சீனி நாயக்கருக்கு ஆரம்பத்தில் இருந்த கோவில்பட்டி வாழ்க்கை, வரவர கசக்க ஆரம்பித்துவிட்டது. தெரிந்த முகம் ஒன்று எதிரே வந்தால், ஒரு சிறிய புன்னகையும் கூட வணக்கம் தான்! தெருவில் கண்டாலும் ‘வாங்க’ என் பார்கள். பராக்குப் பார்த்துக்கொண்டே போனால்..? அப்படித்தான் ஆகிவிட்டது. வேலை இல்லாம வெட்டியாக அலை பவனை எவன், எவள் ஏரெடுத்துப் பார்ப்பார்கள்?
வாழ்க்கை வேண்டும் என்பவர் களுக்கு, மற்றவர்களிடம் இல்லாத ஒரு கெட்டிக்காரத்தனம் இருக்கவேண்டும். ஒரு பச்சிலையாவது பூசத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு யோசனை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
‘இன்னார் வந்திருக்கிறார்’ என்று சொன்னால், கேட்பவனின் முகம் ‘அப் படியா!’ என்று மலர வேண்டும். எதையா வது கொடுப்பவனாக இருக்க வேண்டும். சதா கேட்பவனாக இருக்கக் கூடாது.
பேருந்தைவிட்டு இறங்கியதும் இவர் தான் தட்டுப்படுவார். அசையாமல் பார்த் துக்கொண்டே நிற்பார். ‘‘வாரும்…’’ என்று கூப்பிட்டப் பிறகுதான் என்னோடு வருவார். கூப்பிடுவேன் என்று திட்டவட்ட மாக அவருக்கும் தெரியும்.
ஏதாவது ஒரு வேலையைத் தலை யில் போட்டுக்கொண்டுதான் கோவில்பட் டிக்கு வருவேன். ஒரு வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ நான் போனால், அவர் தெருவிலேயே நின்றுவிடுவார். வரச் சொன்னால்தான் உள்ளே வருவார்.
அலைந்து திரிந்துவிட்டு மதியம் சாப்பிட எங்கே, எந்த ஓட்டல் போக என்று அவரிடம்தான் கேட்பேன். ‘கறியும் சோறும் சாப்பிடணும் போல இருக்கு…’ என்பார். அதுக்கு என்று எங்களுக்கு ஒரு கடை உண்டு. ‘விருதுநகர் நாடார் போஜன சாலை’ என்று பெயர். திருப்தியாக இருக் கும். அங்கே திருநெல்வேலி சைவாள் மண்பானைச் சமையல் உணவுக் கடை இப்படியெல்லாம் உண்டு.
சீனி நாயக்கருக்கு ஒல்லியான உடம்பு தான். சாப்பிடுகிறது அதிசயமாக இருக் கும். எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு புடைக்காது. ‘‘எங்கே வேய்… போவுது சாப்பாடெல்லாம்?’’ என்று அவரைப் பார்த்துக் கேலி பேசுவோம். இப்போது அப்படிக் கேட்க முடியுமா? படு ரோசக் காரராகிட்டாரே!
‘‘இப்பொவெல்லாம் கட்சி ஆபீஸ் போறதில்லையா..?’’ என்று கேட்டேன்.
பரதநாட்டியத்தில், முகபாவனைகளில் வெறுப்பு பாவத்தைக் காட்டுவதைப் போல் காட்டினார் முகத்தை. சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.
கிருஷ்ணன் கோயிலுக்கு எதிரே சத்திரம் என்று ஒரு கட்டிடம். ரொம்ப விஸ்தீரணமாக இருக்கும். அதனுள் நடைபாதையாக இருக்கிற இடத்தில் கோடையில் எங்கே காற்று வராவிட்டா லும் அங்கே வரும். அப்படி ஓர் அமைப்பு. கடை சிப்பந்திகள் மதியச் சாப்பாடு சாப்பிட்டவுடன் வரீசையா அங்கே வந்து ஒரு கோழித் தூக்கம் போட்டு எழுந்து போவார்கள்.
