Showing posts with label பட்டுக்கோட்டை பிரபாகர். Show all posts
Showing posts with label பட்டுக்கோட்டை பிரபாகர். Show all posts

Monday, December 21, 2015

இந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை பிரபாகர்

டெல்லி. ஒரு காலைப் பொழுது. மத்திய அரசாங்கத்தின் முத்திரைபதித்த அந்த கார் மிகப் பெரிய கடிகாரக் கடைக்கு வந்து நின்றது. அதிலிருந்து சஃபாரி உடை அணிந்த, குளிர் கண்ணாடி அணிந்த, கையில் ஒரு ஃபைலுடன் மிடுக்கான அதிகாரி இறங்கினார்.
அந்தக் கடையை அளவெடுப்பது போலப் பார்த்தார். உள்ளே நுழைந்தார். எதிர்ப்படும் ஆசாமியிடம் “உங்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லி, தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தனுப்புகிறார்.
கடைக்குள்ளேயே இருக்கும் அலுவலக அறையில் இருந்த முதலாளி விசிட்டிங் கார்டில் மத்திய அமைச்சரின் அந்தரங்கக் காரியதரிசி என்கிற பதவியைப் பார்த்ததும் அடுத்த நிமிடம் ஓட்டமாக வந்து அவரை வரவேற்றார். மிகவும் மரியாதையுடன் அழைத்துச் சென்று அமர வைத்தார்.
“அமைச்சர் தன் பிறந்த நாளுக்காக தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் களுக்கு ஒரு விருந்து கொடுக்கவுள்ளார். அப்போது அனைவருக்கும் ஒரு கை கடிகாரம் பரிசு தர விரும்புகிறார். ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல்ல கை கடிகாரம் கிடைக்குமா?’’
“ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிறைய மாடல்கள் இருக்கின்றன. எத்தனை வேண்டும் சார்?”
“எண்பத்தைந்து வேண்டும்.’’
பல மாடல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒரு மாடலைத் தேர்வு செய்தார் அதிகாரி.
“உங்கள் நபர் யாரையாவது கடிகாரங்களுடன் என்னுடன் அனுப்புங்கள். அமைச்சர் இப்போது அலுவலகத்தில்தான் இருக்கிறார். கையோடு செக் வாங்கிக் கொடுத்துவிடு கிறேன்.’’
கடையின் ஊழியர் கை கடிகாரப் பெட்டியுடன் காரில் ஏறிக் கொண்டார். கார் பாராளுமன்றம் அருகில் குறிப்பிட்ட அமைச்சரின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் வாசலில் நின்றதும் அதிகாரி இறங்கினார்.
ஊழியரை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு அதிகாரி அந்த அலுவலகத்தின் உள்ளே சென்றார். சில நிமிடங்களில் திரும்பி வந்து, அமைச்சர் கையெழுத்திட்ட செக்கை நீட்டினார்.
அந்த ஊழியரிடம் இருந்து கை கடி காரப் பெட்டியை வாங்கிக் கொண்டு அதிகாரி அலுவலகம் உள்ளே சென்றுவிட்டார். ஊழியர் கடைக்குத் திரும்பி முதலாளியிடம் செக்கைக் கொடுத்தார்.
மறுநாள் முதலாளி தன் வங்கிக்குச் சென்று அந்தச் செக்கைக் கணக்கில் போடச்சொல்லும்போதுதான் அந்தச் செக் ஒரு போலி என்று அதிர்ச்சியான செய்தி சொல்லப்பட்டது.
அப்படி அரசு அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மிதிலேஷ்குமார் என்கிற நட்வர்லால், உலகளவில் மிகப் பெரிய மோசடி மன்னர்களாகக் கருதப்படும் நபர்களில் ஒருவன். இந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.
பிஹாரைச் சேர்ந்த நட்வர்லால் ஒரு வழக்கறிஞர். அவன் செய்யாத பித்தலாட்டங்களே இல்லை. வாயைத் திறந்தாலே பொய்கள் அருவியாகக் கொட்டும். கொஞ்சம்கூட சந்தேகம் வராத படி மிக சாமர்த்தியமாகப் பேசி மயக்கும் வல்லமை படைத்தவன். தன் பேச்சுக்கு ஆதாரமாக அத்தனை போலி ஆவணங்களையும் தயாரித்துக்கொள்வான். நட்வர்லால் தனக்கு உருவாக்கிக் கொண்ட புனைப் பெயர்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கும்.
அவன் மேல் இந்தியாவின் கிட்டத் தட்ட அத்தனை மாநிலங்களிலும் வழக்குகள் இருந்தன. மொத்தம் நூறு வழக்குகளுக்கு மேல் நட்வர்லால் மேல் பதிவு செய்யப்பட்டன.
நட்வர்லால் மொத்தம் ஒன்பது முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு வழங்கப்பட்ட மொத்த தண்டனை காலம் 113 வருடங்கள். ஆனால், அவன் அனுபவித்தது 20 வருட சிறைத் தண்டனைதான். அதையும் அவன் தொடர்ச்சியாக அனுபவிக்க வில்லை. நட்வர்லால் 8 முறை பல சிறைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான்.
எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் கொஞ்சம்கூட திருந்தாமல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவன் தன் அடுத்த பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிடுவான். இவனுடைய மோசடிகளுக்கு இலக்கான ஆயிரக்கணக்கான நபர்களில் டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பிரபல தொழிலதிபர்களும் அடங்குவார்கள்.
அவன் செய்த பித்தலாட்டங்களிலேயே சுவாரஸ்யமானவை சிலவற்றை அறிந்தால்ஆச்சரியமாக இருக்கும். ஒரு வெளிநாட்டு நிறுவன அதிபரிடம் தன்னை இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அரசாங்கம் சில காரணங்களால் தாஜ்மஹாலை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக நம்பவைத்து, அதற்குப் பொருத்தமான ஆவணங்களையும் காட்டி ஒரு பெரிய தொகையையும் வாங்கிவிட்டான்.
இதுபோல அவன் மூன்று முறை வேறு வேறு நபர்களிடம் தாஜ்மஹாலை விற்றிருக்கிறான். மேலும் செங்கோட்டையையும் விற்றிருக்கிறான். இதில் உச்சம், நமது பாராளுமன்றக் கட்டிடத்தையே விலை பேசியதுதான். இலவச இணைப்பாக அதில் உள்ள 545 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து விற்றிருக்கிறான்.
அப்படியென்றால் சம்பந்தப்பட்டவர்களை எத்தனை தூரம் மூளைச் சலவை செய்திருக்க வேண்டும். அவர்களை நம்பவைக்க எத்தனை தூரம் இவன் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
சாதாரண செக் மோசடியில் தொடங்கி மிகப் பெரிய மோசடிகளைச் செய்த இவன், ஒரு சில கூட்டாளிகளையும் தன் நாடகங்களுக்குப் பயன்படுத்தி யிருக்கிறான். அவர்களை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை. தனக்கு ஒரு மகன் மட்டுமே என்று இவன் சொன்ன வாக்குமூலமும் பொய். நட்வர்லாலுக்குத் திருமணமாகி ஒரு மகள் மட்டும் இருக்கிறார் என்பதே உண்மை. அந்த மகள் ஒரு ராணுவ வீரரை மணந்தார் என்பது ஓர் அழகான முரண்.
நட்வர்லால் கடைசியாக கைது செய்யப்பட்டபோது அவனுக்கு வயது 84. அந்த வயதிலும் மோசடியைத் தொடர்ந்த நட்வர்லால், மோசடியால் சேர்த்த சொத்துக்களை என்ன செய்தான் என்கிற கேள்விக்கு, தான் ஒரு இந்திய ராபின்ஹுட் என்றும் அத்தனை சொத்துகளையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்றும் பதில் சொன்னான்.
நட்வர்லாலைக் கடைசியாக காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் செல் லும்போது அவன் சாமர்த்தியமாக தப்பிச் சென்றது 1996-ல். அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல் இல்லை. பிறகு பல வருடங்கள் கழித்து நட்வர்லால் இறந்துவிட்ட தாக ஓர் ஆவணத்தை சம்ர்ப்பித்து அவன் மீது இருந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தது காவல்துறை.
ஆனால் 1996-லேயே நட்வர்லால் இறந்துவிட்டதாகவும், தான் அவரை எரித்துவிட்டதாகவும் நட்வர்லாலின் சகோதரர் அறிக்கை வெளியிட்டார். ஆகையால் நட்வர்லாலின் மரணத்திலும் ஒரு மர்மம் நீடிக்கிறது. நட்வர்லாலின் மோசடிகளை மையமாக வைத்து ‘ராஜா நட்வர்லால்’ என்று அமிதாப்பச்சன் நடித்த ஒரு இந்தி திரைப்படம் கூட வெளியானது. தவிர, ஆஜ் தக் என்னும் தொலைக்காட்சி யில் தொடர் ஒன்றும் வெளியானது.
அவன் எத்தனைப் பெரிய மோசடி மன்னனாக இருந்தாலும் பிஹாரில் அவன் பிறந்த கிராமத்தில் பலர் அவனை இன்றும் ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அவன் நிஜமாகவே மோசடி செய்து சேர்த்த சொத்துக்களை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.
- வழக்குகள் தொடரும்...
வாஞ்சிநாதனுக்கு சிலை உள்ளது
‘வ.உ.சியின் சுதேசிக் கப்பல் நிறுவனம் விற்கப்பட்டபோது அதை வாங்கியது ஆங்கில அரசு அல்ல; B.I.S.N என்கிற ஆங்கில கப்பல் நிறுவனம்தான் வாங்கியது.
வ.உ.சி கைது செய்யப்பட்டபோது நெல்லையில் எழுந்த மக்கள் எழுச்சியை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஷ் அல்ல; அந்த மாவட்ட கலெக்டராக இருந்த விஞ்ச் என்கிற ஆங்கிலேயர்.
எங்குமே வாஞ்சிநாதனுக்கு சிலை இல்லை என்பதும் தவறு; நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாஞ்சியின் ஆள் உயரச் சிலை உள்ளது. பாளையங்கோட்டையில் ஆஷின் கல்லறைதான் உள்ளது; சிலை அல்ல.’
- சென்ற வாரம் வெளியான ‘எப்படி இப்படி’ தொடரில் இடம்பெற்ற மேற்கண்ட தவறுகளை சுட்டிக்காட்டிய தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ வேங்கடரமணா, வரலாற்று ஆய்வாளர் தூத்துக்குடி ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றி!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


தஹிந்து

Monday, December 07, 2015

மஞ்சள் பத்திரிகை‘இந்து நேசன்'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

தமிழ் சினிமாவில் இந்த நடிகர் அடைந்த வெற்றியையும், புயும் அப்போது உலகமே திரும்பிப் பார்த்தது. இவரின் உடையும், சிகை அலங்0காரமும் இளைஞர்களால் காப்பியடிக்கப்பட்டது. பெண்கள் இவர் அழகிலும், குரலிலும் கிறங்கிப் போனார்கள். ஒன் பது படங்களிலேயே புகழின் உச்சத்தைத் தொட்டவர்.


அவர்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934-ல் 60 பாடல்களைக் கொண்ட இவர் நடித்த முதல் திரைப்படம் பவளக் கொடி. இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1,000 ரூபாய். படம் சூப்பர் ஹிட்.


இனிமையான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த, இவர் கர்னாடக சங்கீதத்துடன் தமிழிசைப் பாடல்களும் பாடியவர். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ பட சாதனையை தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யவில்லை. 1944, 1945, 1946 வருடங்களில் மூன்று தீபாவளிகளைக் கண்டு வசூலை அள்ளிய படம் அது.


பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படத்தை வெளியிட்டதன் மூலம் சம்பாதித்த பணத்தில் ஒரு தியேட்டரே கட்டி, அதற்கு சிந்தாமணி என்றே பெயரும் வைத்தார் ஒரு திரையரங்க அதிபர்.


இந்தப் புகழ்மிக்க மனிதரின் வாழ்வில் நிகழ்ந்தது ஒரு திருப்புமுனைச் சம்பவம். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். அவர் கைது செய்யப்பட்டதை ரேடியோவில் கேட்டறிந்த ரசிகர்கள் கொந்தளித்தார்கள். காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெண்கள் கதறி அழுதார்கள்.


