Showing posts with label பாரீஸில் / மாற்ற உச்சி மாநாடு - பாரீஸ் ஒப்பந்தம் பூமிமருதன். Show all posts
Showing posts with label பாரீஸில் / மாற்ற உச்சி மாநாடு - பாரீஸ் ஒப்பந்தம் பூமிமருதன். Show all posts

Thursday, December 17, 2015

பாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - பாரீஸ் ஒப்பந்தம் பூமியைக் காக்கப்போவதில்லை! - மருதன்

யங்கரவாத தாக்குதலில் இருந்து இன்னமும் விடுபடாத அதே பாரீஸில்தான் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாதத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான இந்த உலகம் தழுவிய பிரச்னையை,  195 நாடுகள் 2 வாரங்கள் விவாதித்துத் தீர்த்து,  ஓர் ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியிருக்கின்றன. 

இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் என்னென்ன?

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் எமிஷன்) கட்டுப்படுத்தவேண்டும்.

புவி வெப்பமயமாதல் தடுக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில்,  உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸும், அதற்கு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2 டிகிரி அல்லது அதைவிடக் குறைவானதாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

பருவ மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு, பண உதவி செய்யப்பட வேண்டும். இதற்கு 100 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும்.

பசுங்குடில் வாயு வெளியேற்றத்தின் அளவில் முன்னேற்றம் இருக்கிறதா என்பதை ஒவ்வொரு நாடும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சரிபார்க்கவேண்டும். எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாமல் போனால் அதற்கேற்றாற்போல் முயற்சிகளை தீவிரப்படுத்தவேண்டும்.

மாசு ஏற்படுத்தும் எரிபொருள்களுக்கு மாற்றாக பசுமை ஆற்றல்களை உருவாக்குவது பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்படவேண்டும்.

உயர்ந்த லட்சியம், உன்னதமான அம்சங்கள். சந்தேகமே இல்லை! ஆனாலும், ஏன் இந்த உடன்படிக்கையை  சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆய்வாளர்களும், அறிவியியலாளர்களும் கொண்டாட மறுக்கிறார்கள்? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தவிர மற்றவர்கள் ஏன் இதில் நம்பிக்கை வைக்க மறுக்கிறார்கள்? ஏனென்றால் இந்தத் தீர்மானம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதைவிட, எப்படி எழுதப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

தீர்மானத்தின் 6 முக்கியக் குறைபாடுகள் கீழே...

 1. பொறுப்பு இல்லை!

இந்தத் தீர்மானத்தை ஒரு நாடு முறைப்படி கடைபிடித்தால் அந்த நாட்டுக்கு என்ன கிடைக்கும்? எதுவும் இல்லை. கடைபிடிக்கத் தவறுபவர்கள் கதி என்னாகும்? எதுவும் ஆகாது. பாரீஸ் உடன்படிக்கையின் முதல் பெரும் குறைபாடு இதுதான்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா என்று பொருளாதார ரீதியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் அனைத்தும் அதிக அளவிலான சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் காரணமாக மிக மோசமான இழப்புகளை மக்கள் சந்தித்திருக்கிறார்கள். இருந்தும் இந்த நாடுகளைச் சட்டப்படி கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியும் வெற்றி பெற்றதில்லை. 

போர்க்குற்றங்களைப் போலவே சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களும் புறக்கணிக்கப்படுவதே இங்கு வழக்கம். இவர்களிடம் போய், ’நீ பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைத் தடுத்தே தீரவேண்டும் என்று சொல்லவில்லை; தடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று ’கடவுளுக்கு விளக்கம்’ சொன்ன கமல் பாணியில் சொன்னால் ஏற்பார்களா?

ஒருவேளை வளரும் நாடுகளுக்கான ஒப்பந்தமாக மட்டும் இது இருந்திருந்தால் நிச்சயம் அது வேறு வடிவத்தில் இருந்திருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு கரிமத்தைக் குறைக்கவேண்டும் என்பதை அந்தந்த நாடுகளே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்; அவர்களே தங்களுக்கு விருப்பமானதைச் செய்துகொள்ளவேண்டும் என்று இப்போதுள்ளதைப் போன்ற வெண்டைக்காய் மொழியில் அது எழுதப்பட்டிருக்காது. விதிமீறல்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கும். இந்தப் பூவுலகைக் காக்க நீங்களெல்லாம் இன்னின்ன காரியங்களைச் செய்தே ஆகவேண்டும் என்று கறாராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து அந்நாடுகள் கண்காணிக்கப்பட்டிருக்கும்.

