''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''
வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.
''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.
மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது. எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும்.
மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன.
இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.
அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும்.
அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்..
.
''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.
இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்.
சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன?
காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்...
''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.
சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''
நன்றி டாக்டர் விகடன்
நன்றி டாக்டர் விகடன்