Showing posts with label ரசிகர்கள் மோதல். Show all posts
Showing posts with label ரசிகர்கள் மோதல். Show all posts

Wednesday, December 23, 2015

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!
அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட தப்புதான். உடனே நீங்கள் விஜய் ரசிகராகச் சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படுவீர்கள். அதோடு, விஜய் ரசிகனாக இருப்பதே எத்தனை கேவலமான ஒரு விஷயம் என்பதாகக் கூட்டம் கூட்டமாக வலை தளத்தில் வாரித் தூற்றுவார்கள் - கூடவே, விஜய்க்கும் அர்ச்சனை நடக்கும். இதேதான் விஜய் படம் நல்லாயில்லை என்று கருத்து கூறுபவன் கதியும். அஜித் ரசிகராக அவரை முடிவு கட்டி... அவருக்கும் அஜித்துக்கும் சேற்று அபிஷேகம் நடத்திவிட்டுத்தான் ஓய்வார்கள் - விஜய்யின் ஆன்லைன் காவலர்கள்!
அஜித் - விஜய் இருவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்குக்கூடச் சில விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்கள் ஒன்றுகூடித் திட்டுவார்களே என்றுதான். இது குறித்துப் பிரபல இணைய விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “என் பெயரை வெளியிடாதீர்கள். கலை என்பது விமர்சனத்துக்கு உட்பட்டது என கமல் தெரிவித்தார். ஆனால், அஜித் - விஜய் படத்தை நீங்கள் விமர்சனம் செய்யவே முடியாது. ஒரு வேளை படம் நல்லாயில்லை என்று தெரிவித்துவிட்டீர்கள் என்றால் முடிந்தது.
எங்கிருந்தாவது உங்களது மொபைல் நம்பரைப் பிடித்து வெளியிட்டுவிடுவார்கள். அன்று முழுவதும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்குவதுதான் உங்களது வேலையாக இருக்கும். அஜித் - விஜய் இருவரது விஷயங்களில் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது” என்று வருத்தமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் அஜித் - விஜய் ரசிகர்களின் பணிகளைப் பார்க்கும் போது, அவர்கள் இதையொரு தொழில் போலவே பண்ணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு வருமானத்துக்கு எப்படி மதுவிற்பனையைப் பயன்படுத்துகிறதோ, அதேபோலத்தான் அஜித் - விஜய் தரப்பிலிருந்தே, அவர்களின் புகழுக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்களை பயன்படுத்தும் வேலையும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்! அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பரப்பவும், தங்கள் எதிரிக் கட்சிகளை சிக்கலில் மாட்டிவிடவும் தனியார் ஏஜென்சிகளை வைத்து இணையதளத்தில் கொடி பிடிக்கும் பாணியை இந்த வகை ‘மெகா’ போற்றல் மற்றும் தூற்றலில் காணலாம்.
சில காலமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வரும் சண்டைகள் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது. 'வேதாளம்' படம் வெளியானபோது, தூத்துக்குடியில் இரு தரப்பு ரசிகர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சண்டை குறித்து செய்திகள் வெளியானபோது கூட இரு நடிகர்களிட மிருந்தும் மவுனமே பரிசாகக் கிடைத்தது.
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் மனம் விட்டுப் பேசும்போது சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சினிமா வட்டாரத்துக்கே வெளிச்சம். அதாவது. நடிகர்களின் ரசிகர்கள் பெயரால் இணையத்திலும், நேரடிக் களத்திலும் அடிதடி உக்கிரம் அடையும்போது இவர்கள் மாஸ் நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே போகிறது?!
'திருப்பதி' படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளத்தையும் 'சிவகாசி' படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளத்தையும் சுட்டிக்காட்டும் இந்தத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் “ரசிகர்களின் மோதல் வலுத்துக்கொண்டே செல்லச் செல்ல இவர்களின் சம்பளமும் விஷ வேகத்தில் ஏறிக்கொண்டே போனது” என்று கூறுகிறார்கள்! இவர்கள் இருவரையும் வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாப விகிதம் இதே அளவுக்கு உயர்ந்துகொண்டே போனதா என்றால், இல்லை என்பதுதான் பதில் என்று சுட்டிக் காட்டும் இவர்கள்,
“ரசிகர்களின் இந்த வேகத்தையும் பாசத்தையும், தங்கள் பணப் புழக்கத்தையும் தமிழகத்தின் வெள்ள நிவாரணம் போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை நோக்கிக் கொஞ்சமாவது திருப்பி விட்டிருந்தால் எத்தனையோ ஏழைகளுக்குப் பலன் கிடைத்திருக்கும்” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
அஜித் - விஜய் இருவருமே கடவுள் அல்ல, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிப்புக் கலைஞர்கள்... மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போன்ற திறமையும், உழைப்பும் கொண்ட ‘புரொஃபஷனல்கள்’ என்பதை இந்த ரசிகர்கள் உணரும் வரை இது போன்ற ஆதங்கம் நீடிக்கத்தான் செய்யும்!
பின் குறிப்பு :இந்தக் கட்டுரையில் அஜித் - விஜய் இருவரையும் குறிப்பிடும் விதத்தை வைத்தே இரண்டு ரசிகர்களுக்கும் சண்டைக்கு வருவார்கள், எங்க தலைவர் பெயரை எப்படி பின்னாடி போடலாம் என்று. மேலும் இக்கட்டுரையின் பின்விளைவாக ’ஹேஷ்டேக்’ உருவாக்கி இரு தரப்பு ரசிகர்கள் பெயரிலும் ட்ரெண்ட் செய்யக்கூடும். அதில்கூட யாருக்கு மாஸ் அதிகம் என்று பலப்பரீட்சை நடக்கலாம். ட்விட்டர் தளத்திற்கு வந்தீர்கள் என்றால் அதையும் நீங்கள் பார்த்துவிடலாம்!