இதுவரையிலான தவறுகளுக்கு யார் பொறுப்பு, இனி தவறுகள் நடைபெற்றால் அதற்கு யார், எப்படி பொறுப்பேற்கவேண்டும் என்பதை நிர்ணயிக்காத ஒரு ஒப்பந்தத்தால் எதையும் சாதிக்கமுடியாது. 
 
2. சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை!

நீதிக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடுவதில் அமெரிக்காவுக்குச் சங்கடம் இல்லை. ஆனால் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், இல்லாவிட்டால் தண்டனை என்று சொன்னால் அதை அவர்களால் ஏற்கவே முடியாது. பராக் ஒபாமா அதற்கும் தயாராகவே இருந்தார் என்றும், அமெரிக்க செனட் சம்மதிக்காது என்பதால்தான் சட்டம், தண்டனை உள்ளிட்ட கொக்கிகள் நீக்கப்பட்டன என்றும் நியூயார்க்கர் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

அடுத்தது, சீனா. 'பருவநிலை மாற்றம் ஒரு முக்கியப் பிரச்னை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்ட நாடுகள்தான் முடிவு செய்யவேண்டும். அவர்களை விதிமுறைகளில் பிணைக்கக்கூடாது'  என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. இதுவேதான் அமெரிக்காவின் விருப்பமும் என்பதால் இந்த இரண்டு நாடுகளும் நெருடலின்றி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 

தொடர்ச்சியாக தவறு இழைப்பவர்களிடம் மேலதிகக் கண்டிப்புடன் நடந்துகொள்வதை விட்டுவிட்டு,  உங்கள் மனச்சாட்சிபடி நடந்துகொள்ளுங்கள் என்று பம்முவது எந்த வகையில் பயனளிக்கும்? அரசியலுக்கும் அறவுணர்வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத இந்த நூற்றாண்டில் சட்டப்படி செல்லுபடியாகாத ஓர் ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு என்ன சாதித்துக்கொள்ளமுடியும்? 

 3. முக்கியமான மாசு கண்டுகொள்ளப்படவில்லை!

உலகிலேயே மிக அதிக அளவில் கரியமில வாயு வெளியேறுவது கரியைப் பயன்படுத்துவதால்தான். கரியை அதிகம் பயன்படுத்தும் முதல் மூன்று நாடுகள் எவை தெரியுமா? இந்தியா, அமெரிக்கா, சீனா! கரியை மட்டும் இனி நம்பியிருக்கக்கூடாது என்னும் முடிவோடு வேறு வகை ஆற்றல்களை நோக்கி அமெரிக்கா நகரத் தொடங்கியிருக்கிறது. 

ஆனால் இந்தியாவும் சீனாவும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நிலம், நீர், காற்று என்று முழுக்க மாசடைந்த சூழலைக் கொண்டிருந்தபோதும், அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளும் இந்த நிமிடம்வரை தடையின்றி கரியை  பயன்படுத்தி வருகின்றன.     

மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் தங்களுடைய மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள,  நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களையே அமைக்கப்போகின்றன. இந்த முதன்மையான பிரச்னையை இந்த ஒப்பந்தம் கோடிட்டுக்கூடக் காட்டவில்லை. பிரச்னைகளே தெளிவாக அடையாளம் காணப்படவில்லை என்னும்போது தீர்வுகள் எப்படி சரியானவையாக இருக்கும்?

 4. உதவ வேண்டிய கட்டாயமில்லை!

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் உதவவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பசுமை உலகைப் படைக்க 100 பில்லியன் டாலர் நிதியுதவி செய்யவேண்டும் என்று உடன்படிக்கை சொல்வது உண்மைதான் என்றாலும், 'அது கட்டாயமில்லை. நீங்களே சுயமாக முன்வந்து இதனைச் செய்யவேண்டும்' என்று உடன்படிக்கை எதிர்பார்க்கிறது. 

 5. சமத்துவம் இல்லை!

சிறுத்தை, ஆமை இரண்டுக்கும் ஓட்டப்பந்தயம் வைத்ததைப் போல் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் ஒன்றே போல் இலக்கு நிர்ணயித்து, ஒன்றுபோல் நடத்துவது சரியல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் நூற்றாண்டுகளுக்கு முன்பே தொழில்புரட்சியைச் சந்தித்துவிட்டன. அவர்கள் ஏற்கெனவே அதிக பசுங்குடில் வாயுவை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டார்கள். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் இப்போதுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி அதே வளர்ச்சியை அடையவேண்டுமானால் அதே அளவு சூழலை மாசுபடுத்தியாகவேண்டும். அந்த வளர்ச்சியைத்தான் வளர்ந்த நாடுகள் இப்போது தடுக்கின்றன. 

