Showing posts with label மனுஷ்யபுத்திரன். Show all posts
Showing posts with label மனுஷ்யபுத்திரன். Show all posts

Thursday, March 28, 2013

ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? பிரபல எழுத்தாளர்கள் பேட்டி

ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
டி.அருள் எழிலன், ஓவியம்: மருது
இலங்கையைப் பாதுகாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஒரு சடங்காக நிறைவேற்றிவிட்டது ஐ.நா. ஆனாலும், உலகத் தமிழர்களுக்கு இப்போது உற்சாகம் அளிக்கும் ஒரே விஷயம்... தமிழகம். இப்போது ஈழ மக்களும் நம்பியிருப்பது தமிழர்களின் அழுத்தங்களைத்தான். உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.


இந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான ஆளுமைகள் சிலரிடம் ஈழத் தமிழர்களின் நலனுக்காக இனி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்தோம்.


புனிதப்பாண்டியன், ஆசிரியர், தலித் முரசு


''இனப் படுகொலைக்கு ஆளான போஸ்னிய மக்களுக்கு நியாயம் கிடைக்கப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் மிக முக்கியமான கருத்து ஒன்றைச் சொன்னார். உலக அளவில் இனப் படுகொலை ஒப்பந்தம் ஒன்று உள்ளது. உலகெங்கிலும் சுமார் 140 அரசுகள் அந்தச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு கையெழுத்திட்டிருக்கின்றன. அதில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனப் படுகொலை எங்காவது நடந்தால், ஹேக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். 



அந்த வகையில் ஹேக் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்று, இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அது ஈழப் பிரச்னையில் முக்கியமானதொரு நகர்வாக இருக்கும். அந்த வழக்கின் அடிப்படையில், ஈழ மக்களுக்கான சில உரிமைகளை நாம் கோர முடியும். இனப் படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் சட்ட விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரலாம். காணாமல்போதல், கொலைகள் என்று இனப் பாகுபாடு தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தற்காலிகத் தடுப்பு ஆணையம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்துக்கு உண்டு. கம்போடியா, ருவாண்டா, கொசாவா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது!''  



சுப.உதயகுமாரன்- ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்



''ஈழப் படுகொலைகள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் அது முழுமையான மக்கள் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐ.நா-வில் மனித உரிமை அமர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், போராட்டங்களும் முடிந்துபோனால் அது பின்னடைவாகிவிடும் என்னும் நிலையில், மாணவர்கள் ஈழ மக்களுக்காகக் கிராமங் களுக்குச் செல்ல வேண்டும். ஈழ மக்களின் விடிவுக்காகச் சர்வதேசச் சமூகத்தை நம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து உருவாகும் அழுத்தங்களே இந்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் எட்ட வேண்டிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு, சாத்வீகமான போராட்டங்களை மாணவர்கள் தொடர வேண்டும்!''


திருமுருகன்- ஒருங்கிணைப்பாளர், மே-17 இயக்கம்


''இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் சர்வதேசச் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பிரதேசங்களைத் தமிழர்களின் நிர்வாக சபையாக இலங்கை அரசும் சர்வதேசச் சமூகங்களும் ஏற்றுக்கொண்டு தான் பேச்சுவார்த்தைக்கு வந்தன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழீழக் குடிமக்கள் அல்லாத பிறர் அனுமதி இன்றி நுழைய முடியாது என்பதைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொண்டுஇருந்தது.


 இன்னமும் அந்த அங்கீகாரம் அப்படியேதான் இருக்கிறது. மூன்று தரப்பினர் ஈடுபட்ட அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து இலங்கை விலகி, போர் தொடுத்து இனப் படுகொலையை நடத்தி முடித்துவிட்டது. போருக்குப் பின்னர், டப்ளின் தீர்ப்பாயம் 2010 ஜனவரி 15-ல் சொன்னது மிக முக்கியமான விஷயம். பேச்சுவார்த்தை மேஜையில் அமர்ந்திருக்கும் ஒரு குழுவை எப்படிப் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யலாம் என அமெரிக் காவை நோக்கியும், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கியும் கேள்வி எழுப்பியது டப்ளின் தீர்ப்பாயம். 