இந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்’ என்கிற பூகம்பச் செய்தி வந்தது.



அந்த பிரபலங்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்?


பாகவதரும், கலைவாணரும் லட்சுமி காந்தன் கொலை வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தனர். அந்த லட்சுமிகாந்தன், வில்லங்கமான ஆசாமி. பத்திர மோசடியில் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பிச் சென்றவர். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டவர்.


தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த லட்சுமிகாந்தன், ‘சினிமா தூது' என்கிற பெயரில் பத்திரிகை ஆரம்பித்து, அதில் பிரபல நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கொச்சையாக எழுதி வந்தார். பரபரப்பாக விற்ற அந்தப் பத்திரிகையில் லட்சுமிகாந்தன் தங்களைப் பற்றியும் எழுதிவிடுவாரோ என்று திரையுலகப் பிரபலங்கள் பயந்தார்கள். சிலர் அவருக்குப் பணமும் கொடுத்து வந்தார்கள்.


பாகவதரும் கலைவாணரும் அந்த மஞ்சள் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். ‘சினிமா தூது’ தடை செய்யப்பட்டது. அதன் பிறகு லட்சுமிகாந்தன் ‘இந்து நேசன்' என்கிற வேறு ஒரு பத்திரிகையில் அதே போலவே எழுதி வர, அந்தப் பத்திரிகையும் பிரபலமானது.


பாகவதர் மற்றும் கலைவாணர் மீது ஆத்திரத்தில் இருந்த லட்சுமிகாந்தன் இந்துநேசனில் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதித் தள்ளினார்.


இந்நிலையில்தான் 1944-ல் நவம்பர் 8-ம் தேதி யாரோ இரண்டு பேரால் லட்சுமிகாந்தன் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் சொட்டும் அந்நிலையிலும், தன் வக்கீல் நண்பரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றார்.
லட்சுமிகாந்தன் முதலில் காவல் துறையில் சொன்ன வார்த்தைகள் “அவன் என்னைக் கத்தியால் குத்தி விட்டான்' என்பதே. அவருடைய புகாரிலும் பாகவதர், கலைவாணர் பெயர்கள் இல்லை. மறுநாள் அவர் இறந்து போனதும் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாறியது.


போலீஸாரின் விசாரணையில், லட்சுமிகாந்தன் மீதான முன்பகை காரணமாக வடிவேலு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அடுத்தக்கட்ட விசாரணையில் லட்சுமிகாந்தனை கொலை செய்யச் சொல்லிப் பணம் கொடுத்ததாக பாகவதர், கலைவாணர் மீது குற்றம் சாட்டியது போலீஸ். அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் என்பவர் கொடுத்த வாக்குமூலமே போலீஸுக்கு பிரதான ஆதாரமானது.



கைது செய்யப்பட்ட பாகவதரும் கலைவாணரும் போராடித்தான் பெயில் பெறவேண்டியிருந்தது. வழக்கு நடைபெற்றது. குறிப்பிட்ட தினத்தில் தாங்கள் ஊரிலேயே இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால், செஷன்ஸ் கோர்ட்டில் ஒன்பது ஜூரிகளை கொண்டு நடந்த வழக்கில் மூன்று பேர் அவர்கள் சதி செய்யவில்லை என்றும்; ஆறு பேர் அவர்கள் சதி செய்ததாகவும் கருத்து சொல்ல, அதன் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பானது.



தீர்ப்பை அறிந்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். ஆத்திரப்பட்ட ரசிகர்கள் கோர்ட் உள்ளே நுழைந்து கையில் கிடைத்த பொருட்களை அடித்து நொறுக்க, போலீஸ் தடியடி நடத்த வேண்டியிருந்தது.


இருவரும் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். அங்கும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது இந்தியாவில் உச்சநீதி மன்றம் இல்லாததால் லண்டனில் இருந்த பிரிவியூ கவுன் சிலில் மிகச் சிறந்த வக்கீல்கள் மூலம் வாதிட்டார்கள். ஹைகோர்ட் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற அறிவுரை வழங்கப்பட்டது.



மறுவிசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் மனம் நொந்தார் பாகவதர். வழக்கின் செலவுக்காக பல சொத்துக்களை விற்க நேரிட்டது. அவர்களுக்காக வாதாடிய முன்ஷி என்னும் வக்கீலுக்கு ஒரு நாளைக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பாகவதர் அவர் ஒப்பந்தமாகியிருந்த 9 படங்களுக்காக பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தன் சொந்த ஊரான திருச்சிக்குத் திரும்பிய பாகவதர், மனம் வெறுத்து இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.



பலரது வற்புறுத்தலால் மீண்டும் சினிமா தயாரித்து நடித்தார். ஆனால், தோல்விகளைத் தழுவினார். தங்கத்தட்டில் சாப்பாடு, பட்டாடை, பத்து விரல்களில் மோதிரம், வெள்ளி ஊஞ்சல், அரண் மனை வீடு, சொந்தமாகக் குதிரை, பல வகை கார்கள் என்று ஆடம்பரமாக வாழ்ந்த பாகவதரின் நிலை மாறியது. நீரிழிவு நோய் ஏற்பட்டு 49-வது வயதில் பாகவதர் காலமானார்.



பாகவதரும் கலைவாணரும் சிறையில் இருந்தபோது சிறை மீட்பு குழு என்கிற பெயரில் ஓர் அமைப்பு திருச்சி யில் உருவாக்கப்பட்டது. அதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பாகவதரையும் கலைவாணரையும் விடுவிக்க வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள்.



இந்த வழக்கில் இன்று வரை முடிச்சு அவிழாத மர்மக் கேள்விகள் சில:



1. அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் ஹை கோர்ட்டில் வாக்குமூலம் தந்த போது பல்டியடித்து என்னை அப்படி சொல்லச் சொல்லி போலீஸார் வற்புறுத் தினார்கள் என்று சொன்னபோதும், அவரின் முதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜூரிகள் ஏன் தவறான தீர்மானத்துக்கு வந்தார்கள்?


2. லட்சுமிகாந்தன் தன் புகாரில் இந்த இருவரின் பெயர்களைக் குறிப்பிடவே இல்லை எனும்போது, இந்த வழக்கில் அவர்களை ஏன் காவல்துறை சேர்த்தது? இவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியை சகிக்க முடியாத தொழில் எதிரிகள் செய்த சதியா?


- வழக்குகள் தொடரும்

த்ஹிந்து

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

Monday, November 23, 2015

உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சரின் கள்ளக்காதல் கொலை வழக்கு - பட்டுக்கோட்டை பிரபாகர்


கோரக்பூரில் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவன் அவன். பள்ளி நாட்களிலேயே அவனுக்குப் படிப்பைவிட பேட்மிண்டன் விளையாட்டில்தான் அதிக கவனம் சென்றது.

அவனுடைய மூத்த அண்ணன்கள் அனைவரையும் அழைத்துப் பேசினாள் அந்தத் தாய்.

“இவனுக்கு எதில் ஆர்வமோ அதில் இவன் முன்னேறவும், பெரிய சாதனைகள் செய்யவும் நீங்கள் அனைவரும் கடைசி வரை உதவ வேண்டும்'' என்றாள். சகோதரர்கள் அனைவரும் உற்சாகமாக ஒப்புக்கொண்டு அதை சபதமாகவே ஏற்றார்கள்.

அந்தச் சிறுவனை பேட்மிண்டன் பயிற்சி பெற சிறந்த கோச்களிடம் சேர்த்துவிட்டார்கள். அவனும் முழு ஈடுபாட்டுடன் விளையாட்டைக் கற்றான்.

சிறுவர்களுக்கான அத்தனை போட்டிகளிலும் வென்று பதக்கங்கள், கோப்பைகளாக வீட்டை அலங்கரித்தான். 14-வது வயதில் அகில இந்தியப் போட்டியில் வென்று தேசிய ஜூனியர் சாம்பியன் ஆனான்.

அந்தச் செய்தியை ரேடியோவில் கேட்ட அவனது குடும்பம் ஆனந்தக் கண்ணீர்விட்டது. தேசிய ஜூனியர் சாம் பியன் பட்டம் கொடுத்த உற்சாகத்தில் இன்னும் தீவிரமாக பயிற்சிகளில் இறங் கிய அவன், 18-வது வயதில் சீனியர்களுக்கான போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய சாம்பியன் ஆனபோது உலகமே அவனை வியந்தது.

1980-ம் ஆண்டு அவன் செய்த அந்தச் சாதனையை அடுத்த எட்டு வருடங்களுக்கு அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை. 1980 முதல் 1987 வரை வரிசையாக எட்டு வருடங்கள் இந்திய தேசிய பேட்மிண்டன் சாம்பியன் அவன்தான். இப்படி வரிசையாக எட்டு முறை எந்த நாட்டிலும் எந்த வீரனும் தேசிய சாம்பியனாக திகழ்ந்து சாதித்ததில்லை.

1988-ம் ஆண்டு. சக பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான அமிதா குல்கர்ணியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அந்த ஆண்டு நடந்த தேசிய சாம்பியனுக்கான விளையாட் டுப் போட்டியில் முதல்முறையாக சறுக்கலைச் சந்தித்து, தோற்றுப் போனான்.

வெற்றிபெறாத திருமணம் காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் அவன் இருந்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகள் எழுதின. இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கான மிக உயர்ந்த விருதான அர்ஜூனா விருதைப் பெற்ற அந்த வீரன் அழகான பெண் குழந்தைக்குத் தந்தையானான். அகன்க்ஷா என்று பெயர் சூட்டினான்.
லக்னோ நகரில் வசித்த அவன் பிறந்து இரண்டே மாதமாகியிருந்த தன் செல்லக் குழந்தையைக் கொஞ்சி விட்டு, பாபு ஸ்டேடியத்துக்கு வழக்கம் போல பயிற்சிக்குச் சென்றான். பயிற்சி முடித்துவிட்டு ஸ்டேடியத்துக்கு வெளியே வந்த அவன் சுடப்பட்டான். அந்த இடத்திலேயே உயிரை விட்ட அவனுக்கு அப்போது வயது 26.


நமது நாட்டின் பேட்மிண்டன் நட்சத்திர வீரர் பிரகாஷ் படுகோனே போல மிகப் பிரமாதமாக சர்வதேச அளவில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு இளம் வீரனின் வாழ்வை சில புல்லட்கள் முடித்து வைத்தன.


அந்த வீரனின் பெயர் சையது மோடி. ரயில்வேயில் அவன் பணியாற்றியதால் ரயில்வே நிர்வாகம் சையது மோடியின் நினைவாக சையது மோடி ரயில்வே ஸ்டேடியம் கட்டியது. சையது மோடி கிராண்ட் ப்ரிக்ஸ் என்று அவனுடைய பெயரில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறது பேட்மிண்டன் அசோசியேஷன்.


என்ன நடந்தது?

இந்தியாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் எதற்காக சுடப்பட்டான்? இந்தக் கொலை நடந்து முடிந்து 27 வருடங்கள் ஆன நிலையிலும் சரியான காரணம் வெளிவரவில்லை. ஆனால் வழக்கின் விவரங்களை உன்னிப்பாக கவனித்தால் காரணம் மிகத் தெளிவாகப் புரியும்.

ஸ்டேடியத்துக்கு வெளியே சையது மோடி வந்தபோது ஒரு பைக் வேகமாக வந்ததாகவும், அதில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்தவன் துப்பாக்கியால் சுட்டதாகவும் கண்ணால் பார்த்த சாட்சி ஒருவன் தெளிவாகச் சொன்னான். ஆனாலும் இந்த வழக்கின் விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்ததாலும், பத்திரிகைகள் காவல் துறையைக் கண்டித்து குரல் கொடுத்ததாலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகே விசாரணை துரிதப்படுத்தப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜா சஞ்சய்சிங். அவர் சையது மோடி மற்றும் அவரின் மனைவியான அமிதா மோடிக்கு அவர்களின் திருமணத்துக்கு முன்பே அறிமுகமாகி நன்கு பழகிக் கொண்டிருந்த நண்பர். சையது மோடிக்கும் அமிதா மோடிக்கும் திருமணம் செய்து வைத்ததே சஞ்சய்சிங் தான்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர்களில் இருவர் அமைச்சர் சஞ்சய் சிங் மற்றும் சையது மோடியின் மனைவி அமிதா மோடி. திருமணத்துக்கு முன்பிருந்தே அமிதா மோடிக்கும் சஞ்சய் சிங்குக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாகவும்; இது தொடர்பாக சையது மோடிக்கும், அமிதா மோடிக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும்; கூலிப்படை வைத்து இந்தக் கொலையை இவர்கள் இருவரும் திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு.

