அலாதியான அந்த நடிகர் திரையில் தோன்றும்போதொல்லாம் பாத்திரமாகவே வாழ அவர் பெரிய சிரமங்களை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் தோன்றிய சில நிமிடங்களிலேயே, தனது நடிப்பின் மூலம் நமது எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு அவர் நமது கவனத்தை இழுத்து நிறுத்திவிடுபவராக இருக்கிறார். தான் ஏற்றுநடிக்கும் பாத்திரத்திற்கு உண்மையாக இருப்பதுதான் தனது மிகப்பெரிய பலம் என்று நவாசுதீன் சித்திக் நம்புகிறார்.
'கேங்ஸ் ஆஃப் வாஸபீர்', 'தி லஞ்ச்பாக்ஸ்', 'தலாஷ்', 'கஹானி', 'மிஸ் லவ்லி' மற்றும் 'பட்லாப்பூர்' போன்ற திரைப்படங்களில் நவாசுதீன் என்றென்றும் நினைவில் நிற்கும் பாத்திரங்களை நமக்குத் தந்துள்ளார். தேசிய நாடகப் பள்ளியில் இளங்கலை முடித்துள்ள இவர், அதன்பிறகு ஒரு பத்தாண்டுகாலம் திரைப்படங்களில். சின்ன சின்னப் பாத்திரங்களில் தோன்றி பெரும்போராட்டத்தை சந்தித்தார்.
இப்போதுவரை கூட தனது திரைப்படத் துறையில் தான் பெற்ற இந்த வெற்றியை நம்பமுடியாமல்தான் இருக்கிறார். கேத்தன் மேத்தா இயக்கிய இந்தி திரைப்படம் 'மாஞ்சி - தி மவுன்டெயின் மேன்' தனி ஒரு மனிதனாக போராடி வெறும் சுத்தி மற்றும் உளியைக் கொண்டு ஒரு மலையையே உடைத்து, மறைந்த தனது மனைவிக்காகவும் தன் சொந்த கிராமத்திற்காகவும் பெரிய நகரத்திற்கு சிறந்த பாதை ஒன்றை அமைத்த, ஒரு உண்மையான ஹீரோவாக வாழ்ந்த பீகாரைச் சேர்ந்த ஒரு ஏழை கூலித் தொழிலாளி தாஷ்ராத் மாஞ்சியாக நவாசுதீன் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 21-ல் திரைக்கு வருகிறது.
உற்சாகம் மிகுந்த அவரது நேர்காணல்:
இத்திரைப்படம் 'மாஞ்சி - தி மவுன்டெயின் மேன்' ஒரு போராட்டத்தை மையப்படுத்தியுள்ளது. அது தங்கள் வாழ்க்கையோடும் ஒப்பிடப்பட்டுள்ளது. தங்கள் வாழ்க்கையும் எப்படி போராட்டத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது?
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அம்சங்களிலேயே போராட்டம் மிகவும் நல்ல அம்சம். அதேநேரத்தில் அது கசப்பான அனுபவமாகும். அதன் பெரும்பாலான பகுதி கசப்புதான். எதற்காக போராடுகிறீர்களோ அதை நீங்கள் பெறவில்லையெனில் அது கசப்பாகத்தான் இருக்கும்.
அதன்பின்னர் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளமுடியும். எல்லோருடைய வாழ்க்கையிலும் இது ஒரு பகுதியாக உள்ளது. ஏதோ ஒன்றுக்காக நீங்கள் குறிவைக்கும்போது எதையாவது நீங்கள் கற்றுக்கொண்டாலும் அந்த காலகட்டத்தில் நீங்கள் எதையும் பெறுவதில்லை.
விரும்பியதை நீங்கள் பெற்ற பிறகு அந்த சிரமமான காலகட்டம் நினைவுகூரப்படும் அளவுக்கு முக்கியமான தொன்றாக உங்கள் வாழ்க்கையில் அது மாறிப்போகும். எனவே, திரும்பவும் அதே தவறுகளை நீங்கள் செய்யக்கூடாது. மோசமானதொன்றாக அல்லவா அது நடந்திருக்கிறது? அதை முன்பே நீங்கள் எதிர்கொண்டுவிட்டீர்கள். அந்த வாழ்க்கையை ஒருமுறை நீங்கள் வாழ்ந்தும் விட்டீர்கள்.....
தாங்கள் அறிமுகமான படத்தில் மையக் கதாபாத்திரம் ஏற்றுநடித்துவிட்டு அதன்பிறகு எல்லாமே எப்படி சின்னச்சின்ன கேரக்டர்களை ஏற்று நடிக்க முடிந்தது. அவற்றையெல்லாம் மறுத்திருந்தால் உங்களுக்கு பெரிய கேரக்டர்கள் அமைந்திருக்குமே?
நான் புகழ்பெறுவேன் என்று எப்பொழுதுமே நினைத்ததில்லை. இருந்தபோதிலும் நான் நன்றாக பயிற்சி பெற்ற ஒரு நடிகன். அதனால் வாழ்நாள்முழுவதும் நான் வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நடிகன் அவன் தனது கலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து அதில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.
அது வீதி நாடகமாக இருக்கட்டும், தொலைக்காட்சி அல்லது சினிமாவாக என்று எதுவாகவும் இருக்கட்டும் நாம் பணியாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம்... எட்டு அல்லது 10 வருடங்களுக்கு மேலாக வேலையில்லாமல் இருக்க முடியாது. மிகவும் வெறுப்பானதொன்றாகவே அது இருக்கும். ஒரு பெரிய நட்சத்திரமாக வருவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், அதை சாதித்துவிட்டேன்.
