கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெரும் வசூல் வெற்றியைப் பெற்ற படம் 'கோ' . இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷரத். பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசியதிலிருந்து...
‘கோ' படத்தின் தொடர்ச்சிதான் ‘கோ-2' படமா?
இதுவொரு அரசியல் த்ரில்லர். ஆனால் முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல. ஜான் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். போலீஸ் அதிகாரி வேடமே இனி பண்ண மாட்டேன் என்று சொன்னவர் இந்தக் கதையைக் கேட்டதும் ‘இதுல மட்டும் நடிச்சிடுறேன்; ரொம்ப பிடிச்சிருக்கு’ என்றார். அதேபோல் பாலசரவணன் வரும் காட்சிகளும் களைகட்டும். இவர்கள் சிரிப்புக்கு கேரண்டி என்றால் பாபி சிம்ஹா - பிரகாஷ்ராஜ் ஆகிய இருவருக்குள் நடக்கும் யுத்தம் படத்துக்கு த்ரில்லர் தீனி போடும்.
பிறகு ஏன் 'கோ-2' என்று தலைப்பு வைத்தீர்கள்?
அது என்னுடைய ஐடியாவே கிடையாது. படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் “நீங்க சொன்ன கதை ‘கோ' மாதிரி இருக்கு. ‘கோ-2' என்று வைக்கலாம்” என்றார்.அந்தத் தலைப்பை வைத்த உடன் கிடைத்த வரவேற்பு பிரமாதமாக இருந்தது. இன்னும் ‘கோ' படத்தை மறக்கவில்லை என தோன்றியது. தயாரிப்பு நிறுவனம் ஒரு முடிவை எடுக்கும்போது அதற்குக் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும். அதனால் நானும் ஒப்புக்கொண்டேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
‘உன்னைப் போல் ஒருவன்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். ‘பில்லா-2' படத்துக்கு கதை, திரைக்கதை ஆகியவற்றை இயக்குநர் சக்ரியோடு இணைந்து எழுதினேன். அந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நான்தான் வசனம் எழுதினேன். எனக்குத் தாய் மொழி தெலுங்கு. ‘பில்லா-2’க்கு முன்பு தெலுங்கில் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறேன்.
ஒளிப்பதிவுதான் உங்கள் ஏரியாவா?
நான் ஒளிப்பதிவாளராக ஆனது ஒரு விபத்துதான். லண்டனில் பிலிம் ஸ்கூலில் படித்திருக்கிறேன். அங்கு ஒளிப்பதிவையும் கற்றுக்கொடுப்பார்கள். எனக்கு ஒளிப்பதிவு பிடிக்கும். அமெரிக்காவுக்கு அவ்வப்போது சென்று ஏதாவது படித்துவிட்டு வருவேன். ரெட் கேமிரா அறிமுகமானபோது கமல் சார் வாங்கினார். அப்போது நானும் ஒரு கேமிரா வாங்கினேன்.
அந்த கேமிராவை வைத்துக்கொண்டு நண்பர்களுக்கு ஜாலியாகச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிற நீயே ஒரு படம் பண்ணு என்று சொல்லி ஒளிப்பதிவு வாய்ப்பும் கொடுத்தார். நான் ஒளிப்பதிவு பண்ணிய ‘புரோக்கர்' என்ற தெலுங்குப் படத்துக்கு மாநில விருது கிடைத்தது. அதற்கு பிறகு அந்த நண்பருக்கு மீண்டும் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினேன். நிறைய ஒளிப்பதிவு வாய்ப்புகள் வந்தன. நான் தவிர்த்துவிட்டேன்.
கமல், அஜித்தோடு பணியாற்றியபோது அவர்களுக்குக் கதைசொல்லிக் கவர்ந்திருக்கலாமே?
ஒரு குறிப்பிட்ட நடிகரோடு படம் பண்ண வேண்டும் என்று கதை எழுதக் கூடாது. உண்மையைச் சொன்னால் நான் இயக்குநராக கையெழுத்திட்ட 3-வது படம் ‘கோ-2'. நான் படப்பிடிப்புக்குப் போன முதல் படம் இதுதான். கடந்த ஆண்டு ஒரு தெலுங்குப் படம், அப்புறம் ஒரு தமிழ் படம் என இரண்டு படங்களைக் கைவிட்டுவிட்டார்கள்.
இவரோடு பண்ண வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் வளரவில்லை. எனக்கு கமல் சாரோடு படம் பண்ற வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. ஒரு நாள் கண்டிப்பாகப் பண்ணுவேன். அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர். முதலில் நான் என்னை நிரூபிக்க வேண்டும். அப்புறமாக அவர்களோடு இணைந்து படம் பண்ணுவேன்.
கமல், அஜித், பிரகாஷ்ராஜ் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்
கமல் சார் ஒரு நாலேஜ் பேங்க். அவரிடம் படத்தைத் தவிர்த்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பார். அஜித் சார் ஒரு ஜாலியான ஆள். முழு சந்தோஷத்தோட இரு என்பார். எனக்கு என் குடும்பத்தை மிகவும் பிடிக்கும்.
அவருடன் பழகிய பிறகுதான் எனக்கு என் குடும்பத்தை இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது. பிரகாஷ்ராஜ் சாரோடு பணியாற்றுவது மிகவும் எளிது. பிரகாஷ்ராஜ் பற்றி தப்புத் தப்பாக சொல்லுவார்கள். அவர் தனக்கென்று சில வரைமுறைகள் வைத்திருப்பார். அந்த வரைமுறைகளின்படி பணியாற்றினால் அவரால் நமக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.