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நான் செய்த தவறுகளை இனி நீ செய்யக்கூடாது என்று மூத்த குற்றவாளிகள் இளம் குற்றவாளிகளுக்கு அள்ளித் தெளிக்கும் அட்வைஸ் மழையே இந்த ஒப்பந்தம். அந்த அட்வைஸ் சரியானதுதான் என்றாலும், இளம் குற்றவாளிகள் அதைக் கேட்பார்களா? என்னதான் முதலாளித்துவ நாடுகளாக இருந்தாலும் குற்றமிழைப்பதற்கான உரிமையில் நிச்சயம் அவர்கள் சமத்துவத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லவா?

6. ஒப்பந்தங்கள் மதிக்கப்பட்டதில்லை!

6 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றபோது கிட்டத்தட்ட இதே லட்சியத்தை வெளிப்படுத்தி இதே போன்ற அம்சங்களைக் கொண்ட ஓர் உடன்படிக்கையைத் தயார் செய்தார்கள். அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேஸில், ஜெர்மனி, பிரிட்டன் என்று பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க முன்வந்தன. 

எரிபொருளுக்கும் ஆற்றலுக்கும் நாம் கரி, எண்ணெய், வாயு போன்றவற்றை எரிக்கிறோம்; இது நமக்கும் நம் உலகுக்கும் நல்லதல்ல. மாற்று வழிகளை, குறிப்பாக பசுமை வழிகளை நாம் ஆராய்ந்தாகவேண்டும் என்று இதே போல் அந்த உடன்படிக்கையிலும் தெளிவாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதிலுள்ள ஒரு அம்சத்தையும் ஒருவரும் நடைமுறையில் கொண்டுவரவில்லை. உடன்படிக்கை தோல்வியடைந்தது.

அவ்வளவு ஏன், இதே பாரீஸில் 1928-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி என்று 15 நாடுகள் போருக்கு எதிரான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உன்னதமான இந்த ஒப்பந்தத்தை நாங்களும் பின்பற்றுவோம் என்று 65 நாடுகள் முழங்கின. பாரீஸ் உடன்படிக்கையைப் போலவே இதையும் ஒரு வரலாற்றுத் தருணம் என்றே பல நாடுகள் அழைத்தன. 

ஒப்பந்தத்தைத் தயாரித்தவருக்கு (ஃபிராங் கெல்லாக்) நோபல் அமைதி விருது அளிக்கப்பட்டது. ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிய பிறகு இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. போர் எதிர்ப்பு ஒப்பந்தத்தை ஆதரித்த பல நாடுகள் போரில் குதித்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள்...? முறைப்படி போரைத் தொடங்கி வைத்தவர்களே அவர்கள்தானே!

பாரீஸ் ஒப்பந்தம் மிகப் பெரிய வெற்றி என்கிறது அமெரிக்கா. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவும் அதையேதான் சொல்கிறது. ஆனால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள சாமானியர்களுக்கு,  சில எளிய யதார்த்த உண்மைகள் தெரியும். நமக்குப் பொருந்தும் சட்டம் எதுவும் நாடுகளுக்கும் தலைவர்களுக்கும் பொருந்தாது என்பது அவர்களுக்குத் தெரியும். நாம் கடைபிடிக்கும் குறைந்தபட்ச அறம் சார்ந்த விழுமியங்களைக்கூட அரசாங்கங்கள் கடைபிடிப்பதில்லை என்பதை அவர்கள் அனுபவப்பூர்வமாகவே உணர்வார்கள். 

எனவே அரசியல்வாதிகள்,  விவாதிக்கும் பிரச்னைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வார்களே தவிர அவர்கள் கையெழுத்திடும் ஒப்பந்தங்களையும், உடன்பாடுகளையும் அவர்கள் எப்போதுமே சீரியஸாக எடுத்துக்கொண்டதில்லை. 

அதனால்தான் கியோட்டோ புரோட்டாகால், கோபன்ஹேகன் மாநாடு ஆகியவற்றைப் போலவே பாரீஸ் உடன்படிக்கை பற்றிய செய்திகளையும் அசைபோட்டபடி அவர்கள் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பூவுலகைக் காக்கும் பொறுப்பை அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாகப் படுத்து உறங்கமுடியுமா என்ன...?!


-விகடன்