Showing posts with label மனுசங்க.. 16: உத்தியம்மா! -கி.ராஜநாராயணன். Show all posts
Showing posts with label மனுசங்க.. 16: உத்தியம்மா! -கி.ராஜநாராயணன். Show all posts

Wednesday, August 19, 2015

மனுசங்க.. 16: உத்தியம்மா! -கி.ராஜநாராயணன்

ஓவியம்: மனோகர்
ஓவியம்: மனோகர்
உத்தியம்மா கம்மம்புல் குத்தினால் தெருவழியாகப் போகிறவர்கள் கொஞ்சம் நின்று பார்த்துவிட்டுப் போவார்கள்.
ஊர் ஒடுங்கிவிட்டது என்பார்கள். இது ஒரு தோற்றம்தான். ஒரு மூலை யில் ஒடுங்குவதுபோல் இருக்கும். இன்னோர் இடத்தில் ஒரு மாடு ஈன்று கொண்டிருக்கும். அதுக்கு ஒத்தாசையாக ஒரு பெண்மணி விளக்குப் பிடித்துக் கொண்டிருப்பாள் வெளிச்சத்துக்காக.
இன்னொரு வீட்டினுள் புதுமணத் தம்பதி விழித்துக் கொண்டிருப்பார்கள். விளக்கை அணைத்துவிட்டு. ஊர் எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். அப்படி ஓர் உயிர்ப்பு ஊருக்கு.
உத்தியம்மா அன்றைய வேலைகளை எல்லாம் முடித்து, அடுப்பங்கூடத்தை ஒதுங்கவைத்துவிட்டு அப்படியே அந்த மண் தரையில் எதையும் விரிக்காமல், எதையும் தலைக்கு வைத்துக்கொள் ளாமல் படுத்துக்கொள்வாள். பூமாதேவி யின் மேல் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததும் தெரியாது தூங்கியதும் தெரியாது. அப்படி ஓர் ஆரோக்கியமான நித்திரை.
தூங்கா நாயக்கர் சோற்றுத் தூக்கம் முடித்து கால்நடைகளுக்குக் கூளம் அள்ளிப் போட்டுவிட்டு, மடக் குத் தண்ணீர் குடிக்க இருட்டில் அடுப் படியைப் பார்க்க கவனமாக நடந்து வருவார்.
வீட்டு இருட்டைப் பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களுக்கு, அவள் சயனித்துக் கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்ததும் கால்கள் நகர மறுவிட்டது. பார்த்துக்கொண்டே இருந்தார். குழந்தைகளும் பெண்களும் தூங்கும் பாங்கே ஒரு அழகுதான்!
சத்தம் எழாமல் போகிணியால் பானைத் தண்ணீரை மொண்டு குடித்து விட்டு வந்து இவள் பக்கம் நெருங்கி மண்டியிட்டு அமர்ந்து, திரும்பவும் ஒரு பாச்சல் அவளைப் பார்த்தார். முகத்தை முகம் நெருங்கி கவனித்தது. அந்தப் பெண் உடம்பு பகலெல்லாம் ஓடியாடி கடும் வெயிலில் வாங்கிய அலுப்பை வெளிவிட்டுக் கொண்டிருந்தது.
முகத்தை இன்னும் நெருங்கியது அவர் முகம். ஒவ்வொரு முகமும் தூங் கும்போது ஒரு மணத்தை வெளியிடும். என்ன மதுரம் என்ன மதுரம் அந்த மூச்சுக் காற்று.
கலைக்கக் கூடாத தூக்கம் அது!
சம்சாரிகள் வீடுகட்டிக்கொள்வது அவர்கள் தங்கிக்கொள்ள இல்லை. தங்கள் புலங்களில் அவர்கள் பயிர் செய்யும் விளைச்சலான பருத்தி, கம்பம் புல், பருப்பு வகைகள் போன்ற பலன்களைக் குவித்து வைக்கவும் மூடைகள் போட்டு அடுக்கி வைக்கவுமே. அவற்றோடு இவர்களுடைய பெண் பிள்ளைகளும் படுத்து உறங்குவார்கள்.
வீட்டைஒட்டி வெளியே மாடுகளைக் கட்டிப் போட்டுக்கொண்டு, அதுகளின் பக்கத்திலேயே கயிற்றுக் கட்டில் மடக் குக் கட்டில் என்று போட்டு அவற்றில் முடங்கிக் கொள்வார்கள்.
மாடுகளையும் அவர்களையும் பிரிக்கவே முடியாது. அவர்களுடைய கோயில்களிலும் மாடுகள் சிலையாகப் படுத்திருப்பதைப் பார்க்கலாம்.
அடைமழைக் காலங்களில் வேற புகல் கிடையாது. அந்தக் காலங்களில் ‘அறுவது நாள் அடைப்பு’ என்று உண்டு. ராவும் பகலும் ஒன்று என்று, விடாமல் ஊத்தும் மழை. அப்போ எங்கே போய் படுத்துக்கொள்வது?
