Showing posts with label பணி நிமித்தம். Show all posts
Showing posts with label பணி நிமித்தம். Show all posts

Wednesday, November 04, 2015

உறவுகள்: வேலையா? காதலியா?- பிருந்தா ஜெயராமன்

வணக்கம் அம்மா. என் வயது 28. ஆன்மிக மற்றும் பொதுநலன் சார்ந்த அறக்கட்டளை ஒன்றில் நான் வேலைசெய்தபோது அந்த ஊரிலேயே ஒரு பெண்ணிடம் எனக்கு நட்பு ஏற்பட்டது.
நான் பணி நிமித்தமாக வேறு ஊருக்கு மாறும்போது நாங்கள் இருவருமே எங்களின் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அவள் அப்போது கல்லூரியில் படித்துகொண்டிருந்தாள். அவள் வீட்டில் அவள்தான் மூத்த பெண். எங்கள் இருவருக்குமே ஒரே வயதுதான்.
மூன்று வருடம் எங்களின் காதல் பயணித்தது. அவள் மூலமாக எங்களின் காதல் அவளின் வீட்டுக்குத் தெரியவந்தது. நாங்கள் இருவரும் நண்பர்களாகப் பழகியபோது என்னிடம் அவளின் பெற்றோர் நன்றாகப் பேசுவார் கள். ஆனால் இப்போது அப்படியல்ல. எனினும் அவள் எப்போதும்போல் என் னிடம் பேசினாள். இதனால் அவளைத் திருமணம் செய்துகொள்ள எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நம்பினேன்.
நான் எப்படி அவளைக் காதலித்தனோ அதேபோல் நான் பார்த்த வேலையையும் ரொம்ப விரும்பினேன். இங்கேதான் பிரச்சினையே உருவானது. எங்கள் காதல், திருமணத்தை நோக்கிச் சென்றபோது "நீ பார்க்கிற வேலையை நான் விரும்பவில்லை. என் வீட்டிலும் விரும்ப மாட்டார்கள். அதனால் நீ தனியாக‌ எதாவது தொழில் செய். நீ முதலில் அந்த வேலையைவிட்டு வெளியே வா. அதற்காக நீ வெளிநாடு போனாலும் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள்" என்றாள்.
ஆனால் அவள் சொல்லியதுபோல என்னால் அவளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. அதே சமயத்தில் நான் பார்த்த வேலையில் எனக்குப் பொறுப்புகளும் சம்பளமும் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு வந்த நிலையில் அவளுக்காக நான் பார்த்த வேலையை விட்டுப் போவதா, வரும் வாய்ப்பை ஏற்றுக்கொள்வதா என்று முடிவு செய்ய‌முடியாமல் மன‌அழுத்தத்தில் தவித்தேன். தூங்கினால்கூட எந்தக் காரணமும் இல்லாமல் பதறி எழுந்து உட்காருவேன். இப்படிக் கடந்த இரண்டு மாதங்களாகத் தவிக்கிறேன். அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவளிடம் பேசுவதையும் தவிர்க்கிறேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரிய வில்லை. நல்ல ஆலோசனை தேவை.
