Showing posts with label பதில்கள். Show all posts
Showing posts with label பதில்கள். Show all posts

Monday, October 20, 2014

கை, சூரியன், தாமரை, இலை... இடம்சுட்டிப் பொருள் விளக்குக? கிரேசியைக் கேளுங்கள் - 1

கேசவ் வரைந்த கண்ணன் ஓவியம்
கேசவ் வரைந்த கண்ணன் ஓவியம்
இது… வாசகர்களின் கேள்வி மேளா. கிரேசி மோகனின் தவுசண்ட்வாலா. வாசகர்கள் கேள்விக்குறி, மேற்கோள்குறி ஆச்சர்யக்குறி போட்டு தாளித்த எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். ருசியான பதில்கள் சுடச்சுடக் கிடைக்கும். 

 
சக்திசம்பத், சேரன்மாதேவி.
உங்க ‘நண்பேன்டா’ லிஸ்ட்டை சொல்லுங்களேன்?
லிஸ்ட்டைச் சொன்னால் ‘ஹிண்டு’ தமிழ் ‘குண்டு’ தமிழ் ஆகிவிடும். ஆகவே, முக்கியமான முதல் மூவரை சொல்லிவிடுகிறேன். முதலில் உற்சவராக கிரேசி உலகளக்க உதவிடும் மூலவர் புனே வாழ் நண்பன் சு.இரவியைப் பற்றி சொல்கிறேன். ‘நண்பேன்டா’ வார்த்தையைப் பிரித் தால் ‘நண்பன் + ஏன்டா’. ஏன்டாவை ‘எதுக்குடா’ என்றும் கொள்ளலாம். தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்.
செத்த பிறகு தோள் கொடுப்பது நண்பனா, எதிரியா? நமக்கு தெரியவா போகிறது. இருக்கும்போதே என்னை எழுதவைத்து ‘தாள்’ கொடுத்தவன் பால்ய நண்பன் ‘இரவி’. எனக்கு ‘ஆனா’ கற்றுக் கொடுத்துவிட்டு இப்போது ‘பூனா’ (புனே)வில் வசிக்கிறான். எனக்கு இவன்தான் ‘எழுத்தறிவித்த இரவியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் போல் சொல்கிறேன் ‘எல்லாப் புகழும் இரவியனுக்கே’. ‘கிரேசி யைக் கேளுங்கள்’ எழுதத் தொடங்கும் முன் ‘கடவுள் வாழ்த்து’ இந்த பதில். 



ஆர்.கே.பாலா, சென்னை-63
நீங்கள் ஒரு வெண்பா ஸ்பெஷ லிஸ்ட். ஒரு வெண்பா ப்ளீஸ் நண்பா?
எனது இரண்டாவது ‘நண்பேன்டா’ எழுத்தாளர் ‘இரா.முருகன்’. செல்லில் ‘நகர் வெண்பா’ என்று தினமும் ஒரு வெண்பா எழுதி அனுப்பி என்னை உசுப்பியவர். ராவோடு ராவாக முதல் ‘நண்பேன்டா’ ரவியிடம் வெண்பா இலக்கணம் பயின்றேன். என் வரையில் வெண்பாவும் காமெடியும் கசின் பிரதர்ஸ். வெண்பாவுக்கு ஈற்றடிதான் பன்ச் லைன். காமெடிக்கு கவுன்ட்டர் பஞ்சதந்திர லைன்.
‘சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை’. எனது வெண்பா வெறிக்கு தீனிபோட்டது மூன்றாவது ‘நண்பேன்டா’ கார்ட்டூனிஸ்ட் கேசவ். தினமும் கடந்த ஆறு வருஷங்களாக ‘கண்ணன்’ ஓவியம் அதிகாலையில் அனுப்புவார். எனது காலைக் கடன் அந்தக் கண்ணனுக்கு வெண்பா எழுதுவது. ‘ஹிண்டு’ கேசவ்… கண்ணன் ‘தொண்டு’ கேசவ். கிருஷ்ண ப்ரேமி போல இவர் Brushண ப்ரேமி. 



IPL சமயத்தில் கேசவ் வரைந்த கண்ணனுக்கு அடியேனின் வெண்பா இது:
Krishna For Today
‘தாய்ப்பசு தாள்பார்க்க, சேய்க்கன்று மேல்பார்க்க,
Bowl பண்ணும் கண்ணன் பரவசம் - தூள்கேசவ்;
சென்னைக்(கு) இவன் Spin செய்திட IPL,
தொன்னைக் Cup தோனிக்குத் தான்’.
எஸ்.கதிரேசன், துறையூர். 



