Showing posts with label யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி. Show all posts
Showing posts with label யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி. Show all posts

Sunday, May 05, 2013

மரியான் -ஏ.ஆர்.ரஹ்மான் + யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி!!

.ரஹ்மானிடம் பேசி எவ்வளவு நாட்களாகிவிட்டன?

 
''என் கால்ல எத்தனை சக்கரங்கள் கட்டப்பட்டிருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஓடிக்கிட்டே இருக்கேன். அதான்... இந்த வருஷம் 'மரியான்’, 'கோச்சடையான்’, 'ஐ’னு தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்துப் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப நல்ல விஷயம்ல!'' எனப் புன்னகைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


'' 'வந்தே மாதரம்’ தொடங்கி இப்போ 'மரியான்’ வரை இயக்குநர் பரத்பாலான்னா உங்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தானே?''



''அப்படியும் வெச்சுக்கலாம். எனக்கு அமைஞ்ச நல்ல விஷயங்களில் என் நண்பர்களும் உண்டு. பரத்பாலா, மணிரத்னம், திருலோக், ராஜீவ் மேனன்னு நிறைய நல்ல நண்பர்களைக் கடவுள் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு மைல்கல் இருக்கும். அப்படி என்னோட மைல்கல்லைத் தாண்டியும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுபோனது இந்த நண்பர்கள்தான். 



நான் ஜிங்கிள்ஸ் பண்ணும்போதே அது சுமாரா இருந்தா, என் நண்பர்கள் யாரும் திருப்தி அடைய மாட்டாங்க. 'இன்னும் நல்லா வேணும்’னு சொல்லிச் சொல்லி என்னைக் கடுமையா உழைக்கவெச்சாங்க. 'வந்தே மாதரம்’ ஆல்பம் இயக்கியவர் பரத்பாலா. இப்ப அவரே 'மரியான்’ பண்றதால், நிறைய எதிர்பார்ப்பு வந்துருச்சு. சினிமாவை இயக்குறதுக்காகக் கிட்டத்தட்ட 10 வருஷம் உழைச்சிருக்கார். அந்தஉழைப்பின் பலன் 'மரியான்’ல தெரியும். பரத் பாலாவுக்கு இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் நிறையச் சாதிப்பார்!''



'' 'மரியான்’ படத்தில் உங்க இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கார். எப்படி அமைஞ்சது இந்தக் கூட்டணி?''



''கடல்ராசா பாட்டைக் கேக்கறீங்களா? யுவனோட குரல்ல எப்பவுமே ஒரு ஜீவன் இருக்கும். அவரோட குரலைக் கேட்கும்போது எல்லாம் 'இவரை எப்படியாவது நம்ம இசையில் ஒரு தடவை பாட வெச்சி டணும்’னு நினைச்சுட்டே இருப்பேன். அது இப்போதான் அமைஞ்சது. யுவனே கடல்ராசாவா மாறிப் பாடி அசத்திட்டார்!''



''வீட்டுக்குள்ளேயே சத்தம் இல்லாம இசை வாரிசு உருவாகுதா? திரைப்பட விழாவில் உங்க மகன் அமீன் பிரமாதமா பியானோ வாசிச்சாரே?''



''அவர் அந்த திரைப்பட விழாவில் பியானோ வாசிச்சது எனக்கே தெரியாது. என்கிட்ட அவர் சொல்லவும் இல்லை. இன்டெர்நெட்ல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் மேடையிலேயே அசத்திட் டார். கடவுள்தான் அவரை வழிநடத்தணும். இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கார். கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!''


''இளம் இசையமைப்பாளர்கள் ஒருபக்கம் மிரட்டுறாங்க. இன்னொரு பக்கம் நிறைய இளைஞர்கள் குட்டிக் குட்டியா ஜிங்கிள்ஸ் போட்டு யூ டியூப்ல ஹிட் ஆகிடுறாங்களே?''


