Showing posts with label பாபநாசம்- திரை விமர்சனம். Show all posts
Showing posts with label பாபநாசம்- திரை விமர்சனம். Show all posts

Monday, July 06, 2015

பாபநாசம்- திரை விமர்சனம்

பக்தர்கள் பாவத்தைத் தலைமுழுகத் தாமிரபரணியைத் தேடிவரும் ஊர் பாபநாசம். அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). கேபிள் டி.வி தொழில் செய்கிறார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நடைமுறை அறிவு மிக்கவர்.
சினிமாவின் மீதான அவரது அதீத மான காதல் அவருக்குப் பல விஷ யங்களைச் சொல்லிக்கொடுத்திருக் கிறது. மனைவி ராணி (கவுதமி), மகள்கள் செல்வி (நிவேதா தாமஸ்), மீனா (எஸ்தர் அனில்) ஆகியோர்தான் அவரது உலகம். நிலையான தொழில், திகட்டத் திகட்ட அன்பு என்று அமைதி யாக நகரும் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பயந்து நடுங் கியபடி அழுதுகொண்டிருக்கும் மனைவி, குழந்தைகளைப் பார்த்து அதிர்ந்து போகிறார். நடந்த விபரீதத்தை போலீஸிடம் தெரிவித்தால் தனது குடும்பம் நாசமாகப் போய்விடும் என்று அஞ்சும் அவர், அதில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறார். நடந்த சம்பவம் என்ன? அதிலிருந்து மனைவி, பிள்ளை களைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி என்ன? போலீஸால் அவர்களை நெருங்க முடிந்ததா?
மிக எளிய கதைக் கரு கொண்ட ஒரு திரைப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிவிடும் ஜாலத்தைச் செய்துவிடுகிறது கச்சிதமான திரைக்கதை. தொடக்கத்தில் சுயம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தின் அறிமுகம், காவல் நிலையம், தேநீர்க் கடை எனப் படம் மெதுவாக நகர, பார்வையாளர்கள் முணு முணுக்கிறார்கள். வீட்டில் நடக்கும் அந்த விபரீதத்துக்குப் பிறகு கதை வேகமெடுக்கிறது. அதன் பிறகு எந்த இடத்திலும் சிறு தொய்வுகூட இல்லை.
திரைக்கதையை அழுத்தமாகத் தாங் கிப் பிடிப்பது, நிறைய திரைப்படங்களைப் பார்த்து நடைமுறை அறிவை வளர்த் துக்கொண்டிருக்கும் சுயம்புலிங்கத்தின் குணாதிசயம். வாழ்க்கையில் எதிர்கொள் ளும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாம் பார்த்த/பார்க்கும் சினிமாக் காட்சி களிலிருந்து முன்னுதாரணமாகப் பெற முயல்வது சாத்தியமற்றது. ஆனால் தான் பார்த்த திரைப்படங்களிலிருந்து சுயம்பு லிங்கம் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்வது நம்பகத்தன்மையோடு வெளிப் படுகிறது. காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவ சுயம்பு எடுக்கும் முயற்சி கள் வியக்கவைக்கின்றன. முதலில் ஏமாறும் காவல்துறை பிறகு உஷாராகி அவரது திட்டத்தை ஊடுருவி உண்மையை அறி வதும் அதே அளவு நம்பகத்தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் பதைபதைக்க வைக்கிறது. ஆசுவாசமும் அச்சமும் மாறிமாறி வந்து பார்வையாளர்களைக் கட்டிப்போடுகின்றன. அந்தக் குடும்பம் தப்பிக்க வேண்டுமே என்னும் தவிப்பை ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஏற் படுத்துவதே இயக்குநரின் வெற்றி. கிளை மாக்ஸ் திருப்பம் சபாஷ்போட வைக்கிறது. சுயம்புலிங்கமும் கொல்லப்பட்ட இளைஞ ரின் பெற்றோரும் கடைசியில் சந்திக்கும் இடம் நெகிழ வைக்கிறது.
சுயம்புலிங்கம், தன் மகனைக் காணாத நிலையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தாவது அவனுக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு சராசரித் தாயின் தவிப்புடன் கலங்கி நிற்கும் பெண் காவல் அதிகாரி கீதா, தனிப்பட்ட காரணத்துக்காக சுயம்பு லிங்கத்துடன் மோதும் காவலர் பெருமாள் ஆகிய மூன்று கதாபாத்திரங்களும் திரைக்கதையின் முக்கியத் தூண்கள். இந்தக் கதாபாத்திரங்களை அவரவர் நிலையில் வலுவாக வார்த்த இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் படைப்பாளுமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கமல் எனும் நட்சத்திரம் சுயம்புலிங்கம் எனும் சாமானிய மனிதனாகப் பார்வையாள ருக்குத் தெரியக் காரணம், அவரது பாத்திரப் படைப்பு.
புத்திசாலி சாமானியனாக, அலட்டல் இல்லாத அதே நேரம் தனது முத்திரை களைத் தவறவிடாத நடிப்பை வழங்கி யிருக்கிறார் கமல்.
கவுதமியின் நடிப்பையும் குறைசொல்ல முடியாது. போலீஸ் ஐ.ஜி. கீதா பிரபாகராக நடித்திருக்கும் ஆஷா சரத்தின் நடிப்பு இரு வேறுபட்ட உணர்ச்சி நிலைகளில் நின்று ஜாலங்கள் செய்கிறது. நான்கு பேர் முன்னிலையில் புத்திசாலித்தனமும் கண்டிப்பும் மிக்க காவல் அதிகாரியாக கம்பீரம் காட்டுவதிலும், தனி அறையில் ஒரு தாயாக, “நம்ம பையனுக்கு என்ன ஆச்சுங்க?” என்று கணவன் தோளில் சரிந்து அழுவதிலும் பார்வையாளர்கள் மனதைக் கொள்ளைகொள்கிறார். கையேந்துவதையும் கை நீட்டுவதையுமே தொழிலாக வைத்திருக்கும் போலீஸாக கலாபவன் மணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவர்கிறார்.
சுஜித் வாசுதேவின் இயல்பான ஒளிப் பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்துக்குக் கைகொடுத்திருக்கின்றன. பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
நெல்லை மாவட்ட வாழ்க்கையின் அம்சங்களைத் திரைக்கதையில் இணைக் கப் பங்காற்றியிருக்கும் சுகா, காட்சிக்கு ஏற்ற விதத்தில் அங்கதமும் கூர்மை யும் விவரணைகளும் நிறைந்த வசனங் களை எழுதியிருக்கும் ஜெய மோகன் ஆகியோரும் பாராட்டுக்குரிய வர்கள். படத்தின் நிகழ்வுகளை முன் பின்னாகக் காட்டி த்ரில்லர் உணர்வைக் கூட்டியிருக்கிறது அயூப் கானின் படத் தொகுப்பு. தொடக்கக் காட்சிகளில் சற்றே சலிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைக் குறைத்திருக்கலாம்.
அதிகாரத்துடன் மோத நிர்ப்பந்திக் கப்பட்ட ஒரு சாமானியனின் போராட்டத் தைப் புத்திசாலித்தனமாகவும் விறுவிறுப் பாகவும் காட்டுகிறது ‘பாபநாசம்’. குடும்பப் பின்னணி கொண்ட கதை களில், த்ரில்லர் உணர்வை அதன் முழு வீச்சுடன் கையாண்ட திரைப்படங்கள் குறைவு. மலையாள ‘த்ரிஷ்ய’த்தின் மறுஆக்கமான ‘பாபநாசம்’ அப்படிப்பட்ட ஒரு படம்.


thanx - the hindu