Showing posts with label பிங்க்கி. Show all posts
Showing posts with label பிங்க்கி. Show all posts

Tuesday, July 31, 2012

விளையாட்டு வீராங்கனை பிங்கி - ஓ பக்கங்கள் ஞானி கட்டுரை

http://www.competenetwork.com/images/stories/bloggers/ty-06-12/pinki-pramanik.jpg

பக்கங்கள்

பதில்கள் தேடும் கேள்விகள்...

ஞாநி

நீ ஆணா, பெண்ணா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நெருக்கடியை நம்மில் பெரும்பாலோர் சந்திப்பதே இல்லை.
ஆனால் இந்த நெருக்கடியை சந்திக்க வேண்டி வருவோரின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதன் அடையாளமாகத் தான் இன்று விளையாட்டு வீரர்கள் பிங்கியும் சாந்தியும் இருக்கிறார்கள்.
இந்திய தடகள வீராங்கனைகளான இருவரின் வாழ்க்கையும் அவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியால் நரகமாக்கப்பட்டுவிட்டது. இவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ளுவதற்கு முதலில் இயற்கை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும், ஆண், பெண் என்ற வரையறை இயற்கை ஏற்படுத்தியதல்ல. நாம் ஏற்படுத்தியதுதான். இயற்கை நாம் ஆண் என்று சொல்லும் வடிவத்துக்கும் பெண் என்று சொல்லும் வடிவத்துக்கும் இடையில் எண்ணற்ற வடிவங்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அறிவியல் அவற்றை அறிந்திருக்கிறது. ஆனால் சமூக ரீதியில் அவற்றுக்கெல்லாம் நாம் உரிய பெயர் சூட்டி வகைப்படுத்தி அங்கீகரிக்கத் தவறியிருக்கிறோம் என்பதுதான் அசல் பிரச்னை.
உடல்ரீதியாக அறிவியல் முற்றிலும் இது ஆண் உடல் என்றும் இது பெண் உடல் என்றும் வரையறுக்கும் உடல்கள் அமையப் பெறாமல் இரு தன்மைகளும் வெவ்வேறு விகிதங்களில் அமைந்த உடல்களைப் பெற்றவர்களை நம் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களுக்கு உடல் எப்படி இருந்தபோதிலும் மன ரீதியாக தன்னை ஆண் என்று உணர்ந்தால் ஆணாகவும், பெண் என்று உணர்ந்தால் பெண்ணாகவும் அறிவித்துக் கொள்ளும் உரிமையை நம் சமூகம் வழங்குகிறதா? அல்லது இரண்டுமில்லாத மூன்றாம் பாலினம் என்று தன்னை அறிவித்துக் கொண்டால், அதற்குரிய சட்ட அங்கீகாரமும் சமூக வசதிகளும் இன்னமும் இல்லையே?


http://timesofindia.indiatimes.com/photo/14151694.cms
இந்தத் தீர்க்கப்படாத சமூக சிக்கல்களை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்தும் விதத்தில்தான் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகள் அமைகின்றன.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கிக்கு இப்போது வயது 26. பதினேழு வயதிலேயே ஆசிய உள்விளையாட்டுரிலே ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றவர். பின்னர் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம். அடுத்து ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம். தொடர்ந்து விபத்துகளினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிங்கி மறுபடியும் தேறி வந்து களத்தில் இறங்கியபோது, அவருக்கு எதிராக அவருடன் இருந்த ஒரு பெண் பாலியல் வன்முறை புகார் கொடுத்ததையடுத்து கைதானார். பிங்கி ஆண் என்றும் தன்னிடம் கட்டாய உடல் உறவு கொள்ள முயன்றார் என்றும் புகார். கைது செயப்பட்ட பிங்கிக்கு பாலியல் சோதனைகள் செய்யப்பட்டன.
தனியார் மருத்துவமனையில் பிங்கிக்கு நடந்த உடல்சோதனையின் வீடியோ படங்கள் செல்போன்களிலும் இணையத்திலும் பரப்பப்பட்டன. தனியார் மருத்துவமனை சோதனை பிங்கியை ஆண் என்று முடிவு செய்தது. ஆனால் இதை பிங்கி ஆட்சேபித்ததையடுத்து அரசு மருத்துவ மனையில் சோதனைகள் செய்யப்பட்டன. அதில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அடுத்து பிங்கியின் குரோமோசோம் பேட்டர்ன் சோதனை செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
பிங்கி மீது முதலில் பாலியல் வன்முறை புகார் செய்த பெண் தான் பொய்ப் புகார் கொடுத்ததாக இப்போது சொல்லியிருக்கிறார். பிங்கிக்கு அரசு கொடுத்த நிலத்தை அவரிடம் வாங்கிய அவதார் சிங் தூண்டுதலில் பொய்ப் புகார் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த அவதார் சிங் ஏற்கெனவே கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்திய குற்றத்தில் கைதானவர். அவர் மனைவி ஜோதிர்மயியும் தடகள வீராங்கனை. பிங்கியுடன் சேர்ந்து ஓடியவர். மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யாக இருந்தவர்.
பிங்கிக்கும் ஜோதிர்மயி கணவருக்கும் நிலத்தகராறு, பணத்தகராறு என்பது தனி விஷயம். அரசு விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்த நிலத்தை அவதார் சிங் அவர்களை மிரட்டி கம்மி விலைக்கு வாங்கிக் கொள்கிறார் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
http://i.telegraph.co.uk/multimedia/archive/02249/pi_2249658b.jpg
ஆனால் இந்த பணத் தகராறினால், பிங்கியின் பாலின அடையாளம் பிரச்னையாக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அவர் தடகளப் போட்டிகளில் மெடல்கள் வென்றபோதெல்லாம் யாரும் அவரை ஆணா பெண்ணா என்று கேட்கவில்லை.