அது என்ன ‘கிரேசி' மோகன்?
வீட்டுத் தாத்தா வைத்த பெயர் ‘மோகன்’. எனக்கு விகடன் தாத்தா கொடுத்த அடைமொழி ‘கிரேசி’. அந்த அடைமொழியால் இன்று என் ‘காட்டுல அடை மழை’. நான் பட்ட ஒரே கடன் வி‘கடன்’. 


செந்தூர் பாரி, கோயம்புத்தூர்-4.
ரஜினியிடம் பிடித்தது?
அவரது ஆன்மிகம்.
பி.எம்.கமலினி, வேலூர்-8.
கமலிடம் பிடித்தது?
அவரது ‘ஆண்’மிகம்.
பா.மீ.ரவிச்சந்திரன், திருவாரூர்-2
‘பயந்தாங்கொள்ளி’ சிறுகுறிப்பு வரைக?
‘பயம்தான் சாவு. செத்தால் கொள்ளி. So, பயந்தால் கொள்ளி. அது மருவி பயந்தாங்கொள்ளி!
கே.எம்.கிருஷ்ண பாரதி, புழுதிவாக்கம்.
கிரேசிக்கு ‘டான்ஸ்’ ஆடத் தெரி யுமா?
அறுபதைத் தாண்டியாகிவிட்டது அண்ணாச்சி. இப்ப ‘நான் ஆடாவிட்டா லும் Knee ஆடும்’.
ஆர்.நாதன், ஆழ்வார்க்குறிச்சி.
நீங்கள் குட் பாயா, பேட் பாயா?
விழுந்து விழுந்து சிரிக்க வைக்க முயலும் விட் (Wit) Boy. இதுதான் என்னோட Life Boy. ‘Survival Of The Fittest’. 'வாயுள்ள புள்ள பொழச்சுக் கும்’னு சொல்வாங்க. இப்போ இருக்கிற Stressfull வாழ்க்கையில் ‘Survival Of The Wittest’தான் சரி. முடிந்தால் ‘சிரி… சிந்தி’. முடியாவிட்டால் ‘சிரி… மேலும் சிரி’.
எல்.சவீதா நாராயணன், பெங்களூர்-11.
விரல்விட்டு எண்ணுவீர்களா, வாய்விட்டு எண்ணுவீர்களா… ஏன்?
யோசிக்கும்போது எனக்கு நகம் கடிக்கும் வழக்கம் உண்டு. வெறித்தனமாக யோசிக்கும் சில சமயங்களில் என்னையே நான் முழுங்கியிருக்கேன். அதனால் அடியேன் ‘வாய்க்குள் விரல் விட்டு எண்ணுவேன் (யோசிப்பேன்). விரலுக்கு எட்டியது வாய்க்கு எட்டுமில்லையா!, Finger Tips-ல் உள்ளது Tounger Twist ஆகி, காமெடி பன்ச் ஆக ‘வாய்’ப்பு உண்டு.
எம்.ஹெச்.தீன், கூத்தாநல்லூர்.
குட்டக் குட்ட குனிவீர்களா?
குனிவேன். நான் குனியக் குனிய குட்டுபவரும் குனிவார் அல்லவா! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்; அவர் நாண - நன்னா குனிய வைத்தல்’.
சந்தானகிருஷ்ணன், பாபநாசம்.
சமீபத்தில் பார்த்த நகைச்சுவை படம்?
எவ்வளவுதான் நகைச்சுவை படமாக இருந்தாலும், சமீபத்தில் (First row) அமர்ந்து பார்த்தால் கண் கெட்டுவிடும். நூறு தடவைக்கு மேல் நான் பார்த்து ரசித்த நகைச்சுவை படம் ‘காதலிக்க நேரமில்லை’. அந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய டென்சிங் ‘சித்ராலயா கோபு சார்’. அந்த ‘டென்சிங்’ கோபுவுடன் ஒப்பிடும்போது, அடியேன் ‘Nine சிங், Eight சிங்’தான்.
அ.பிரவீன், குளச்சல்.
டைரக்டர் ‘பாலசந்தர்’ பற்றி ஒரே வார்த்தையில் கூற முடியுமா?
‘பாலசந்தர்’ இன்று சினிமாவில் சாதித்த பலருக்கு ‘லாபசந்தர்’.
கே.சசிதரன், ராமநாதபுரம்.
கை, சூரியன், தாமரை, இலை... இடம்சுட்டிப் பொருள் விளக்குக?
அர்ச்சுனனைக் காத்த அச்சுதனின் அபயக் ‘கை’. ஆண்டாள் பாடிய ‘கதிர்’ மதியம் போல் முகம். சரண் அடைந்தவரைக் காக்கும் செங்கமலத் திருவடித் ‘தாமரை’. பிரளய காலத்தில் பாலனவன் மிதந்த ‘ஆலிலை’. இடம்சுட்டிப் பொருள் விளக்கம் கேட்டதால், இடம் - பிரளய பூமி. சுட்டி - சுட்டிக் காட்ட எவருமே இல்லாததால், ஆலிலையில் மிதந்த ‘சுட்டி’ப் பயல் கண்ணன். பொருள் - பரம்பொருள்.
ஜே.வி.நாகராஜன், திருமுல்லைவாயில்.
‘16-வது வாய்ப்பாடை கடகட வென்று ஒப்பித்தால் 500 ஏக்கர் நிலம் பரிசு’ என்று கடவுள் வந்து சொன்னால், என்ன செய்வீர்கள்?
கடகடவென்று சொல்லிவிடுவேன். பதினாறோன் - கடகட, பதினாறு ரெண்டு - கடகட… இப்படியே பதினாறு பதினாறு -கடகட. ஒப்பிக்க சொன்ன கடவுள் பராசக்தியாக இருந்தால் ‘500 ஏக்கர் வேண்டாம் தாயே. காணி நிலம் போதும் பராசக்தி’ என்று பாடுவேன்.
- கேட்போம்...


