Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் - 8. Show all posts
Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் - 8. Show all posts

Saturday, September 19, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் -பாகம் 8

கள்ள நோட்டு பெயரில் மோசடி

'குற்றவுணர்ச்சி இல்லாம செய்ற எதுவுமே தப்பு இல்லை’  சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். அப்படி குற்ற உணர்ச்சியே இல்லாமல் செய்யப்பட்ட மோசடிகள் கொங்கு மண்டலத்தில் மிக அதிகம். அப்படி நடந்த மிக முக்கிய மோசடிகளில் ஒன்றைத் தான் இந்த வார கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதுதான் கள்ளநோட்டு பெயரில் நடந்த நூதன மோசடி.

அல்வாவுக்கே அல்வா

கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவது என்பதே மிகப்பெரிய ஏமாற்று வேலை. அதிலும் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்த பகுதி கொங்கு மண்டலம். திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்களே... அது மாதிரி இது கள்ள நோட்டுக்கே கள்ள நோட்டு. உண்மையான நோட்டு போல அச்சு அசலாக அச்சடித்து புழக்கத்தில் விடுவது ஒரு வகை மோசடி என்றால், கள்ள நோட்டு எனச்சொல்லி கட்டுக்கட்டாக வெற்று காகிதங்களை கொடுத்து ஏமாற்றுவது தான் இந்த மோசடி. எப்படி என்கிறீர்களா? பொள்ளாச்சி அருகே நடந்த சம்பவத்தை அப்படியே சொல்கிறேன்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஊரில் மளிகை கடை நடத்தி வந்தவர் பழனிச்சாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓரளவு சொத்து கொண்டவர் தான். இருந்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். பெரிய வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என இவருக்கு ஏகப்பட்ட ஆசைகள். அப்போது அந்த ஊருக்கு புதியதாய் வந்த ஒருவர் இவருக்கு பழக்கமாகிறார். தெரு அதிர புல்லட்டில் வரும் இவர், பழனிச்சாமியுடன் நெருக்கமாய் பழகுகிறார். எப்போது பர்ஸ் நிறைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் நிறைந்திருக்க, காசை தண்ணியாக செலவு செய்கிறார். பழனிச்சாமிக்கும் சேர்த்து.

ஆயிரம் கொடுத்தா 2 ஆயிரம்

பழனிச்சாமியிடம் நெருங்கி பழகி பேசும்போது பழனிச்சாமி தன் ஆசைகள் குறித்து அவரிடம் சொல்கிறார். இதற்கு என்னிடம் ஒரு வழி உள்ளது என்கிறார் அவர். ஆனால் அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என தெரியவில்லை என்கிறார். என்ன வழி அதை முதலில் சொல்லுங்கள் என்கிறார் பழனிச்சாமி. 
'ஒன்றுக்கு ரெண்டு... அதாவது டபுளிங். 10 ஆயிரம் கொடுத்தா 20 ஆயிரம், ஒரு லட்சம் கொடுத்தா 2 லட்சம். சீக்கிரம் பணக்காரனாகிடலாம்' என சொல்ல பழனிச்சாமிக்கு லேசாக ஆசை வருகிறது. 'கள்ள நோட்டு பிசினஸா? சிக்கிக்க மாட்டோமா?' என்கிறார். 

'இவ்வளவு நாள் நாம் செலவு பண்ணோமே? உங்க கடையில கூட பொருளை வாங்க கொடுத்தேனே? சிக்கி கிட்டமா என்ன? என பதில் கேள்வி கேட்கிறார் அந்த நபர். 'என்னது நீங்க வைச்சிருந்தது அவ்வளவும் கள்ள நோட்டா? நம்பவே முடியலையே?' என மிரட்சியாகிறார் பழனிச்சாமி.

மறுநாள் சோதனை முறையில் அமலாகிறது டபுளிங் முயற்சி.. 10 ஆயிரம் ரூபாயோடு பழனிச்சாமி செல்ல அதை பெற்றுக்கொண்டு 40 கருப்பு நிற காகிதங்கள் வழங்கப்படுகிறது. இது என்ன காகிதத்தை தருகிறார்கள். பணம் எங்கே?' என பழனிச்சாமி கேட்க இது தான் பணம் வா சொல்கிறேன் என வீட்டுக்கு அழைத்து செல்கிறார் அந்த நபர். ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து, அதில் திரவம் போல் ஏதோ ஒன்றை கலக்குகிறார் அந்த நபர். தண்ணீர் பொங்குகிறது. அப்போது அதில் அந்த கருப்பு தாள்களை எல்லாம் போடுகிறார். 10 நிமிடம் கழித்து உள்ளே கைவிட்டு அந்த பேப்பரை எடுக்கிறார். இதை பார்க்கும் பழனிச்சாமி பிரமித்து போகிறார். காரணம் அவர் எடுத்தது எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள். 40 வெற்று கருப்பு நிற காகிதங்கள், 20 ஆயிரம் ரூபாயாக மாறிப்போனது. 

