இரண்டு வெற்றிகள் கொடுத்துவிட்டால் மூன்றாவது படத்தில் முதலமைச்சர் கனவு
காணும் ‘ மாஸ் ஹீரோ’ மனநிலை கொண்ட தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி
வித்தியாசமானவர். 55 வயதுக் கிழவராக நடித்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற
படத்தைத் தயாரிக்கிறார். யதார்த்தமான நடிப்புக்காகப் பாராட்டப்படும் விஜய்
சேதுபதி. நடிப்பு உத்திகள் பற்றிக் கவலை இல்லை என்று சொல்லிக்கொண்டே
நடிப்பைப் பற்றி ஆழமாகப் பேசித் தீர்க்கிறார். அவருடன்
உரையாடியதிலிருந்து...
நடிப்பு பற்றிய உங்களது பார்வை என்ன?
திட்டவட்டமாக இதுதான் என்று வரையறுத்துச் சொல்ல முடியுமா என்று
தெரியவில்லை. நடிப்பு என்பது பிறவித் திறமை, என்னைப் போன்றவர்கள் எந்தக்
காலத்திலும் நடிகனாக முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு
கூத்துப்பட்டறையில் சேர்ந்தபோது எனக்கு அக்கவுண்ட் எழுதும் வேலையைக்
கொடுத்தார்கள்.
நடிப்புக்கும் வரவு செலவு கணக்கு எழுதுவதற்கும் என்ன தொடர்பு இருக்க
முடியும்; நமது முகத்தைப் பார்த்தே முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது
என்று குழம்பினேன். ஆனால் “முறையான பயிற்சி இருந்தால் யாரும் நடிகனாக
முடியும். இங்கே யாருக்கும் யாரும் நடிப்பைச் சொல்லித்தரவே முடியாது.
நடிப்பு என்பது நாமாக உணர்வது. இங்கே தரப்படுவது நடிகனுக்கான பயிற்சிகளே
தவிர, நடிப்புப் பயிற்சி அல்ல.” என்ற ந. முத்துசாமி ஐயாவின் உரை நடிப்பு
பற்றிய என் பார்வையை மாற்றிவிட்டது.
நடிப்பை உணர்ந்து செய்வது என்பதைச் சிலர் குழந்தையாக இருக்கும்போதே
செய்துவிடுகிறார்கள். உணர்வுநிலையின் ஆற்றலைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும்
நடிப்பு வசமாவதில் வேறுபாடுகளும் அவகாசமும் தேவைப்படலாம். ஆனால் நடிப்பு
எட்ட முடியாத உயரமல்ல.
கதாபாத்திரங்களை வெளிப்படுத்திக் காட்டுவதில் இதுவரையிலான அனுபவம் என்ன கற்றுத் தந்திருக்கிறது?
என்னுடைய அனுபவத்தில் கதாபாத்திரங்கள் என்பவை, அவற்றை உருவாக்குகிற
எழுத்தாளருக்கும் இயக்குநருக்குமே அதிகம் நெருக்கமானவை. நடிகனுக்கல்ல. நான்
ஏற்று நடிக்க வேண்டும் என்ற கதாபாத்திரத்தை இயக்குநர் என்னிடம்
விளக்கும்போது, அந்தக் கதாபாத்திரம் எனக்கு அறிமுகமில்லாத ஒன்று. என்னைப்
பொறுத்தவரை அது இயக்குநரின் கற்பனை.
அந்தக் கற்பனையை ஒரு கட்டத்தில் அவர் நிஜமாக எண்ணிக்கொண்டு
கதாபாத்திரங்களுடன் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து அவற்றோடு
பயணப்பட்டுவிடுகிறார். அதனால் நான் ஏற்கும் அவரது கதாபாத்திரம்
இயக்குநருக்கு நண்பனைப் போன்றவன். அவரது நண்பனைப் பற்றி என்னிடம் சொல்வது
போலத்தான் விவரித்துச் சொல்வார். அவர் விவரித்ததை வைத்து அவருடைய நண்பன்
இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்றொரு கற்பனையை நான் உருவாக்கிக்
கொள்கிறேன்.