நன்றி - த ஹிந்து

Friday, March 01, 2013

எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ? - எம் எஸ் வி பேட்டி

'ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான்!''


விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்
உங்களைப் பத்தி ஒரு ரகசியம் கேள்விப்பட்டேனே... நீங்க குழந்தையா இருக்கும்போது உங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்கலையாம். உங்க தாத்தாதான் இப்ப நீங்க உயிரோட இருக்கக் காரணமாம். இது உண்மையா?'' 


 
''திருச்சியில் என் அப்பா ஜெயில் வார்டனா இருந்தார். எனக்கு நாலு வயசா இருந்தப்போ, திடீர்னு அப்பாவுக்கு சீக்கு வந்து இறந்துபோயிட்டார். குடும்பமே சோகத்தில் மூழ்கிருச்சு. தொடர்ந்து சில நாட்கள்லயே அடுத்த இடியா என் தங்கச்சி வேசம்மாவும் இறந்துபோயிட்டா. அம்மா தனி ஆளா என்னை வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அப்போ அக்கம்பக்கத்துல இருந்தவங்க, 'அப்பனையும் தின்னுட்டான்... 



தங்கச்சியையும் முழுங்கிட்டான்’னு என்னைத் திட்டித் தீர்த்துருக்காங்க. 'புருஷன் செத்துப்போயிட்டாரு... புள்ளையையும் ஊரார் கரிச்சுக்கொட்டுறாங்களே’னு  மன சொடிஞ்சுபோன அம்மா, ஒரு நாள் அதிகாலை மூணுமணிக்கு திருச்சிலேர்ந்து புதுக்கோட்டை போற ரோட்ல இருந்த ஒரு குளத்துல என்னைத் தள்ளிவிட்டுட்டு தானும் செத்துப் போகப் பார்த்திருக்காங்க. அந்த நேரத்துல வீட்ல மகளைக் காணோம்னு தாத்தா கிருஷ்ணன் நாயர் தேடிக் கிட்டு வந்து, தற்கொலை பண்ணிக்க இருந்த அம்மாவையும் என்னையும் காப்பாத்திட்டார்.  ஆமா... நீங்க  கேள்விப்பட்ட மாதிரி நான் இன்னைக்கு உயிரோட இருக்கக் காரணம், என் தாத்தா கிருஷ்ணன் நாயர்தான்!''


வி.பிரகதி, தூத்துக்குடி. 