-தஹிந்து


Thursday, January 08, 2015

அஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்க்களம் - தீர்வு என்ன?

     
     
தமிழ் சினிமாவில் நாயகர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக உருவான காலம் தொட்டே அவர்களுடைய ரசிகர்களின் மோதல்களும் தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், என்று தொடங்கிய ரசிகர்களின் ஆக்ரோஷ மோதல்கள் இன்று அஜீத் - விஜய் ரசிகர்களிடையே உச்சகட்டத்தை எட்டி நிற்கிறது. முந்தையை ரசிகர்கள் போஸ்டர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் மோதிக்கொண்டிருந்தனர். ஆனால் அஜீத் - விஜய் ரசிகர்கள் அந்த யுத்தத்தை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பல காலமாக இந்த மோதல் இருந்துவந்தாலும் அது உச்சகட்டத்தை எட்டியது இந்தப் புத்தாண்டில்தான். பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டிய அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29-ம் தேதிக்குத் தள்ளிப்போவதாக அதன் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் புத்தாண்டு சமயத்தில் அறிவித்தார். ஏற்கெனவே ‘கத்தி’ பட விவகாரத்தில் தங்களை கலாட்டா செய்த அஜீத் ரசிகர்களைப் பழிவாங்க, இதுதான் தக்க சமயம் என்று பொங்கி எழுந்தனர் விஜய் ரசிகர்கள்.
“அஜீத் எப்போதும் யாருடனும் போட்டியிடாமல் தனியாக தன் படத்தை வெளியிடும் பழக்கம் கொண்டவர்” என்று ஆரம்பித்து, “மோதி ஜெயிக்கிறதுதான் வீரம்... தனிச்சு நின்னா அதுக்குப் பேரு சோரம்” என்று அஜீத் ரசிகர்களை ட்விட்டர் தளத்தில் சீண்டிப் பார்த்தனர்.
இதனால் கொந்தளித்துப்போன அஜீத் ரசிகர்கள் பதிலுக்கு, “படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதற்காக கைகட்டி வாய்ப்பொத்திக் கெஞ்சியது நாங்களா?” என்று ‘தலைவா’ பட சர்ச்சையை நினைவூட்டினர்.
இந்த சண்டையை இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய்க்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள் அஜீத் ரசிகர்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அஜீத்துக்கு எதிரான ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் பரப்பினார்கள். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வாய்கூசும்படியான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டது தமிழக சினிமா ரசிகர்களின் தரத்தை இந்திய அளவில் குறைப்பதாக இருந்தது.
ரசிகர்களின் இந்த மோதலைப் பற்றி அஜீத்தும், விஜய்யும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில் தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டியுள்ளனர். உதாரணமாக ஒருமுறை ‘மங்காத்தா’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற விஜய், அஜீத்துக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்தார். அதுபோல் விஜய்யின் பிறந்தநாள் ஒன்றில் அவரது வீட்டுக்கு சென்று நாள் முழுவதும் அவருடன் இருந்துள்ளார் அஜீத்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடிய விஜய் “ரசிகர்களின் சண்டை தேவையற்றது. தங்களது குடும்பத்தைத்தான் அவர்கள் முதலாவதாக கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் இரு தரப்பு ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் மோதிவருவது கவலைக்குரியதாக உள்ளது.
வலைத்தளத்தில் அஜீத் ரசிகராக இருக்கும் நஸ்ருதீனிடம் இதுபற்றி கேட்டபோது, “இந்த மோதல் ‘ஆரம்பம்’ படத்தின் முதல் பார்வை டீஸர் வந்தபோதுதான் முதலில் தொடங்கியது. அஜீத்தின் படத்தைப் பற்றி ட்விட்டரில் நாங்கள் ஏதாவது குறிப்பிட்டால் விஜய் ரசிகர்கள் உடனடியாக அதைக் கிண்டல் செய்து எதையாவது எழுதிவிடுகிறார்கள்.
‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போன செய்தி வெளியான போது விஜய் ரசிகர்களின் கிண்டல் அதிகமாக இருந்தது. உடனடியாக நாங்கள் விஜய்க்கு எதிராக பதிவுகளை இடத் தொடங்கினோம். தற்போதைய இந்த மோதல் தவறான விஷயம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக எங்கள் ‘தல’யை விட்டுத்தர முடியாது. ட்விட்டரில் நாங்கள் ஒரு விஷயத்தைக் ட்ரெண்ட் செய்தால் அவர்களும், அவர்கள் ட்ரெண்ட் செய்தால் நாங்களும் அமைதிகாக்க வேண்டும். நாங்கள் அமைதிகாக்க தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்குத் தயாரா?” என்றார்.
விஜய் ரசிகரான தீபக் கூறும்போது, “இந்த சண்டை ‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போனதில் இருந்துதான் ஆரம்பித்தது நாங்கள் அஜீத்தை கிண்டல் செய்து எந்தப் பதிவையும் இடவில்லை. அவரது ரசிகர்களைத்தான் கிண்டல் செய்தோம். அஜீத் ரசிகர்களும் அதற்குப் பதிலாக எங்களைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதில் அவர்கள் எங்கள் தளபதியை கிண்டல் செய்தார்கள். அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ட்விட்டர் தளத்தில் சண்டை பெரிதானது. இது தவறுதான் என்றாலும், எங்களுக்கு எதிராக ஒரு விஷயம் நடைபெறும் போது, அதை கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த சண்டை நிற்கவேண்டும் என்றால் விஜய், அஜீத் இருவரும் இணைந்து அறிக்கை விட வேண்டும். அல்லது ஒரு வீடியோ பதிவை வெளியிட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்” என்றார்.
‘தல’யும் ‘தளபதி’யும் இதைச் செய்வார்களா? 