தங்கள் தரப்பின் ஆதாரங்களாக அவர்கள் சமர்ப்பித்தவற்றில் முக்கியமானவை சையது மோடி மனம் வெறுத்துப் போய் தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகத் தன் தாயாருக்கு எழுதிய கடிதம், மற்றும் அமிதா மோடியின் பழைய டைரி. அந்த டைரியில் உள்ள பதிவுகளில் இருந்து அவருக்கும் சஞ்சய் சிங்கிற்கும் இருந்த காதலை உணர முடியும்.


இந்த வழக்கில் சஞ்சய் சிங்கும் அமிதா மோடியும் தங்கள் மீதான குற்றச்சாட்டைஅடியோடு மறுத்தார்கள். அவர்கள் சார்பாக வாதாடியவர்கள் பிரபலமான வக்கீல் ராம்ஜெத்மலானி யும், அவரின் மகள் ராணியும். டைரியில் உள்ள பதிவுகள் ஒரு பெண்ணின் மன சஞ்சலத்தைக் காட்டுவதாகும். ஒரு பெண்ணுக்கு இப்படியான உணர்வுகள் ஏற்படுவது சகஜமே. ஆனால் அமிதா சையது மோடியை அதிகம் விரும்பியதால்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டு உண்மையாக வாழ்ந்து வந்தார் என்று அவர்கள் வாதிட்டார்கள்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங், அமிதா மோடி இருவருக்கும் இந்தக் கொலை வழக்கிலோ சதியிலோ எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது நீதி மன்றம். மீதி ஐந்து பேர்களில் இரண்டு பேர் பெயிலில் வெளிவந்த போது மர்மமான முறைகளில் சுட்டுக் கொல் லப்பட்டார்கள். அந்த வழக்குகளில் இன்றுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. மீதி மூன்று பேரில் ஒருவருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தது கோர்ட். மிச்சம் இரண்டு பேரில் ஒருவன் பைக்கை ஓட்டி வந்தவன். இன்னொருவன் சுட்டவன். பைக்கை ஓட்டி வந்தவனும் விடுதலை செய்யப்பட்டான். சுட்டவனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை தரப்பட்டது. உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பில் கடைசி வரை சுட்டதற்கான சரியான காரணத்தை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்றே குறிப் பிட்டது.

இப்போது சில தகவல்கள்: 1. ஏற்கெனவே திருமணமான சஞ்சய் சிங் அமிதா மோடியை பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பாரதீய ஜனதா கட்சிக்கு மாறினார்.
அரசியல் செல்வாக்கும், திறமையான வக்கீலும் இருந்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியே சையது மோடியின் மரணம்!
- வழக்குகள் தொடரும்


thanks the hindu

Tuesday, September 15, 2015

கள்ளக்காதல்கொலைவழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘சந்தேகத்தின் பலனை சாதக மாக்கி அவரை விடுதலை செய் கிறேன்!’’ என்று தீர்ப்பு வாசித்து விட்டு, கண்ணாடியைக் கழற்றும் நீதிபதி களைப் பல திரைப்படங்களில் பார்த்திருப் பீர்கள். டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீஸ் 3 வருடங்கள் துப்பறிந்து, 4 குற்றவாளிகளைக் கைது செய்து, 5 வருடங்கள் வழக்கு நடத்தி, ஆயுள் தண்டனை என்று தீர்ப்பான பிறகு, உயர் நீதிமன்றம் ‘சந்தேகத்தின் பலனை…’ என்று ஆரம்பித்தது. அந்தத் தீர்ப்பு சமூக போராளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் பின்னணி என்ன?
1999-ம் வருடம் ஜனவரி 23-ம் தேதி. டெல்லியில் தன் அடுக்கு மாடி குடியிருப் பின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து காத்திருந்தார் ராகேஷ் பட்னாகர். பிறகு தன்னிடம் இருந்த சாவியால் திறந்து உள்ளேச் சென்றுப் பார்த்து அலறினார். உள்ளே அவர் மனைவி ஷிவானி பட்னாகர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொட்டிலில் அவர்களின் இரண்டு மாதமே ஆன குழந்தை அழுதுகொண்டிருந்தது.
போலீஸ் வந்து தடயங்களை சேகரித்து விட்டு ‘‘விசாரித்து குற்றவாளியைப் பிடிப்போம்’’ என்று பேட்டியளித்து விட்டுச் சென்றது. இந்தக் கொலை செய்திக்கு மீடியாக்களில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. காரணம்… கொலை செய்யப்பட்ட ஷிவானி, பிரபல பத்திரிகையின் சீனியர் பத்திரிகையாளர்.
கூலிப் படை வைத்து ஷிவானியின் கணவரே கொலையை நடத்தியிருக் கலாம் என்றும் யோசித்தது. ராகேஷ் 70 முறை விசாரிக்கப்பட்டார். ஆனால், அவரைக் கைது செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
3 வருடங்கள் விசாரித்து, 2002-ம் வரு டம் 3 பேரை கைது செய்தது போலீஸ். அந்த 3 பேரும் கூலிப் படையைச் சேர்ந் தவர்கள் என்பதும், இந்தத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டது ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்பதும் தெரியவர, காவல்துறை ஆடிப் போனது.
ரவிகாந்த் ஷர்மா ஒரு ஐ.பி.எஸ் அதி காரி. ஹரியாணாவைச் சேர்ந்த அவர் சிறைத்துறை ஐ.ஜியாக பணியாற்றிய வர். பிரதம மந்திரியின் பாதுகாப்புப் பணி அதிகாரியாகவும் இருந்தவர்.
தகுந்த ஆதாரங்கள் இருந்ததால் ஷர்மாவை கைது செய்ய ஹரியாணா வில் உள்ள அவர் இல்லத்துக்கு போலீஸார் சென்றபோது ஷர்மா தலை மறைவானார்.
ஷர்மா வேலையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி போலீஸ் அறிவித்தது. அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50,000 தரப்படும் என்று புகைப்படத்துடன் அறி விப்பு வெளியிட்டது. ஆனால் ஷர்மா தலைமறைவாக இருந்தபடி பாட்னா கோர்ட்டிலும், டெல்லி கோர்ட்டிலும் 3 முறை முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித் தார். மூன்று முறையும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஷர்மா போலீஸில் சரணடைந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களையும் மறுத்தார்.
போலீஸ் விசாரணைக்கு ஷர்மா ஒத்துழைக்கவில்லை. உண்மை கண் டறியும் லை டிடெக்டர் சோதனைக்கு மருத்துவக் காரணங்களை முன்வைத்து உட்பட மறுத்தார். என்னதான் நடந்தது?
ஷிவானி தன் பத்திரிகை அலுவல் தொடர்பாக பிரதமர் இல்லம் சென்ற போது ஷிவானிக்கு ஷர்மா அறிமுக மானார். அந்த அறிமுகம் நட்பாக மாறி யது. அடிக்கடி டெல்லியின் சில உணவு விடுதிகளில் சந்தித்துக் கொண்டார்கள். (குறிப்பிட்ட அந்த விடுதிகளுக்கு ஷிவா னியை நானே டிராப் செய்திருக்கிறேன். உள்ளே அவள் யாரை சந்திக்கப் போனாள் என்பது எனக்குத் தெரியாது என்றார் ராகேஷ்.)
ஷர்மா டெல்லி வரும்போதெல்லாம் எந்த ஓட்டலில் தங்குவாரோ அங்கு ஷிவானி சென்று சந்தித்திருக்கிறார். (ஷர்மா டெல்லியில் ஓட்டலில் தங்கிய அதே தேதிகளில் ஷிவானி அந்த ஹோட்ட லுக்கு டாக்ஸி பிடித்துச் சென்ற ஆதா ரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.)
ஷிவானியை 3 மாத ஜர்னலிஸம் படிப்புக்காக பத்திரிகை நிறுவனமே லண்டன் அனுப்பி வைத்தது. திரும்பும் போது சில தினங்கள் தாமதித்து சொந்த செலவில்இந்தியா திரும்பினார். டிக்கெட் செலவுக்கு என்ன செய்தாய் என்று ஒரு தோழி கேட்டபோது, ‘‘ஏர் இந்தியாவில் இருக்கும் நண்பர் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்’’ என்றார்.
ஷிவானி லண்டனில் இருந்தபோது தன் போனில் இருந்து ஷர்மாவை 176 முறை அழைத்துப் பேசியிருக்கிறார். அதேப் போல அந்த மூன்று மாதங் களில் ஷர்மா தன்னுடைய போனில் இருந்து ஷிவானியை 90 முறை அழைத் துப் பேசியிருக்கிறார். (இதற்கான ஆதா ரங்கள் கோர்ட்டில் வழங்கப்பட்டன)
ஷிவானி தன் அந்தரங்கத் தோழியிடமும், தன் தங்கை செவந்தியிட மும் தனக்கும் ஷர்மாவுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பற்றிச் சொன்னதோடு, இருவரும் அவரவர் துணைகளை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக இருக் கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு ஒருநாள் இருவரிடமும் ஷர்மா தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதால் எங்கள் உறவைப் பற்றி நான் சமூகத்துக்கும் அவர் மனைவிக்கும் தெரியப்படுத்தப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். (ஷிவானியின் தோழி, தங்கை இருவரும் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்னார்கள்)
ஷிவானியின் அலுவலகத்தில் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை இயக்கு வதற்கான பாஸ்வேர்டு ‘ரவிகாந்த்’ என் பதாகும். (இதுவும் நிரூபிக்கப்பட்டது)
இதற்கிடையில் ஷர்மாவின் மனைவி தினமும் தொலைக்காட்சிகளில் தோன்றி, தன் கணவர் குற்றமற்றவர் என்றும், ஒரு அரசியல்வாதியை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக தன் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றும் பேட்டி கொடுத்தார். அந்த அரசியல்வாதிக்கும் ஷிவானிக்கும் நட்பு உண்டு, அவர்தான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்ணீருடன் குறறம்சாட்டினார்.
கோர்ட்டில் பரபரப்பாக நடந்த விசாரணையின்போது மொத்தம் 209 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அதில் 51 பேர் போலீஸில் முதலில் சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக மாற்றி சாட்சி அளித்தார்கள்.
2008-ம் வருடம் ஷர்மாவும் மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அனைவருக்கும் ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே ஷர்மா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து 2011-ம் வருடம் ஷர்மா வும் மற்ற இருவரும் குற்றவாளிகள் இல்லையென்றும், பிரதீப் என்பவர் மட்டுமே குற்றவாளி என்றும் தீர்ப்பளித் தது. 9 வருடங்கள் திகார் ஜெயிலில் இருந்த பிரதீப் விடுதலையானார். உயர் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘கீழ்க் கோர்ட்டில் பல ஆதாரங்கள் சரியில்லை. அடிப்படையான சந்தேகத்தை மட்டும் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்கள்.
அரசுத் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்தாலும், இந்தத் தீர்ப்பு விமர்சனத்துக்கு ஆளா னது. சுப்ரீம் கோர்ட் வக்கீல் அசோக் அரோரா பலவிதமான கேள்விகளை எழுப்பினார்.
வழக்கின் நடுவில் அரசுத் தரப்பின் வக்கீல்கள் மாற்றப்பட்டது ஏன்? 4 குற்றவாளிகளில் ஒருவருக்கு அளிக் கப்பட்ட தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது ஏன்? குற்றவாளியான பிரதீப் இந்த கொலையில் ஈடுபட சரியான காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். பிறகு அவர் எப்படி குற்றவாளியாவார்? ஷர்மா குற்றம் செய்யாதவர் என்றால் எதற்காக தலைமறைவானார்? அவருக்கும் ஷிவா னிக்கும் நெருக்கமான தொடர்பு இல்லை என்றால் லண்டனில் இருந்தபோது இருவரும் அத்தனைஅழைப்புகளில் ராக்கெட் விஞ்ஞானம் பற்றிப் பேசினார் களா? இப்படி அவரும் மற்றும் பலரும் கேட்கும் கேள்விகள் தொடர்கின்றன. திடீரென்று ஒரு அபூர்வ சக்தி கிடைத்து கையில் தராசுடன் நிற்கும் நீதி தேவதை பேசத் தொடங்கினால் ஒருவேளை சரியான பதில்கள் கிடைக்கலாம்.
- வழக்குகள் தொடரும்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி-த இந்து

