இவர்தான் முகேஷ்..., நுரையீரல் பஞ்சு போன்றது..’- சினிமா
ரசிகர்களுக்கு மனப்பாடமாகிப்போன விளம்பரங்கள் இவை. புகையிலை மற்றும் பான்
மசாலா போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்
காட்டும் அந்த விளம்பரங்கள்.
அத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் குட்கா, பான்
மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும்
சேமித்துவைக்கவும் விநியோகம் செய்யவும் விற்கவும் தடைவிதித்து
உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
2003-ம் ஆண்டு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்து
உழைக்கும் மக்களை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றியதுபோல, இந்த அறிவிப்பும்
சிறப்பானது என்று சமூக ஆர்வலர்கள் வரவேற்கின்றனர்.
சுவைக்கும் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும்
அதை தடைசெய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து புற்றுநோய்க்கு எதிராக
விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை செய்துவருபவரும், வடபழனி பேட்டர்சன்
புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர்
எஸ்.விஜயராகவனிடம் பேசினோம்.
''தோட்டத்தில் விளையும் புகையிலையை, சுவைக்கும்
புகையிலையாகப் பதப்படுத்தி விற்பனைக்குக் கொண்டுவரும் வரை நிறைய
கெமிக்கல்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. புற்றுநோயை உண்டாக்கும் 45 விதமான
கெமிக்கல்களில் 22 கெமிக்கல்கள், சுவைக்கும் புகையிலையில் பல்வேறு
கட்டங்களில் சேர்க்கப்படுகின்றன.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால்
ஏற்படும் புற்றுநோயால் 43 சதவிகித அளவுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது.
வாய், உதடு, உள் கன்னம், நாக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், குரல்வளை, வயிறு
என்று புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை நீண்ட பட்டியலிடலாம்.
பான் மசாலா பொருட்களில் 'பொலோனியம் 6’ என்ற கதிர்வீச்சு
பொருள் உள்ளதால், பான் மசாலா போட்டுப் போட்டு நாளடைவில் வாயே திறக்க
முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வாய்க்குள் உள்ள மிருதுவான தோல்கள்,
கடினத்தன்மையை அடைந்துவிடும். பான் மசாலா பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள்,
சில ஆண்டுகள் கழித்து வாய் திறக்க முடியாததால், உதட்டுக்குள் ஒதுக்கும்
புகையிலை, பாக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.
நன்மை செய்யும் 550 விதமான பூச்சிகள் வாய்க்குள் உள்ளன.
நோய் தடுப்பு சக்தியை இழந்த பிறகு தீமைசெய்யும் பூச்சிகள் ஆட்டம் போட
ஆரம்பிக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதை மறைக்க வாசனைப் புகையிலை
போடுவார்கள். இப்படி, வாய்க்குள் போட்டுள்ள புகையிலைப் பொருட்கள், கொஞ்சம்
கொஞ்சமாக வயிற்றுக்குள் போகும்.
இவற்றை செரிமானம் செய்யக்கூடிய
கெமிக்கல்கள் வயிற்றுக்குள் இல்லை என்பதால், ஜீரணம் சரியாக நடக்காது. வயிறு
உப்பும். பசி எடுக்காது. தண்ணீர் குடிக்க மாட்டார்கள். குடல், வயிறு
பகுதிகளில் புண் உருவாகும். வயிற்றுக்குள் போகும் வாசனைப் புகையிலையின்
சக்கைகள், ஜீரணம் ஆகாமல் உணவுகளில் உள்ள கால்சியத்துடன் சேர்ந்து,
உருண்டையாகி வயிற்றுக்குள்ளேயே இருக்கும்.
அதை அறுவைசிகிச்சை செய்துதான்
அகற்ற வேண்டும். சத்துக்களை உறிஞ்சும் சக்தியைக் குடல் இழந்துவிடுவதால்,
உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும்
குறைந்துவிடும். உடல் வலு குறைந்து சோம்பேறி ஆகிவிடுவார்கள். கல்யாண ஆசை
வராது. நரம்புத் தளர்ச்சி ஏற்படும். ஆண்மைத்தன்மை குறையும். இவர்கள் மது
குடித்தால் புற்றுநோய் வர இன்னும் 10 சதவிகித அதிக வாய்ப்பு ஏற்படும்.
பொறுப்பாக வேலைசெய்ய முடியாத நிலையில்... திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று
சமூக விரோதச் செயல்படுகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுவர்.
புகையிலைப் பொருட்களைப் போடும் பலருக்குப் புற்றுநோய்
வரவில்லையே என்று சிலர் வியாக்கியானம் பேசலாம். அவர்களுக்குப் புற்றுநோய்
பாதிப்பு வராவிட்டாலும் இதயம், கிட்னி பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம்.
இந்தப் பாதிப்புகள் இப்போது வரவில்லை என்றாலும், எப்போதாவது வரலாம்.
புகையிலைப் பழக்கம் ஏதாவது ஒரு வகையில் மனிதனை நடைபிணமாக்கிவிடும்.
