1921-ம் ஆண்டில் சிறையில் காலடி வைத்தேன். எனது கடைசி
சிறைவாசம் 1946-ல் முடிவடைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சுமார்
20 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ளேன். போராட்டம் நிறைந்த ஆண்டுகளைச்
சுற்றித்தான் இந்த நிகழ்வுகளின் வரிசை என்னும் வண்ணக் காட்சியைத் தொகுத்
துள்ளேன்’ - மன்மதநாத் குப்தா இப்படி மிகச் சாதாரணமாகத்தான் முன்னுரையில்
சொல்கிறார்.
ஆனால், அவர் விவரிப்பவை வண்ணக் காட்சிகளாக இல்லை. ரத்தச்
சிதறல்களாக இருக்கின்றன. 'கத்தியின்றி ரத்தமின்றி’ நாம் சுதந்திரம்
வாங்கியதாக வரலாற்றுப் பாடம் படித்தோம். படிக்கிறோம். ஆனால், கத்தியாலும்
ரத்தத்தாலும் போராடியவர்களை மறைத்துவிட்டு பாடம் படித்தோம் என்பதை
மன்மதநாத் குப்தாவின் புத்தகம் வெளிச்சப்படுத்துகிறது.
இந்திய விடுதலைப்
போராட்டத்தின் கடைசி 30 ஆண்டுச் சூழலின் நேரடிச் சாட்சியாக இருக்கக்கூடிய
மன்மதநாத் விவரிப்பதைப் படிக்கும்போது இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான
தருணம் வந்துவிட்டது என்பதைத் தூண்டிய இளைஞர் படை நாடு முழுவதும் பரவி
இருந்ததை உணர முடிந்தது.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பற்றி ஆங்கிலத்திலும்
தமிழிலும் ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன.
ஆனால், அதற்கு முன்பும்
பின்புமாக தங்களது அர்ப்பணிப்பை வழங்கிய அத்தனை இளைஞர்களின் முகங்களையும்
மன்மதநாத் குப்தா நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். வாழ்வின் வசந்த
காலத்தை பிரிட்டிஷ் படைகளின் சிறைக்கொட்டடிகளில் கழித்த இந்த இளைஞர்களை
அன்றைய காங்கிரஸும் காந்தியும் எப்படி நடத்தினர் என்பதைப் படிக்கும்போது
கோபம் கொப்பளிக்கிறது.
இந்த இளைஞர்களின் பாதை வேறானதாக இருக்கலாம். ஆனால்,
லட்சியம் ஒன்றுதானே? இவர்களது அர்ப்பணிப்பு உணர்வுகூட கணக்கில்
எடுத்துக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. காந்தியின் உத்தரவுகளை
மீற முடியாமல் நேதாஜி திணறியதும், நேரு இவர்களைக் கண்டுகொள்ளாமல்
விட்டதும் இன்றைய வரலாற்று மாணவர்கள் வாசிக்க வேண்டியது.
''அன்னிய அரசாங்கத்தின் கையாட்கள் எங்களை
பயங்கரவாதிகள் என்று அழைத்தனர். அது, எங்களைப் பாதிக்கவில்லை. ஆனால்,
காந்தியின் அணுகுமுறை, 'நீங்களெல்லாம் அரசியல் கைதிகள் இல்லை’ என்று
கூறுவதுபோலத்தான் இருந்தது. பிற நாடுகளின் புரட்சியாளர்களை எல்லாம் அவர்
தேசபக்தர்களாக ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்தியப் புரட்சியாளர்களைப்
பொறுத்தவரை அவர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடந்துகொண்டார். அவர்
நடத்திய பேச்சுவார்த்தைகளில் புரட்சிக்காரர்களின் விடுதலை
யை வலியுறுத்தவே இல்லை’ என்று சான்றுகளோடு சொல்கிறது இந்தப் புத்தகம்.
ஆயுதத்தால் மட்டுமே ஆங்கிலேயர்களை விரட்ட முடியும்
என்று நினைத்த இந்த இளைஞர்கள், சிறைகளுக்குள் அகிம்சை மூலமாகவே தங்கள்
கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று பல வாரங்கள் உண்ணாவிரதம் இருந்த
காட்சிகள் மனதைக் கனக்க வைக்கின்றன. ஆயுத வாழ்க்கையையும்அகிம்சை
வாழ்க்கையையும் தேர்ந்தெடுப்பவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அனைத்து
இடைஞ்சல்களையும் அணு அணுவாய் விவரிக்கிறார். சிறைப் பதிவேட்டில் 'திருத்த
முடியாத கலகக்காரன்’ என்று எழுதப்பட்ட மன்மதநாத் குப்தா, இந்திய விடுதலைப்
போராட்ட வரலாற்றைத் திருத்தி எழுதிய புத்தகம் இது.
நன்றி - ஜூ வி
- புத்தகன்