''ஆமா, நல்லதுதானே? இப்ப வர்ற இளைஞர்களுக்கு நிறையத் திறமை, தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கிற துக்கு அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நான் சின்னப் பையனா இருந்தப்போ, அண்ணா சாலையில் ஒரே ஒரு கடையில்தான் 'மியூஸிக் மேக்கர்’ங்கிற புத்தகம் கிடைக்கும். அதை வாங்க நான் சைக்கிள் எடுத்துட்டு அலைவேன். இப்போ உள்ள பசங்களுக்கு கூகுள், யூ டியூப் மூலமா எல்லாத்தையும் எளிதாக் கத்துக்க முடியுது. அட, அரேபியன் ஸ்டைல் மேக்அப்பைக்கூட வீட்ல உட்கார்ந்துக் கிட்டே பண்ணிடுறாங்க. இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா உழைச்சா, அதில் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்!''



''இசை படிக்கிறவங்க எல்லாரோட கனவும் பெரும்பாலும் சினிமாவாதான் இருக்கு. ஆனா ஹாலிவுட், இரானியப் படங்கள் எல்லாம் பாடல்களே இல்லாமல் வந்தாலும் ரசிக்கவைக்குது. இந்திய சினிமாவில் மட்டும்தான் பாடல்கள் இருக்கு. சினிமாவுக்கு இன்னும் பாடல்கள் தேவையா?''


''இந்திய சினிமாவில் பாட்டு இருக் கிறதால்தான் இன்னும் கெட்டுப் போகாம இருக்கு. (சிரிக்கிறார்) ஒரு நல்ல பாட்டு நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது. ஒரு பாட்டைப் பாடினாலே நம்மோட காதல், சோகம், மனைவி, குடும்பம்னு எல்லா உணர்வுகளும் வந்துட்டுப் போகுது. 


அதனால பாட்டு எப்பவுமே நல்ல விஷயம்தான். ஆனா, இப்போபாடல் களும் ஒரு மாதிரி ஃபார்முலாவுக்கு உள்ளே சிக்கிக்கிச்சு. அதை உடைக்கணும்னு நான் ஆசைப்படுறேன். மத்த வங்க கதையில் நான் வேலை பார்க்கும்போது அது சாத்தியம் இல்லை. அதனால், நானே கதை பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



''இயக்குநர் ரஹ்மான்..! ஆச்சர்யமா இருக்கே?''


''இயக்குநர் ஆகணும்னு ஆசை தான். ஆனா, அதுக்கு இசையை மறந்து நிறைய விஷயங்களில் கவனம் செலுத் தணும். அதில் எனக்கு இஷ்டம் இல்லை. அதனால் கதை, திரைக்கதை மட்டும் பண்ணியிருக்கேன். என் நண்பர்கள்கிட்ட முதல்ல சொல்லிப் பார்த்தேன். அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது. தயாரிப்பாளரும் கிடைச்சிட் டாங்க. அடுத்த வருஷம் என் கதையை யாராவது இயக்குவாங்க. படம் இசை, குடும்பம் சம்பந்தப்பட்டதா இருக்கும். ஹீரோ, ஹீரோ யின் மாதிரியான ஃபார்முலா விஷயங்கள் இருக்காது. ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்!''


''நீங்க மலையாளப் படத்தில் நடிக்கப்போறதா நியூஸ் வந்துச்சே?''



''அப்படியா... எனக்கு அப்படி எந்த ஐடி யாவும் இல்லை. இருக்கிற வேலைகளைப் பார்க்கவே எனக்கு நேரம்இல்லை. இதில் எங்கே நடிக்க? அதே மாதிரிஅமெரிக்கா வில் செட்டில் ஆகப்போறேன்னு எழுது றாங்க. அமெரிக்காவில் எனக்கு ஒரு வீடு, ஒரு ஸ்டுடியோ இருக்கு. இங்கே என்ன வேலை செய்றேனோ, அதையே அங்கேயும் செய்றேன். அமெரிக்கா எனக்கு வசதியா இருக்கு. ரோட்லஃப்ரீயா நடந்து போக லாம். ரோட்டுக் கடையில் காபி சாப்பிட லாம். யாரும் தொந்தரவு பண்றதில்லை. எனக்கு அதுதான் வேணும். அதனால் வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் இருக்கிறேன். அவ்ளோதான்!''