ஆக, பயங்கரவாதம் என்ற பொருந்தாத ஒன்றைச் சொல்லி புலிகள் அமைப்பினரை அழித்திருக்கும் நிலையில்... நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்குப் பகுதி நிர்வாக சபைக்கான உரிமையைச் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் தற்காலிகத் தீர்வாகவும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு என்னும் நிரந்தரத் தீர்வை நோக்கிய தொடக்கமாகவும் நமது போராட்டப் பாதையை அமைத்துக்கொள்ளலாம்!''


சரஸ்வதி- அமைப்பாளர், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தோழமை மையம்



''குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சார்ந்த மக்களை ஓர் அரசு கூட்டுக் கொலை செய்யும்போது, அந்த மக்கள் தங்களுக்கான ஓர் அரசை அமைத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தை, உரிமையைச் சர்வதேசச் சட்டங்கள் வழங்கிஉள்ளன. இந்தச் சட்டத்தின் உதவியோடு இதற்கு முன் பல நாடுகளும் பொது வாக்கெடுப்பு உரிமையின் கீழ் சுதந்திரமான நாடுகளாகவும் ஆகியுள்ளன. ஆனால், தொடர்ச்சியான போராட்டங்களும் அழுத்தங்களும் மட்டுமே இதைச் சாதிக்கும்.


 ஐ.நா-வில் பொது வாக்கெடுப்பு, இனப் படுகொலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னெ டுப்பது உலகின் வேறெந்த நாடுகளைவிடவும் இந்தியாவுக்கே அதிக உரிமையுள்ளது. ஆக, இந்திய அரசாங்கத்தை அந்தத் திருப்பத்தை நோக்கி நகர்த்துவதே நமது போராட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்!''



சுரேஷ், பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்


''தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் அங்கு சென்று தனி நாடு கேட்கிறார்கள் என்றுதான் தமிழகத்துக்கு வெளியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத் துக்கு என்று சில பிரச்னைகள் இருக்கின்றன என்று ஆங்கில ஊடகங்களோ, வட இந்திய அரசியல்வாதிகளோ நினைப்ப தில்லை. அவர்களுக்கு நமது நியாயங்கள் புரியும் வகையில் தமிழகம் தொடங்கி டெல்லி வரை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஈழத் தமிழர்களின் நியாயங்களைப் பேச வேண்டும். இன்று தமிழகத்தில் உருவான அழுத்தம் வட இந்தியாவிலும் உருவானால் மட்டுமே, இந்திய அரசு இந்தப் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்கும். இப்போது நமது போராட்டம் இந்திய அரசோடு அல்ல, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையோடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''


புகழேந்தி - செயலாளர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்


''ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கைதான். ஆனால், இனி மேல் இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரம் பெற்ற குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற முடிவுதான் அரசியல்ரீதியாக அந்த மக்களைப் பாதுகாக்கும். இனப் படுகொலை முடிந்து இந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முதலாக தமிழக மக்களிடம் ஈழப் பிரச்னை அதன் வீரியத்துடன் கொண்டுசேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்தத் தருணத்தில் மிகவும் சாதகமான அம்சம். தேர்தல் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு, மாணவர்கள் தலைமையில் திட்டமிட்டு இந்திய அளவிலான அழுத்தம் ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், புகலிடத் தமிழர்கள் உலகளாவிய அளவில் இதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தினால், நிச்சயம் அரசியல்ரீதியாக ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும். ஆனால், அது தொடர்ச்சியான போராட்டங்களாலும் அழுத்தங்களாலும் மட்டுமே கிடைக்கும்!''