ஒரு தெருவில் இருந்து மறுதெருவுக் குப் போக, அது ஒரு குறுக்குப் பாதை. பலமுறை நான் அந்த வழி போயிருக் கிறேன். அப்படி அதனுள் நடந்து போகிறவர்கள் காலணிகளைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டு போக வேண்டும். அப்படிப் போகும்போது, அங்கே ஒருநாள் சீனி நாயக்கர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இப்படியான அநாதைகளுக்கு அது ஒரு ரட்சகம். சீனி நாயக்கர் இப்போது அங்கேதான் போகவேண்டும் சிறுதூக்கம் போட.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர்கூட அந்த சத்திரத் தில் தங்கிப் போயிருக்கிறார் என்று சொல்வார்கள்.
காலணிகளைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டு ஏன் போகிறார்கள் என்பதற்கு இது ஞாயமான காரணமாக தான் எடுத்துக் கொண்டேன்.
கோவில்பட்டிக்கே என்று வருஷாந் திரத் திருவிழாக்கள் உண்டு. அதில் ‘தீர்த்தம்’ என்கிற திருவிழா. செண்ப வள்ளி அம்மன் கோயிலிலும் கிருஷ்ணன் கோயிலிலும் தேரோட்டங் கள் உண்டு. அந்த விழாக்களின் போதுதான் நாயனக் கச்சேரிகள் நடக்கும். பெரிய பெரிய வித்வான்களெல்லாம் வந்து நாயனம் வாசிப்பார்கள். சீனி நாயக்கருக்குக் கொண்டாட்டமான நாட்கள் அவை.
அந்தப் பெருங்கூட் டத்தில் கண்களால் தேடினால் எங்கோ ஒரு மூலையில் அவர் உட்கார்ந்து ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டிருப் பதைப் பார்க்கலாம். அந்த வித்வான் களின் வாசிக்காத பகல் பொழுதுகளில் மற்றவர்களோடு இவரும் சேர்ந்து கொண்டு அவர்களை, அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதபடிக்கு தூரத்தில் இருந்தபடி பார்த்துக் கொண்டே இருப்பார். ரசிகர்களுக்கு ஏற்படும் ஒரு வகை ‘நோய்’இது. அப்படியான சமயங்களில், ‘‘சாப்பிடப் போகலாமா..?’’ என்று கேட்டால் வர மறுத்துவிடுவார்.
திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை நாயன வாசிப்பு சீனி நாயக்கருக்கு ரொம்பப் பிடிக்கும். மற்ற வித்வான்களின் வாசிப்பில் செய்யும் ‘சேட்டைகள்’ ‘திருத்திரியங்கள்’ எல்லாம் இவருக்குப் பிடிக்காது. ‘யாருடா கேட்டா இந்த பிர்க்காக்களை?’ என்று மற்றவர் களுக்குக் கேட்காதபடி சொல்லிக் கொள் வார். நீடாமங்கலம் தவில் வாசிப்பின் போது இவர் குழந்தையாகிவிடுவார்.
சீனி நாயக்கருக்குக் கொஞ்ச நாளா கவே உடல் நிலை சரியில்லை. ‘தடுமம் பிடித்ததினால் வந்த இருமல்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். சும்மாவே இவர் ஒல்லி. வேக வேகமாக மெலிந்து கொண்டு வந்தார். சாயந்தரமானவுடன் கணகணவென்று ஒரு காய்ச்சல். கொஞ்ச தூரம் நடந்தாலே தாங்க முடியாத தய்ப்பு (அலுப்பு).
எனக்குத் தெரிந்த ஒரு டாக்ட ரிடம் கூட்டிக்கொண்டு போனேன். பரிசோதனை பண்ணும்போதே டாக்டர் என்னைப் பார்த்தார்.