''எங்க எல்லாருக்குமே ரிலாக்ஸ் பண்ண ரஹ்மான் பாடல்கள் இருக்கு. நீங்க ரிலாக்ஸ் பண்ண என்ன பண்ணுவீங்க?''



''(சிரிக்கிறார்) பாட்டே கேட்க மாட்டேன்... ஒரு ரூம்ல அமைதியா உட்கார்ந்து சும்மா யோசிப்பேன். செம ரிலாக்ஸ் ஆகிருவேன்!''


''இத்தனை வருஷம் ஆகியும் இன்னொரு ரஹ்மான் வரவே இல்லை. உங்க இடத்தை யார் பிடிக்க முடியும்னு நினைக்கிறீங்க?''


''யார் நினைச்சாலும் பிடிக்க முடியும். என் இடத்தைப் பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும் மக்களோட அலைவரிசையும் சிங்க் ஆச்சுன்னா, நாளைக்கு என் இடத்தில் நீங்க இருப்பீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள் கேட்டா, அது நல்ல பாட்டு. அவங்க கேக்கலைன்னா, அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான். அதை மனசுல வெச்சுட்டுதான் வேலை பார்க்கிறேன்!''  


''பாடல்களுக்கு ரொம்ப மெனக்கெடுவீங்க. மாறுவேஷத்தில் விதவிதமான சத்தங்களைத் தேடிச் சுத்துவீங்கன்னு கேள்விப்பட்டோம்?''


''நானா? நான் ஒண்ணும் ரஜினிகாந்த் இல்லைங்க. அவர்தான் அமைதியான இடம் தேடி அப்படி எல்லாம் விதவிதமா சுத்துவார். எனக்கு டியூன் வேணும்னா, இருக்கிற இடத்திலேயே அமைதி ஆகிருவேன். எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு கணக்கு எதுவும் இல்லை. அமைதியா இருக்கும்போது கிடைக்கிற சக்தி வேற எதிலேயும் கிடைக்காது!''


''ரஜினி, கமல் ரெண்டு பேரிடமுமே பழகி யிருக்கீங்க... அவங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயம் என்ன?''


''ரஜினி சார் எந்த முடிவையும் யோசிச்சு எடுக்கமாட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள இருக்கிற ஆன்மிக மனசு என்ன சொல்லுதோ அதைவெச்சு முடிவு எடுப்பார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதில் மனிதத்தன்மைஇருக் கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.


 கமல் சார் மூணு தலைமுறைக்கு சாதிக்க வேண்டியதை ஒரே ஆளா சாதிச்சுட்டார். அப்புறம் நீங்க நம்புவீங்களான்னு தெரியலை... ரெண்டு பேர்கிட்டயும் நான் அவ்வளவாப் பேசினதே இல்லை. 'கோச்சடையான்’ பாட்டுகளுக்காக டியூன் ரெடி பண்ணும்போது ரஜினி சார்கிட்ட கொஞ்சம் பழகினேன். ஒரு பாட்டில் அவரைப் புகழ்ந்து அவரே சொல்ற மாதிரி ஒரு வசனம் வரும். அதைச் சொல்றதுக்கு அவ்ளோ கூச்சப்பட்டார். ரொம்ப வற்புறுத்தி அந்த வசனத்தைப் பேசவெச்சோம். அந்த எளிமைதான் ரஜினி!''  



''கலையில் சாதிச்ச பலரும் அடுத்த கட்டமா ஏதோ ஒண்ணைத் தேடுறாங்க. ரஹ்மான் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கிற விஷயம் என்ன?''


''அது தெரிஞ்சாதான் தேடிப் பிடிச்சிருவேனே? ஏதோ ஒண்ணைத் தேடி ஓடிட்டே இருக்கேன். என்னோட தேடல் முடியும்போது எல்லாமே போதும்னு நானே நின்னுடுவேன். எனக்குனு எந்த ஏக்கமோ, ஆசையோ கிடையாது. எல்லாத்தையும் இறைவன் கையில் கொடுத்தாச்சு. அவர் வழிநடத்துவதால்... சந்தோஷம், துக்கம் எல்லாம் ஒரே மாதிரிதான் கடந்துபோகுது.