Monday, September 07, 2015

தீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த்தகொலை வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

1994-ம்
ஆண்டு. அமெரிக்காவில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த நாளில், அதன் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த் தார்கள். நியூயார்க் பங்குச் சந்தையில் அன்று வர்த்தகம் 41 சதவிகிதம் குறைந் தது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 48 கோடி டாலர்கள் பாதிப்படைந்தது. அப்படி என்ன வழக்கு அது?
ஓ.ஜே.சிம்சன் புகழ்மிக்க கால்பந் தாட்ட வீரர். நடிகர். தொலைக்காட்சித் தொகுப்பாளர். முதல் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு, நிகோல் பிரவுன் என்பவரை மணந்தார். ஆனால், அடிக்கடி சண்டை. பிரவுனை சிம்சன் திட்டியும் அடித்தும் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பிரவுன் சிம்சனை விட்டு விலகி தனியாக வாழ ஆரம்பித்தார். விவாகரத்து வழக்கும் தொடுத்தார். 1994-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி இரவு. பிரவுன் தன் வீட்டு வாசலில் கத்திக் குத்துப்பட்டு இறந்து கிடக்க, அருகில் ரொனால்ட் கோல்ட்மேன் என்கிற பிரவுனின் நண்பரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸ் விசா ரணையில் இந்தக் கொலைகளில் சிம்ச னைத் தொடர்புப்படுத்தும் சில தடயங்கள் கிடைத்தன. பிரவுன் வீட்டுக்கு அருகில் இருந்து சிம்சனின் கார் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததாக பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். தடயங்களை ஆராய்ந்ததில் சந்தேகம் வலுத்ததால் சிம்சனை விசாரணைக்கு அழைத் தார்கள்.
ஜூன் 17-ம் தேதி சிம்சன் காவல் நிலை யத்துக்கு வரப் போவதை அறிந்து பத் திரிகையாளர்கள் எல்லாம் காத்திருக்க, சிம்சன் வரவில்லை. அவருடைய வக்கீல் சிம்சன் கொடுத்ததாக ஒரு கடிதத்தைப் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். அதில் சிம்சன் தனக்கும் அந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மனம்வெறுத்து எங்கோ போவதாகவும், கிட்டத்தட்ட தற்கொலை கடிதம் போல எழுதியிருந்தார்.
அன்று மாலை 6.20 மணியளவில், நண்பர் ஒருவர் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து சிம்சன் காரில் செல்வதைப் பார்த்து ஒருவர் தகவல் சொல்ல, அடுத்த நொடியே ஏராளமான போலீஸ் கார்கள் சிம்சனைத் துரத்தத் தொடங்கின. சிம்சன் துப்பாக்கியை தன் நெற்றியில் வைத்து காரை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லி நண்பருக்கு வெறித்தனமாக கட்டளை யிட்டார். செல்போனில் ஒரு போலீஸ் அதிகாரி பேசினார். துப்பாக்கியை ஜன்னல் வழியாக வீசிவிட்டு சரணடையச் சொன்னார். சிம்சன் கேட்கவில்லை. 20 தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து வந்து இந்தத் துரத்தலைப் பதிவு செய்தன. சிஎன்என், ஏபிசி நியூஸ் போன்ற பெரிய தொலைக்காட்சிகளில் மற்ற நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். (இதை யூ டியூபில் காணலாம்)
இரவு 8 மணி வரை 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தத் துரத்தல் தொடர்ந்து, ஒருவழியாக சிம்சன் சரணடைய சம்மதித்தார். தன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கி, வழக்கை முறைப்படி சந்திக்கிறேன் என்று கைதானார்.
340 நபர்களைப் பரிசீலித்து 12 ஜூரி களைத் தேர்வு செய்தார் நீதிபதி. தினமும் தொலைக்காட்சிகள் படம் பிடிக்க, விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பின் குற்றச்சாட்டின்படி, சம்பவம் நடந்த அன்றிரவு சிம்சன் தன் காரில் பிரவுன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பிரவுனை கத்தியால் குத்தினார். அப்போது அங்கு வந்த ரொனால்ட் கோல்ட்மேன் சிம்ச னைத் தடுக்க முயல, அவருக்கும் குத்துக் கள் விழுந்தன. இருவரும் இறந்ததும் காரில் ஏறிச் சென்றுவிட்டார் சிம்சன்.
கொலைகள் நிகழ்ந்த இடத்தில் சிம்ச னுக்குச் சொந்தமான ஒரு கையுறையும், பிரவுனின் ரத்தச் சுவடுகளுடன் கூடிய சிம்சனின் எண் 12 சைஸில் இருந்த ஷூ தடயங்களும், சிம்சனின் காரைப் பார்த்த சாட்சியும், சிம்சனுக்கு கத்தி விற்ற நபரின் சாட்சியும், சிம்சனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்ததற்கான சாட்சிகளும் அவருக்கு எதிராக வைக்கப்பட்டன.
சிம்சன் தரப்பு எல்லாவற்றையும் மறுத்தது. அந்த ஷூவின் அளவு சரிதான். ஆனால் அது சிம்சனுடையது அல்ல என்றது. அந்தக் கையுறையை கோர்ட்டிலேயே அணிந்து பார்க்க, அது அவருக்கு சேரவேயில்லை. அதற்கு அரசுத் தரப்பு, இடைப்பட்ட காலத்தில் சிம்சன் வழக்கமாக எடுக்கும் மூட்டு வலிக்கான மருந்தை எடுக்காததால் கை வீங்கியிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை சிம்சன் தரப்பு ஏற்கவில்லை.
காரை அந்த நேரத்தில் அங்கு பார்த்ததாகச் சொன்ன சாட்சியும், கத்தி விற்றதாக சொன்ன சாட்சியும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு பேட்டிகள் அளித்ததால், அவர் கள் இருவரையும் அரசுத் தரப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தவில்லை.
பிரவுனுடன் தங்கியிருந்த ஒரு தோழி போதை மருந்துக்கு அடிமை என்றும், அவள் மருந்து வாங்கி பாக்கி வைத்த தொகையை வசூலிக்க வந்த போதை மருந்து விற்ற ஆசாமியிடம் தோழிக்காக பிரவுன் வாதம் செய்ததால் கத்தியால் குத்திவிட்டு, தடுக்க வந்த ரொனால்டையும் கொன்றுவிட்டுப் போய்விட்டார்கள் என்பது சிம்சன் தரப்பு வாதமாக இருந்தது.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அரசுத் தரப்பால் கைப் பற்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சிம்சன் விலைக்கு வாங்கிய கத்தியை சிம்சன் தரப்பு சமர்ப்பித்தது. அந்தக் கத்தி இன்னும் பயன்படுத்தப் படாமல் புதிதாக இருந்ததை நிரூபித் தார்கள்.
விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய நாளில் நாடு முழுதும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பாக மக்கள் அமர்ந்து விட்டார்கள். அலுவலகங்களில் எல்லா அலுவல்களும் ஒத்தி வைக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். சிம்சனை குற்றவாளி என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பளித்தார்கள்.
இந்த வழக்கு பற்றி அத்தனை பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதின. அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ந்து காட்டின. பல புத்தகங்கள் எழுதப்பட்டன. இந்த வழக்கில் இனப் பிரச்சினையின் தாக்கம் பெரிதும் இருந்த தாக பலர் கருத்து சொன்னார்கள். ஜூரி களில் 8 பேர் கருப்பினத்தவரைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், நாடு முழு வதும் இதனை சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வழக்காக மீடியா பிரச்சாரம் செய்ததும், இனக் கலவரம் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் தீர்ப்பை பாதித்ததாக எழுதினார்கள். கொலைகளால் பாதிக்கப் பட்ட இரண்டு குடும்பத்தினரும் நஷ்ட ஈடு கேட்டு தனியாக வழக்கு தொடர்ந் தார்கள். அந்த வழக்கில் அவர்களுக்கு சிம்சன் 3 கோடியே 30 லட்சம் டாலர்கள் தர வேண்டும் என்று தீர்ப்பானது. அதை அவர் சரியாக செலுத்தாததால் சிம்சனுக் குச் சொந்தமான பல சொத்துக்களை அரசு கைப்பற்றி ஏலத்தில் விட்டு தொகையை அவர்களுக்குக் கொடுத்தது.
சிம்சன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தை விட்டு வெளியேறி லாஸ் வேகாஸ் நகரத்துக்கு வந்து குடியேறினார். 2007-ம் வருடம் ஒரு உணவு விடுதியில் சிம்சனுக் குச் சொந்தமான பல கப்புகளும், மெடல்களும் இருப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற 3 நண்பர்களோடு சிம்சன் சென்றார். தகராறு ஆனது. துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். பொருட்களைக் கைப்பற்றினார். ஒரு ஆசாமியைக் கடத்தி வந்தார்.
போலீஸ் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, ‘‘அமைதியாகதான் கேட்டேன். துப்பாக்கி எடுத்துச் செல்ல வில்லை’’ என்று மறுத்தார். ஆனால், உடன் சென்ற நண்பர்கள் தன்டனைக்கு பயந்து அப்ரூவர்களாக மாறி உண்மையைச் சொல்லிவிட்டார்கள். அந்த வழக்கில் 33 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைத்து, இப்போதும் சிம்சன் சிறையில் இருக்கிறார்.
பெரிய வழக்கில் கோட்டைவிட்டதால் இந்த வழக்கில் காவல்துறை வசமாக அவரைச் சிக்க வைத்துவிட்டதாக எழுதி னார்கள். அந்த இரண்டு கொலைகளை யும் செய்தது யார் என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
- வழக்குகள் தொடரும்…