இயக்குநர் நடிக்கச் சொல்லும்போது நடிக்கிறேன். நான் நடிப்பது இயக்குநருக்கு
ஏற்புடையதாக இல்லாவிட்டால், “ அவன் இந்தக் காட்சியில் இப்படிச்
செய்யமாட்டான். இப்படித்தான் செய்திருப்பான், இப்படித்தான்
பார்த்திருப்பான். இப்படித்தான் நடப்பான், இப்படித்தான் கையை அசைப்பான்”
என்று கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் இயக்குநர் திருத்திக்கொண்டே
வருவார்.
சில நாள் படப்பிடிப்புக்குப் பிறகு ஏற்றுக்கொண்ட கற்பனைக் கதாபாத்திரம்
இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று என் செயலும், மனமும் ஒரு
வரையறைக்குள் இயங்க ஆரம்பித்துவிடுகிறது. கதாபாத்திரங்களை
வெளிப்படுத்துவதில் இதுதான் எனது அனுபவமாக இருந்துவருகிறது.
அப்படியானால் நீங்கள் இயக்குநரின் நடிகரா?
இல்லை. என்னை அப்படி பிரேம் பண்ணிக்கொள்ள விரும்பவில்லை. இயக்குநர்
விவரிக்கும் கதாபாத்திரம் எனது கற்பனையைத் தூண்ட ஆரம்பித்த பிறகு, எனது
உள்ளுணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. என் உள்ளுணர்வு சொல்வதை
வெளிப்படுத்துகிறேன். உள்ளுணர்வைப் பின்தொடரும் ஒருவன் என்று வேண்டுமானால்
என்னைச் சொல்லிக்கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் உள்ளுணர்வே என் எஜமானன். இயக்குநர் என் பக்கத்து
இருக்கையின் பயணி. என்னதான் உள்ளுணர்வின் உந்துதலோடு நடித்தாலும்
சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள், நம்மை கேமரா கவனித்துக் கொண்டிருக்கிறது
என்ற சிந்தனையும் எனக்கு ஓடத்தான் செய்கிறது. தன்னிலை மறந்து நடிக்கும்
அளவுக்கு நான் வளரவில்லை என்றாலும் பல நேரங்களில் உளவியல் ரீதியான
தொந்தரவுக்கு உள்ளாகி நடிப்பதை மறுக்கமாட்டேன்.
உதாரணமாகத் தென்மேற்கு பருவக்காற்று படப்பிடிப்பில் சரண்யா அம்மா
இறந்துபோவது போன்ற காட்சி. அன்று அந்தக் காட்சியை எடுக்கிறோம் என்றே எனது
இயக்குநர் சொல்லவில்லை. திடீரென்று அவர் இறந்துபோவதுபோல் படமாக்கியதும்
எனக்கு என் அம்மா நினைவு வந்துவிட்டது.
அந்தக் காட்சியின் முதல் டேக்கில் எனது உணர்வு உண்மையாக வெளிப்பட்டது. அதே
டேக் மீண்டும் எடுக்கப்பட்டபோது உணர்வு நிலை கொஞ்சம் குறைந்துவிட்டது.
எடுக்கப்படும் காட்சிகள் நம் வாழ்க்கையின் சில நிகழ்வுகளோடு
ஒத்துப்போகும்போது நம்மையும் அறியாமல், அதை நாம் நினைவுபடுத்திக்
கொள்கிறோம்.
வயதுக்கு மீறிய கதாபாத்திரங்கள் வரும்போது வாழ்க்கை அனுபவமில்லாமல் எப்படி ஏற்று நடிக்க முன் வருகிறீர்கள்?
தற்போது நான் தயாரித்து நடித்துவரும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் 55 வயதுக்
கிழவனாகப் படம் முழுவதும் வருகிறேன். நாம் அப்பாக்களையும்,
பெரியப்பாக்களையும், சித்தப்பாக்களையும், நண்பர்களின் அப்பாக்களையும்
பார்த்துத்தானே வளர்கிறோம். நம்மைச் சுற்றிலும் சகமனிதர்களின்
அனுபவங்கள்தானே அதிகமாய்ச் சிதறிக் கிடக்கின்றன.
நடுத்தர வர்க்க வாழ்க்கையிலும், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையிலும்
எவ்வளவு சந்தோஷமும் கொண்டாட்டமும் இருக்கிறதோ, அதே அளவு போராட்டமும்
அவலமும் இருக்கிறது. இதை ஒரு நடிகன் கவனிக்க வேண்டும் என்பதில்லை.