எனது வேலையை முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒவ்வொருநாளும் நான் நினைப்பதுண்டு, எப்போதையும்விட மிகச்சிறந்த நடிப்பை இன்று நான் வழங்கியிருக்கிறேன் என்று. அது உண்மையாக இருக்க வேண்டும் - அது உங்கள் நடிப்புதானா இல்லையா என்பது மக்களுக்குப் புரியவேண்டும். நான் நடிப்பதற்கு பிரியப்படுகிறேன். நான் ஒரு நடிகன். நடிப்பு எனது வேட்கை.
வேலைதேடி மும்பை வந்தீர்கள். இப்போது அது உங்கள் கையிலேயே இருக்கிறது. தற்போது தங்கள் தேடல் என்ன?
உண்மையைச் சொல்லவேண்டுமெனில் - நான் உண்மையிலேயே என்ன விரும்புகிறேன் தெரியுமா? நான் நடிக்கும் கேரக்டர்கள் வாயிலாக நான் எனது வாழ்க்கையையே கண்டறிய விரும்புகிறேன். ஏனெனில் எனக்கு இதன் வீச்சு தெரியும் - எதுவொன்றும் நமக்குள்ளேயே இருக்கிறது. ஓர் ஆயிரம் கேரக்டர்கள் உங்களுக்குள் இருக்கின்றன. அவற்றை கண்டறியவேண்டியது மிக மிக முக்கியமானது. உங்களிடம் ஓர் அழகான வாழ்க்கை உள்ளது. பலவண்ணங்களாக உள்ள அவற்றில் எல்லாம் நீங்கள் வாழ்ந்து அவற்றைக் கடக்க வேண்டும்.
எந்தவகையான பாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடிக்கும் ஒரு திறமையுள்ள நடிகராக உங்களை எல்லோரும் பார்க்கிறார்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?
என்னைப் பற்றி மிகவும் குழப்பத்தில் உள்ளேன் என்பதை அறிந்தால் நீங்கள் மிகவும் அதிர்ச்சியடைவீர்கள். சில நேரங்களில் ஒரு நபர் என்னை பார்த்துக்கொண்டிருப்பது போலவே இருக்கிறது. எதற்காக அவர்கள் அப்படி பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அல்லது எனக்குப் பின்னால் யாரோ நிற்பதை அவர்கள் பார்ப்பது போல் உள்ளது. நிச்சயமாக மக்கள் எனது வேலையை பாராட்டுகிறார்கள். ஆனால் என்னைப் பற்றி எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது.
இப்பொழுதுகூடவா அப்படி சந்தேகம் எழுகிறது?
ஆமாம்.
ஏன்?
அதற்குக் காரணம் அளவுக்கு மீறிய பாராட்டை நான் பெற்றிருப்பதுதான். ஆனால் எனது வாழ்வின் பெரும்பாலான காலங்களில் எந்த பாராட்டையும் நான் பெற்றதில்லை. இது திடீரென நடந்தபோது இது உண்மைதானா என ஐயம் எனக்கு வருகிறது. திரைப்பட கர்த்தாக்களின் அலுவலகங்களின் படிகளை தேடிச் சென்ற காலங்களில் அங்கு என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ''க்யா ஹை?''. இதற்கு நான் அளித்த பதில் ''ஆக்டர் ஹை'' என்பதுதான். அப்போதெல்லாம் யாரும் அதை ஏற்கவில்லை. தற்போது எனது கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தக்கவைத்துக்கொள்ள எனக்கு நானே சொல்லிக்கொள்வது ''தொடர்ந்து என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் பலம்'' என்பதுதான்.
அப்படியெனில் தங்கள் பலம் என்ன ஒரு நடிகனாக இருப்பதா?
நான் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதை உணர்கிறேன். அதுவே என் பலம் என்றும் நினைக்கிறேன். நான் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கு முழுமையாக என்னை ஒப்புக்கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன். இதுதான் எனது ஆர்வமும் பிடிவாதமும் ஆகும். கேமரா முன் நீங்கள் நிற்கும்போது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் பாத்திரத்திற்கான உண்மைத்தன்மை உங்களிடம் பிடிபட்டுவிடும்.
இந்த சூழ்நிலையோடு திரையில் பார்க்கும்போது உங்களை நீங்களே தட்டிக்கொடுப்பீர்கள்... ''இது என்னுடைய நேரம். ஐந்து நிமிடங்கள் என்றாலும் என்னால் அந்த பாத்திரமாக வாழ முடிந்துவிட்டது.'' என்று சொல்லிக்கொள்வீர்கள். நான் மேலும் முயலவேண்டும். சிலவற்றை சில நேரங்களில் என்னால் செய்யமுடியாமல் போவதுண்டு. சிலவிஷயங்களை நான் தவறவிட்டிருப்பேன்... இப்படி... நிறைய...
மாஞ்சி என்னும் மனிதனின் ஒரு உண்மை வாழ்க்கைக் கதையில் நடிக்கும்போது உங்களுக்கு சவாலாக இருந்தது எது?
மாஞ்சி, உண்மையான ஆற்றல்மிகுந்த பல பரிமாணங்களைக் கொண்ட பாத்திரம். அவர் தான் ஒரே கையாக இருந்து ஒரு மலையைப் பிளந்த மனிதன். அவரிடம் நகைச்சுவை உணர்வு திரண்டிருந்தது. மனஉறுதிதான் அவரிடம் உள்ள மிகவும் விதிவிலக்கான குணாதிசயம். இந்த வகை முரட்டார்வம் மக்களிடம் இருக்குமேயானால் சாத்தியமாகாத எந்தத் துறை சார்ந்த பணிகளையும் சாத்தியமாக்கிவிடமுடியும்.
தமிழில்: பால்நிலவன்
நன்றி-தஇந்து