நன்றி - த இந்து

Sunday, August 23, 2015

சார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

சார்லி சாப்ளின் என்கிற பெயரை உச்சரிக்கும்போதே அவரின் வித்தியாசமான உருவம் மனதில் வந்து உதடுகளில் ஒரு புன்னகை பரவும்.
சாப்ளின் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை குடிகாரர். தாய் மன நோயாளி. 7 வயதில் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலை. ஓரளவுதான் படித்தார். 14 வயதில் மேடை நடிகரானார்.
லண்டனில் பிறந்து ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இவர் உடல் மொழி மற்றும் பாவனைகளால் சிரிக்க வைக்கும் ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் மேதை. கதை, திரைக்கதை, வசனம், இசை, எடிட்டிங், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று அத்தனைத் துறைகளிலும் இயங்கியவர். உலகிலேயே உச்சமான சம்பளத்தைப் பெற்றவர். 1915-ம் வருடம் அதாவது 100 வருடங்களுக்குமுன் மியூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன் அவருக்குக் கொடுத்த வருட சம்பளம் 6 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள்.
தி கிட், கோல்டு ரஷ், சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் போன்ற அவரின் பல படங்கள் காலம் கடந்தும் ரசிக்க வைப்பவை. கோடிக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்த அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மிகவும் குறைவு. அவர் சந்தித்த வழக்குகளும் அதிகம்.
சாப்ளின் நான்கு முறை திரு மணம் செய்தவர். முதல் மூன்று திருமணங்களிலும் மன வேதனைதான் மிஞ்சியது. மூவருமே நடிகைகள். 17 வயதான மில்ட்ரெட் ஹாரிசை முதல் மனைவியாக்கிக் கொண்டபோது சாப்ளி னுக்கு வயது 29. இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து. இவர்களுக்குப் பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்தது மற்றொரு சோகம்.
16 வயது லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. திருமணத்துக்கு முன்பே லிடா கிரே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துவிட்டார். சட்டப்படி சாப்ளினைக் கைது செய்து கற்பழிப்பு வழக்கு போட சாத்தியம் இருந்ததால், அவசரமாக வெகு சில நண்பர்களை அழைத்து லிடா கிரேயை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தன.
ஆனால் லிடா கிரேக்கும் சாப்ளி னுக்கும் ஒத்துப் போகவில்லை. சாப்ளின் மன உளைச்சலுக்கு ஆளானார். தன் குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே விவாகரத்து வழக்கு தொடுத்ததோடு சாப்ளினைப் பற்றி தரக்குறைவாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத் தார். சிலஅமைப்புகள் சாப்ளினுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் நடித்த திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
லிடா கிரேக்கு 6 லட்சம் டாலர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு சாப்ளின் ஆளானார். அப்போது அமெரிக் காவில் விவாகரத்து வழக்கில் மனை விக்கு கணவனால் வழங்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது. மனச் சோர்வால் ஒரு வருடம் சாப்ளின் சினிமா தொடர்பாக எந்த வேலையும் செய்யவில்லை.
1928-ல் ஆங்கிலப் படங்கள் மவு னத்தை உடைத்து பேசும் படங்களாக வரத் தொடங்கின. ஆனால் சாப்ளின் ‘சர்க்கஸ்’ என்கிற மவுனப் படத்தைக் கொடுத்து வெற்றிபெற்றார். அடுத்து ‘சிட்டி லைட்ஸ்’ படத்தையும் மவுனப் படமாகவே கொடுத்தார். தன் பாணியை தொடர்வதா, பேசும் படங்களில் இறங்கு வதா என்கிற பெரிய குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் கிட்டத்தட்ட 2 வருடங்கள் படம் எதுவும் எடுக்காமல் திரைக்கதை மட்டும் எழுதி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்னும் பேசும்படம் எடுக்கத் தயாரானார்.
அந்த சமயம் இவர் 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகி வந்தார். எங்களுக்குள் ரகசியமாக திருமணம் நடந்தது என்று பிறகு அறிவித்தார். அப்போது சாப்ளி னுக்கு வயது 43.
இவர் நட்புடன் பழகிய இன்னொரு நடிகையான ஜோன் பெர்ரி தான் கர்ப்ப மாகஇருப்பதாகவும், அதற்குக் காரணம் சாப்ளின்தான் என்றும் அறிவித்தார். சாப்ளின் அதை திட்டவட்டமாக மறுத் தார். பெர்ரி வழக்கு தொடுத்தார்.
அதுவரை அரசியல் கலப்பு எதுவும் இல்லாமல் படங்கள் செய்துகொண்டி ருந்த சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் ஹிட்லரைக் கடுமை யாக கிண்டல் செய்திருந்தார். அந்தத் திரைப்படத்தை அப்போதைய ஜனாதி பதி ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து ஜனாதிபதி சர்ச்சிலும் மிகவும் ரசித்தா லும், அமெரிக்க அரசாங்கம் சாப்ளின் மேல் அரசியல் சாயம் பூசியது. அவரை கம்யூனிஸ்ட் என்று விமரிசித்தது. எஃப்.பி.ஐ அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகளைத் தரத் தொடங்கியது.
ஜோன் பெர்ரி வழக்கு தொடுத்த அதே சமயத்தில் எஃப்.பி.ஐயும் அவர் மேல் உப்புசப்பில்லாத நான்கு காரணங் களுக்காக வழக்கு தொடுத்தது. சாப்ளின் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளா மல் அமெரிக்க விரோதப் போக்கிலேயே வழக்குகளைச் சந்தித்தார்.
ஜோன் பெர்ரிக்கு கரோல் என்கிற பெண் குழந்தை பிறந்தது. சாப்ளினின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. (மரபணு பரிசோதனை அப்போது இல்லை) சோதனை முடிவு சாப்ளினுக்கு சாதகமாக இருந்தபோதும், அதை ஏற்காமல் அந்தக் குழந்தைக்கு சாப்ளின்தான் தந்தை என்றும் கரோலுக்கு 21 வயது நிரம்பும் வரை பராமரிப்பு செலவுகளை கொடுத்தாக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது கோர்ட்.
வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 18 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
அமெரிக்க உளவுத் துறையின் தொடர்ந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தால் சாப்ளின் மனம் நொந்து போனார். அவரை நாடு கடத்த வேண்டும் என்று குரல்கள் ஒலித்தன. தன் அடுத்த படத்தின் முதல் காட்சியை வெளியிட லண்டனுக்குப் புறப்பட்டார் சாப்ளின். அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான பர்மிட்டை அரசு ரத்து செய்தது. பர்மிட் வேண்டுமானால் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
சாப்ளின் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அறிவித்தார். சுவிட்சர்லாந்தில் தங்கிக்கொண்டார். மனைவியை அமெரிக்காவுக்கு அனுப்பி தன் ஸ்டுடியோ, வீடுகள், பங்குகள் என்று அனைத்து சொத்துக்களையும் விற்றார்.
அடுத்து அமெரிக்காவை விமர்சிக் கும் விதமாக ‘கிங் ஆஃப் நியூயார்க்’ என்கிற படத்தை எடுத்தார் சாப்ளின். அந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடவில்லை. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு அமெரிக்க பத்திரிகையாளர்கள் வரக் கூடாதென்றும் உத்தரவிட்டார். அதுதான் அவரின் கடைசிப் படம். அது ஒரு மிகப் பெரிய தோல்விப் படமானது.
அதன் பிறகு உடல்நலம் குன்றி சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்திய சூழலிலும், தன் மகளை நடிகையாக்கும் நோக்கத்தில் ஒரு கதையைத் தயார் செய்தார். ஆனால் அந்தப் படம் வரவேயில்லை.
1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளினை 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.
1977-ல் தனது 88-வது வயதில் சாப்ளின் காலமானார். அதன் பிறகும் ஒரு வழக்கு. சாப்ளினின் கல்லறையில் இருந்து அவரின் சவப் பெட்டியைத் திருடிச் சென்று குடும் பத்தினரிடம் பணம் கேட்டு மிரட் டினார்கள். பெரிய போலீஸ் படை இறங்கி குற்றவாளிகளைப் பிடித் தார்கள். சவப்பெட்டி மீண்டும் புதைக் கப்பட்டு கடுமையான பாதுகாப்பு செய்யப்பட்டது.
கடைசியாக ஒரு லேட்டஸ்ட் வழக்கு..சாப்ளின் வாழ்ந்த சுவிட்சர்லாந்து வீடு 2016-ல் மியூசியமாகிறது. அதில் வைக்கப்பட இருந்த சாப்ளின் வாங்கிய ஆஸ்கர் விருதை இந்த ஜனவரியில் திருடிவிட்டார்கள். ஏதாவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கச் சொல்லி சாப்ளினின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
- வழக்குகள் தொடரும்…