அடையாள சர்ச்சையில் சிக்கி சீரழிக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் சாந்தி சவுந்தரராஜன். இப்போது 31 வயதாகும் சாந்தி 11 சர்வதேச மெடல்களும் 50 உள்ளூர் மெடல்களும் வென்றவர். 2006ல் கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சில சக வீரர்கள் ஆட்சேபித்ததையடுத்து அவருக்கு பாலியல் சோதனை செய்யப்பட்டது. அவரை பெண்ணாகக் கருத முடியாது என்று முடிவு செய்து கொடுத்த மெடல் பறிக்கப்பட்டது.
உண்மையில் சாந்தியின் பிரச்னை வேறு. பெண்ணாகவே பிறந்தபோதும் ஆண்ட் ரோஜென் சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம் என்ற குறைபாட்டுடன் அவர் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குறைபாட்டினால், பெண் உடல் இருந்தபோதும் பெண் தன்மைக்குரிய சுரப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சாந்திக்காக இந்திய அரசோ, தமிழக அரசோ, ஆசிய விளையாட்டு நிர்வாகத்துடன் சண்டையிட்டதாகத் தெரியவில்லை. இப்போது சாந்தி வறுமையினால் தினக்கூலி வேலைக்குச் செல்வதாக செய்திகள் வெளியானபின், அரசு தரப்பில் இருந்து ஆதரவுக் குரல்கள் வருகின்றன. முதலில் சாந்தி ஏன் தினக் கூலியானார் என்பதே மர்மமாக இருக்கிறது. 2006ல் அவரது மெடல் பறிக்கப்பட்டபோதும் கூட, அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சாந்திக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தார். ஓராண்டு கழித்து மனஉளைச்சலினால் சாந்தி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தருவதற்கான மையத்தை சாந்தி தொடங்கி நடத்தி வந்தார். அதில் 2009ல் 68 பேர் பயிற்சி பெற்றதாகவும் அவர்களில் சிலர் சென்னை மாரத்தானில் பரிசுகள் வென்றதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் மூன்றே வருடங்களில் சாந்தி தினக்கூலியானது ஏன் என்று புரியவில்லை. பரிசுப் பணம் சாந்தியின் சகோதரி திருமணச் செலவிலும் சகோதரர் படிப்புச் செலவிலுமாக தீர்ந்துபோய் விட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மையானால், லட்சக் கணக்கில் தங்களுக்காக செலவு செய்த சாந்தியை அவரது சகோதரரும் சகோதரியும் தினக்கூலியாளாக போக விட்டுவிட்டது நம் குடும்ப அமைப்பின் கோளாறையே காட்டுகிறது.



http://timesofindia.indiatimes.com/photo/14426411.cms
இப்போது மத்திய விளையாட்டு அமைச்சர் அஜமக்கான் தென் ஆப்ரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்காக அந்த நாட்டு அரசு போராடியதைப் போல சாந்திக்காக இந்திய அரசு போராடுமென்று அறிவித்திருக்கிறார்.
இந்தியாவைவிடப் பின் தங்கிய நாடாகக் கருதப்படும் தென் ஆப்ரிக்கா காஸ்டர் செமன்யாவுக்காகப் போராடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்தியா இதுவரை சாந்திக்காக செய்யவில்லை. 2006ல் மெடல் பறிக்கப்பட்ட உடன் போராடாமல் விட்டுவிட்டு 2012ல் என்ன, எப்படி போராடுவார்கள் என்று தெரியவில்லை.