'இது இல்லீகல் பிசினஸ். பணமா கொண்டு வந்தா சிக்கிக்குவோம். அதனால் இப்படி கருப்பு நிற பேப்பரா கொண்டு வர்றாங்க. இதை இந்த கெமிக்கல் கலந்த தண்ணியில போட்டா ரூபாய் நோட்டா மாறிடும்' என விளக்குகிறார் அந்த நபர். மீண்டும் இதே போன்று 10 ஆயிரத்தை கொடுத்து, 40 காகிதங்களை பெற்று 20 ஆயிரம் பெறுகிறார் பழனிச்சாமி. இதில் பணத்தை பயந்து பயந்து செலவு செய்கிறார். எங்கும் மாட்டவில்லை. யாருக்கும் சந்தேகமும் வரவில்லை. அட இது சூப்பரா இருக்கே? என மீண்டும் அந்த நபரை நாடுகிறார்.

ஆயிரம் எல்லாம் பத்தாது லட்சங்கள் கொண்டு வா

இந்த முறையும் சில ஆயிரங்களோடு பழனிச்சாமி அந்த நபரிடம் போக, எரிச்சலாகும் அந்த நபர், 'இப்படி சில்லறை சில்லறையா வேண்டாம் சிக்கிக்குவோம். லட்சங்களை ரெடி பண்ணு. செட்டில் ஆகிடலாம்' என சொல்கிறார். இது பழனிச்சாமிக்கு சரி என படுகிறது. வட்டிக்கு 10 லட்சம் பணம் வாங்குகிறார். கிடைக்கும் 20 லட்சத்தில் கடனை திரும்ப செலுத்தி விட்டு, மீதமுள்ள 10 லட்சத்தை எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அதே போன்ற சந்திப்பு, 10 லட்சத்துக்கு பதில் 2 ஆயிரம் கருப்பு நிற காகிதங்கள் கொடுக்கப்படுகிறது. கூடவே ஒரு ரசாயன மருந்து. 

'ஒரே நேரத்துல 2000 காகிதங்களையும் நோட்டா மாத்த முடியாது. தேவைங்கறப்போ பக்கெட்ல போட்டு நீயே பணமாக்கிக்கோ' எனச்சொல்லி அதற்கான முறையை மீண்டும் சொல்லித் தருகிறார். வீடு வந்து சேரும் பழனிச்சாமி, ஓரிரு நாளுக்கு பின்னர் காகிதத்தை பணமாக்க முயல்கிறார். ஆனால் காகிதம் தண்ணீரில் நனைந்து கிழிந்து போனதுதான் மிச்சம். பணமாக மாறவில்லை. அதிர்ந்து போன பழனிச்சாமி, அந்த நபரை தொடர்பு கொள்கிறார். போன் நம்பர் ஸ்விட்ச் ஆப். மறுநாளில் இருந்து ஆள் வரவே இல்லை. ஒரு வாரம் இப்படியே நீடிக்க அதன் பின்னர் தான் தான் ஏமாற்றப்பட்டதையே உணர்ந்தார் பழனிச்சாமி.

எப்படி நடக்கிறது மோசடி?

இந்த மோசடியில் கள்ளநோட்டு பயன்படுத்தப்படுவதே இல்லை. உண்மையில் அவை எல்லாமுமே வெற்று கருப்பு நிற காகிதங்கள். அதை தண்ணீரில் போட்டால் நனைந்து கிழிந்து விடும். பின்னர் எப்படி பணம் வருகிறது என்கிறீர்களா? அது உண்மையான பணம் முதலிலேயே பக்கெட்டில் அந்த பணத்தை போட்டு விடுவார்கள். அதன் பின்னர் கருப்பு நிற காகிதத்தை தண்ணீரில் போடுவார்கள். அப்போது தண்ணீரில் கலந்த ரசாயனத்தால் புகை வரும். அது கருப்பு நிற காகிதம் தண்ணீரில் நனைந்து கிழிந்து மிதப்பதை பார்க்க விடாமல் செய்து விடும். 

அந்த நேரத்தில் பக்கெட்டில் கை விட்டு ஏற்கனவே பக்கெட்டில் போட்டு வைக்கப்பட்ட பணத்தை எடுப்பார். இவை எல்லாம் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள். இவை தான் மோசடியாளர்களின் முதலீடு. இவற்றை செலவு செய்யும் போது எந்த பிரச்னையும் வராது. அதனால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை பெரிய தொகையாக கொண்டு வரச்சொல்லி மூளைச்சலவை செய்வார்கள். பல நேரங்களில் மூளைச்சலவை தேவைப்படாது. அவர்களே பெரிய தொகையை தயார் செய்து கொண்டு வருவார்கள். 

