‘‘இயல்பாகவே நான் நடித்த படங்களில் எல்லாம் நிறைய கதாபாத்திரங்கள்
இருக்கும். அதில் கதையைச் சுமந்து செல்லும் பலருடன் நானும் ஒரு
கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பேன். ‘ஜீவா’ படத்தில்தான் முழு கதையையும்
தாங்கிப் போகும் பாத்திரத்தில் நடிக்கிறேன். அந்த வகையில் பார்த்தால்
இந்தப் படத்தில் தான் ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறேன். சின்னச்சின்ன அடியாக
எடுத்து வைத்த எனக்கு சரியான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிற
படமாக ‘ஜீவா’அமையும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார், விஷ்ணு விஷால்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஆர்யா தயாரிக்க, விஷால் வெளியிட என்று ‘ஜீவா’ படம்
ஒரு நட்புக் கூட்டணியில் உருவாகி வருகிறது. விஷாலின் அலுவலகத்தில்
அமர்ந்து படத்தின் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த விஷ்ணு விஷாலை
சந்தித்தோம்..
‘ஜீவா’ படத்தின் புகைப்படங்களைப் பார்த்தால் சிசிஎல் கிரிக்கெட்
குழுவினர் இணைந்து ஒரு கிரிக்கெட் படம் எடுத்திருப்பது போல தெரிகிறதே?
இப்படி ஒரு நல்ல டீமை இணைத்து வைத்தது சினிமா நட்சத்திரங்களின்
சிசிஎல்தான். ‘ஜீவா’ படத்தை திட்டமிடுவதற்கு முன்பு ‘வீர தீர சூரன்’
கதையைத்தான் சுசீந்திரன் படமாக்க முடிவெடுத்திருந்தார். அந்த நேரம் அவர்
விஷாலோடு சேர்ந்து ‘பாண்டிய நாடு’ படத்தில் கமிட் ஆகியிருந்தார். மீண்டும்
நாங்க இருவரும் சேரலாம் என்றபோது, ‘‘நாம ஏன் ‘வெண்ணிலா கபடி குழு’ மாதிரி
ஒரு படம் செய்யக்கூடாது’’ என்கிற யோசனையைச் சொன்னார். இதைத்தொடர்ந்து
மீண்டும் ஒரு விளையாட்டுப் படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
அதுவும் கிரிக்கெட்டை கையில் எடுப்போம் என்பது சுசீந்திரன் ஐடியாவாக
இருந்தது. நான் இயல்பாகவே ஒரு கிரிக்கெட் வீரன். அதனால் கிரிக்கெட்டைச்
சார்ந்த கதை என்றதும் இதில் பணியாற்றும் வேகம் அதிகரித்தது. அந்த உணர்வு
படத்திலும் பிரதிபலிக்கும்.
‘முண்டாசுப்பட்டி 2’ என்ன ஆச்சு?
அதைப்பற்றி இன்னும் பேச ஆரம்பிக்க வில்லை. வந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.
நீங்கள் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகராமே?
எனக்கு பெரிதாக நடிக்கத் தெரியாது. இயக்குநர் சொல்வதைக் கேட்டு அதை
கொஞ்சமும் சொதப்பாமல் நடிக்க முயற்சிக்கி றேன். ‘நீர்ப்பறவை’ படத்தில் கூட
மதுபோதை யில் சுற்றித்திரியும் காட்சிகளில் நன்றாக நடித்திருப்பதாக
சொல்வார்கள். அதெல்லாம் இயக்குநர் சொல்படி கேட்டு நடித்ததுதான். ஒரு
படத்தில் 6 மாதங்கள் வேலை செய்கிறோம். அந்த நேரத்தில் அப்படத்தின்
இயக்குநர்களை குருநாதர்களைப் போல் மதிக்கிறேன். அதனால் இயக்குநர்கள் என்னை
விரும்புவதாக நினைக்கிறேன்.
உங்கள் மனைவியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக முன்பு கூறியிருந்தீர்களே?
அவங்க இரண்டு கதைகளைத் தயார் செய்தார்கள். முதல் படத்தின் கதையை அவர் எழுதி
முடிக்கும் சமயம் அதே சாயலில் ஒரு படம் வந்தது. அடுத்து எனக்கு கிரிக்கெட்
பிடிக்குமே என்று அதை மையமாக வைத்து கதையை தயார் செய்தார். தெரிந்தோ,
தெரியாமலோ இப்போது சுசீந்திரனுடன் இணைந்து கிரிக்கெட் படமும் செய்கிறோம்.
திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஓடிவிட்டது. கொஞ்சம் நாட்கள் சினிமா வேலைகளை
ஓரம்கட்டி விட்டு குடும்ப பொறுப்புகளில் இறங்கலாம் என்று பிரேக்
எடுத்திருக்கிறார். கண்டிப்பாக அவங்க இயக்கத்தில் நான் படம் நடிப்பேன்.
உங்களுடன் சேர்ந்து அறிமுகமான சூரி இன்று படு பிஸியாகிவிட்டாரே?
அவர் இன்று படங்களில் செய்யும் எல்லா பாவனைகளும் நடிப்பதற்கு முன்பே நான்
அருகில் இருந்து பார்த்து ரசித்தவன். அவர் யதார்த்தமான மனிதர்.
கதாபாத்திரம் என்ன கேட்கிறதோ அதற்காக மெனக்கெடுவார். இந்தப் படத்துக்காக 20
நாட்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துள்ளார். பரோட்டா காமெடி மாதிரி இந்தப்
படத்தின் இரண்டாவது பாதியில் செம காமெடி ட்ரீட் வைத்திருக்கிறார்.
உங்களையும், விக்ராந்தையும் வைத்து விஷால் ஒரு படம் தயாரிக்கப் போகிறாராமே?
அதற்கு நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வருகிறோம். சரியான கதை கிடைத்ததும் வேலையைத் தொடங்கிவிடுவோம்.
ஆர்யா, விஷால் என்று உங்க நண்பர்கள் எல்லோரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். உங்களுக்கு படம் தயாரிக்கும் எண்ணம் இல்லையா?
அதுபற்றி இன்னும் யோசிக்கவில்லை. அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கவும் எனக்கு
இப்போது மனமில்லை. முதலில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அக்கறை
செலுத்தலாம் என்று இருக்கிறேன்.
உங்கள் அடுத்த படங்கள் என்ன?
சீனுராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படம் ரெடியாகிவிட்டது. இதில்
விஜய்சேதுபதியும் நானும் நடிக்கிறோம். விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்த
அனுபவம் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நலன் குமாரசாமியிடம்
உதவியாளராக இருந்த ரவி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். நல்ல
கதைகளில் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
thanx - the hindu