மனுஷ்யபுத்திரன் - எழுத்தாளர்


''இனப் படுகொலை என்பது ஒரு கூட்டுக் கொலை என்கிற நிலையில், அந்த நினைவுகளில் இருந்தும் பாதிப்புகளில் இருந்தும் ஒரு சமூகம் மீண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும். சில தலைமுறைகள் கடந்தும்கூட அந்த நினைவுகள் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், நேரடி யாக ஈழ மக்களும் அதன் பண்பாட்டுத் தொடர் புகளால் தமிழக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றைக் கணக்கில்கொண்டு ஈழத் தமிழர் குழந்தைகள் மற்றும் இளந் தலைமுறையினருக்கு மன நிலையைச் சாந்தப்படுத்தும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது எழுச்சியோடு நடைபெறும் மாணவர் போராட்டங்கள் எந்த அரசியல் அமைப்பாலும் கைப்பற்ற முடியாத போராட்டமாக உள்ளதோடு, அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது. ஆகவே, இப்போது தமிழகத்தில் உடனடித் தேவை ஈழ மக்களுக்கான அரசியல் முன்னெடுப்புகளைச் சீராய்ந்து செய்யும் ஓர் ஒருங்கிணைப்பு!''


ஜோதிமணி - காங்கிரஸ் கட்சி


''சமீபத்தில் தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து வந்தேன். கடந்த 30 ஆண்டு காலப் போரால் ஈழத் தமிழர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்த் தாக்குதலில் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும் மக்களை ராணுவத்தின் இறுக்கமான கண்ணிகள் இறுக்கியபடியே இருக்கின்றன. வட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களுமே முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால்,  பொதுமக்கள் ஒரு வார்த்தை நலம் விசாரிக்கக்கூட அஞ்சுகிறார்கள்.


 உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தை வெளி யேற்ற வேண்டும். போரில் சிதிலம் அடைந்த பாடசாலைகளைப் புதுப்பித்து நல்ல கல்வியை அந்தக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்டுக்கொடுப்பதும், பொருளாதாரரீதியாக அந்த மக்களை முன்னேற்று வதும், இயல்பு வாழ்வை அங்கு கொண்டுவருவதும் ஈழத்தின் உடனடித் தேவை கள். நிச்சயமாக ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஒன்றே இறுதித் தீர்வாக இருக்க முடியும். ஆனால், அது  தமிழீழமா, அதிகாரப் பகிர்வா அல்லது பொது வாக்கெடுப்பா... எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம் அல்ல... ஈழத் தமிழர்கள். ஆனால், அந்தத் தெளிவை அவர்கள் எட்டுவதற்கான புனரமைப்புகளும் இழந்த வாழ்க்கைக்கான நிவாரணங்களையும் அவர்களுக்கு அளிக்கச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்!''


அ.மார்க்ஸ் - அமைப்பாளர், மனித உரிமைக்கான மக்கள் கழகம்


''ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை மனித உரிமை கவுன்சிலுக்கு அளித்த அறிக்கையில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, ராணுவ நீக்கம், அதிகாரப் பகிர்வு முதலியன பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


ராஜபக்ஷேக்களின் குடும்ப சர்வாதிகாரத்தைக் கண்டித்து, இன்று குமார் டேவிட், திசராணி குணரத்ன முதலிய சிங்கள அறிவு ஜீவிகளும் பேசத் தொடங்கிஉள்ளனர். இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் எதிர்கால நடவடிக்கைகளை அமைக்க வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, வடக்கு, கிழக்கில் ராணுவ நீக்கம், முறையான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உடனடிக் கோரிக்கைகளாக முன்வைத்துப் போராட்டங்களைத் தொடர்வதும், பொது வாக்கெடுப்பு என்பதை நோக்கி இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆதரவைத் திரட்டுவதும்தான் ஈழத் தமிழரின் எதிர்காலத்துக்கான சீரிய செயற்பாடுகளாக அமையும்!''

 நன்றி - விகடன்