‘‘பாட்டில் கொண்டு வந்திருக்கிறீர் களா..?’’ என்று டாக்டர் கேட்டதும், நான் ‘‘இல்லை…’’ என்று தலையசைத்தேன். கம்பவுண்டரிடம் ஏதோ சொன்னார் டாக் டர். ஒரு வெத்துபாட்டில் வாங்கி வர சீனி நாயக்கரிடம் காசு கொடுத்து அனுப்பி னேன். அந்தக் காலத்தில் கோவில்பட்டி யில் டாக்டர்கள் கன் செல்டிங் பீஸ் வாங்கு வதில்லை. மருந்துக்கு மட்டும் முக்கால் ரூபாய் பெற்றுக் கொள்வார்கள்.
‘‘பெரியாஸ்பத்திரிக்குப் போகச் சொல்லுங்கள் இவரை. அநேகமா டி.பி-யாக இருக்கலாம்’’ என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
சென்னையில் எனக்குத் தெரிந்த டாக்டர் கதிரேசன், ஓட்டேரி காசநோய் ஆஸ்பத்திரியின் பொறுப்பாளராக இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் கொடுத்து, போக பணமும் தந்து அனுப்பினேன்.
அந்த ஆஸ்பத்திரியில் ஒரு மூன்று மாதங்கள் படுக்கையில் நானும் இருந்தவன்தான். அதைப் பற்றி தனியாகச் சொல்லவேணும் என்றாலும், ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். அந்த ஆஸ்பத்திரியின் கழிப்பறையின் மலக் கோப்பையில் இந்த நோய்க்குத் தரப்படும் குறுணை மருந்தைப் போட்டு யாரோ தண்ணீர் விட்டிருக்கிறார்கள். ‘பி.ஏ.எஸ்’ என்கிற அந்த மருந்து,நோயை வேகமாகக் கட்டுப்படுத்தும்.
மறுநாளும் அதே போல் அந்தக் குறுணை மருந்து சிதறிக் கிடப்பதைப் பார்த்தேன்.
மதியச் சாப்பாட்டுக்கு மேல் டாக்டர் கதிரேசன் கொஞ்சம் விட்டாத்தியாக இருப்பார். அனுமதியுடன் போய்ப் பார்த்துப் பேசுவேன். இந்தக் குறுணை மருந்து விஷயத்தை அவரிடம் சொல்லணும் என்று தோன்றியது.
கேட்டதும், அவருடைய முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. ‘‘ஆமா, இது எனக்கும் தெரியும். அப்படிச் செய்த ஒரு நோயாளியைப் பரிவுடன் விசாரித்தேன். கும்பிட்டு அழுதார். வீட்டில் வறுமை. நோய்க்குப் பிறகு வேலைக்குப் போக முடியலை. இந்த நோய்க்கு சத்தான உணவு சாப்பிட வேண்டும். அது இந்த ஆஸ்பத்திரியில்தான் கிடைக்கும்.
பால், முட்டை, ஈரல் மட்டன் என்று இங்கேதான் கிடைக்கிறது. கொடுக்கிற மருந்துகளை ஒழுங்காக சாப்பிட்டுவிட்டால் நோய் குணமாகிவிடும். வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கே போய் என்ன செய்வேன் சாப்பாட்டுக்கு என்கிறார்’’ என்றார் டாக்டர் கதிரேசன்.
‘‘வாய்க்குள் மாத்திரையைப் போட்டு தண்ணீர்விட்டு உள்ளுக்குப் போகவிடலாமே…’’ என்று சொன்ன துக்கு, ‘‘அப்படியும் செய்து பார்க்கிறது தான். வல்லாள கண்டன்களாக இருக்கிறாங்களே நம்மவங்கள்…’’ என்று வருத்தப்பட்டார் டாக்டர்.
ஃநன்றி - த இந்து
- இன்னும் வருவாங்க