‘சைத்தானுக்கும் ஆழமான கடலுக்கும் இடையே' மாட்டிக் கொண்டீர்கள்! உங்கள் தொண்டு நிறுவனத்தில் குடிசை வாழ் மக்களோடு வேலை செய்ய வேண்டியிருக்கிறதோ? அதுதான் எதிர்த் தரப்பின் ஆட்சேபணையோ? அந்த வேலையில் கிடைக்கும் மனநிறைவைக் காதலிகூடப் புரிந்துகொள்ளவில்லையே!
உங்கள் பொருளாதார நிலைதான் அவர்களுக்குக் கவலை என்றால், உங்களுக்குப் பிடித்த இந்த ‘லைனி'லேயே வேறு ஒரு பெரிய வேலை தேடிக்கொள்ளும்வரை காத்திருக்கச் சொல்லுங்கள். ஆனால் எந்த வேலை உங்களுக்கு உகந்தது என்பதைத் தீர்மானிப்பதில் காதலியின் பெற்றோருடைய தலையீடு ‘ரொம்ப டூ மச்'சாகத் தோன்றுகிறது!
முதலில் பிடிவாதமாக காதலியைச் சம்மதிக்க வையுங்கள். பெற்றோரை அவர் சமாளிப்பார்! சோதனை இப்போது உங்களுக்கல்ல. காதலிக்குத்தான்-காதலா, கௌரவமா என்று!
இந்த வேலையை விடுவதைப் பற்றிய பேச்சே வேண்டாம். புதிதாகத் தொழில் ஆரம்பிப்பது சுலபமல்ல. அதில் உள்ள சவால்கள் என்ன என்று காதலிக்குப் புரிய வையுங்கள். நீங்கள் முன்பே முயன்றிருந்தாலும், பேச்சுத் திறன் மிக்க ஒரு தோழரின் உதவியோடு அவரைச் சம்மதிக்க வையுங்கள். விவாதத்தில் குரலை உயர்த்திப் பேசி ‘ஈகோ கிளாஷா'க மாற்றிவிடாதீர்கள். அமைதியாக, ஆனால் அழுத்தமாகப் பேசுங்கள்.
அதுவும் சரிவரவில்லை என்றால், காதலி உயர்வாக மதிக்கும் ஒருவரை விட்டுப் பேசச் சொல்லுங்கள். காதலியிடம் பேசுவதைத் தவிர்ப்பது தீர்வாகாது. எதிர்காலம் பற்றிய பயத்தால் இரவில் தூக்கிவாரிப் போட்டு விழிக்கிறீர்கள். தடைகளைப் பார்ப்பவர் வெல்ல முடியாது. குறிக்கோளைப் பார்ப்பவர் தோற்க முடியாது!
உங்களது கருத்தில் உறுதியாக நின்று காத்திருங்கள். உங்களை அசைக்க முடியவில்லை என்று உணர்ந்ததும், காதலி விட்டுக்கொடுப்பார்... உங்கள் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தால்!




எனக்கு 18 வயது ஆகிறது. ஐந்தாறு வருடங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாகவே படித்தோம். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத நெருங்கிய நண்பர்களாகவே பழகி வந்தோம். காலப்போக்ககில் அதுவே காதலாக மாறியது.
சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் என்னைக் காதலிப்பது என்னுடைய நண்பன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. அவளிடம் நேரடியாகவே சென்று கேட்டேன். அவளும் ஒப்புக் கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பின் சிந்தித்து நானும் சம்மதம் தெரிவித்தேன்.
அவள் என்னை உயிருக்கு உயிராகக் காதலித்து வருகிறாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. என் பெற்றோரைவிட அதிகமாக நலம் விசாரிப்பாள். என் உடல் நலம் மீது அதிக அக்கறை செலுத்துவாள். நானும் அவள் மீது உயிராக இருக்கிறேன். சொல்ல வார்த்தை இல்லை; அவ்வளவு பைத்தியமாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரே ஜாதி, மதம். இருவருக்கும் மனம் ஒத்துப் போகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொள்கிறோம்.
நாங்கள் இருவரும் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம். இருவருக்கும் ஓரே வயதுதான். இதற்கு எங்கள் சமுதாயத்தில் எதிர்ப்பு இல்லை. நான் கூடிய சீக்கிர‌ம் படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலை பார்த்து சொந்தமாக வீடு கட்டிய பின் அவள் வீட்டில் சென்று பெண் கேட்க வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். அதுவரை அவளும் காத்திருப்பாள்; நானும் காத்திருப்பேன். எங்கள் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லை.
இருந்தாலும் என் மனதில் அடிக்கடி ஒரு பயம் ஏற்படுகிறது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோமோ என்ற பயம்தான் அது. இதனால் சில சமயம் தற்கொலை முயற்சியும் செய்துள்ளேன். எனக்கு ஜாதகம், ஜோசியம் மீது சிறிது நம்பிக்கை உண்டு. என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியக்காரர் நான் 29 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் இரண்டாம் தாரமாகவே திருமணம் நடக்கும் என்று கூறினார். இது என் மனதை இன்னும் அதிகமாக நடுங்க வைக்கிறது. ஏனெனில் அவள் வீட்டில் அவ்வளவு நாட்கள் கண்டிப்பாகக் காத்திருக்க மாட்டார்கள்.
அவள் வீட்டிலுள்ள அனைவருக்கும் என்னை நன்றாகவே தெரியும். நன்றாகவே பேசுவார்கள். ஆனால் நாங்கள் காதலிப்பது தெரியாது. நான் அவளை முழுவதும் மனைவியாகவே ஏற்றுக்கொண்டேன். அவளும் என்னைக் கண‌வனாக ஏற்றுக்கொண்டாள். இனி என்னால் அவளை கண்டிப்பாகப் பிரிய முடியாது. அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. என் பயத்தைப் போக்க வழி கூறுங்கள்.
தம்பி, 14 வயதில் பாலினச் சுரப்பிகளின் விஷமத்தால் ஆண்-பெண் ஈர்ப்பு வருவதும், அண்மை ஒரு கிறக்கத்தைக் கொடுப்பதும் இயற்கை. எங்கும் அவளே, எல்லாம் அவளே என்று அவள் வியாபித்திருப்பாள்! ஆனால் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வயதா அது? அப்போதே இதை வெட்டியிருந்தால் இப்போது படும் அவஸ்தையைத் தவிர்த்திருக்கலாம்.
உங்கள் காதல் அவள் வீட்டாருக்குத் தெரியாதபோது எந்த நம்பிக்கையில் ‘இதற்கு எங்கள் சமுதாயத்தில் எதிர்ப்பு இல்லை', ‘இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லை' என்று சொல்கிறீர்கள்?
உங்களை அவளுடைய நண்பனாகத் தெரியும் அவர்களுக்கு, காதலன் என்று தெரிந்தால் ‘ரியாக் ஷன்' எப்படி இருக்குமோ என்று கவலைப்படுவதால், பிரித்துவிடுவார்களோ என்ற பயம், தற்கொலை முயற்சிகள் எல்லாம்!
நிலைமையை இன்னும் மோசமாக்குவது ‘கணவன், மனைவியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ?' என்கிற ஐயம்! காதல் கொடுத்த போதையில், வரம்பு மீறிவிட்டீர்களோ? உங்கள் வயதில் உணர்வுகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்படுவீர்கள்.
இந்த வயதில் தாம்பத்திய உறவு ‘டேஞ்சர்'! போதையளித்து அடிமையாக்கிவிடும் (என் கணிப்பு தவறானால் மகிழ்ச்சி.!) போதை தலைக்கேறியதால் சில நிஜங்களைப் பார்க்கத் தவறிவிட்டீர்கள். படிப்பை முடித்து, வேலைக்குப் போய், சொந்தமாக வீடு கட்டி.....இதெல்லாம் 10 வருடங்களில் முடியுமா? மன முதிர்ச்சி இல்லாத பேச்சு. ஜோசியர் சொன்னதுபோல உங்களுக்கு 29 வயதாகிவிடும்!
உங்கள் சிந்தனையின் ‘ட்ராக்'கை மாற்றுங்கள். படிப்பு, வேலை இவைதான் உங்கள் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். வேலையில் அமர்ந்தபின், பெண் கேளுங்கள். அவர்கள் மறுத்துவிட்டாலும் உங்கள் திருமணத்தை யார் தடை செய்ய முடியும்? காதலுக்காகச் சாவதைவிட, வாழ்வது உயர்ந்ததல்லவா?
Keywords: 

-தஹிந்து