Showing posts with label பரதேசி. Show all posts
Showing posts with label பரதேசி. Show all posts

Thursday, March 21, 2013

பரதேசி - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)

ரசித்து ருசிக்கும் ஒரு குவளைத் தேநீரில், எவ்வளவு எளிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தி அதிரவைக்கிறான் 'பரதேசி’!


 1939-ல் நடக்கிறது கதை. சாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுப்பொறுக்கி அதர்வா, தண்டோரா அடிக்கிறவர். அதே ஊரில் வாழும் வேதிகாவோடு காதல். ஊரே பஞ்சத்தால் தவிக்க, அந்த மக்களைத் தேயிலைத் தோட்ட வேலைக்கு அழைக்கிறான் கங்காணி. அவன் பேராசை வார்த்தைகளை நம்பிப் போகிறது ஏழை ஜனம். அங்கம்மாவை ஊரில் விட்டுவிட்டு ஒட்டுப்பொறுக்கியும் போகிறான். அங்கே போன பிறகுதான் அது எவ்வளவு பெரிய நரகக் குழி என்பது தெரிகிறது. 


அடி, உதை, அட்டைக் கடி, சுளீர் குளிர், பாலியல் தொந்தரவு, உழைப்புச் சுரண்டல், நயவஞ்சகம், கொள்ளை நோய் எனக் கொத்தடிமைகளில் ஒருவனாகக் கிடக்கும் ஒட்டுப்பொறுக்கி, அங்கிருந்து தப்பி ஓட நினைக்கிறான். இடையில் அங்கம்மா அவன் குழந்தையை சாலூரில் பெற்றெடுக்கிறாள். தப்பியோட முனைந்து, கெண்டைக் கால் நரம்பு அறுபட்டு முடங்க, அங்கம்மாவை ஒட்டுப்பொறுக்கி சேர்ந்தானா என்பது வலி நிறைந்த வரலாறு!


தேயிலைத் தோட்டத்தின் பச்சை இலைகளுக்குப் பின்னால், உறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தை விவரித்த 'ரெட் டீ’ (தமிழில் 'எரியும் பனிக்காடு’) நாவலின் பாதிப்பில், 'பரதேசி’ படைத்திருக்கிறார் பாலா.


 தமிழ் சினிமா வரலாற்றில் இது மிக உண்மையான மைல்கல் சினிமா. கொத்தடிமைச் சமூகத் தின் சரித்திரத்தை இவ்வளவு எளிமையாக, வலிமையாக முன்வைத்ததற்காக பாலாவுக்கு ஒரு ரெட் சல்யூட்.


கடைசி வரை வெள்ளந்தியும் இயலாமையுமாகத் திரியும் நாயகன், காதலில் உயிர் சுமக்கும் ஒருத்தி, ஓடிப்போன புருஷனை நினைவிலும் இடுப்பில் பிள்ளையையும் சுமக்கும் இன்னொருத்தி, உடலை முதலாளி வெறிநாய்க்கும் உயிரைக் கொள்ளை நோய்க்கும் தருகிற மற்றொரு மனுஷி என மனதை நிறைக்கும் நாயகிகள், கண்ணீரில் கரைக்கும் க்ளைமாக்ஸ்... என பாலா படங்களிலேயே இது முற்றிலும் புதிய அனுபவம்!


சாலூரில் வறுமையில் கிடக்கும் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் கொண்டாட்டங்களும் நகைச்சுவையும் காதலுமாக விரியும் படம், பிழைக்க ஊர் விட்டுப் போகும் வழியில் மயங்கி விழும் ஓர் உயிரிலிருந்து தடதடக்கத் தொடங்குகிறது. தரையிலிருந்து உயர்ந்து அலையும் அந்தக் கை... அதிரவைக்கிறது. அதன் பிறகு தேயிலைத் தோட்டத்தில் நாம் பார்ப்பது... இதுவரை பார்த்திராத துயர உலகம்!  


அதர்வாவுக்கு இது லைஃப் டைம் படம். ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளி இளைஞனாக அபாரமாக உழைத்திருக்கிறார். 'நியாயமாரேஏஏஏஎய்ய்...’ எனத் தலையை ஆட்டி ஆட்டித் தமுக்கடித்து, வேதிகா காட்டும் காதல் சாடையில் வெட்கப்பட்டு, தேயிலைத் தோட்டத்தின் துயரத்தில் 'அவக்கு அவக்கு’ எனப் பசியில் சாப்பிட்டு, கால் நரம்பு அறுபட்டுக் கதறுவது வரை... அற்புதம் அதர்வா!


