திரைப்படத் தொழிலாளர்களை அடகுவைத்தார் குகநாதன்! - அமீர்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெப்சிக்கு எதிராகப் படைப்பாளிகள் சங்கம்
உருவானபோது, தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துப் போனது. அந்த அளவுக்கு
இரும்புக்கோட்டையாக இருந்த பெப்சியின் பெயரை மாற்ற இருப்பது மட்டுமல்ல, அதை
ஒரு முழுமையான தொழிலாளர் அமைப்பாகவும் சீர்திருத்தம் செய்ய முனைப்போடு
இயங்குகிறார் அதன் தலைவர் இயக்குநர் அமீர்.
ஒருபக்கம், ஊதிய உயர்வைத்
தரமால் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள், இன்னொரு பக்கம், தமிழ்நாட்டுக்கு
வெளியே நடத்தப்படும் தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் என்று முன்பு
எப்போதும் இல்லாத நெருக்கடிகளைச் சந்திக்கும் பெப்சிக்கு, சங்கம் உருவாகி
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொடியை உருவாக்கியிருக்கிறார். அண்மையில்
மொத்தத் தொழிலாளர்களும் பேரணியாகச் சென்று முதல்வரைச் சந்தித்து, தங்களது
பிரச்சனைகளைப் பேசித் திரும்பியிருந்த நிலையில் ‘தி இந்து’வுக்காகப்
பேசினார் அமீர்…
இயக்குநர் சங்கத்திலிருந்து புறப்பட்டுப் போய்த் தொழிலாளர்களின் அமைப்புக்குத் தலைமையேற்க என்ன காரணம்?
நான் வளர்ந்தே ஒருங்கிணைக்கப்படாத உதிரித் தொழிலாளர்களின் மத்தியில்தான்.
மதுரையில், எட்டுசி யானைக்கல்லிதான் என் பால்யம் கழிந்தது. அங்கே
சுமைதூக்குபவர்கள், பாரவண்டி இழுப்பவர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், பழ
வண்டிபோடுபவர்கள் என்று கடினமான உடல் உழைப்பை நம்பி வாழும் எளிய
தொழிலாளர்களின் வாழ்விடம் அது.
தொழிலாளர்களின் வியர்வை வாசனையை அருகிருந்து
உணர்ந்தவன் நான். உழைப்பதற்கான உடலைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவுமே
இருந்ததில்லை. திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வு இன்று
உதிரித்தொழிலாளர்களின் வாழ்நிலையைவிட மிகப்பரிதாபகரமாக, பட அதிபர்களால்
வஞ்சிக்கப்பட்டதாக இருக்கிறது. சரியான தலைமை இல்லாமல், தொழிலாளர்கள்
மனம்நொந்து, நிர்க்கதியாகத் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் நான்
பெப்சிக்குப் போனேன்.
நிர்க்கதியாக தடுமாறிக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னீர்கள்? அப்படி என்ன இக்கட்டான நிலைமை ஏற்பட்டது?
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தித் தரப்பட வேண்டும் என்பது
திரைப்படத் தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக
இருந்துவரும் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப்படி கடந்தமுறை ஊதியத்தை உயர்த்திக்
கேட்டபோது, ஒன்றரை ஆண்டுக் காலம் இழுத்தடித்தும் ஊதிய உயர்வு தரவில்லை.
ஆனால் தொழிலாளர்களின் துன்பக்குரல் ஓயவில்லை.
இதனால் பெப்சி சங்கத்தையே
இரண்டாக உடைக்கத் தயாரிப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டார்கள். ஒரு சில
தொழிலாளர்கள் செய்த சின்னச் சின்ன தவறுகளை வைத்துக் கொண்டு, இத்தனை
ஆண்டுக்காலமாக சினிமாவுக்கு உழைப்பைக் கொடுத்த இவர்களது அடையாளத்தையே
தயாரிப்பாளர்கள் நொறுக்க நினைத்தபோது, திரையுலகில் எல்லோரும் கள்ளமௌனத்தோடு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்தான் நானும்,
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனும் இந்தத் தொழிலாளர்களை நிர்க்கதியாக விட
மனமின்றி உள்ளேபோனோம்.
இடையில் சின்னத்திரைக்கென்று தனித் தொழிலாளர் சங்கம் தொடங்கும் நிலை உருவானதே?