''தமிழில் இப்போது வரும் குத்துப் பாடல் களைக் கேட்கும்போது என்ன நினைப்பீர்கள்?'' 



''சினிமாவில் குத்துப் பாட்டுங்கிறது காலம் காலமா இருந்துட்டு வர்ற விஷயம் தான். இரண்டரை மணி நேர அலுப்புத் தெரியாம மக்களை சினிமா பார்க்க வைக்கிற உத்தி அது. அதுல முக்கியமாகவனிக்க வேண்டியது குத்துப் பாட்டின் வரிகளைத்தான்.  கண்ணியமா... யாரையும்புண்படுத்தாம எல்லாரும் ரசிக்கிற மாதிரி வரிகள் இருக்கணும். ஆனா, இப்ப வர்ற குத்துப் பாடல்களில் வருகிற வரிகள் எல்லாம் எப்படி இருக் குனு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை. அந்தக் காலத்துல நாங்க போடாத குத்துப் பாட்டா? என்ன, அதை அப்ப டப்பாங்குத்துனு சொல்வாங்க. 'என்னடி ராக்கம்மா...’, 'எலந் தப் பழம்... எலந்தப் பழம்...’ பாட்டெல்லாம் இந்தத் தலைமுறைக்கும் தெரிஞ்ச டாப் டப்பாங்குத்து ஆச்சே. ஆனா, அந்தப் பாட்டெல்லாம் கேட்கிறவங்க காதைக் கூசவைக்காது.''
வி.கேசவன், மயிலாடுதுறை. 

''உங்கள் இசையமைப்பில் ஜெயலலிதாவைப் பாடவைத்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்?'' 



''எம்.ஜி.ஆர்... என்கிட்டே அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பார். 'நம்ம அம்மு நல்லா பாடுது. அதுக்கு இனிமையான குரல். உன் மியூஸிக்ல அம்முவுக்கு ஒரு வாய்ப்பு கொடு’னு கேட்டுட்டே இருப்பார். அது என்னமோ தெரியலை... நடிகர் கள், நடிகைகள், கவிஞர்கள் இவங்களை எல்லாம் பாடவைக்கணும்னு எனக்குத் தோணவே தோணாது. என்னைச் சுத்திலும் பிரமாதமா பாடுற பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இருந்த தும் அதுக்குக் காரணம். எம்.ஜி.ஆர். பார்க்கும்போது எல்லாம் கேட்டுட்டே இருந்ததால, முக்தா சீனிவாசன் தயாரிச்ச 'சூரியகாந்தி’ படத்துல 'ஓ மேரா... தில்ரூபா...’ பாட்டைப் பாடுற வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவுக்குத் தந்தேன். டி.எம்.எஸ்ஸோடு சேர்ந்து பிரமாதமாப் பாடியிருப்பாங்க. அந்தப் பாட்டை ரிக்கார்டிங் குக்கு முன்னால ஒரே ஒரு தடவைதான் அவங்களுக்குப் பாடிக் காட்டினேன். சட்டுனு புடிச்சிக்கிட்டாங்க. கற்பூரப் புத்தி!''



ஜி.காசிநாதன், கும்பகோணம். 


''நீங்க இசையமைத்த முதல் பாட்டுக்கு உங்க பேர் வரலையாமே?'' 


''ஆமாங்க. 'வீர அபிமன்யு’ங்கிற படம். அந்தப் படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் மியூஸிக். நான் அப்ப அவர்கிட்ட வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோடு ஜி.கே.வெங்கடேஷ், சி.ஆர்.கோபால கிருஷ் ணன் போன்றவங்கல்லாம் சேர்ந்து வேலை பார்த்தாங்க. 'புது வசந்தமாமே வாழ்விலே...’ என்கிற பாட்டுக்கு ஏகப்பட்ட டியூன் போட்டாரு எஸ்.எம்.சுப் பையா நாயுடு. ஆனா, எதுவுமே பொருத்தமா அமையலை. ஒரு நாள் மத்தியானம் யாரும் இல்லாதப்ப நான் அந்தப் பாட்டுக்கு ஒரு டியூன் போட் டேன். எனக்கு என்னவோ கேட்டதுமே அந்த டியூன் பிடிச்சுப்போச்சு. நான் இதை யார்கிட்டயும் சொல்லலை. ஆனா, நண்பர்கள் விஷயத்தை  சுப்பையா நாயுடுகிட்ட போய் சொல்லி இருக்காங்க. அவர் டியூன் கேட்டுட்டு சந்தோஷப் பட்டார். நான் போட்ட டியூனி லேயே அந்தப் பாட்டு பதிவா னாலும் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பேர்லதான் படத்துல வந்துச்சு.