இப்படி ஒரே நேரத்தில் 5,6 பேரிடம் பல லட்சங்கள் பறிக்கப்பட்டு, அங்கிருந்து வேறு இடத்துக்கு மோசடியை இடமாற்றி விடுவார்கள். போலீசுக்கு போகமாட்டார்கள் என்பதால் இவர்களுக்கு பிரச்னையும் இல்லை. பின்னர் என்ன வேறு இடத்தில் அதே கருப்பு பேப்பர், அதே ரசாயனத்தோடு இன்னொரு பேராசைக்காரரை தூண்டி விட்டு மோசடி செய்து கொண்டிருப்பார்கள்.

 
பேராசைக்காரர்கள் தான் டார்கெட்

இந்த மோசடிக்கு தகுதியான நபர் பேராசை கொண்டவர்கள் தான். யார் உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கிறார்கள். யார் சீக்கிரம் பணக்காரனாக துடிக்கிறார்கள். யாரை ஆசை காட்டி ஏமாற்ற முடியும் என ஆராய்ந்து தான் இந்த மோசடிக்கு ஆள் தேர்வு செய்யப்படுவார். ஆள் தேர்வான பின்னர், அவர் பார்த்து ஏங்கும் அளவுக்கு அவர் கண் முன் பணத்தை தண்ணியாக செலவழிப்பார்கள் மோசடியாளர்கள். அந்த நபர் கேட்காமலேயே இவர்களாக செலவு செய்வார்கள். சரியான சந்தர்ப்பத்தில் உங்களை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டு விடும். நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என அவர் நினைக்கும் போது, அதுவரை அவரோடு இருந்த நபர் மாயமாகி இருப்பார். கூடவே சில பல லட்சங்களையும் அந்த நபர் இழந்திருப்பார். இது தான் இந்த மோசடியின் சூத்திரம்

இப்படி இந்த டபுளிங் பிசினஸில் பணத்தை லட்சம், லட்சமாக தொலைத்தவர்கள் எக்கச்சக்கம். போலீசுக்கும் போக முடியாமல், போனால் போகட்டும் என விடவும் முடியாமல் லட்சாதிபதியாக ஆசைப்பட்டு கடனாளியானவர்கள் ஏராளம். இன்றும் கூட இந்த டபுளிங் பிசினஸ் ஏதாவது இரு இடத்தில் நடந்து கொண்டிருக்கும். அந்தளவு இது எவர்கிரீன் மோசடியாக மாறி விட்டது.

டபுளிங் வேறு... இந்த மோசடி வேறு

"உண்மையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட ஆரம்ப நாட்களில் டபுளிங் பிசினஸ் இருந்தது. ஆனால் கள்ளநோட்டு தொழில்நுட்ப ரீதியாக அச்சு அசலாக அச்சடிக்கப்பட்ட பின்னர், இதற்கான தேவை குறைந்து விட்டது. மக்களிடம் சர்வ சாதாரணமாக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. கள்ள நோட்டு கண்டறியும் கருவிகள் கூட சரியாக கணிக்க முடியாமல் திணறியது. வங்கிகளிலேயே கள்ள நோட்டு புழக்கத்தில் வந்தது. கோவை, திருப்பூரில் வங்கிகளில் பல கள்ளநோட்டுகள் செலுத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் சில ஸ்கேனிங்கில் கண்டறிய முடியாத நோட்டுகள்," என்கிறார். திருப்பூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

"டபுளிங் என்பது வேறு. அதாவது ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக இரு மடங்கு கள்ள நோட்டுகள் வழங்கப்படும். இவற்றை புழக்கத்தில் விட்டு நாம் சம்பாதித்து கொள்ளலாம். இந்த மோசடியிலும் டபுளிங் என்ற பெயரில் தான் மோசடி நடக்கிறது.  ஆனால் இங்கு பணம் எனச்சொல்லி வெற்று காகிதங்களை கொடுத்து ஏமாற்றுகிறார்கள். கள்ள நோட்டு எனச்சொல்லி அதற்கு பதிலாய் வெற்று காகிதங்கள் தரப்படுகிறது. இதில் இழந்தவர்கள் போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. (எப்படி கொடுக்க முடியும்?.)," என்றும் அந்த அதிகாரி விவரித்தார்.

இது மட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாய் அரங்கேறியது கள்ள நோட்டு மோசடி. எல்லாவற்றிலும் லட்சங்களை கொட்டி ஏமாந்து போனார்கள். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சத்தமே இல்லாமல் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது இந்த மோசடிகள். என்ன இத்தோடு முடிந்தது என நினைக்கிறீர்களா? நிச்சயம் இல்லை. 

மெழுகுவர்த்தி பிசினஸில் மோசடி, இல்லாத கல்லூரியில் பார்ட்னர் எனச்சொல்லி மோசடி, தங்கப்புதை யல் மோசடி என கொங்கு பெல்டில் நடந்த மோசடிகள் ஏராளம்... ஏராளம்... எப்படியெல்லாம் ஏமாற்றி னார்கள்? எப்படியெல்லாம் ஏமாந்தார்கள் என்பதை அடுத்த வாரமும் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்