தொழிலாளர் அமைப்பை உடைப்பதோ, அல்லது தொழிலாளர் அமைப்புக்குப் போட்டியாக
இன்னொரு அமைப்பை உருவாக்குவதோ நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது புதிய
தொழிலாளர் அமைப்பை உருவாக்கினாலும், அதில் அங்கம் வகிக்கப்போகும்
தொழிலாளிக்கும் பிரச்சனை ஒன்றுதானே. இதை முதலாளிகள் முதலில் புரிந்து கொள்ள
வேண்டும். இதை ராதிகா அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது அதை அவர்கள்
புரிந்துகொண்டு பெப்சியை அங்கீகரித்தார்.
10% தொழிலாளர்கள் தவறு செய்திருக்கிறார்கள் இல்லை சொல்ல வில்லை. இதற்காக
ஒட்டுமொத்தமாகத் தொழிலாளர்களின் சாப்பாட்டில் கை வைப்பது சரியா? சங்க
விதிமுறைகளை மாற்ற வேண்டுமே தவிர சங்கத்தை அல்ல.
திரைப்படத் தொழிலாளர்கள் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கிறதே?
நான் மறுக்கவில்லை. பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வைத்து,
ஒட்டுமொத்தத் தொழிலாளர்களையும் நீங்கள் தவறானவர்கள் என்று எப்படிக் கூற
முடியும்? 13 ஆண்டுகளாக எனது திரைப்படங்கள் உருவாவதில் தொழிலாளர்களின்
மிகக் கடினமான பங்கைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
திரைத்தொழிலாளர்களைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால்
அவர்களது உழைப்பைச் சொல்லில் அடக்க முடியாது.
இன்று திரைப்படத்தின் பட்ஜெட் உயர்ந்திருக்கிற அளவுக்குத்
தயாரிப்பாளர்களின் வியாபாரமும், லாபமும் உயர்ந்திருக்கிறது. ஆனால்
தொழிலாளர்களின் ஊதியம் மட்டும் அடிமாட்டு நிலையிலேயே இருக்கிறது. 3000
பிரதிகள், சர்வதேசச் சந்தை என்று தமிழ்சினிமா எங்கோ போய்விட்டது.
15 ஆண்டுகளுக்கு முன் பெப்சிக்கு எதிராகப் படைப்பாளிகள் சங்கம்
உருவானது. பிறகு பெப்சியோடு அது இணைந்தது. ஆனால் இன்று பெப்சியே முன்வந்து
தன் முகத்தை மாற்றிக்கொள்ள முன்வந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
தலைமைதான் காரணம். எனக்கு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை கிடைக்கும்
என்றால், அங்கே நன்றாக டேபிள் துடைப்பவனாக நான் வாழ நினைப்பேன். ஏனென்றால்
எல்லா இடத்திலும் தூய்மை என்பது முக்கியமானது. முதலில் ஒழுங்கற்றுக்
கிடக்கும் இந்தத் தொழிற்சங்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று முடிவு
செய்தேன்.
இதற்காகக் கடந்த 2 ஆண்டுகளாக என் காலங்களை இழந்திருக்கிறேன்.
வருமானத்தை இழந்து வேலை செய்திருக்கிறேன். தொழிற்சங்கப் பிரச்சனை இல்லாமல்
இருந்தால் மட்டுமே இங்கே தொழில் அமைதி ஏற்படும். புதிதாகப் படம் தயாரிக்கப்
பலர் வரமுடியும். நல்ல சினிமாவும் புதிய தயாரிப்பாளர்கள் வரும்போதுதானே
பிறக்கும்.
கடந்த ஆட்சியில் பெப்சியின் தலைவராக இருந்த வி.சி.குகநாதன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூற என்ன காரணம்?
சங்கத்துக்கு அரசியல் சாயம் பூசியதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு.
எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சியாளர்களிடம் உதவிபெற்றுக்கொள்ளக்
கூடியவர்களாகத் திரைப்படத் தொழிலாளர்கள் இருக்க வேண்டுமே தவிர, ஆளும்
கட்சியின் கிளை அமைப்புபோலச் செயல்படக் கூடாது. கடந்த ஐந்தாண்டுக்
காலத்தில் தலைவராக இருந்த, வி.சி.குகநாதன் அந்த அசிங்கத்தைதான் செய்து
வைத்து விட்டுப் போனார்.