நன்றி -த இந்து

Sunday, August 09, 2015

தடயவியலின் உதவியால் தீர்ப்பளிக் கப்பட்ட முதல் வழக்கு - பட்டுக்கோட்டை பிரபாகர்

ஓவியம்: ஷ்யாம்
ஓவியம்: ஷ்யாம்
லண்டனில் மேடம் டுஸாட்ஸ் மெழுகுச் சிலை காட்சியகத்தில் உலகம் முழுவதும் பிரபலமான பிரமுகர்களின் சிலைகளை வைத் திருக்கிறார்கள். எதிர்மறை செயல்களால் பிரபலமானவர்களின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில் அங்கே சிலை யாக நிற்கும் ஒருவன் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹேக்.
அப்படி என்ன செய்தான் அவன்?
ஹேக்குக்கு இரக்கம் என்றால் பொருள் தெரியாது. பாறாங்கல் நெஞ் சன். பணத்துக்காக எதுவும் செய்வான். உச்சமான குற்றமான கொலையை சர்வ சாதாரணமாக செய்தவன். எத்தனை? 9 கொலைகள். தடயம் எதுவும் இல்லாமல் சாமர்த்தியமாக செய்தவன், கடைசியில் ஒரு சிறு தவறினால் மாட்டிக் கொண்டான்.
ஹேக் அதிகம் படிக்காதவன். பலவிதமான வேலைகள் செய்தான். பணம் கையாடல் செய்து மாட்டி பல முறை சிறைக்குச் சென்று திரும்பியவன். விடுதலையானதும் ஊரை மாற்றிக் கொள்வான். ஆனான், திருட்டை விடமாட்டான்.
ஹேக் தலைநகர் லண்டனுக்கு வந்து சேர்ந்தான். ஒதுக்குப்புறமாக வீடு எடுத்துத் தங்கினான். முன்பகுதியில் ஒரு மெக்கானிக் கடை வைத்துக் கொண்டான். அதில் வந்த வரு மானம் ஆடம்பரச் செலவுகளுக்கு போதவில்லை. பெரிய தொகையை பார்க்க வழி யோசித்தான்.
1943-ல் மேக்ஸ்வான் என்கிற பணக்காரனின் நட்பு கிடைத்தது. அவன் லண்டனில் தனி வீட்டில் தங்கியிருக்க, அவனுடைய பெற்றோர் வெளியூரில் இருந்தார்கள். ஹேக் மேக்ஸ்வானிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பழகி னான்.
ஒரு கொலைக் குற்றத்தில் கொலை செய்யப்பட்ட மனிதனின் உடல் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் குற்றவாளியைத் தண்டிக்க முடியாது என்று சட்டம் இருப்பதைத் தெரிந்து கொண்டான். ஒரு துண்டு எலும்புகூட காவல்துறைக்குக் கிடைக்காமல் செய்ய முடியுமா என்று யோசித்தான்.
கடைக்குச் சென்று கொஞ்சம் கந்தக அமிலம் வாங்கி வந்தான். ஒரு எலியைக் கொன்று, அந்த அமிலத்தில் போட்டு கவனித்தான். 30 நிமிடங்களில் அந்த எலி முற்றிலும் கரைந்து கூழாகியது. அதுதான் திட்டம் என்று தீர்மானித்தான்.
ஓர் இரவில் மேக்ஸ்வானை தனது வீட்டுக்கு வரவழைத்தான். திடீரென்று அவன் கழுத்தை நெரித்தான். மேக்ஸ் வான் இறந்ததும், அவன் உடலை 40 கேலன் கந்தக அமிலம் நிரப்பப்பட்ட தொட்டியில் தூக்கிப் போட்டான். மறுநாள் சோதித்துப் பார்த்தான். அந்த உடல் முழுக்க கரைந்து சதை, எலும்பு எல்லாம் கூழாக மாறியிருந்தது. அந்த சதைக் கூழை பாதாளச் சாக்கடையில் கொட்டிவிட்டான்.
மேக்ஸ்வானின் வீட்டுக்குப் போய் தங்கிக்கொண்டு அவனுடைய பெற் றோருக்குத் தகவல் கொடுத்தான். மேக்ஸ்வான் போருக்குச் செல்வதைத் தவிர்க்க, தலைமறைவாகச் செல்வ தாக தன்னிடம் சொல்லிவிட்டுப் போயி ருப்பதாக சொன்னான்.
மேக்ஸ்வானின் உடைமைகளை எல்லாம் விற்று பணமாக்கிக் கொண் டான். அந்த வீட்டையும் போலிப் பத்திரங்கள் தயாரித்து தன் பெயருக்கு மாற்றி விற்கும் முயற்சியில் இருந்த போது பெற்றோருக்கு இவன் மேல் சந்தேகம் வந்தது.
அதை உணர்ந்த ஹேக், மேக்ஸ் வானைப் பற்றிய தகவல் தருவதாகச் சொல்லி இருவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்தான். இருவரையும் மண்டை யில் தாக்கி கொலை செய்தான். அவர்களின் உடல்களையும் அமிலத் தொட்டியில் போட்டு கரைத்து, சாக்கடையில் கொட்டிவிட்டான்.
மேக்ஸ்வானின் வீட்டை விற்று பணமாக்கிக் கொண்டு சீட்டாட்டம், உல்லாசம் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். மூன்று கொலை களைப் பற்றியும் உலகம் அறியவில்லை. மேக்ஸ்வானின் உறவினர்கள் அவர்கள் எங்கோ வாழ்வதாக நினைத்தார்கள்.
ஐந்து வருட உல்லாச வாழ்க்கையில் பணம் எல்லாம் தீர்ந்துவிட, 1948-ல் அடுத்து இவன் பார்வையில் விழுந்தவர் டாக்டர் யஹனிர்சன். டாக்டரும் அவர் மனைவி ரோஸும் ஒரு கிளப்பில் அறிமுகமானார்கள். டாக்டருக்கு ஒரு வீடு விற்க வேண்டியிருந்தது. தான் விற்றுத் தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டான் ஹேக். அது சம்பந்தமாக அவர் வீட்டுக்கு பல முறை சென்று நம்பிக்கையை வளர்த்தான்.
ஒருநாள் டாக்டரை மெக்கானிக் கடைக்கு வரவழைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். அடுத்து வழக்கம்போல அமிலக் குளியல்தான். டாக்டரின் மனைவிக்கு போன் செய்தான். தன்னைச் சந்திக்க வந்த டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாகச் சொன்னான். அவர் மனைவி ரோஸ் அலறிக்கொண்டு அங்கு வந்தாள். அவளையும் சுட்டான். அமிலத்தில் தூக்கிப் போட்டான். அவர்களின் வீட்டுப் பத்திரங்களை தன் பெயருக்கு மாற்றி விற்று பணமாக்கினான்.
அடுத்து வலையில் விழுந்தது கணவரை இழந்து தனியாக வாழ்ந்த ஆலிவ் டுராண்ட் என்கிற 69 வயது பெண்மணி. அவரிடம் செயற்கை நகங் கள் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வும், தன் தொழிலில் முதலீடு செய் யும்படியும் கேட்டுக் கொண்டான். அது பற்றிப் பேச தன் மெக்கானிக் கடைக்கு அழைத்தான்.
ஆலிவ் டுராண்ட்டும் அமிலத்தில் கரைந்தார். சாக்கடையில் கலந்தார். அவரின் உறவினர்கள் காவல்துறைக்குச் சென்றார்கள். ஹேக்குடன் ஆலிவ் பழகி வந்ததைப் பற்றி ஒருவர் சொல்ல, ஒரு அதிகாரி ஹேக் மேல் சந்தேகம் எதுவுமில்லாமல் ஒரு சாதாரண விசாரணைக்காகத்தான் அவனைத் தேடி வந்தார்.
இங்கேதான் ஹேக்கின் ஓர் அல்ப புத்தி… அவனை சறுக்கிவிட்டது. ஹேக் வீட்டில் அதிகாரியின் கைக்கு ஒரு லாண்டரி பில் கிடைத்தது. பெண்கள் அணியும் பெர்சியன் ஆட்டுத் தோலால் ஆன ஓவர் கோட்டுக்கான பில் அது. இறந்தபோது ஆலிவ் அணிந்திருந்தது. அந்தக் கோட்டின் மேல் ஆசைப்பட்டு அதை அமிலத்தில் போடாமல் ஹேக் எடுத்து வைத்து லாண்டரிக்குப் போட்டிருந்தான்.
அது போதாதா அதிகாரிக்கு? வீட்டை முற்றிலும் குடைந்தார். ஏற்கெனவே அவன் விற்ற சொத்துக்களின் பத்திரங்கள் கிடைத்தன. அவன் வீட்டின் சாக்கடையில் கொஞ்சம் கூழாக இருப்பதை கவனித்த அதிகாரி அதை எடுத்து சோதனைக்கு அனுப்பினார். மேலும் ஒரு மெட்டல் ஸ்பிரிங் கம்பியும் அங்கே கிடைத்தது.
அந்தக் கூழில் மூன்று வெவ்வேறு மனிதர்களின் பித்தப்பை கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்த மெட்டல் ஸ்பிரிங் செயற்கைப் பல்லை வாயில் பொருத்துவது. அது ஆலிவுக்கு தன்னால் பொருத்தப் பட்டதாக ஆலிவின் பல் மருத்துவர் சான்றளித்தார்.
கடுமையாக விசாரித்ததும், போலீஸ் கண்டுபிடித்த 6 கொலைகளைத் தவிர மேலும் 2 பெண்கள், ஒரு ஆண் என்று மொத்தம் 9 கொலைகளைத் தான் செய்ததாக ஹேக் ஒப்புக்கொண்டான்.
ஆனால், தன்னை சில குரல்கள் துரத்துவதாகவும், அந்தக் குரல்கள் கொலை செய்யச் சொன்னதாகவும், தனக்கு ரத்தம் தொடர்பான கனவுகள் அடிக்கடி வருமென்றும் கோர்ட்டில் சொன்னான். அவனைப் பரிசோதித்த மனநல மருத்துவர்கள் அவன் பொய் சொல்வதாகச் சொல்லவே, ஜூரிகள் அவனைக் குற்றவாளி என்று தீர்மானித்தார்கள். 1949-ம் வருடம் தூக்கிலிடப்பட்டான் ஹேக்.
‘அமிலக் குளியல் கொலைகள்’ என்று அப்போது இந்த வழக்கு மிகவும் பேசப்பட்டது. வழக்கு நடந்தபோது தீர்ப்புக்கு முன்பே ’மிர்ரர்’ பத்திரிகையில் ஹேக்கைக் குற்றவாளி என்று கட்டுரை எழுதியதால், அதன் ஆசிரியர் சில்வெஸ்டர் கைது செய்யப்பட்டு கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் குற்ற வரலாற்றில் தடயவியலின் உதவியால் தீர்ப்பளிக் கப்பட்டது இதுவே முதல் வழக்காகும். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கிடைக்கவில்லை என்றாலும் சூழ்நிலைகளும், தடயங்களும் கொலை நடந்ததை உறுதி செய்தாலே குற்றவாளியைத் தண்டிக்க முடியும் என்று இந்த வழக்கு புதிய தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 1954-ல் சட்டத் திருத்த மும் செய்யப்பட்டது.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி- த இந்து

Sunday, August 02, 2015

செத்துப்போன செவலக்காளையின் சிரஞ்சீவி வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

உங்கள் நிலத்துக்கு ஒரு சான்றிதழ் கேட்டு வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள். ‘‘அந்த நிலம் இப்போது உங்கள் பெயரில் இல்லையே’’ என்கிறார் அங்குள்ள அதிகாரி.
நீங்கள் இதை ‘போலி பத்திர மோசடி’ என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிகாரி மேலும், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் இறப்புச் சான்றிதழைக் கொடுத்து, உங்கள் மாமா அந்த நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டுவிட்டாரே. சட்டப்படி நீங்கள் இப்போது உயிருடனேயே இல்லை’’ என்கிறார்.
உங்களுக்கு எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருந்தது லால் பிஹாரி என்கிற அந்த 22 வயது இளைஞருக்கு. இது நடந்தது 1976-ம் வருஷம். உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் மாவட் டத்தில் காலியாபாத் நகரில் இருந்த அலுவலகத்தில்தான் அந்த அதிர்ச்சி அவருக்குக் கிடைத்தது.
‘‘நான் சிறுவனாக இருந்தபோதே என் தந்தை இறந்ததும், எனது தாய் இந்த ஊரைவிட்டு அமீலோ என்னும் ஊருக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டார். பல வருஷங்களுக்குப் பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன்’’ என்று விளக்கம் தந்தார் லால் பிஹாரி.
ஆனால், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் மாமா உரிய மருத்துவச் சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்து சட்டப்படி உத்தரவு பெற்று, உங்கள் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டதால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது’’ என்றார் அதிகாரி.
லால் பிஹாரி முதலில் போலீஸுக் குப் போனார். ‘‘லால் பிஹாரி இறந்து விட்டான். நீ பொய்யாக புறப்பட்டு வந்திருக்கிறாய்’’ என்று போலீஸும் அவரைத் துரத்தியது. அடுத்து பிஹாரி தன்னுடைய மாமா வீட்டுக்குப் போனார். அங்கும் ‘‘நீ லால் பிஹாரி இல்லை. அவன் இறந்துபோய்விட்டான்’’ என்று முகத்தில் அடித்ததுபோலச் சொல்லி விரட்டினார்கள்.
‘இதை நான் சும்மா விடப்போவ தில்லை…’ என்று தீர்மானித்த லால் பிஹாரி, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பத்திரிகைகளுக்கு எழுதிப் போட்டார்.
மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக தன் பெயருக்கு முன் பாக ‘இறந்தவன்' என்று அடைமொழி யுடன் லெட்டர் பேட் அடித்து, அதில் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதினார். தன் பெயரைப் போட்டு இறுதி ஊர்வலம் என்று நோட்டீஸ் அடித்து விநியோகித்து பொம்மை சிதைக்கு கொள்ளி வைத்து ‘காரியம்’ செய்தார்.
தன் மனைவிக்கு ‘விதவைக்கான நல நிதி வேண்டும்’ என்று மனு போட்டார். அவர் உயிருடன் இருப்பதால் அதைத் தர முடியாது என்று அதிகாரிகள் கடிதம் எழுதினால், அது தனக்குச் சாதகமான சான்றாகும் என்பது அவரின் நோக்கம். நேரில் வந்து விசா ரித்துச் சென்ற அதிகாரி, லால் உயிருடன் இருப்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அவர் மனைவியின் நெற்றியிலும், வகிட்டின் உச்சியிலும் குங்கு மம் வைத்திருப்பதால் அவர் விதவை இல்லை என்றும், அதனால் அவருக்கு நல நிதி தர முடியாது என்றும் பதில் கடிதம் அனுப்பினார்.
தன்னைக் கைது செய்து வழக்கு போட வேண்டும் என்பதற்காகவே போலீஸ்காரர்களிடம் தகராறு செய் தார். அப்படியும் இவரைக் கைது செய்யவில்லை. ஒரு கான்ஸ்டபிளுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்து தன் மேல் வழக்கு பதியச் சொல்ல, விவரம் புரிந்ததும் அவர் மறுநாள் வந்து பணத்தைத் தந்துவிட்டுப் போய்விட்டார்.
அடுத்த திட்டமாக தன் நிலத்தை சாமர்த்தியமாக அபகரித்த மாமாவின் 5 வயது பையனைக் கடத்திகொண்டு வந்து தன் வீட்டில் வைத்தார். மாமா தன் பெயர் போட்டு புகார் கொடுக்க வேண்டும் என்பது அவர் நோக்கம். ஆனால், அந்த ‘எம்டன்’ மாமா இவர் பையனை எதுவும் செய்ய மாட்டார் என்கிற நம்பிக் கையில் கடத்தப்பட்டு 5 நாட்களாகியும் புகாரே கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தவே பையனை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் பிஹாரி.
ஒரு பத்திரிகையாளர் இவரின் நூதன மான போராட்டங்களைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதினார். அதைப் படித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேச சட்டசபையில் இவரின் பிரச்சினையைப் பற்றிப் பேசினார். அந்தச் செய்தியைப் படித்த லால், லக்னோ சென்று தனக்கு நீதி வேண்டும் என்று ஒரு தட்டி எழுதிப் பிடித்துக்கொண்டு சட்டசபைக்கு வெளியில் தனி நபராக தர்ணாவில் இறங்கினார். போலீஸ் வந்து இவரை இழுத்துச் சென்றது.
சட்ட மன்றத்துக்குப் பார்வையாள ராகச் சென்றார். சபை நடந்து கொண்டி ருந்தபோது தன் பிரச்சினைகளை விளக்கி அச்சடித்த நோட்டீஸ்களை சபைக்கு நடுவில் வீசினார். சபைக் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். 7 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடு விக்கப்பட்டார்.
ஒரு பக்கம் இவரின் வழக்கு நீதிமன்றத்தில் வாய்தாக் களுக்கு நடுவில் தொடர்ந்து கொண்டிருக்க, 1988-ல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலஹாபாத் தொகுதியில் வி.பி.சிங்குக்கு எதிராக தேர்தலில் நின்றார். தனக்கு ஓட்டு எதுவும் விழாது என்று நினைத்த இவருக்கு 1,600 ஓட்டுக்கள் கிடைத்தன. 1989-ம் வருடம் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து தேர்தலில் நின்றார்.
கடைசி முயற்சியாக 1994-ல் தாசில் தார் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழை யப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டி னார். ஆனால், அதற்குள் இவரின் இடைவிடாத 18 ஆண்டு சட்டப் போராட் டத்தின் பலனாக, இவர் உயிருடன் இருப்ப தாக நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது.
இடைப்பட்ட காலத்தில் மாமாவுடன் சமாதானமாகிவிட்டதால் அந்த நிலத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
“எனக்கு சொத்து பெரிதில்லை. உயி ரோடு இருக்கும் என்னை இறந்துவிட்ட தாக சொன்ன அரசாங்கத்தின் பொறுப் பற்ற செயலை உலகுக்குக் காட்ட விரும் பினேன். அதற்காக நான் பட்ட அவமானங் கள் அதிகம். என்னை பைத்தியக்காரன் என்று விமர்சித்தார்கள். சாலைகளில் நான் நடந்தால், இறந்தவன் போகிறான் என்று கிண்டல் செய்வார்கள். என் மனைவி தினமும் அழுவாள். வழக்குக்காக என் சொத்து, சேமிப்பு எல்லாம் இழந்தேன்' என்கிறார் லால்.
சொத்துக்காக மோசடி செய்யப்பட்டு தன்னைப் போலவே போலிச் சான்றி தழ்கள் மூலம் இறந்துவிட்டதாக அறிவிக் கப்பட்டவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார். அவர்களுக்கு உதவ ‘இறந்தவர்கள் சங்கம்' என்னும் அமைப்பை இவர் தொடங்கினார். அதில் இப்போது 20 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இவரைத் தேடி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்கூட ஆலோசனைக்காக வந்து போகிறார்கள்.
1999-ல் இவரைப் பற்றியும் இவரின் அமைப்பைப் பற்றியும் ஒரு விரிவான கட்டுரையை ‘டைம்’ இதழ் வெளியிட்டது. அந்தக் கட்டுரையையே புகாராக எடுத் துக்கொண்ட உத்தரப்பிரதேச உயர் நீதி மன்றம், இந்த விவகாரத்தை உடனே கவனிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கை களைத் தேசிய மனிதஉரிமை அமைப்பு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன் பிறகே அரசாங்கம் விழித்துக்கொண்டு இதுபோன்ற வழக்குகளில் முன்னுரிமை தந்து, இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட பலரை உயிருடன் இருப்பதாக திருத்தச் சான்றிதழ் அளிக்கத் தொடங்கியது.
லால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணைகொண்டு தகவல் அறிந்தபோது 2008-ல் 335 பேர்களும் 2012-ல் 221 பேர்களும் உயிருடன் இருப் பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இவருக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார்கள்.
அமெரிக்காவில் முதலில் கோமாளித் தனமாக நினைக்கிற, ஆனால் பிறகு மக் களுக்கு பலன் அளிக்கிற செயல்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் ‘இக் நோபல்' பரிசு 2003-ம் வருடம் லாலுக்கு அளிக்கப்பட்டது. இவரின் கதையை இந்தியில் திரைப்படமாக எடுக்க இயக்கு நர் சதீஷ் கடாக் முன்வந்திருக்கிறார்.
தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட வர்களுக்கு சேவை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஏற்றுக்கொண்டு வாழும் லால் பிஹாரிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தன் மகன் மற்றும் நண்பர்களின் உதவிகளோடுதான் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்.
- வழக்குகள் தொடரும்
நன்றி த இந்து

