Showing posts with label மரப்பாச்சி (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label மரப்பாச்சி (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Friday, October 30, 2015

மரப்பாச்சி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : முருகானந்தம்
நடிகை :சுகன்யா
இயக்குனர் :முத்து மனோகரன்
இசை :பாலகணேஷ்
ஓளிப்பதிவு :முத்து மனோகரன்
நாயகன் முருகானந்தம் இராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊரில் இருக்கும் தாய், தந்தை, தங்கை ஆகியோரை சந்திக்க வருகிறார். முருகானந்தத்தின் அப்பா ஊரில் பெரிய பண்ணையார், செல்வாக்கு மிக்கவர். மேலும் ஊரின் எம்.ஏல்.ஏ., போலீஸ் ஆகியோரை தன் வசம் வைத்திருக்கிறார்.

ராஜஸ்தானில் இருந்து இந்த ஊருக்கு வந்த சிலர், மரப்பாச்சி பொம்மைகள் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களில் நாயகி சுகன்யாவும் ஒருவர். ஒரு சந்தர்ப்பத்தில் சுகன்யாவை முருகானந்தம் சந்திக்கிறார். இந்த முதல் சந்திப்பிலேயே சுகன்யா மீது காதல் வயப்படுகிறார். சுகன்யாவும் காதலை ஏற்க, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த விஷயம் முருகானந்தத்தின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. இவர்களின் காதலை பிரிக்க நினைத்த அவர், எம்.ஏல்.ஏ மூலம் போலீஸ் உதவியுடன் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் வெளியேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் அது பலனளிக்காமல் போகிறது. 

இந்நிலையில், ஒருநாள் காட்டுப்பகுதியில் தனியாக கிக்கிக்கொண்ட சுகன்யாவை, எம்.எல்.ஏ.வும், போலீஸ் அதிகாரியும் அடியாட்கள் மூலம் கற்பழிக்க முயற்சி செய்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக சுகன்யா இறந்துவிடுகிறார். இதற்கிடையில், விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பும் முருகானந்தம், ஊரில் சுகன்யாவைத் தேடுகிறார். அப்போது, முருகானந்தம் ஊரில் இருந்து வாங்கி வந்த ஒரு பொம்மையில் சுகன்யாவின் ஆவி புகுந்துவிடுகிறது.

தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் அதிகாரியை பழிவாங்கத் துடிக்கிறது. இறுதியில், அவர்களை சுகன்யா பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் முருகானந்தம் இராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் இருக்கிறார். ஆனால், நடிப்புதான் பொருந்தாமல் இருக்கிறது. நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் சுகன்யா, முற்பகுதியில் துறுதுறு பெண்ணாகவும், பிற்பகுதியில் பேயாகவும் நடித்திருக்கிறார். 

மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.ஏல்.ஏ., போலீஸ் அதிகாரி, நாயகன் அப்பா, நாயகியின் அப்பா ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், அந்த வரிசையில் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்து மனோகரன். ஆனால், சமீபத்தில் வந்த பேய் படங்களுக்கு மத்தியில் இப்படம் நன்றாக இருக்கிறது. புதுமுகங்களிடம் சரியாக வேலை வாங்காமல் விட்டிருக்கிறார்.

பாலகணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். முத்து மனோகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மரப்பாச்சி’ மிரட்டல்.

-மாலைமலர்