ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்க ஆஸ்கர் நிறுவனம்
தயாரிப்பில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பு 'ஐ'. பி.சி.ஸ்ரீராம்
ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. தீபாவளி
வெளியீடு என்றும், பல முறை இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என
அறிவிக்கப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பொங்கலுக்கு வெளியாகிறது
என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு
திரையிட்டார்கள். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ'
சான்றிதழ் அளித்தார்கள். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த படக்குழு, 'யு'
சான்றிதழ் வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
படத்தை 'யு/ஏ' சான்றிதழுடன் வெளியிட்டால், 30 சதவீதம் வரி கட்ட வேண்டுமே
என்பது தான் இதற்கு காரணம். மேலும் தற்போது ஜனவரி 9ம் தேதி என்ற வெளியீட்டு
தேதியில் இருந்து ஜனவரி 14ம் தேதிக்கு மாறிவிட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
தற்போது இங்குள்ள சென்சார் அதிகாரிகளிடம் 'யு'விற்கு என்ன செய்ய வேண்டும்
என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு கிடைக்கவில்லை எனில்,
மேல்முறையீட்டிற்கு சென்று 'யு' வாங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகு வரும் கூனன் விக்ரம் கதாபாத்திரம் பயங்கரமாக
இருப்பதால், 'யு' கிடைப்பது கஷ்டம் தான் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.
படக்குழுவினரிடம் இது குறித்து விசாரித்தால், "அனைத்துமே முடிவான உடன்,
அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை எதுவும் பேசப் போவதில்லை"
என்றார்கள்.
மேலும், இம்மாத இறுதியில் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும், ஜனவரி முதல்
வாரத்தில் இந்தி இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பது
குறிப்பிடத்தக்கது.
நன்றி - த இந்து