thanx - the hindu


  • ! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் ஹீரோ தான் !! இங்கு யாரும் யாரையும் கொண்டாடபடவேண்டிய அவசியமில்லை!!
    40 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • skaki  
    தல..
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ahmed  
    கண்டிப்பஹா செய்ய வேண்டும்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • S.DEZOSA  
    இப்படியே follow பண்ணுங்க , இந்தியா சீக்கரம் வல்லரசு ஆய்டும்.....
    about 2 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
  • shruthi  
    வேலை இல்லாத வெட்டி வேலை ..
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • vijayraj  
    தீபக் சொன்னது சரியான செய்தி..
    Points
    130
    about 3 hours ago ·   (7) ·   (5) ·  reply (0) · 
  • Harris Ahimas  
    தமிழா நீ முட்டாள் அக்கதே. மீண்டும் மீண்டும் நடிகர்கள் பின்னல் நிற்கிறாய், நீ உன்னுடை அறிவையும், ஆற்றலையும் உன்னுடய சொந்த தொழிலுக்க செலவிடு, அது உன்னை உயர்த்தும். நடிகர்களாலும் நடிகைகழலும் தமிழ் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது, அமைதி இழந்தது.
    Points
    3650
    about 6 hours ago ·   (16) ·   (1) ·  reply (0) · 
  • Az  
    முட்டாள் தனத்தின் உச்ச கட்டம்!! ஹ ஹ ஹ ஹா !!!
    Points
    330
    about 6 hours ago ·   (22) ·   (1) ·  reply (0) · 
  • santhil kumar  
    Vip boys
    about 7 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • vkskumar  
    சினிமா என்பது வெறும்கேளிக்கை தான். தனி நபர் துதி பாடுவதை விட்டு விட்டு வீண் சண்டை போடாமல் நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கு.இந்த ரசிகர்கள் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தி உருப்படுவத ர்க்கு வழியய் பார்த்தல் நன்றாக இருக்கும்.
    about 7 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    'தல'எழுத்து ராமா....
    Points
    1240
    about 9 hours ago ·   (4) ·   (4) ·  reply (0) · 
  • raj  
    தல தளபதி மோதல் சினிமாவில் புதுசு இல்ல. ஆனா இந்த நிலமைய தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்க சில நடிகர்கள் (பொடி பசங்க) ஆர்வமா இருகாங்க. டேய் பொடி பசங்களா என்னைக்குமே தல தளபதி மாஸ் டா. ரெண்டு ரசிகர்களும் ஒன்னு சேந்தா நீங்க இருக்குற இடமே தெரியாது டா.
    Points
    600
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • kumar  
    ennama neenga ipdi panrengalamea ma
    Points
    225
    about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Charl Esta  
    நாட்டிற்க்கு நாட்டின் முன்னேற்றத்திற்ககு இது மிக அவசியமான செய்தி
    about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Ahart  
    ஆக மொத்தம் சண்டையை விட்ற மாறி யாரும் தெரியல. எல்லாம் ஏட்டிக்கு போட்டி மாறி நடக்குது. நல்லா வருவீங்க பா!!!
