Showing posts with label பிசாசு -எக்ஸ்க்ளூசிவ் பேட்டி. Show all posts
Showing posts with label பிசாசு -எக்ஸ்க்ளூசிவ் பேட்டி. Show all posts

Tuesday, November 18, 2014

பிசாசு -எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

மிஷ்கினை எப்போது தேடிச் சென்றாலும் அவரது அறையின் புத்தகக் குவியலுக்கு மத்தியிலிருந்து முகம் காட்டி வரவேற்பார். பேச ஆரம்பித்துவிட்டாலோ அவர் உயிருள்ள ஒரு புத்தகம்... தற்போது அவர் இயக்கிவரும் ‘பிசாசு’படத்தின் இறுதிக் கட்ட வேலைகளை முடிந்திருந்த நிலையில் அவரைச் சந்தித்தபோது ‘பேசிக் ரிலேட்டிவிட்டி ஃபிசிக்ஸ்’ புத்தகத்தை அருகில் கவிழ்த்து வைத்திருந்தார். “ சூரியனுக்குக் கீழே எதைப் பற்றியும் கேளுங்கள்” என்று பேட்டியைத் தொடங்கி வைத்தார்...
 'பிசாசு' படத்தில் பிராயாகா

பல சமயங்களில் தரமான படங்களைப் புறக்கணிக்கும் தமிழ் ரசிகர்களை உங்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறதா?

 
திரைப்படத்தைத் திரை அரங்கில் பார்ப்பதுதான் அற்புதமான அனுபவமாக இருக்க முடியும் என்று நம்பும் ரசிகர்களைப் பற்றி நாம் பேசுவோம். இவர்கள் படம் பார்க்க வரும்போது டிக்கெட் கவுண்டருக்குள் கையை விட்டு, “ நாலு பாட்டு, அதுல ஒண்ணு குத்துப் பாட்டு. அப்புறம் மூணு ஃபைட், ஒரு காமெடி டிராக், நல்ல அழகான ஹீரோயின் இருக்கிற படத்துக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என்று கேட்பதில்லை. டிக்கெட் வாங்கும்போதே இந்தப் படத்திலயாவது புதுசா வேறொரு வாழ்க்கை இருக்காதாங்கிற ஏக்கத்தோடதான் வாங்கறாங்க.


 பணத்தை நீட்டும்போதே எதிர்பார்ப்பு நிறைந்த பதற்றத்தை அவங்க முகத்தில் பார்க்க முடியும். ஒரு பாட்டிகிட்ட கதை கேட்க வர்ற குழந்தையின் உந்துதலோடுதான் உள்ளே வர்றாங்க. ஆனால் அவங்களை நாம தொடர்ந்து ஏமாத்திக்கிட்டே இருக்கோம். பாலாவைப் பாருங்க, பாலாஜி சக்திவேலைப் பாருங்க. காதல் படத்தை எப்படிக் கொண்டாடினாங்க... அப்போ இந்த ஆடியன்ஸை நீங்கள் எப்படிக் குறை சொல்ல முடியும்? 



‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ரிலீஸ் ஆகி ஓடிக்கிட்டு இருந்த நேரம், மதுரையில் என்னைப் பார்த்த ரசிகர்கள் கட்டிப்பிடிச்சுகிட்டு விடமாட்டேன்றாங்க. ஒருத்தர் என் காலைப் பிடிச்சுட்டு ஓண்ணு அழறார். முன்ன பின்னே தெரியாத என்னைப் பார்த்து “டேய் நாந்தாண்டா நீன்னு” சொல்லிக் கதறி அழறார். அது இந்த மிஷ்கினுக்குக் கிடைச்சதில்ல. அந்தப் படத்துக்கும் கதாபாத்திரங்களுக்கும் கிடைச்சது. எப்பவாச்சும்தான் நாம ‘சேது ’மாதிரியும், ‘சுப்ரமணியபுரம்’ மாதிரியும், ‘பருத்தி வீரன் ’மாதிரியும் கதை சொல்றோம். 