பல நாள் கழிச்சு ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகிட்ட என்னை அழைச்சுட்டுப் போயி, 'வீர அபிமன்யு படத்துல 'புது வசந்தமாமே வாழ்விலே...’ பாட்டுக்கு மெட்டுப் போட்டது நான் இல்லை. இதோ இந்த விஸ்வநாதன்தான். இவனுக்கு உங்க கம்பெனியில ஒரு சான்ஸ் கொடுங்க’னு சொல்லி, எனக்கு வாழ்க்கையில முதல் கதவைத் திறந்துவெச்சவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுப்ப தற்காகத்தான் அந்த உண்மையைச் சமயம் பார்த்துச் சொல்றதுக்காக, அவர் பொறுமையாக் காத்திருந்தார்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது!''



எஸ்.பிரிஸில்லா, சென்னை-5.


''உங்க இசையமைப்பில் வரும் பல பாடல்களில் தமிழ் மொழியை வெச்சு ஏதாவது புதுமை செய்து இருப்பீங்க. அதெல்லாம் எப்படி அமைஞ்சுது?'' 



''அதுக்கெல்லாம் அந்தப் படத்தோட இயக்குநர், தயாரிப்பாளர், கவியரசு கண்ணதாசன், என் இசைக் குழு... இவங்க எல்லாருமே காரணம். சூழல்தான் ஒரு பாட்டை மெருகேத்திப் பளபளக்கவைக்கும்னு நான் நம்புறேன். உதார ணத்துக்குச் சொல்றேன், 'பட்டினப்பிரவேசம்’ படத்துக்கு நான் ஒரு டியூன் போட்டேன். டியூனைக் கேட்ட பாலசந்தர், இந்தப் பாட்டுக்குப் புதுமையா ஏதாவது வரிகள் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னார். என் டியூனைக் கேட்ட கண்ணதாசன், 'இதுக்கு ல... ல...னு முடியிற மாதிரி வார்த்தைகளைப் போட்டா நல்லா இருக்கும்’னு சொன்னார். பாலசந்தரும் சரி சொல்ல, அப்படி உருவானதுதான் 'வான் நிலா... நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’ங்கிற பாட்டு!''


கா.விஜயராகவன், சுரக்குடி. 


''எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ?''



''மனசுக்கு ரொம்பச் சங்கடமா இருக்குங்க. மெலடி பாடல்கள் வரலைனு சொல்ல முடியாது. வர விட மாட்டேங்கிறாங்கன்னுதான் சொல்லணும். ஃபாஸ்ட் பீட்னு அவசர அவசரமா அள்ளித் தெளிக்கிறாங்க. அதைத்தான் இந்தக் காலத்து இளைஞர்களும் கொறிக்கிறாங்க. ஆனா, எப்பவும் காலம் கடந்து நிக்கப்போறது மெலடி பாடல்கள் மட்டும்தான்.''



எம்.மாலதி, நாகப்பட்டினம். 


''உங்களுக்கு 'மெல்லிசை மன்னர்’கிற பட்டம் கொடுத்தது யார்?'' 


''1963-ம் வருஷம்னு நினைக்கிறேன்... திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி எங்க கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. என்.கே.டி. கலா மண்டபத்துல நிகழ்ச்சி நடந்தது. ஏகப்பட்ட கூட்டம். அந்த மேடையில்தான் ரசிகர்கள் மத்தியில் எனக்கும் ராமமூர்த்திக்கும் சிவாஜி கணேசன் 'மெல்லிசை மன்னர்’ங்கிற பட்டத்தைக் கொடுத்தார். அது காலாகாலத்துக்கும் நிலைச்சது ஆண்டவன் அனுக்கிரஹம்!''


எம்.கே.பாலு, திருத்தணி. 


''உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் இதுவரை ஒரு பாடலுக்கான இசையைக் கூட காப்பி அடித்ததே இல்லையா?'' 


