத் தவறவில்லை.  தீபிகா படுகோனுக்கு இக்கதாபாத்திரம் புது அவதாரம். சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளும் போது கூட க்யூட்டாக தெரிகிறார். எப்போதும் சூதில் தோர்க்கும் ஆதித்யா ராய் கபூரும் விரக்தியை வெளிப்படுத்துவதிலும், ஏக்கத்தனமான பார்வையால் கல்கியும் யதார்த்த்துடன் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


ப்ரீதம்மின் இசையில் பாடல்கள் திரையரங்கை திருவிழாக் கோலம் காண வைக்கிறது.  நம்ம ஊரைச் சேர்ந்த மணிகண்டன் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்ஃபுல்லாக திகழ்கிறது. பல வருடம் கழித்து மாதுரி திக்ஷித் இப்படத்தில் தோன்றி, முதல் பாடலில் துள்ளலான நடனம் போடுகிறார். மிஸ் பண்ணாதீங்க.

காஸ்ட்யூம், காஸ்டிங் டைரக்டர் என ஒவ்வொரு பிரிவுகளிலும் மிகுந்த அக்கறை காட்டப்பட்டுள்ளது. கனவுகளைத் துரத்தும் மனிதன் வாழ்வில் தொலைக்கின்ற அம்சங்களை அயன் முகர்ஜியின் இயக்கம் அழகாய் வெளிப்படுத்தியுள்ளது.


இவன் நல்லவன் இவன் கெட்டவன் என்று யாரும் கிடையாது.  கதைமாந்தர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள். இவர்கள் உணர்ச்சியை வரையறுக்க முடியாது. ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு விதமாகத்தான் வெளிப்படுத்துவர் என்ற யதார்த்த்த்தைப் பிரதிபலிக்கின்ற திரைக்கதை பாராட்டிற்குரியது. இந்தப் படம் நம் மொழியிலும் ரீமேக் செய்யப்பட வேண்டுமென்ற அவா எழுகிறது.

வெளியாட்களோடு பக்குவமாய் பழகு, நண்பர்களோடு மட்டும் குழந்தையாய் இரு வாழ்க்கை முழுவதும் இளமையாய் உணர்வாய் எனக் கூறுகிறது ஹே ஜவானி ஹை திவானி.
 


மொத்தத்தில், முழு திருப்தி தருகின்ற படம். படம் பார்த்த பிறகு நம் இதழில் பிறக்கும் புன்னகை மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
  • நடிகர் : ரன்பீர் கபூர்
  • நடிகை : தீபிகா படுகோனே
  • இயக்குனர் :அயன் முகர்ஜி
 நன்றி - தினமலர்