உச்ச வெறிப்பு என்று, மக்கள்மேல் இரக்கப்பட்டு வானம் ஒரு அரை மணி நேரம் இடைவெளி விடும். சாக்குகளை எடுத்து கொங்காணியைப் போல செய்து தலையில் போட்டுக்கொண்டு மந்தைக்கு ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வெளிக்கிருந்துவிட்டு, எந்த இடத்திலும் ‘கால்’ அலம்பிக்கொண்டு மறு ஓட்டமாய் வீட்டுக்குள் சிரித்துக்கொண்டே வந்து சேருவார்கள்.
எதிரே தட்டுப்படுகிறவர்களோடு நாலு வார்த்தைகள் கூட பேச முடியாது. சிரித்துக்கொள்ள முடியும். ஏம் சிரிக் கிறோம் என்றும் தெரியாது.
அடைமழைக் காலங்களில் ஊரின் தோற்றமே மாறிப் போய்விடும்.
அது எமனின் அறுவடைக் காலம். வயோதிகர்கள் தொடர்ந்து செத்துக் கொண்டே இருப்பார்கள். வீடும் கொஞ் சம் சுத்தமாகிவிடும்.
கொழும்புக் குடை என்ற பெயரில் கருப்புத் துணி போட்ட குடைகளின் வரத்து இல்லாத காலங்களில், தாழம் பூக் குடை என்று ஒன்று உண்டு. அதை இந்தக் கருந்துணிக் குடை போல விரிக்கவோ, மடக்கவோ முடியாது. வசதியானவர்களின் வீடுகளில்தான் இது இருக்கும். இரண்டு பேர் நனை யாமல் அதனுள் போய் வரலாம்.
பருவ காலத்தில் மழைத் தொடர்ந்து பெய்யும்போது வானம் குமுறாது, மின்னாது, அடித்தும் பேயாது. சீராக விழுந்துகொண்டே இருக்கும் ராவும் பகலும்.
அந்த மழையையும் தூறலையும் ஒரு பொருட்டாகவே கருதாத வீட்டுச் சிறுவர்கள் அதிகாலை நேரத்திலேயே எழுந்து வெளியே போய்விடுவார்கள். சிறுவர்களால் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்க முடியாது. முக்கியமாக அடை மழைக் காலத்துக்கே என்று உள்ள காட்சிகளைத் தவறவிட முடியுமா?
வில்வெட்டுப் பூச்சிகள் என்று உண்டு. செக்கச் செவேர் என்று அந்தப் பூச்சிகள் பார்க்க வெத்திலை எச்சில் துப்பியது போலத் தெரியும். அவற்றை தம்பலப்பூச்சிகள் என்பார்கள். கையில் எடுத்துத் தொட்டுப் பார்த்தால் அதி மெதுவாக, பட்டைத் தொடுவது போலிருக்கும். மெத்தப் படித்தவர்கள் ‘இந்திரகோபம்’ என்பார்கள் இவற்றை.
மழை நாட்களில் தெருப் பாதை, வண்டிப் பாதைகளில் நடந்து வரும்போது மண் புழுக்கள் மண்ணினுள் இருந்து வெளியே வந்து நீந்திக் கொண்டிருக்கும். எல்லாம் ஒரு காரணமாகத்தான்.
மழைக் காலத்தில் இந்தப் பறவைகள், பட்சிகள் எல்லாம் எப்படி இரையைத் தேடும்? பசியைத் தாங்கும் சக்தி இந்த மனுசப் பயல்களைவிட பறவைகளுக்கு மிக அதிகம் என்பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும்.
தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விளையும் பால்ச் சோளம், கதிர் அறுப்பு முடிந்தவுடன் அதன் தட்டைகளை வெட்டி சிறுசிறு கட்டுகளாகக் கட்டிக் கொண்டு வந்து படப்பாக அடுக்கி ஒழுங்குபடுத்துவார்கள். சில வருடங்களில் அமோக விளைச்சல் காலங்களில் படப்புகள் வைக்கவும் இடம் இருக்காது. அதனால் வீட்டுத் தொழுவினுள்ளும் கொண்டு வந்து குவியல் குவியலாகப் போடுவார்கள்.
நேரம் போதாமையினால் சாயந்திரம் முடிந்தும்கூட வேலை தொடரும். சம்சாரிகளின் தொழுவங்கள் மாடுகள் கட்டுவதற்கு மட்டுமில்லை. பருத்தி எடுக்க வெளியூர்களில் இருந்து வரும் வலசைக்காரர்கள் தங்கி இருந்து கொள்ள, நல்லது பொல்லது விசேடங்களுக்கு சோற்றுப் பந்தி நடத்த, இவை அல்லாத நேரங்களில் வீட்டுக் கோழிகள் அடைந்துகொள்ள… இப்படியெல்லாம் பயன்படும்.
இந்த சோளத்தட்டை வந்து தொழுவத்துக்குள் விழுந்த களேபரத்தில் அதனுள் ஒரு கொழிவெடை எப்படியோ அகப்பட்டுக்கொண்டுவிட்டது எங்க ளுக்குத் தெரியவில்லை.
- இன்னும் வருவாங்க…


நன்றி - த இந்து