தனது தன்னலத்துக்காகத் தொழிலாளர்களைக் கேடயமாகப்
பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் பெப்சிக்கு இந்த இழிநிலை. 23
சங்கங்களைக் கொண்ட ஒரு சம்மேளனத்தின் தலைவர், திமுகவின் தேர்தல்
பிரச்சாரத்துக்குப் போய் நின்று இந்தச் சங்கத்தை அடமானம் வைத்து விட்டார்.
இதனால்தான் பெப்சி தொழிலாளர்கள் நசுங்கிப் போனார்கள். நேர்மையற்றவன்
தொழிலாளர் சங்கத்துக்குத் தலைவனாக வரக் டாது. அதேபோலத் தொழிலாளர்களிடம்
நாம் முதலாளிகளை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தையும் வளர்க்கக் கூடாது. இது
இரண்டையுமே செய்தவர்தான் வி.சி. குகநாதன்.
மத்தியத் தொழிலாளர் நலத்துறையில்
திரைப்படத்தொழிலாளர்ருக்கு பிஎஃ ப் இருக்கிறது. அதைக்கூட வாங்கித்தரக் கூட
முயற்சி எடுக்காதவர்தான் இந்தக் குகநாதன்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கிறது?
தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறந்த கலைஞர்களும் தொழிலாளர்களும்
இருக்கிறார்கள். ஆனால் பல சங்கங்களின் பைலாக்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.
தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் கொடுக்க
வேண்டியிருக்கிறது. அவுட்டோர் யூனிட் முதலாளிகள் யாரும் தமிழர்கள்
கிடையாது. அவர்கள் இங்கிருக்கும் முதலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு
தரமற்ற, பாதுகாப்பு இல்லாத சாதனங்களைத் தொழிலாளர்களிடம் கொடுத்து
அனுப்புவது அநியாயம். இதுகுறித்து தொழிலாளர் நல வாரியத்திடம் முறையீடு
அளித்திருக்கிறோம்.
அடுத்து பெப்சி தொழிலாளர்கள் உழைக்கத் தயங்காதவர்கள். ஆனால் தொழில் நுட்ப
ரீதியாகப் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. இயக்குநர் சங்கத்தில்
இருந்தபோது உதவி இயக்குநர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். அதை பெப்சியில்
தொழிலாளர்களுக்கும் கொண்டுவருவோம். ஹாலிவுட்டுக்கு இணையான தொழிலாளர்களாக
அவர்களை மாற்றிக்காட்டுவோம்.
சங்கத்தின் பெயரைத், தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் என
மாற்ற முடிவு எடுத்ததற்குக் காரணம், வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டைச்
சார்ந்த தொழிலாளர்கள் துரத்தி அடிக்கப்பட்டதுதான் காரணமா?
அதுமட்டுமே காரணமல்ல. சங்கத்தின் பெயரில் தென்னிந்திய என்று இருக்கும்
வார்த்தையால் ஒரு தொழிலாளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கிறது
என்று சொன்னால் அதை வைத்துக்கொள்ளத் தயார்.முன்பு பெப்சி படைப்பாளி
பிரச்னையில் இது அரசிலாக்கப்பட்டது. ஆனால் இன்று தொழிலாளர்கள்
வறுமையில்லாமல் ஜீவனம் நடத்துவது மட்டும்தான் உண்மையான அரசியல். அதிகபட்சம்
ஒரு லைட் மேனுக்கு இன்றைய ஊதியம் 530 / ரூபாய் முப்பது நாளும் அவனுக்கு
வேலை இருக்கிறதா என்றால் இல்லை.
படப்பிடிப்பில் வேலை செய்பவனுக்கு ஊதிய உயர்வு கொடுக்காமல் ,
நட்சத்திரங்கள் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தும் கேராவேனுக்கு நாள்
ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கடந்த மூன்று
ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் கடுமையான பதவிச்சண்டை. இதனால்
தமிழ்சினிமா படப்பிடிப்புகள் அத்தனையும் வெளிமாநிலங்களுக்குச் சென்று
விட்டது.
ஆந்திராவிலும், இந்திப்படங்களிலும், தமிழ்க் கலைஞர்களுக்கு அவ்வளவு
கிராக்கி. தமிழ்நாட்டில் இருந்து எல்லாரும் கிளம்பி இங்கே வருகிறார்களே
என்று அவர்கள் பிராந்திய உணர்வுடன் செயல்படத் தொடங்கிவிட்டார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து எங்கள் மாநிலத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தால்,
70 % எங்கள் மாநிலத்து ஆட்களைத்தான் நீங்கள் வேலைக்கு வைத்துக் கொள்ள
வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் தமிழ் திரைப்படத்தொழிலாளர்கள்
தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையை முற்றாக இழந்தார்கள். இதனால்
நாங்களும் தமிழர்களாக மாறுவதில் தவறில்லையே?