இவற்றுக்கு நடுவேதானே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை
நடிக்க நமக்கு எந்த உத்தியும் தேவைப்படாது. நாம் யாராக இருந்தோமோ, இப்போது
இருக்கிறோமோ அதை வெளிப்படுத்தினாலே போதும்.
ஒரேவித சிகை, தாடி, மீசை என எல்லாப் படங்களிலும் ஒரேவிதமான
தோற்றத்திலேயே நடிக்கிறீர்கள். கதாபாத்திரத்துக்குத் தோற்றம் கூடுதல் பலம்
என்பதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?
இதற்கு இரண்டு காரணங்கள் என்னிடம் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட
படங்களில் மாறி மாறி நடிக்கும்போது, தோற்றம் சார்ந்த ‘கண்டியூனிட்டி’
பிரச்சினை வரக் கூடாது என்பது முதல் காரணம். அடுத்து இந்தத் தோற்றம்
கொண்டவரது குணாதிசயம் இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாக
வரையறுக்க முடியாது. எந்தத் தோற்றத்திலும் எந்தக் குணாதிசயம் கொண்டவனும்
இருக்கலாம்.
பிச்சைக்காரன் வேஷத்தில் ஒரு பணக்காரன் திரியலாம். இதைக் கதையின் கடைசிக்
கட்டத்தில் பார்வையாளனுக்கு இயக்குநர் தெரியப்படுத்தலாம். கதாபாத்திரத்தின்
தோற்றத்தை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு இருக்கும் பங்கே போதுமானது என்பது
என் இப்போதைய கருத்து. நாளை இது மாறலாம். எதிலும் எனக்குப் பிடிவாதம்
கிடையாது. என் கதாபாத்திரம் ஒன்றுக்காக மீசையுடன் மட்டும்
நடிக்கப்போகிறேன்.
வெற்றிபெறும் படங்களில் இருக்கிறீர்கள். இன்னுமா உங்களுக்கு மாஸ் ஹீரோ ஆகும் ஆசை வரவில்லை?
யார் இல்லையென்றது. ஒருவரை நம்பி முதலீடு செய்யவரும் தயாரிப்பாளருக்கு
லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் படங்களைத் தருபவரை மாஸ் ஹீரோ என்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தவரை மாஸ் ஹீரோ என்பதை நான் ‘பிரபலமான நடிகன்’ என்பதாக
மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். எத்தனை பிரபலமான நடிகனாக, செல்வாக்கு பெற்ற
நடிகனாக இருந்தாலும், நான் ராஜா வேஷத்தில் நடித்தாலும் தியேட்டருக்கு வரும்
ரசிகனுக்கு நிறைவு தருவது கதைதான். அது இல்லாமல் இங்கே யாருமே மாஸ் ஹீரோ
கிடையாது. கதைதான் எல்லாமுமாக இருக்கிறது. நாளை ரூ.100 கோடி வசூல் படம்
கொடுத்தாலும், அதில் கதையையும் கதாபாத்திரத்தையும் நம்புகிற நடிகனாகவே நான்
அடையாளம் பெற விரும்புகிறேன்.
ஜிகிர்தண்டா படத்தில் சேதுவாக நடிக்க ஏன் என்னை அழைக்கவில்லை என்று கார்த்திக் சுப்புராஜை கேட்டீர்களா?
என்னால் உரிமையோடு கேட்க முடியவில்லை. காரணம் கார்த்திக் சுப்புராஜ் போலவே
பாபி சிம்ஹா என் நெருங்கிய நண்பன். அவன் சிறப்பாக நடித்திருந்தான்.
சித்தார்த் அந்தக் கதையின் மீதிருந்த காதலால் தன் நாயக பிம்பத்தைக் கழற்றி
வைத்துவிட்டு அதில் நடித்து தயாரித்தார். இறுதிக் காட்சியில் கேங்ஸ்டர்
இயக்குநராகிவிடும் சித்தார்த் மிரட்டி கால்ஷீட் வாங்கும் பிரபல நாயகனாக
ஒருவர் நடிக்க வேண்டும். அது நீதான் என்று கார்த்திக் சுப்புராஜ்
அழைத்தான். அந்த இடத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று மதித்த நண்பனை
மறக்க மாட்டேன்.
thanx - the hindu