தினமலர் விமர்சனம்
அமீர், எம்.சசிகுமார் இருவரிடமும் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் துரைவாணன். இவர் தனது குருநாதர்களின் குருநாதர் பாலா பாணியில் ஒரு படம் பண்ண களம் இறங்கியதின் விளைவே "யாசகன்". இனி யாசகனை ரசிகன்(ர்)கள் ஏற்றுக்கொள்வார்களா பார்ப்போம்!
கதைப்படி, ஊருக்கே நல்லபிள்ளை, வூட்டுக்கு உதவாத பிள்ளை ஹீரோ சூர்யா எனும் "அங்காடித்தெரு மகேஷ். பட்டப்படிப்பு படித்துவிட்டு நேர்மையான வேலை வேண்டும் என காத்திருக்கும் சூர்யா-மகேஷ்., அப்பாவின் கரித்து கொட்டல்கள், அம்மா, அக்காவின் ஏச்சு-பேச்சுகள் எதையும் பொருட்படுத்தாமல் அக்கம் பக்கத்திற்கு உதவுவதையே கொள்கையாக கொண்டிருக்கிறார். இவரது நற்குணங்களை பார்த்து அறிமுக நாயகி ஷாலினி எனும் நிரஞ்சனாவிற்கு, ஹீரோ மீது காதல்.
இந்நிலையில் பக்கத்து வீட்டு சிறுமியின் உயிருக்காக ஐந்து லட்சம் தேவைப்பட அதை ஏற்பாடு செய்வதற்கு படாத பாடுபடும் ஹீரோவிற்கு அவர் உதவிய ஊர் உதவவில்லை. சிறுமி அகால மரணமடைகிறார். அதைப்பார்த்து மனநிலை பாதிக்கப்படும் ஹீரோ மகேஷை, ஈவு இரக்கமின்றி ஊரும், உறவும் ஒதுக்கி வைக்க, தெரு தெருவாய் நிராதரவாய் சுற்றுகிறார் மகேஷ்.
அவருக்கு நாயகி ஷாலினி-நிரஞ்சனா மட்டும் ஆதரவுக்கரம் நீட்டி அடைக்கலம் கொடுக்கிறார். இச்சமயத்தில் ஷாலினிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க, மணந்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றாலும் மகேஷையே மணப்பேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார், விஷம் குடிக்கிறார். மகேஷ் மனநிலை பாதிப்பில் இருந்து மீண்டாரா.?! நிரஞ்சனாவிற்கு மாலையிட்டாரா? அல்லது நிரஞ்சனா மாண்டாரா...? என்பது யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸாக சொல்லப்பட்டிருக்கிறது.
நாயகர் சூர்யாவாக மகேஷ், மனநிலை பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். பின்பாதி படத்தில் மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகும் மகேஷ், முன்பாதி படத்தி<லும் ஒருமாதிரி சோர்வான முகத்துடனேயே வருவதும், போவதும் சற்றே போரடிக்கிறது. இயக்குநரும், மகேஷூம் இதை தவிர்த்திருந்தால் முன்பாதி படமும், பின்பாதி படம் மாதிரி தூக்கலாக இருந்திருக்கும்!
நாயகி ஷாலினியாக அறிமுகம் நிரஞ்சனா, குடும்பபாங்கான கிராமத்து பாத்திரங்களுக்கு டபுள் ஓ.கே. எனும் அளவில் அசத்தி இருக்கிறார்.
நாயகன்-நாயகியின் அப்பா, அம்மா, அக்கா கேரக்டர்கள் ஜெயச்சந்திரன், சாமுவேல் சந்திரன், ஆனந்தி, ஜானவி உள்ளிட்டோர் நிறையவே நடித்திருக்கின்றனர்.
சதீஷ் சக்கரவர்த்தியின் இசை, வே.பாபுவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்டுகள், இயக்குநர் துரைவாணனுக்கு பக்கபலமாக பின்பாதி படக்காட்சிகளில் இருந்திருக்கின்றன!
ஆகமொத்தத்தில் துரைவாணன் இயக்கத்தில், பின்பாதி படத்தில் இருக்கும் வித்தியாசமும், விறுவிறுப்பும், க்ளைமாக்ஸ் புதுமையும், முன்பாதி படத்திலும் இருந்திருந்ததென்றால் "யாசகன் - வசீகரனாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும்!
- நடிகர் : மகேஷ்
- நடிகை : நிரஞ்சனா
- இயக்குனர் :துரைவாணன்
thanx - dinamalar
a