கமலின், ’என் வரிப்பணம் என்ன ஆச்சு?’ என்ற என்ற அறிக்கைக்கும் ‘களத்தில் இறங்கி வேலை செய்யும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்!’ என்ற அறிக்கைக்கும் இடையில் என்ன நடந்தது? என்ன நடந்ததோ தெரியவில்லை... ஆனால், கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் அருகே சில வேலைகள் நடக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
மழை வெள்ளம் காரணமாக சென்னையே பாதிக்கப்பட்டு நிவாரண, மீட்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், கமல் அலுவலகம் அமைந்திருக்கும் எல்டாம்ஸ் ரோடு பகுதி மட்டும் கடந்த ஒருவார காலமாக அரசாங்கத்தால் கைவிட்டப்பட்ட பகுதியாக இருந்தது. காரணம், என்னவென்று தெரியவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில்தான் கமலின் ‘வரிப்பணம்’ அறிக்கை வெளியாகியிருந்தது. இதனால் கமல் பாதிக்கப்பட்டாரா என்பது இரண்டாவது பிரச்னை. அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். அதுதான் பிரச்னை!
ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ரோடு சாலைகளில் கழிவு நீர் கலந்து ரோடு முழுக்கவே கழிவு நீர் குட்டை போல காட்சி அளித்தது. வாகனத்தில் சென்றாலே வயிற்றை பிடுங்கி இழுக்கிறது குடல் நாற்றம். கடந்த வாரம் புதன்கிழமை மதியம் அடைமழைக்கு சாலையில் விழுந்த புங்கை மரத்தை ஞாயிற்றுக் கிழமை வரை அகற்றாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பொங்கியெழவும் சம்பிரதாயத்துக்கு மரத்தை அகற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள். இன்னமும் மரத்தின் சில பகுதிகள் சாலையிலே கிடக்கின்றன.
கமலின் அலுவலகத்துக்கு அருமையில் வசிக்கும் ஒருவர், "என்ன ஆச்சுனு தெரியலை... திடீர்னு இந்தப் பக்கம் போலீஸ் ஏக கெடுபிடி காட்டுறாங்க. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யறவனையே பிடிச்சு அடிச்சு மிரட்டுறாங்க. நாங்கள்லாம் சாதாரண ஆளுங்க. எங்க மேல ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டணும்? போன வாரம் மழை ஆரம்பிச்சதுமே கரன்ட் கட் பண்ணிட்டாங்க. எல்லாரும் கூப்பிட்டு புகார் பண்ணினோம். யாரும் எட்டிக்கூட பார்க்கலை. அதோட மரமும் விழுந்திருச்சு. அந்த ரோட்ல டூ-விலர் கூட போகமுடியலை. மழை நின்ன பிறகு எல்லாம் சரி பண்ணிடுவாங்கனு நினைச்சோம். ஆனா, அப்புறம் அதிகாரிகள் வந்து எட்டிக் கூட பார்க்கலை. நாலு நாளாச்சு. கமல் ஆபிஸ் இருந்த ரோடு முன்னாடி இடுப்பளவு தண்ணீ சேர்ந்துடுச்சு. அதுல கழிவு நீரும் கலந்து வாடை அடிக்க அரம்பிச்சுடுச்சு.
தண்ணியை அகற்ற யாரும் வந்து பார்க்கலை. ஒருகட்டத்துல பொறுமை இழந்து, நாங்கள்லாம் போராட்டம் பண்ணுவோம்னு சொன்ன பிறகுதான் அதிகாரிகள் வந்தாங்க. கடமைக்கு கொஞ்சம் தண்ணியை அகற்றிட்டு மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினாங்க. ஆனா, இன்னும் குப்பை மாதிரிதான் இருக்கு. கழிவு நீரும் சாலைகளில் ஓடுது. ஆறு நாளைக்கு அப்புறம் நேத்துதான் கரன்ட் விட்டாங்க. ஆனா, இன்னமும் கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நாலு வீடுகளுக்கு மட்டும் கரன்ட் விடலை. அது பத்தி விசாரிச்சா இதுவரை சரியான பதில் இல்லை. அப்படி பதில் சொல்லாததாலேயே, கமல் கொடுத்த அறிக்கைதான் இதுக்கெல்லாம் காரணமோனு நினைக்கத் தோணுது. ஆனா, என்ன நடந்தாலும் எங்க சப்போர்ட் கமல் சாருக்குத்தான். எத்தனை நாளைக்கு கரன்ட் விடாம இருப்பாங்கனு பார்க்கலாம்!'' என்றார் ஆதங்கமும் கோபமுமாக!
கமல்ஹாசன் அலுவலகத்தில் எட்டிப் பார்த்தோம். மின்சாரம் இல்லாமல் இருளாக இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறதாம்.
ஹூம்.... ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனை அரசாங்கம் விரட்டி அடித்ததை சினிமாவாகப் பார்த்தோம். இப்போது அதை நேரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள் : பா.ஜான்ஸன்
விகடன்