காஸ்டர் செமன்யாவின் விஷயத்தில் மிக முக்கியமான அம்சம் அவர் ஆணா பெண்ணா என்று நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவைக் கூட பகிரங்கப்படுத்த அவர் தடை வாங்கியிருப்பதுதான்.
செமன்யா 2008ல் உலக ஜூனியர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர்.
செமன்யா 2009ல் 800 மீட்டர் ஓட்டத்திலும் 1500 மீட்டர் ஓட்டத்திலும் உலக ரிக்கார்டுகளை ஏற்படுத்தியதும், அவரது பாலியல் அடையாளத்தை சோதிக்க சர்வதேச தடகளக் கூட்டமைப்பு நட வடிக்கை எடுத்தது.
உடனே இதற்கு பெரும் எதிர்ப்பு பல்வேறு விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்ல, தென் ஆப்ரிக்க அரசிடமிருந்தே வந்தது. செமன்யாவுக்கு சரியான ஆலோசனை சொல்ல தவறியதற்காக அவரது கோச் ராஜினாமா செய்தார். தென் ஆப்ரிக்க அரசின் அறிவுரைப்படி செமன்யா, மிகப்பெரிய சட்ட நிறுவனத்தை தன் வக்கீலாக நியமித்தார். சோதனை முடிவுகளை வெளியிட கோர்ட்டில் தடை வாங்கப்பட்டது. தனக்கு தந்த மெடலையும் பணத்தையும் செமன்யா வைத்துக் கொள்ளலாம் என்று தென் ஆப்ரிக்க அரசு அறிவித்தது. ஒரு பெண் எப்போது பெண் தன்மையற்றவராகக் கருதப்படுவார் என்பது பற்றிய சர்வதேச தடகளக் கூட்டமைப்பின் விதிகள் தெளிவாக இல்லை என்று தென் ஆப்ரிக்க அரசு கூறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வருட லண்டன் ஒலிம்பிக்சில் தென் ஆப்ரிக்க அணியின் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வர இருப்பவர் செமன்யாதான்.
செமன்யா விஷயத்தில் தென் ஆப்ரிக்க அரசு நடந்துகொண்டதைப் போல இங்கே சாந்திக்கு நடக்காமல் போனதற்குக் காரணம், இங்கே இருக்கும் மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி, விளையாட்டுத் துறையிலும் கொள்கைகள் சீராக இல்லை. பாலியல் அடையாளங்கள் பற்றிய அரசுக் கொள்கை என்பது ஒன்று இல்லவே இல்லை.
மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டியதும் சாந்திக்காகக் குரல் கொடுத்து ஓடிவரும் தொழிலதிபர்களும் அரசியல் வாதிகளும் இதையும் இன்னொரு தானதர்மமாகக் கருதாமல், இப்போதேனும் தெளிவான பாலியல் அடையாளக் கொள்கையை நம் அரசுகள் வகுக்க வற்புறுத்தவேண்டும்.
அவை உருவாகும்வரை சாந்திகளும் பிங்கிகளும் நம் சமூகத்தில் சர்ச்சைகளாகவும் கேலிப் பொருட்களாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை.


http://static.sify.com/cms/image//mhln4mbjddf.jpg

தன் தந்தையுடன் பிங்கி
இந்த வார யோசனை!

கொடநாட்டுக்கு அதிகாரிகளை ஜெயலலிதா அடிக்கடி வரவழைப்பதால், அங்கே போவரும் வழிகளை நன்றாக பராமரிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே ஜெயலலிதா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டமாக தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அங்கே போயிருந்து ஆட்சி நடத்தும்படி பரிந்துரைக்கிறேன்.
இந்த வாரத் திட்டு!

காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரங்களை நடத்துவதற்காக தன் அமைச்சக வேலைகளை கவனிக்காமல் வேலை நிறுத்தம் செத ஷரத் பவாருக்கு .வா.தி. பல மாநிலங் களில் வறட்சி மிரட்டும் நேரத்தில் விவசாய அமைச்சர் வேலைக்குச் செல்லாமல் ஸ்டிரைக் செதது கேவல மானதாகும்.
நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி