Showing posts with label பண்டிட் ரவிசங்கரின் அன்னபூர்ணா தேவி. Show all posts
Showing posts with label பண்டிட் ரவிசங்கரின் அன்னபூர்ணா தேவி. Show all posts

Tuesday, September 02, 2014

பண்டிட் ரவிசங்கரின் 3 இல்லீகல் திருமணங்கள் -முதல் மனைவி அன்னபூர்ணா தேவி பேட்டி

எனக்கு பாராட்டுகள் குவிவதை பண்டிட் ரவிசங்கர் வெறுத்தார்: முதல் மனைவி அன்னபூர்ணா தேவி பேட்டி




1950-களில் சிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கருடன் மேடைகளில் இணைந்து கச்சேரிகளில் பங்கேற்ற அன்னபூர்ணா தேவி, இசைமேதைகளின் இசை மேதை எனப் புகழப்பட்டவர். அவரின் சிதார் இசையை இன்றைய தலைமுறை அதிகம் அறிந்திருக்க நியாயமில்லை. 



ரவிசங்கருடனான திருமண வாழ்க்கை முறிந்த பிறகு பொதுவெளிக்கு வருவதேயில்லை. ஏறத்தாழ 60 ஆண்டு கால தனது மவுனத்தைக் கலைத்திருக்கிறார் 88 வயதாகும் அன்னபூர்ணா தேவி.. 



‘எனக்கு பாராட்டுகளும் கைதட்டல்களும் கிடைப்பதை என் முன்னாள் கணவர் ரவிசங்கர் விரும்பவில்லை. கலை வாழ்க்கையை விட திருமண வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக என் இசைப் பயணத்தை நிறுத்தினேன்’ என அவர் தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் மிகச்சிறந்த பெண் சிதார் மற்றும் சுர்பஹார் (பேஸ் கிடார்) இசை மேதை அன்னபூர்ணா தேவி. 


மறைந்த பண்டிட் ரவிசங்கர் குறித்து அவர் கூறியதாவது: 


நானும் அவரும் (ரவிசங்கர்) 1950-களில் இணைந்து மேடைகளில் கச்சேரி செய்தோம். அப்போது, விமர்சகர்களிடமிருந்தும் ரசிகர்களிட மிருந்தும் பாராட்டும் கைதட்ட ல்களும் அவரை விட அதிகம் எனக்குக் கிடைத்தது. அது அவருக்குப் பிடிக்கவில்லை. 



இது எங்களின் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. நான் பொது இசைக் கச்சேரிகளில் பங்கேற்பதை அவர் நேரடியாகத் தடுக்காவிட்டாலும், நான் அதிக பாராட்டுகள் பெறுவதை அவர் விரும்பவில்லை என்பதை பல முறை வெவ்வேறு விதங்களில் தெளிவாக வெளிப்படுத்தினார். 


இதனால் திருமண வாழ்க்கையா, கலைத்துறை அங்கீகாரமா இதில் எதைத் தேர்வு செய்வது என்ற இரு விருப்பங்கள் என் முன் எழுந்தன. நான் முதலாவதைத் தேர்வு செய்தேன். நான் அதிகம் பேசாதவள். குடும்பத்தை அதிகம் சார்ந்திருப்பவள். அதிக அளவில் பெயரும் புகழும் பெறுவதை விட எனது திருமண வாழ்க்கையைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனத்துடன் இருந்தேன். 


எங்களுக்குத் தெரிந்த அனைத்து இசையையும் பயிற்றுவித்த என் தந்தை உஸ்தாத் அலிகானை வேதனைப் படுத்த நான் விரும்பவில்லை. எனவே, என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். 



என் தந்தை இறைநம்பிக்கை உடையவர். இறைவனுக்குப் பயந்தவர். அவரின் ஒரே மகளின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதை அவர் விரும்பவில்லை. ஆனால் ரவிசங்கருக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. 



என் மகன் 1992-ல் அமெரிக்க மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரை ரவிசங்கர் கவனிக்கவேயில்லை. தனக்கு ஏற்கெனவே குடும்பம் இருப்பதால் அவனைக் கவனிக்க முடியாது என ரவிசங்கர் தெரிவித்து விட்டார். ஏன் இந்த பாரபட்சம்? ரவிசங்கரின் குடும்பத்தில், என் மகன் சுபோபவும் ஓர் அங்கம் என்பதை அவர் கருதவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 


அதேசமயம் குருவுக்கு அளிக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் என் தந்தைக்கு ரவிசங்கர் அளிக்கத் தவறவில்லை என அன்னபூர்ணா தேவி தெரிவித்தார். 


இசைப்பயணம்
பண்டிட் ரவிசங்கர் சரோட் இசைக் கலைஞர் உஸ்தாத் அலாவுதீனிடம் இசை பயின்றார். அலாவுதீனின் மகள் ரோஷனாராவும் தந்தையிடமே இசை பயின்றார். அலாவுதீன் முதலில் ரோஷனாராவுக்கு துருபாத் மற்றும் சிதார் கற்றுக் கொடுத்தார். பின்னர், சுர்பஹாரில் கவனம் செலுத்தினார் ரோஷனாரா. சிதாரைப் போலவே இருந்தாலும், சுர்பஹாரை வாசிப்பது கடினம். 



ரோஷனாரா, இஸ்லாம் மதத்தை விட்டு இந்துவாக மாறி அன்னபூர்ணா தேவியாக ரவிசங்கரை 1941-ல் மணந்துகொண்டார். 


திருமணமான ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்தே சில கச்சேரிகளில் பங்கேற்றனர். ஆனால், கலைப் பயணத்தில் எழுந்த கருத்து வேற்றுமை தனி வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இரு மேதைகள் ஒரே கூரைக்குள் வசித்தால் எழும் எல்லாப் பிரச்சினைகளும், இவர்கள் வாழ்விலும் எழுந்தது. கொல்கத்தாவில் இருவரும் பங்கேற்ற ஜூகல் பந்தி, இருவரும் இணைந்து பங்கேற்ற கடைசி இசைக்கச்சேரியானது. அங்கு இருவருக்குமிடையே கருத்துமோதல் வெடித்து பகிரங்கமானது. இருவரும் பிரிந்தனர். இருவருக்கும் பிறந்த ஒரே பிள்ளையான சுபேந்திர சங்கர் தந்தையுடன் வசிக்க, அன்ன பூர்ணாதேவி மும்பையில் தனித்து வாழத்தொடங்கினார். அவர் கடைசியாக கச்சேரிகளில் பங்கேற்றது 1956-ல். திருமண வாழ்க்கை கசப்பின் எதிரொலியோ என்னவோ, பின்னர் கச்சேரிகள் செய்யவில்லை. வெளி உலகத்துடனான தொடர்புகளை அறுத்துக்கொண்ட அன்னபூர்ணா தேவி, அலாவுதீன்கானும் பின்னர் மகன் சுபேந்திராவும் மறைந்த பின்னர் வீட்டைவிட்டே வெளியில் வருவதில்லை. 



சில ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் இசை கற்றுத் தந்தார் அன்னபூர்ணா தேவி. பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியா, பண்டிட் நித்யானந்த் ஹல்திபூர், சரோத் இசைக் கலைஞர்கள் உஸ்தாத் ஆஷிஸ் கான், பண்டிட் பஸந்த் கப்ரா, பண்டிட் பிரதீப் பரோட், பண்டிட் சுரேஷ் வியாஸ் ஆகியோர் அவர்களில் சிலர். 


பர்கின்சன் நோய் அன்னபூர்ணா தேவியை படுக்கையில் முடக்கி விட்டிருக்கிறது. ஆனாலும், அவர் முழுமையான தெளிவான சிந்தனைகளுடன்தான் இருக்கிறார் என அவரின் சிஷ்யப்பிள்ளையும், அன்னபூர்ணா தேவியை சுரேஷ் வியாஸுடன் இணைந்து கவனித்துக் கொள்பவருமான ஹல்திபூர் கூறுகிறார். 


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உட்பட உலகப் பிரபலங்கள் யார் அழைத்தும் பொதுக் கச்சேரிகளில் அவர் பங்கேற்க மறுத்துவிட்டார். பத்மபூஷண் (1977), தேஷிகூட்டம் (1999), சங்கீத நாடக அகாடமி பரிசு( 2004) எனப் பல விருதுகள் அன்னபூர்ணா தேவியை அலங்கரிக்கின்றன. 



உஸ்தாத் அலி அக்பர் கான் ஒருமுறை அன்னபூர்ணா தேவியைப் பற்றிக் கூறும்போது, “ரவி சங்கர், பன்னாலால் (கோஷ்), நான் என எங்கள் மூவரையும் இசைத்தராசில் ஒரு தட்டில் அமர்த்துங்கள்; மற்றொரு தட்டில் அன்னபூர்ணா தேவியை அமர்த்துங்கள். அப்போதும், அன்னபூர்ணா தேவியின் தட்டுதான் கீழே இருக்கும்” என்றார். 


ரவிசங்கருடன் அன்னபூர்ணா தேவியை இணையச் செய்த விதி, அவரின் இசைச் சேவையை முடக்கிவிட்டது. 


ரவி சங்கருடனான முறிவுக்குப் பிறகு, 1982-ல் தனது சீடர் ரூஷிகுமார் பாந்தியாவை அன்னபூர்ணா தேவி மணம் செய்து கொண்டார். பாந்தியா கடந்த 2013 ஏப்ரலில் உயிரிழந்தார். அதுவரை தனது குருவும் மனைவியுமான அன்னபூர்ணா தேவியை நன்றாகவே கவனித்துக் கொண்டார். 



ரவிசங்கரின் திருமணங்கள் 


 
ரவிசங்கர் அன்னபூர்ணாவைப் பிரிந்த பிறகு, கமலா சாஸ்திரியுடன் வாழ்ந்தார். அதுவும் பிரிவில் முடிந்தது. பின் தனது 63-ம் வயதில் நியூயார்க்கைச் சேர்ந்த கச்சேரி அமைப்பாளரான சியூ ஜோன்ஸுடன் சேர்ந்து வாழ்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உறவும் முறிந்தது. சியூ ஜோன்ஸுடனான உறவில் பிறந்தவர்தான் நோரா ஜோன்ஸ்; பிரபல பாடகி. அதற்குப் பிறகு தன் 70-வது வயதில் சுகன்யாவைத் திருமணம் செய்துகொண்டார். ரவிசங்கர்-சுகன்யா தம்பதியின் மகளான அனுஷ்காவை தனது இசை வாரிசாக முன்னிறுத்தினார் ரவிசங்கர். 


thanx  - the  hindu


அன்னபூர்ணா தேவி (கோப்புப்படம்) a
 
 
 
 
 
பண்டிட் ரவிசங்கர் (கோப்புப்படம்) a




reader's views



1   நல்ல கலைஞன் என்பதில் மனிதரிடையே பெருமையும் சமூக அங்கிகாரமும் கிடைக்கலாம். நல்ல மனிதன் என்பதில் தான் இறையிடம் அங்கிகாரம் வாய்க்கும். இறை அங்கிகாரமே முதன்மையானது என்பதை மனிதர்கள் உணராதவரை கசப்பும் வெறுப்புமே காலத்தின் சுவர்களில் தன் அலங்'கோலங்'களை'த் தீட்டியபடியிருக்கும். ஒருபோதும் மீளாத காலம் தீராப் பதிவுகளுக்கு இடமளிக்கிறது. தான் வரையும் பதிவுகளில் இறுதியில் தென்படுவதோ வரைந்தவரின் முகமே..
 
 
 
 
2 ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை - திரை மறைவில் செய்தால் தான் தவறு - திரை மறைவில் ஒழுக்க கேடர்களை பாராட்டும் இந்த உலகம்
 
 
3  ரவி சங்கர் மீதான மதிப்பு அதால பாதளத்திக்கு சென்றுவிட்டது /////// இவரும் சாதாரண மனிதன்தான் ................. வெக்கம்