இங்கே இருக்கும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபை இதுபோன்ற மாநிலங்களுக்கு இடையிலான தொழிலாளர் பிரச்சனையில் தலையிடுவதில்லையா?
அதன் தலைவர் கல்யாண், இங்கே சினிமா நூற்றாண்டு விழா நடத்தினாரே தவிர,
நான்கு மாநில முதல்வர்கள் இங்கே ஒன்றாகச் சந்தித்துக்கொண்டபோது அதை அரிய
வாய்ப்பாகப் பயன்படுத்தி, முதல்வர்களை இதுபற்றி அவர் பேசவைத்திருக்கலாம்.
நமது முதல்வரிடமும் இதுபற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை.
தன்னை முன்னிலைப்படுத்தி விழா நடத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு,
திரைப்படத்துறை பிரச்சினைகளைப் பேசவே இல்லை. இங்கே உண்மையாக என்ன
நடந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் பேரணியாகச் சென்று முதல்வரிடம்
சொன்னோம். வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தொழிலாளர்களுக்கு
வேலை இல்லை என்பதே முதல்வருக்கு இப்போதுதான் தெரிகிறது. உடனடியாக இது
குறித்துப் பேசுகிறேன் என்றார்.
அப்படியானல் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபையும் மாற வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?
அதில் என்ன ஐயம் இருக்கிறது. தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகசபை என்பது
தொடங்கும்போது சரியான அமைப்புதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. காரணம்
அப்போது நான்கு மாநி்ல சினிமாக்களும் ஒன்றாக இருந்தன. தமிழகம் தாய் வீடா
இருந்தது. ஆனால் இன்று மற்ற தென்மாநில சினிமாக்கள் வளர்ந்து தனி அமைப்புகளை
உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். ஆந்திரா பிலிம் சேம்பர் ஆஃ காமர்ஸ்
இருக்கிறது. இதேபோல மற்ற மாநிலங்களுக்கும் தனித்தனியாக உருவாகிவிட்டது.
தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு திரைப்பட வர்த்தகச் சபைதானே இருக்க வேண்டும்.
நீங்கள் மட்டும், இந்தப் பணத்தையும் இந்தச் சொத்தையும் வைத்துக் கொண்டு
என்ன செய்கிறீர்கள் என்று தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள். தமிழ்
சினிமாவுக்கு கல்யாண் தலைமையில் இயங்கும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச்
சபையின் பங்களிப்பு என்ன? அதைச்சொல்லுங்கள் முதலில். இந்தச் செயல்படாத
அமைப்பின் தலைமை மாறும்போது இந்த அமைப்பும் , தமிழ் சினிமாவுக்கான
அமைப்பாக, தமிழ்நாட்டின் அமைப்பாக மாறும். அந்தக் காலம் வெகு தூரத்தில்
இல்லை.
இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை எந்த அளவு நம்புகிறீர்கள்?
இந்த அரசுதான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உள்ளன்போடு அனைத்தையும்
செய்திருக்கிறது. ஜே.ஜே.பிலிம் சிட்டி 1991இல் கொண்டு வந்தது இன்றைய
முதல்வர்தான். அதன்பிறகு திருட்டு விசிடிக்கு குண்டர் சட்டத்தை இணைத்ததும்
அவர்தான். பள்ளிக்கரணையில் 85 ஏக்கர் நிலத்தைத் திரைப்படத்தொழிலாளர்களின்
வீடுகட்ட ஒதுக்கியதும் இன்று இருக்கும் அரசுதான்.
திரைப்பட நகரம் வந்தபோது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் விமர்சனம்
செய்தார்கள். ஆனால் இன்று படப்பிடிப்புத் தளங்களை இழுத்து மூடிவிட்டார்கள்.
ஆனால் ஜே.ஜே. பிலிம் சிட்டிக்குப் பின்னால் திறக்கப்பட்ட ராமோஜி பிலிம்
சிட்டி எங்கேயோ போய்விட்டது. ஆனால் தென்னிந்தியத் சினிமாவின் தாய் வீடாக
இருந்த தமிழ்நாடு படுத்து விட்டது.
thanx - the hindu