கோபம், சோகம், பொறாமை எல்லாமே நம்மைப் பலவீனப்படுத்தும் விஷயங்கள். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தும்போது, இந்தக் குணங்கள் கொஞ்சம்கொஞ்சமாக் கரைஞ்சுபோயிடும். நாமளும் வேலையில் கவனம் செலுத்தி ஜெயிக்கலாம்!''


''என்ன இருந்தாலும், இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்குறது கஷ்டமாச்சே?''


''நானும் மனுஷன்தான். எனக்கும் தடுமாற்றங்கள் வரும். ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புகளைப் பத்தி யோசிக்கும்போது நாமெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப் போட்டுட்டு வேலை பார்க்கக் கிளம்பிடுவேன்!''


thanx - vikatan


readers view

1.ரஹ்மானோட தன்னடக்கம் எந்த இசையமைப்பாளருக்கும் கிடையாது என்பதை தான் இந்த கட்டுரை சொல்கிறது. வாழ்த்துக்கள் ரஹ்மான். இந்திய இசையை முதன் முதலாக உலக அரங்கிற்கு எடுத்துசென்று, உலக நாயகனுக்கு முன்னதாக ஆஸ்கர் வாங்கி ஆப்பு வைத்து, நிறைய பாடகர்களுக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கொடுத்து, எண்ணிலடங்கா வாத்தியங்களின் வெளிப்பாடுகளை செவிக்கு தந்த நீங்கள் ஒரு 'Break Thru'.


2/ இளையராஜாவை வம்பிழுக்காமல் இருக்க முடியவில்லை.....

ஒரு பொங்கல் நாள் சன் டிவி நிகழ்ச்சியில் இளையராஜா சொன்னார்... நன்கு நினைவு இருக்கிறது. எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று க்யூவில் நிற்கிறார்கள். வேறு நாதியே இன்றைக்கு இசைத் துறையில் கிடையாது, அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால், நான் அமைப்பது தான் இசை, அதை கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி.. வேறு வழியில்லை.... என்றார்....

அன்றைக்கு நினைத்தேன்... கடவுள் என்று ஒருவர் இருப்பதை மறந்து இப்படிச் சொல்கிறாரே என்று... அதன் பிறகு அவர் மேல் இருந்த மரியாதையே போச்சு...

இந்த பேட்டியைப் படிக்கும் போது ரஹ்மானின் அடக்கம் பிரமிப்பூட்டுகிறது.... அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது... வாழ்க வளமுடன். 



3. இசைஞானியின் சாதனையை ஒரு காலத்திலும் எந்த ஒரு ரகுமானாலும் தொட்டு பார்க்க கூட முடியாது என்பதே உண்மை.... சிறிய உதாரணமாக எடுத்து கொள்ளுங்கள், ரஜினி படமாகட்டும், கமல் படமாகட்டும், மணிரத்தினத்தின் படமாகட்டும்... இசைஞானியின் இசையில் வெளிவந்தது போல் மற்ற இசைஅமைப்பாளர்கள் இசையில் வந்தவை நிலைத்து நிற்கவில்லை என்பதே உண்மை... ரஜினியின் சொந்த படமான வள்ளி படத்தில் வந்த யாதொரு பாடலுக்கு இணையாக , மற்ற இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த ரஜினி படங்களில் பாடல்கள் நிலைக்க வில்லையே... ரகுமானின் இசையில் பாடல்கள் தற்காலிக வெற்றி நிச்சயம்... ஆனால் இசைஞானி இசையில் தான் பாடல்கள் மனதில் அப்படியே படிந்து விடும்... அதாவது, பிறந்தவருக்கும் , வளர்பவர்களுக்கும், வளர்ந்து முதிந்தவர்களுக்கும், இசைஞானி அவர்களின் தாலாட்டு இல்லாது உறக்கம் கிடையாது...


4