    about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • SUNDARARAMAN.M  
    தேவை இல்லாத நேர விரயம் .நண்பர்களே இருக்கும் வேறுபாடுகள் போதாதென்று ஏன் நீங்கள் வேறு சண்டையிடவேண்டும்?இதனால் யாருக்கு என்ன லாபம்?
    Points
    175
    about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • siva  
    திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்காக தன் சொந்த இன சகோதரர்களை கேவலமாக விமர்சித்தும், வெறுப்பை உமிழ்ந்து கொள்ளும் ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம்!! சொந்த மண்ணில் வாழும் நம் மக்களையே நேசிக்க தெரியாத நாம் அயல் நாட்டில் வாழும் மக்களுக்காக போராட்டம் செய்வது, குரல் கொடுப்பது எல்லாம் போலித்தனம் தான். அஜீத்துக்காக, விஜயிக்காக சண்டை போடுபவர்கள், விவசாயம், மீதேன் எதிப்பு திட்டம், நியுட்ரினோ விவகாரம், ஊழல்களை எதிர்த்து போராடலாம்!! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் ஹீரோ தான் !! இங்கு யாரும் யாரையும் கொண்டாடபடவேண்டிய அவசியமில்லை!! .
    Points
    385
    about 11 hours ago ·   (16) ·   (0) ·  reply (0) · 
  • Vikram  
    நண்பர்களே. தலயும் தளபதியும் அவர்கள் வேலையை செய்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பது அவர்கள் தொழில். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்களுடைய ரசிகர்களான நாம் நமது வேலையை அல்லது தொழிலையோ சரியாக செய்தாலே போதுமானது. அதை விடுத்து அவர்கள் இருவருக்காக சண்டையிடுவது வேதனையளிக்கிறது. இப்படி சண்டையிடுவதால் நமது சுய மரியாதை மட்டுமல்ல தல தளபதி அவர்களுடைய பெயரும் தான் கெடும். சமீபத்தில் ட்வீட்டரில் மற்ற நடிகரின் ரசிகனை இன்னொரு நடிகரின் ரசிகன் அவமானப்படுத்த ஹேஸ் டேக் கிரயேட் செய்து ட்ரெண்டு செய்தது உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உங்களையும் உங்கள் நடிகரையும் கேவலமான மன நிலையோடு பார்க்க செய்து விடும். ரசிகாராக மட்டும் இருங்கள் வெறியனாக மாறாதீர்கள். இப்படிக்கு அஜித் ரசிகன்.
    Points
    200
    about 11 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
  • karthikk  
    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ......
    about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Saravanan  
    அவங்க அவங்க வேலையை (நடிப்பு) ஒழுங்கா செஞ்சு பணம் சம்பாதிச்சு, வருங்கால சந்ததியினருக்கு சொத்து சேத்து .....இப்படி அவங்க வேலையை அவங்க ஒழுங்கா செஞ்சு பிழைப்பை பார்க்கறாங்க. உனக்கு ஒருத்தர பிடிச்சா அவங்க படத்த ரசிக்கிறதோட நிறுத்திக்கங்க. போய் பொழப்ப கவனிச்சு வாழ்க்கையில settle ஆகற வழியை பாருங்க. அத விட்டுட்டு உங்களுக்கெல்லாம் ஏன் ஒருத்தருக்கு கொடிபிடிக்கற இந்த வெட்டி வேலை. பொழைக்கிற வழியைப் பாருங்கப்பா. அவங்களுக்கு கொடிபிடிக்கிறதாலோ ஒருத்தற ஒருத்தர் திட்டிக்கிறதாலோ உனக்கு வேலைகிடைக்கப்போகுதா அல்லது ஒவ்வொரு திட்டுக்கும் இவ்வளவு பைசான்னு உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகப் போகுதா. ......வெட்டி வேலையைத்தான் செய்யராங்கப்பா?