துடிப்பும் துறுதுறுப்புமான அழகுக் கருப்பியாக வேதிகா. திருமணப் பந்தியில் அதர்வாவுக்கு மட்டும் பரிமாறப்படாதபோது கண்களில் காட்டும் சிரிப்பும், குடிசைக்குள் அறைந்துவிட்டு கைப் பிடித்து இழுக்கும் ரியாக்ஷனுமே போதும்!


வேதிகாவைவிடக் கனமான பாத்திரம் தன்ஷிகாவுக்கு. அதர்வாவைத் தன் குடிசைக்குள் சேர்க்காமல் விரட்டுகிற முரட்டுத்தனமாகட்டும் அதர்வாவின் அப்பாவித்தனத்தைப் புரிந்துகொண்டு மௌனமாகப் புன்னகைப்பதாகட்டும், 'பொம்பளையப் பத்தித் தப்பாப் பேசாதே’ என்று ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும் துயரமும் அலைக்கழிக்கும் பெண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் தன்ஷிகா!


யாருங்க அந்த ஆத்தா..? அத்தனை அலட்சியமான உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலங்கடிக்கிறார் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மா. ''என் கல்யாணத்தை நானே தமுக்கு அடிக்கிற மாதிரிக் கனவு கண்டேன்' என்று சொல்லும் அதர்வாவிடம், ''ஆமா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கிற மாதிரி நான் கனாக் கண்டேன்' என்று துடுக்குக் காட்டி, பஞ்சாயத்தில் அவசரமாகச் சூடம் அணைத்து, ''அதெல்லாம் சத்தியம் பண்ணியாச்சு, போங்க... போங்க'' என்று விரட்டியடிக்கும்போது ஆச்சர்யப்படுத்துகிறார். 



புதிதாகத் திருமணமாகிக் கல்யாணக் கனவு கலையாமலே பஞ்சம் பிழைக்க எஸ்டேட் நரகத்துக்குப் புலம்பெயர்ந்து வெள்ளைக்காரனின் காம இச்சைக்குப் பலி யாகும் ரித்விகா, தன் மனைவி மானம் இழப்பதை வேறு வழியில்லாமல் பார்த்துச் சகித்து, இரவு நேரத்தில் அழுது புலம்பும் கார்த்திக், ஜாலி மைனராக டான்ஸ் போட்டு பெர்மனென்ட் மட்டையாகும் விக்ரமாதித்யன் என ஒவ்வொரு பாத்திரமும் நுட்பத்துடன் வார்க்கப்பட்டிருக்கின்றன. ''பிளெஸ் மீ மை லார்ட்...'' எனக் கிழிந்த சட்டையோடு நாயைப் போலக் கெஞ்சுவதும் வன்மத்தில் தொழிலாளர்களிடம் குமுறுவதுமாக கங்காணிக் கயவாளித்தனத்தைக் கண்ணில் நிறுத்திய ஜெர்ரி, நல்ல அறிமுகம்.
படத்தின் மிகப் பெரிய பலம் நாஞ்சில் நாடனின் வசனங்கள். அதே சமயம் வசனகர்த்தாவின் புத்திசாலித்தனங்களைக் காட்டாமல், ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே ஏற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர். அந்த மக்களின், காலத்தின் இயல்பும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. ''வேட்டிக்குள்ள இருந்து மந்திரி எட்டிப் பார்க்கிறாரு'' என முதல் பாதியில் குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள் ''ராசா வண்டியை விட்ருவேன்!'' என ஆங்காங்கே நெகிழவைத்து, ''நீயும் இந்த நரகக் குழியில வந்து விழுந்துட்டியே!'' எனக் கலங்கடிக்கின்றன.



சாலூர் கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்பக் காட்சி, முதல் மரணம் உறைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டின் விஸ்தாரப் பரப்பைச் சுற்றிச் சுழலும் இறுதிக் காட்சி வரை செழியனின் கேமரா, படத்தின் ஆகப் பெரும் பலம்.  ஜி.வி.பிரகாஷின் இசையில் வைரமுத்துவின் வரிகளில், 'அவத்தப் பையா’ காதல் பொங்கவைத்தால், 'செங்காடே சிறுகரடே போய் வரவா’ பாடலும், 'செந்நீர்தானா’ பாடலும் கண்ணீர் பொங்கவைக்கின்றன. பின்னணி இசையில் இன்னும்கூட மெனக்கெட்டு இருக்கலாம் ஜி.வி!