அப்போ சில மோசமான படங்களும் ஏன் ஓடுதுன்னு கேட்கலாம். ஏன்னா மக்களுக்கு சினிமாவைத் தவிர வேற பொழுதுபோக்கு கிடையாது. வாழ்க்கையில் அவ்வளவு மன அழுத்தம் அவங்களுக்கு. ஆயிரம் பக்க புத்தகத்தைப் படிச்சு ரசிக்க வாழ்க்கை அவங்களை அனுமதிக்கல. இதனால மோசமான படங்களை மன்னிக்கிறாங்க. அவங்க பெருந்தன்மையை இங்க நிறைய பேர் மிஸ் யூஸ் பண்ணிக்கிறதைத்தான் டாலரேட் பண்ண முடியல. 



‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நீங்கள் பங்குபெற்ற நேர்த்தியான குங்பூ சண்டைக் காட்சிகள் இருந்தன. குங்பூ மீது எப்படி இத்தனை ஈடுபாடு?


 
எனக்கு ஐந்து வயது. திண்டுக்கல் என்.ஜி.வி.பி. திரையங்கில் காலை பதினோரு மணி காட்சிக்கு ‘எண்டர் தி டிராகன்’ படத்துக்கு அழைத்துச் சென்றார் என் அப்பா. படம் முடிந்ததும் படம் எப்படிடா இருக்குன்னு கேட்டார். படம் சூப்பரா இருக்குப்பா என்று வியந்துபோய்ச் சொன்னேன். அப்படியே அடுத்த காட்சிக்கு, அதே படத்துக்கு அழைத்துப்போனார். புரூஸ் லீயை நான் ஒரு புத்தனாகவும் ஒரு ஜே. கிருஷ்ணமூர்த்தியாகவும் பார்க்கிறேன். பிறகு பத்தாம் வகுப்பு படிக்கிறபோது முறையாக ஒரு மாஸ்டரிடம் குங்பூ பயிலத் தொடங்கினேன். மொத்தம் பத்தாண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்தது பயிற்சி. மார்ஷியல் ஆர்ட், சண்டியர்களின் சாகசக் கலை அல்ல. அது வாழ்க்கை முறை. தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மார்ஷியல் ஆர்ட் கதையை நிச்சயம் படமாக்குவேன். 



‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ’படத்தை நீங்கள் தேசிய விருதுக்கு அனுப்பவில்லையா?


 
இல்லை. எனக்கு தேசிய விருதென்று இல்லை, எந்த விருதுமே வேண்டாம். எனக்குப் பெரிய விருதே தமிழ்நாட்டு மக்கள் தரும் அங்கீகாரம்தான். இங்கே படம் பார்க்க எத்தனை கோடி உறவுகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துப் பாராட்டினாலே போதுமே. எனக்கு பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என எந்த வுட்டும் வேண்டாம். என் தமிழ், என் மக்கள் போதும். என் கலையை நான் விற்க விரும்பவில்லை. 



கதைகளை காப்பியடிப்பதில் அலாதியான பிரியம் உண்டு என்று கூறியவர் நீங்கள். தற்போது இயக்கிவரும் ’பிசாசு’ படத்தின் கதையை எதிலிருந்து காப்பியடித்தீர்கள்?