''ஒரு உதாரணம் சொல்றேன். 'சுகம் எங்கே’னு ஒரு படம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்சாங்க. டி.ஆர்.சுந்தரம் என்கிட்ட கேட்டார்... 'நாங்க இந்தி டியூன்லாம் கொடுத்து மியூஸிக் போடச் சொல்வோம் போடுவீங்களா?’ 'சார், இந்த வாய்ப்பே கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. சொந்தமா டியூன் போடறேன். பிடிச்சா சான்ஸ் கொடுங்க... இல்லைன்னா வேண்டாம்’னு சட்டுனு எந்திரிச்சுட்டேன். ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான் சார்!''


நன்றி - விகடன்

Wednesday, November 07, 2012

கிரேசிமோகன் காமெடி கலக்கல்கள், பதில்கள் @ கல்கி

சென்னை : கிரேசிமோகனின், "சாக்லெட் கிருஷ்ணா' நாடகத்தின் 400வது நாடக விழா, வரும் 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேடையேற்றப்பட்ட, "சாக்லெட் கிருஷ்ணா' நாடகம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டு, இதன் 400வது நாடக விழா, நாரத கான சபாவில், வரும் 24ம் தேதி நடக்கிறது. நூற்றுக்கணக்கான, "டிவி' சேனல்கள், பட்டிமன்றங்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகள் என, பொழுதுபோக்குக்கு குறைவில்லாத இந்த காலகட்டத்தில், இவைகளுடன் நாடகங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணமாக,"சாக்லெட் கிருஷ்ணா' நாடகம் மேடையேறுகிறது.



இது குறித்து, "சாக்லெட் கிருஷ்ணா' நாடகத்தின் நாயகன் மாது பாலாஜி கூறியதாவது: இந்நாடகத்தின் 300வது விழாவில் நான் பேசும் போது, "எங்கள் நாடகக் குழு 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது' என்று சொன்னவுடன், பலத்த கைத்தட்டல் எழுந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "இது சாதாரண விஷயம் தானே, இதற்குப் போய் ஏன் கை தட்டுகிறீர்கள்?' எனக் கேட்டேன். பார்வையாளர் ஒருவர், "ஒரு குடும்பமே இத்தனை வருடங்கள் ஒன்றாக இருப்பது பெரிய விஷயம். நீங்க ஒரு குழுவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறீங்களே...' என்றார். நாங்கள் எங்கள் நாடகக் குழுவினரை, ஒரு கூட்டுக் குடும்பமாகத் தான் பார்க்கிறோம். விவேகானந்தர் கல்லூரியில் நான் படித்த போது, அனைத்துக் கல்லூரி நாடகப் போட்டியில், என் அண்ணன் கிரேசி மோகன் கதை, வசனத்தில் நகைச்சுவை நாடகம் போட்டோம். அதில் பரிசு வாங்கிய பிறகு, தனியாக நாடக கம்பெனி ஆரம்பித்தோம்.

இன்று வரை 5,000க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தி விட்டோம். இன்றும் என்னுடன் படித்தவர்கள் தான், எங்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிரேசி கிரியேஷனுடைய முந்தைய நாடகங்கள், "மீசையானாலும் மனைவி, ஜுராசிக் பேபி' போன்றவை, 500 முறை நடத்தப்பட்டாலும், "சாக்லெட் கிருஷ்ணா' பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நாடகத்திற்கு, நிறைய குழந்தைகளும் வந்தனர். குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியதில் ஆத்ம திருப்தியாக இருக்கிறது. குழந்தைகளின் திருப்தி தான், இந்நாடகத்தை 400வது முறையாக மேடையேற்றச் செய்துள்ளது. இந்நாடகத்தை 100 தடவைக்கு மேல் பார்த்த நான்கு குழந்தைகளை, 400வது நிகழ்ச்சியின் போது கவுரவிக்கிறோம். தமிழ் நாடக உலகில், "சாக்லெட் கிருஷ்ணா' நிறைய வசூல் செய்துள்ளது. மாநகரங்களில் மட்டுமல்லாது, குக்கிராமங்களிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளதால், இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் கமலஹாசனை சாக்லெட் கிருஷ்ணாவின் 300வது நிகழ்ச்சிக்கு அழைத்த போது, அவரால் வர முடியவில்லை. 400வது நிகழ்ச்சிக்கு வருகிறார். இவ்வாறு மாது பாலாஜி கூறினார்.

நன்றி - கல்கி , தினமலர், யூ டியூப்