உழைக்கும் சக்தியை உறிஞ்சிவிடும். இளைய தலைமுறை, எதிர்காலத்தில்
சக்கையாகத்தான் இருக்க முடியுமே தவிர, இந்த சமூகத்துக்கு பயனுள்ள மனிதனாக
வாழ முடியாது. உறவினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகத்தான் இருக்க
முடியும். தமிழக அரசின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்''
என்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்
செயலாளர் கே.மோகன், ''வட மாநில உணவுக் கலாசாரச் சீரழிவு, இப்போது தமிழக
இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது. உழைக்கும் மக்களில் ஆண், பெண் என்று
வித்தியாசம் இல்லாமல் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவருகின்றனர்.
பான்மசாலா, குட்கா போன்ற வாசனைப் புகையிலைப் பொருட்களை எல்லாம் வட நாட்டில்
உற்பத்திசெய்துதான் இங்கே விற்கிறார்கள். முதல்வரின் அறிப்பை
வரவேற்கிறோம். அதே நேரத்தில் கடைகளில் உள்ள ஸ்டாக்குகளை விற்பனை செய்ய
வியாபாரிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் தர வேண்டும்.
இந்த அறிவிப்பின் வெற்றி-தோல்வி முதல்வரின் கையில்தான்
உள்ளது. அவரது கரத்தை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுப்போம். அதே
நேரத்தில் தடை செய்யப்பட இருக்கும் வாசனைப் புகையிலை குறித்து நிபுணர்கள்
குழு அமைத்து ஆய்வுசெய்து, எந்தெந்தப் பொருட்கள் தடைசெய்யப்படுகிறது என்பதை
அறிவிக்க வேண்டும்.
வாசனைப் புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்களை
மீட்டு, புது வாழ்வு அளிக்க மீட்பு மையம் அமைக்க வேண்டும். இதற்கான
விழிப்பு உணர்வுப் பிரசாரங்களில் அரசாங்கத்தோடு பங்கெடுக்கத் தயாராக
இருக்கிறோம். எந்த வகையிலும் கள்ளச் சந்தையில் வாசனை புகையிலை
விற்பனையாகாமல் இருக்க, முதல்வர் உறுதிபூண வேண்டும்'' என்றார்.
சமூக ஆர்வலரான 'பாடம்’ இதழ் ஆசிரியர் அ.நாராயணன்,
''புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்றுநோய்களைத்
தடுக்கும் நோக்கத்துடன், 2001-ம் ஆண்டே முதல்வர் ஜெயலலிதா அவற்றைத்
தடைசெய்தார். மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954-ன் கீழ்
மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால்,
அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. இந்த நிலையில், உணவு கலப்படத்
தடைச் சட்டத்துக்குப் பதிலாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்
என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டம் 2011
முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி எந்த உணவிலும் சுகாதாரத்தைப்
பாதிக்கும் பொருட்கள் இருக்கக் கூடாது என்றும், புகையிலை மற்றும் நிகோடின்
ஆகியற்றை உணவுப் பொருட்களில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இப்போது விசாரணையில் உள்ள வழக்கில்... குட்கா, பான்
மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகள் என்ன நடவடிக்கை
எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழக
அரசு தடை விதித்துள்ளது. அதற்காகப் பாராட்டுகிறோம்.
பான்மசாலா, குட்காவைப் போலவே, 'மாவா’, சர்தா என்ற
வாசனைப் புகையிலையும் கேன்சரை உருவாக்கும் வகையைச் சேர்ந்ததுதான். அதன்
விற்பனையும் வீதிக்கு வீதி ஜோராக நடக்கிறது. இதற்கும் தடைவிதிக்க வேண்டும்.
தடை என்பது முதல்வர் அடிக்கடி சொல்வதுபோல, இரும்புக் கரம்கொண்டு அடக்கும்
வகையில் இருக்க வேண்டும். 'பள்ளிகள் அருகில் பீடி, சிகரெட் விற்பனைக்
கூடாது. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் விற்கக் கூடாது’
என்றுள்ள தடையைக் கடுமையாக்க வேண்டும்
. அதே நேரத்தில் பீடி, சிகரெட்
பொருட்களைத் தடைசெய்யவும், டாஸ்மாக் மது விற்பனையை முற்றிலுமாக நிறுத்தவும்
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை விவசாயிகளுக்கும்,
தொழிலாளர்களுக்கும் மாற்றுத் தொழில் வாய்ப்புகளை அரசு செய்துதர வேண்டும்''
என்று வலியுறுத்தினார்.
சுவைக்கும் புகையிலைக்குத் தடை விதிக்கப்படும் என்று
அறிவித்த அரசு, அதை எப்போது எந்தத் தேதியில் இருந்து அமலுக்குக்
கொண்டுவருகிறது என்றும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும். விரைந்து அதை
செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
- எஸ்.முத்துகிருஷ்ணன்
நன்றி - விகடன்