பாலச்சந்தரின் கலையும் கிஷோரின் எடிட்டிங்கும் படத்தில் உயர் தரம். தாஸின் ஒப்பனை, பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பு இரண்டும் பிரமிக்கவைக்கின்றன. கமர்ஷியல் சினிமாவுக் கான சங்கதிகள் இல்லாதபோதும் டாக்குமென்ட்டரி தொனி தவிர்ப்பதில், 'பரதேசி’ குழுவின் உழைப்பு அசரவைத்திருக்கிறது.  


படத்தின் திருஷ்டிக் காட்சிகள் மருத்துவராக வந்து மதப் பிரசாரம் செய்யும் 'பரிசுத்தம்’ பாத்திரக் காட்சிகள். மத மாற்றம் பெருமளவு நிகழ்ந்த காலகட்டம்தான் என்றாலும், அதை ஏதோ காமெடிக் குத்தாட்டம் ஆக்கியது... வெரி ஸாரி.  


இதுவரை பெரிதாகச் சொல்லப்படாத கொத்தடிமைச் சமூகத்தின் துயரச் சரித்திரத்தை அழுத்தமாகச் சொன்னதற்காக 'பரதேசி’யைக் கொண்டாட வேண்டும்.


'சேது’வில் யதார்த்த சினிமாவுக்கான ஓர் அலையை உருவாக்கிய பாலா, 'பரதேசி’யில் பல படிகள் கடந்து அடுத்தகட்டத் தமிழ் சினிமாவை ஆரம்பிக்கிறார்!

thanx - vikatan

diSki -

பரதேசி - சினிமா விமர்சனம்( cps)

http://www.adrasaka.com/2013/03/blog-post_1984.html

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்



2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே



3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி






இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?



7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?



10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )



12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...



13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..



மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்



3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி



4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?



6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........



7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?



9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 



சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

Tuesday, March 19, 2013

தேசிய விருது பெற்ற படங்கள் - பட்டியல்.விஸ்வரூபம் , பரதேசி ,வழக்கு எண் 18/9....

வழக்கு எண் 18/9' சிறந்த பிராந்திய மொழி படம்; விஸ்வரூபம் , பரதேசி படத்திற்கும் விருதுகள்! 


புதுடெல்லி: 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த பிராந்திய மொழி படமாக 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக இந்தி நடிகர் இர்ஃபான் (பான் சிங் தோமர் படத்திற்காக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு சிறந்த கலை மற்றும், நடன அமைப்பு ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.

சங்கர் மகா தேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது. 'கஹானி' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



தேசிய அளவில் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பான் சிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.


சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது (படம்: சம்ஹிதா) 


சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற 'போலோ நா...' என்ற பாடலுக்குக் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியான 'உஸ்தாத் ஓட்டல்' படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குனர் 

தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறந்த இயக்குநர் மராத்தியில் வெளியான 'தாக்'படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.

இந்திரா காந்தி விருது புதுமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான இந்திராகாந்தி தேசிய விருது சிட்டகாங் (இந்தி) மற்றும் 101 சூடியங்கள் (மலையாளம்) படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ரிதுபர்னோ கோஷ் பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் (சித்ராங்கதா) மற்றும் இயக்குனர் நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.


விருது பட்டியல்

சிறந்த நடிகர் ( 2 பேருக்கு ) இர்ஃபான் கான், விக்ரம் கோக்கலே
சிறந்த நடிகை உஷா ஜாதவ் (மராத்தி நடிகை)
சிறந்த சமூக படம் ஸ்பிரிட் (மலையாளம்)
சிறந்த இயக்குனர் சிவாஜி லேடன் பாட்டீல்
சிறந்த பொழுதுபோக்கு படம் விக்கிடோனர், உஸ்தாத் ஹோட்டல் (மலையாளம்)
சிறந்த துணை நடிகர் அனு கபூர்
சிறந்த துணை நடிகை டோலி அலுவாலியா (விக்கிடோனர்)
சிறந்த திரைக்கதை -  ஓ மை காட்
சிறந்த அனிமேஷன் படம் - டெல்லி சபாரி


நன்றி - விகடன் 




2012 ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் சங்கர்மகாதேவனுக்கும் விஸ்வரூப படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன. இன்று அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் விவரம் வருமாறு:



தமிழ் திரைப்படமாக பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 / 9 என்ற திரைப்படம் சிறந்த பிராந்திய படமாகவும், சிறந்தஒப்பனைக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீயும், கதாநாயகியாக ஊர்மிளாமகந்தாவும் நடித்துள்ளனர். கஹானி என்ற இந்தி திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக விருது பெறுகிறது. இந்தி திரைப்படம் பான்சிங் தோமர் என்ற படத்தில் நடித்த இர்பான் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்வரூபம் 2 விருதை தட்டி சென்றுள்ளது. சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பிற்கு விஸ்வரூபம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விக்கி டோனர் என்ற இந்தி திரைப்படம் சிறந்த பொழுது போக்கு படமாகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி என்ற திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதைபெற்றுள்ளது.