 
அந்த மரத்துக்குக் கீழே போகாதே, நடு ராத்திரியில் எங்கும் அலையாதே பிசாசு வருமென்று அப்பா, அம்மா சின்ன வயதில் பயமுறுத்தினார்கள் அல்லவா அதிலிருந்து காப்பியடித்தேன். அதே அம்மா அப்பா ஒரு கட்டத்துக்குப் பிறகு பிசாசு என்பதே பொய், கற்பிதம் என்று கற்பிக்க ஆரம்பித்தார்கள் அல்லவா அதிலிருந்தும் காப்பியடித்தேன்... அம்புலி மாமாவில் வரும் வேதாளத்திடமிருந்தும் பைபிளும் குரானும் சித்திரிக்கும் பிசாசிடருந்தும் கொஞ்சம் காப்பியடித்தேன். தம்மபதத்தில் புத்தன் சொல்லிச் சென்ற ’அம்புலிமா’ என்ற கதையிலிருந்தும் கொஞ்சம் காப்பியடித்தேன். கொஞ்சம் ஷேக்ஸ்பியர், கொஞ்சம் டால்ஸ்டாய், கொஞ்சம் தாஸ்தயெவ்ஸ்கி என்று இவர்கள் சித்திரித்த பேய்களின் தாக்கமும் இந்தக் கதையில் உண்டு. 



பிசாசின் கதைதான் என்ன?


 
சில வேளைகளில் மனிதர்களைவிட பிசாசுகள் நல்லவர்கள் என்பதுதான் கதை. 


இந்தப் படத்தில் உங்களது நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள்.


 
பிராயாகா நாயகி. கேரளத்தி லிருந்து வந்திருக்கிறாள். படத்தின் தலைப்பை மட்டுமல்ல ஜீவனையும் தன் தோளில் சுமக்கும் பெண். நாகா நாயகனாக வருகிறான். இவனது நண்பர்களாக அஸ்வத், ராஜ் என்று இரண்டு இளைஞர்கள். எல்லோருமே புதியவர்கள். தெரிந்த ஒரே முகம் அண்ணன் ராதாரவி. அவரை இந்தப் படத்தில் நீங்கள் புதிதாகக் கண்டெடுப்பீர்கள். தனது ஆன்மாவை இதில் நடிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று பி.சி. ராமிடம் சென்று கேட்டேன். 



என் மாணவன் வைட் ஆங்கிள் ரவிசங்கரன் என்னைவிடச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்வான், அவனைப் பயன்படுத்து என்றார். அவர் சொன்ன பிறகு மாற்றுக் கருத்து ஏது? ரவி காத்திருந்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார். அதேபோல என் அலுவலகத்துக்கு வாய்ப்புக் கேட்டு வந்தான் ஒரு இளைஞன். நான் கேட்பதற்கு முன்பே கீபோர்டில் வாசிக்க ஆரம்பித்து மயக்கினான். அவன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஆரோள். அதேபோல இந்தப் படத்தில் பிசாசு காற்று வெளியில் செய்யும் சாகசங்களைச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சண்டைக் கலைஞர் டோனி அமைத்திருக்கிறார். 


வாழ்வின் இருள் சூழ்ந்த பக்கங்களைப் பேசும் கதைகள் மீது அப்படியென்ன காதல்?

 
காதல் என்பதே இருளில் கரைவதுதானே. ஆனால் நாம் வெளிச்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். தாயின் கருவறையில் நிறைந்திருப்பது இருள்தான். நீங்கள் கண்களைத் தருவது இருட்டில் இருப்பவனுக்குத்தானே? வாழ்க்கையின் முக்கியமான இடங்களில் அழுக்கு சேரும் இடங்கள் எல்லாமே இருள் சூழ்ந்தவைதான். இருள் சூழ்ந்த இடங்களின் முக்கியத்துவத்தை உணராமல் அதைப் புறக்கணித்துச் செல்கிறார்கள். ஆனால் அதை நான் என் லாந்தர் விளக்கு கொண்டு காண்கிறேன். அந்த இருளில்தான் இரண்டு தேரைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த இருளில்தான் தாய்ப் பூனை தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இருளில்தான் வாழ்க்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. இருளைக் குறித்து ஃப்ராய்ட் பேசிக்கொண்டே இருக்கிறார். எல்லா தத்துவ விசாரணைகளும் இருளி லிருந்தே தொடங்குகின்றன. இருளின் கதைகள் ந்மக்கு வெளிச்சத்தைக் கொடுப்பவை. 



நன்றி  - த இந்து