சிட்டாகாங் என்ற படத்தில் பாடியமைக்காக சங்கர்மகாதேவனும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி மொழி படத்தில் நடித்த உஷாஜாதவ் சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.


நன்றி - தினமலர்

Sunday, March 17, 2013

பரதேசி -எஸ். ராமகிருஷ்ணன் விமர்சனம்

பாலாவின் பரதேசி

 

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்


நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,


தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல அவலங்களுடன், கண்ணீருடன் நிஜமாக சித்தரிப்பு செய்திருப்பதே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்


சாளுர் என்ற எளிய, சிறிய கிராமம், அந்த கிராம வாழ்க்கைக்குள் தான் எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிகள், ஒட்டுபொறுக்கி எனும் ராசா கதாபாத்திரமாக அதர்வா வாழ்ந்திருக்கிறார், அடிபட்டு கால் நரம்பு துண்டிக்கபட்டு, எல்லாவற்றையும் இழந்து குழந்தையுடன் வெறுமை தோய்ந்த கண்களுடன் அவர் திரும்பி பார்க்கும் ஒரு பார்வை போதும் அவருக்குத் தான் இந்த ஆண்டின் தேசிய விருது என்பதற்கு, அதர்வா உங்கள் சினிமா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொண்டீர்கள்,


வாழ்க்கைக்கு உண்மையாக உள்ள கலை எப்படி இருக்கும் என்பதற்கு பரதேசி ஒரு உதாரணம், டேனியலின் எரியும்பனிக்காடு நாவலின் உந்துதலில் உருவாக்கபட்டிருக்கும் இப்படம் உலகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது,
சாலூர் என்ற சிறிய கிராமத்தில் துவங்கி பச்சைமலையின் மொட்டை பாறை ஒன்றில் கைவிடப்பட்டவனாக உட்கார்ந்து கொண்டு நியாயமாரே என்று அலறும் அதர்வாவின் குரல் இதுவரையான வணிகரீதியான தமிழ்சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக கூடியது,


அதர்வாவின் ஆகச்சிறந்த நடிப்பு , தன்ஷிகா, வேதிகா இருவரின் உணர்ச்சிமயமான தேர்ந்த நடிப்பு, கங்காணியாக வரும் ஜெரி, ராசாவின் பாட்டி, கிராமத்து குடிகார கதாபாத்திரமாக நடித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


கிராமத்து திருமண நிகழ்வு, கங்காணி ஊர் மக்களை நைச்சியம் பேசி அழைத்துப்போவது, 48 நாட்கள் நடந்து செல்லும் மக்களின் வழித்துயரம், கங்காணி தனது கல்லாபெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கணக்கு முடிக்கும் காட்சி, விஷக்காய்ச்சலில் கொத்து கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் என்று இதுவரை தமிழ்சினிமா பார்த்தறியாத காட்சிகள் படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன, மனதை துவளச்செய்கின்றன


முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் என்று அந்த வாழ்வின் யதார்த்தத்தை தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்புறச்செய்திருக்கிறார் செழியன், அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டிற்குரியது,  கேமிரா எளிய மக்களின் கூடவே நகர்ந்து பார்வையாளனை இன்னொரு உலகிற்கு அழைத்துப் போகிறது, கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு, ஜிவிபிரகாஷின் சிறந்த பின்னணி இசை, இரண்டும் படத்திற்கு தனிப்பெரும் பலம்,


இயக்குனர் பாலா பஞ்சம் பிழைக்கப் போய் அகதியான மக்களின் வாழ்க்கையில் புதையுண்டு கிடந்த  உண்மையான, துணிச்சலுடன், அசாத்தியமான கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார்


பச்சைமலைக்கு மட்டுமில்லை, இலங்கைக்கும் தேயிலை தோட்டவேலைக்கு தென்தமிழக மக்கள் சென்றார்கள், இது போல சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள் என்ற சமகால உண்மை படத்தை மேலும் வலியுடையதாக்குகிறது


கிரேட் வொர்க் .பாலா சார்

தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய நாயகர் நீங்கள்

thanx - http://www.sramakrishnan.com/?p=3297

Friday, March 15, 2013

பரதேசி - திரைவிமர்சனம் ( twitter review)


பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
 
 
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
 
 
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.
நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக. 
 
thanx - http://dohatalkies.blogspot.in/2013/03/blog-post.html