1971, எ ஹை ஜாக் ஸ்டோரி -பட்டுக்கோட்டை பிரபாகர்

1971-ம் வருடம், நவம்பர் 24. அமெரிக்காவின் போர்ட் லேண்ட் விமான நிலையத்தில் இருந்து 30 நிமிடப் பயணத்தில் சியாட்டில் விமான நிலையத்தை அடையப் போகிற போயிங் 727 விமானம், 36 பயணிகளுடன் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கியது.
சூட், டை அணிந்து பின் சீட்டில் கடைசி யாக அமர்ந்திருந்த டி.பி.கூப்பர் என்னும் பயணி பணிப்பெண்ணை அழைத்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தான். தன் பெட்டியில் வெடிகுண்டு இருப் பதாகவும், தன்னருகில் அமரும்படியும் அதில் டைப் செய்யப்பட்டிருந்தது.
அவள் அமர்ந்தாள். அவன் தன் பெட்டியைத் திறந்து காட்டினான். அதில் டெட்டனேட்டர்கள் இணைக்கப்பட்ட வெடிகுண்டுகள் இருந்தன.
விமானக் கடத்தல் பற்றி சக பயணி களுக்குத் தெரியக் கூடாது என்றான். விமானி மூலம் தன் கோரிக்கைகள் சொல்லப்பட வேண்டும் என்றும், அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை விமானம் தரை இறங்காமல் வானத் திலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தான்.
அவனது கோரிக்கைகள் : 1. இரண்டு லட்சம் டாலர்கள் 20 டாலர் நோட்டுக் களாக வேண்டும். 2. விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். 3. நான்கு சிறப்பான பாராசூட்டுகள் வேண்டும்.
விமானி மூலம் நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டதும், காவல்துறையின் உயரதிகாரிகள், விமானக் கடத்தலைக் கையாளும் நிபுணர்கள் சியாட்டில் விமான நிலையத்தில் குவிந்தார்கள். பயணிகளின் உயிர் முக்கியம். கோரிக்கை களை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை.
அவசர அவசரமாக அவன் கேட்டதை எல்லாம் தயார் செய் தார்கள். விமானம் 3 மணி நேரம் வானிலேயே வட்டமிட்டது. பயணி களுக்கு எதுவும் தெரியாமல் பொருத்த மான காரணங்களை விமானிகள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். 20 டாலர் நோட்டுக்களாக 10 ஆயிரம் நோட்டுகள். அவை ஒவ்வொன்றும் மைக்ரோ ஃபிலிமில் படம் பிடிக்கப்பட்ட பின் பண்டல்களாக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டன.
எல்லாம் தயார் என்று தகவல் சொல்லப்பட்ட பிறகு விமானம் தரை இறங்கியது. அதிரடி நடவடிக்கைக்குத் வீரர்கள் தயாரானார்கள். தீயணைப்புக் கருவிகளும், பேரிடர் மீட்புக் குழுவும் தயாராக இருந்தன.
பயணிகள் தங்கள் விமானம் கடத்தப் பட்டது அறியாமலேயே இறங்கினார்கள். எரிபொருள் நிரப்பப்பட்டது. பாராசூட்டு களும், உணவும், பணமும் ஒப்படைக்கப் பட்டன. விமானம் மீண்டும் புறப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்து பார்த் தால் தெரியாதபடி அதன் மேலேயும், கீழேயும் 2 அதிரடிப் படை விமானங்கள் பறந்தன. ஒரு ஹெலிகாப்டரும் தொடர்ந்தது.
அவன் உத்தரவுகளை விமானிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த பணிப் பெண்ணை காக்பிட்டுக்குச் செல்லும்படி கட்டளையிட்டான். அவளும் சென்றாள். விமானத்தின் வால் பகுதியில் உள்ள கதவைத் திறப்பதற்கான உத்தரவிடப் பட்டிருப்பதை காக்பிட்டின் பேனல் போர்டில் தகவலாக அறிந்த விமானி, அது ஆபத்தானது என்று எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறக்கப்பட்டுவிட்டது.
பிறகு விமானத்தை ரீனோ விமான நிலையத்தில் இறக்கியதும் பயணிகள் பகுதிக்கு வந்து பார்த்தால், கூப்பர் அங்கு இல்லை. அவன் அணிந்திருந்த டை மட் டுமே கிடந்தது. கூப்பர் பின்புறக் கதவைத் திறந்து பாராசூட்டைக் கட்டிக் கொண்டு குதித்திருக்கிறான்.
காவல்துறை துரிதமாக இறங்கியது. முதலில் அவன் குதித்த நேரம் இரவு 8.13 என்று முடிவுக்கு வந்தார்கள். அடுத்து சியாட்டிலில் இருந்து ரீனோவுக்குப் பறந்த விமானத்தின் பயணப் பாதையை சரியாகத் தீர்மானித்து அவன் குதித்த இடத்தை அனுமானித்தார்கள்.
அந்த விமானத்தைக் கண்கானித்த மற்ற இரண்டு விமானங்களும் சரி, ஹெலி காப்டரும் சரி, இந்த விமானத்தின் பின் கதவு திறந்ததையோ, ஒரு ஆசாமி குதித் ததையோ ஒரு பாராசூட் விரிந்ததையோ பார்க்கவே இல்லை.
அவன் தரையிறங்கிய இடம் லீவிஸ் ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை ஏரியான லேக் மெர்வின் என்று ஊகம் செய்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் வீரர்கள் அந்தப் பகுதியில் வேட்டை யாடினார்கள். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்தார்கள்.
கூப்பரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. அவனைப் பார்த் தவர்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து கூப்பரின் முகத்தை உருவாக்கி பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். அவன் விட்டுச் சென்ற டையில் இருந்து டி.என்.ஏ எடுத்தார்கள். அவனிடம் ஒப் படைக்கப்பட்ட டாலர்களின் வரிசை எண்களை எல்லா வங்கிகளுக்கும் கொடுத்தார்கள். பிறகு பத்திரிகைகளி லும் வெளியிட்டார்கள். ஒரு நோட்டைக் கொண்டு வந்து ஒப்படைத்தால் அதற்கு ஈடாக 5 ஆயிரம் டாலர்கள் தரப்படும் என ஒரு பத்திரிகை அறிவித்தது.
7 வருடங்கள் கழித்து 1978-ல் இவர்கள் தேடிய பகுதியில் இருந்து 20 கி.மீ தள்ளி, டினா பார் என்கிற பீச் ரிசார்ட்டுக்கு ஒரு குடும்பம் வந்தது. அதில் ஒரு சிறுவன் கேம்ப் ஃபயர் உருவாக்க பள்ளம் தோண்டியபோது, 20 டாலர் நோட்டுகள் 3 பண்டல்களை கண்டுபிடித்தான். அதில் மொத்தம் 290 நோட்டுகள் இருந்தன. அவை கூப்பருக்குக் கொடுத்த நோட்டுகள்.
அந்த நோட்டுகளை வைத்து மீண்டும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. அவற்றை அங்கே கூப்பர் புதைத்தானா? அல்லது எங்கோ விழுந்து கரை ஒதுங்கியவையா? அப்படி என்றால் மீதி நோட்டுகள் எங்கே?
கூப்பர் எங்காவது உயிரோடு இருக் கிறானா, இல்லையா? பாராசூட் சரியாக திறக்காமல் அவன் இறந்து போயிருந் தால் அவன் உடல் கிடைத்திருக்க வேண் டுமே. அந்த பாராசூட்டின் ஒரு பகுதிகூட ஏன் கிடைக்கவில்லை? இப்படி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காண, அரசாங் கத்தால் ஒரு புது டீம் நியமிக்கப்பட்டது. அந்த டீம் 2009 முதல் பல நவீன கருவிகளை வைத்து மீண்டும் ஆராய்ச்சி களில் இறங்கியிருக்கிறது.
இந்தக் கடத்தல் நடந்த அடுத்த வருட மான 72-ம் வருடத்தில் மட்டும் மொத் தம் 31 விமானக் கடத்தல்கள் நிகழ்ந்தன. அதில் 15 கடத்தல்களில் கடத்தல்காரர் கள் கூப்பரைப் போலவே பணயத் தொகையோடு பாராசூட்டும் கேட்டார் கள். அத்தனைக் கடத்தல்களும் காவல் துறையால் முறியடிக்கப்பட்டன. ஒன்று, கடத்தல்காரர்கள் சுடப்பட்டார்கள் அல் லது ஓரிரு தினங்களில் பிடிக்கப்பட்டார் கள். ஆனால், அமெரிக்க விமானக் கடத்தல் விவகாரங்களில் இன்றுவரை தீர்க்கப்படாத புதிராக இருந்து வருவது இந்த கூப்பரின் கடத்தல் மட்டுமே.
இன்னொரு முக்கியமான செய்தி: அவன் பெயர் கூப்பர் என்பது அவன் போர்ட்லேண்டில் வாங்கிய டிக்கெட்டால் தான் தெரியவந்தது. அதுவே, பொய் யான பெயராகவும் இருக்கலாம்
இந்தக் கடத்தலுக்குப் பிறகு நிகழ்ந்த முக்கியமான மாற்றங்கள்: 1. விமான நிலையங்களில் பயணிகளின் உடைமை களை கடுமையாக சோதனையிட்டார் கள். 2. விமானத்தில் பயணிகள் பகுதியில் இருந்து பின்புறக் கதவைத் திறக்க முடியாதபடி விமானங்கள் வடிவமைக் கப்பட்டன. 3. காக்பிட்டில் இருந்து பயணிகள் பகுதியைப் பார்ப்பதற்கு வசதியாக ஒரு பீப்ஹோல் வைத்து விமானங்களைத் தயாரித்தார்கள்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Tuesday, June 16, 2015

ஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்டை பிரபாகர்

அமெரிக்க வரலாற்றில் இது வரை நான்கு ஜனாதிபதி கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 1865-ல் ஆபிரஹாம் லிங்கன், 1881-ல் ஜேம்ஸ் கார்ஃபீல்ட், 1901-ல் வில்லியம் மெக்கன்லேயும், 1963-ல் ஜான் எஃப் கென்னடியும் கொல்லப்பட்டார்கள்.
ஜேம்ஸ் கார்ஃபீல்டை சுட்ட சார்லஸ் உடனே பிடிபட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டான். வில்லியம் மெக்கின்லேயைச் சுட்ட லியானும் உடனே பிடிபட்டு, பிறகு மின்சார நாற்காலி மூலம் கொல்லப்பட்டான். ஜான் எஃப் கென்னடியைச் சுட்ட ஆஸ்வால்ட் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் மூன்றாம் நாள் அவன் சிறைக்கு மாற்றப்பட்டபோது, ஜேக் ரூபி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஆனால், லிங்கனை சுட்ட ஜான் வில்க்ஸ் பூத் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கே மிகப் பெரிய சவாலாக அமைந்தான்.
லிங்கன் ஜனாதிபதியாக பதவி யேற்றவுடன் அடிமைத்தனத்தை ஒழிப் பதில் தீவிரமாக இருந்தார். இதனால் அடிமைத்தனத்தை ஆதரித்த பல தெற்கு மாகாணங்களின் எதிர்ப்பைப் பெற்றார்.
அந்த எதிர்ப்புக் கும்பலில் ஒருவன் தான் ஜான் வில்க்ஸ் பூத். இவன் ஒரு மேடை நடிகன். இவனுக்கு நிறைய ரசிகர் கள் இருந்தார்கள். சொல்லப்போனால் லிங்கனே கூட இவனுடைய ரசிகர்.
பூத்தும், அவனுடைய நண்பர்கள் சிலரும் லிங்கனை முதலில் கடத்திச் செல்ல திட்டமிட்டனர். அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. பிறகுதான் கொலை செய்ய முடிவெடுத்தனர். 1865 ஏப்ரல் 14 வெள்ளியன்று, பூத் நடித்த ‘அமெரிக்கன் கஸின்’ நாடகத்தை பார்க்க ஃபோர்ட் ஹால் தியேட்டருக்கு தன் மனைவியுடன் லிங்கன் வரப்போவதை அறிந்ததும், தன் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற அதுதான் சந்தர்ப்பம் என்று தீர்மானித்தான் பூத்.
நாடகம் தொடங்கியது. சற்றே தாமத மாக தன் மனைவியுடன் வந்த லிங்கன், பால்கனியில் தனி அறையில் அமர்ந்து நாடகத்தை ரசிக்கத் தொடங்கினார். இரவு மணி 10-க்கு மேல், பூத் பங்கு பெறாத ஒரு காட்சி மேடையில் நடந்தபோது, அவன் ஒப்பனை அறையில் இருந்து மெல்ல நழுவி லிங்கன் அமர்ந்திருக்கும் பால்கனி பகுதிக்கு வந்தான். சத்தமில்லாமல் கதவைத் திறந்தான்.
நாடகத்தில் ஒரு நகைச்சுவை காட்சி. வந்திருந்த 1,700 பார்வையாளர்களும் அந்தக் காட்சியை உரக்க சிரித்து ரசிக்க… லிங்கனும் சிரித்தபடி இருக்க, பூத் தன் டெரின்ஜர் கைத் துப்பாக்கியால் லிங்கனின் பின் மண்டையில் சுட்டான். லிங்கன் நிலைகுலைந்து சரிந்தார். லிங்க னின் மனைவி அலறினார்.
லிங்கனுடன் வந்திருந்த ஓர் ராணுவ அதிகாரி பூத்தை பிடிக்க முயற்சிக்க, அவரை அவன் கத்தியால் குத்திவிட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்தான். அப்போது பூத்துக்குக் காலில் அடிபட்டது. அப்படி யும் அவன் சமாளித்துக்கொண்டு வெறியோடு மேடையேறி, ‘பழிக்குப் பழி வாங்கிவிட் டேன்’ என்று கத்தினான்.
முதலில் அதை ஏதோ நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்தார்கள். பால்கனி பகுதியில் இருந்து அலறலும், ‘அவ னைப் பிடியுங்கள்’ என்ற ராணுவ அதிகாரியின் கத்தலுமே நடந்ததை உணர வைத்தது. உடனே பலர் அவ னைப் பிடிக்க துரத்தினார்கள். பூத்துக்கு அந்த நாடக அரங்கின் அமைப்புகள் நன்கு தெரியும் என்பதால் அத்தனை பேருக்கும் போக்குக் காட்டி ஓடி, நாடக அரங்கின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த குதிரையில் ஏறி தப்பிவிட்டான்.
நாடகத்துக்கு வந்திருந்தவர்களில் இரண்டு டாக்டர்களும் இருந்தார்கள். அவர்கள் மயங்கிய நிலையில் இருந்த லிங்கனுக்கு முதலுதவி செய்தார்கள். அரங்கத்துக்கு வெளியில் இருந்த ஒரு வீட்டுக்கு லிங்கன் தூக்கிவரப்பட்டார். சிறந்த மருத்துவர்கள் வந்தார்கள். லிங்க னின் கபாலத்தைத் துளைத்து மூளைப் பகுதியில் தங்கிவிட்ட தோட்டாவை நீக்க முயற்சித்தார்கள். மறுநாள் காலையில் லிங்கனின் உயிர் பிரிந்தது.
பூத்தும், அவனது நண்பன் ஹெரால் டும் கிளிண்டன் என்னும் சிறிய நகரத்துக் குப் போனார்கள். பால்கனியில் இருந்து குதித்தபோது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வைத்தியம் செய்ய மட் என் னும் டாக்டரை சந்தித்தார்கள். அவரிடம் குதிரையில் இருந்து விழுந்துவிட்ட தாக பொய் சொன்னான் பூத். டாக்டர் வைத்தியம் செய்து, ஒரு ஜோடி தாங்குக் கட்டைகளும் கொடுத்தார். பிறகு, டாக்ட ருக்கு லிங்கன் கொலையில் ராணுவத் தால் தேடப்படுபவன் பூத் என்பது தெரிய வந்ததும், அங்கிருந்து போகச் சொல்லி விட்டார்.
பூத் தன் நண்பனுடன் பிரிவினை வாதக் குழுவைச் சேர்ந்த சில நண்பர் களைத் தேடிச் சென்றான். அவர்கள் அடைக்கலம் கொடுக்கத் தயங்கினார் கள். கடைசியாக கேரட் என்கிற புகை யிலை விவசாயிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் இருவரும் தங்கினார் கள். உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பிரிவினைவாதக் குழுவின் படை வீரர்கள் என்று பொய் சொன்னார்கள்.
லிங்கன் சுடப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர், ஏப்ரல் 26-ம் தேதி அன்று அவர்கள் தங்கியிருந்த பண்ணை வீட்டை அமெ ரிக்க ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தார்கள். இருவரை யும் வெளியே வருமாறு எச்சரித்தார்கள். இருவரும் வெளியே வரவே இல்லை. அவர்களை வெளியே வர வைப்பதற்காக, அந்த வீட்டைச் சுற்றிலும் தீ வைத்தார்கள். உயிர் பயத்தில் நண்பன் ஹெரால்டு மட்டும் வெளியே வந்து சரணடைந்தான்.
ஆனால், பூத், ‘என்னை உங்களால் உயிருடன் பிடிக்கவே முடியாது’ என்று கத்திவிட்டு வீரர்களை சுடுவதற்கு ஆயத்தமானான். இதை ஒரு இடுக்கு வழியாக கவனித்த ஒரு ராணுவ வீரன், பூத்தை தலையின் பின்புறம் சுட்டான். ரத்தம் தெறிக்க தடுமாறி விழுந்தவனை வெளியே இழுத்து வந்தார்கள். அதன் பிறகு மூன்று மணி நேரம் உயிருக்குப் போராடி இறந்தான் பூத். அவன் கடைசி யாக படை வீரர்களிடம், ‘என் தாயிடம் சொல்லுங்கள், அவள் மகன் தன் நாட்டுக் காக இறந்தான் என்று!’ என்றான்.
பூத்துடன் சதியில் ஈடுபட்டவர்களில் நான்கு பேர். இவர்கள் ராணுவ விசா ரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார் கள். அவர்களில் ஒருவர் பெண். மேரி சூரத் என்கிற அந்தப் பெண்மணி, ‘‘என் மகன் சூரத்தின் நண்பர்கள் என்பதால் அவர்கள் தங்குவதற்கு என் வீட்டை வாடகைக்குவிட்டேன்.
அதைத் தவிர இந்தச் சதியில் எனக்கு பங்கில்லை’ என்று கடைசி வரையில் வாதாடினார். தலை மறைவான தன் மகன் இருக்குமிடம் பற்றி தூக்கிலிடும் வரை சொல்லவில்லை. கனடாவுக்குத் தப்பிச் சென்ற ஜான் சூரத் 18 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டான். ஆனால், அவனுடைய வக்கீல்களின் சாமர்த்தியமான வாதங்களால் அவன் விடுதலையானான்.
லிங்கனின் உடல் வாஷிங்டனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டப் பிறகு, ‘லிங்கன் ஸ்பெஷல்’ என்று குறிப்பிடப்பட்ட தனி ரயிலில் 1,6754 கிலோ மீட்டர் கடந்து, லிங்கனின் ஊரான ஸ்பிரிங்ஃபீல்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த ரயில் 180 நகரங் கள் வழியாக 13 நாட்கள் பயணம் செய் தது. வழியெங்கும் முக்கியமான நகரங் களில் லிங்கனின் உடல் பொது மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் மிக அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது லிங்கனுக்குதான்.
பூத் எப்படி பிடிபட்டான்?
பூத் இருக்குமிடம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர்கள் தருவதாக அரசாங்கம் அறிவித் தது. (1865-ம் வருஷம் என்பதை நினை வில் கொள்க!) பூத்தை பிடிக்க 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் களத்தில் இறக்கப் பட்டார்கள். வீடுகளிலும், காடுகளிலும் அவர்கள் இரவு, பகலாக தேடினார்கள்.
அந்தத் தேடலில் ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஏற்பட்ட படகு விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் உயிரை இழந்தார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு பண்ணை வீட்டில் பூத் பதுங்கியிருக்கும் தகவலை அதன் உரிமையாளர் கேரட் தெரிவித்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. கேரட் மூலம் தகவல் தெரியவில்லை என்று இன்னொரு குறிப்பு அதை மறுக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ராணுவப் படை சுட்டு கைப்பற்றியது பூத்தே அல்ல; பூத் சாயலில் இருந்த வேறு ஒருவனைத்தான் என்றும், பூத் 40 ஆண்டுகள் தலைமறைவாகவே வாழ்ந்து இறந்தான் என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இன்றைய அறிவியல் சாத்தியத்தில் இந்த சந்தேகத்தை சுலபமாக போக்க முடியும் என்று பூத்தின் குடும்ப வாரிசுகளில் சிலர் சட்டபூர்வமாக போராடி வரு கிறார்கள்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்ட பூத்தின் உடலை கல்லைறையில் இருந்து தோண்டி அவன் எலும்புகளில் டி.என்.ஏ சோதனை செய்யலாம் என்று கோர்ட்டில் அனுமதி கேட்டார்கள். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு கூட மற்றொரு முயற்சியாக மெரிலாண்ட் நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் குண்டு துளைத்த பூத்தின் எலும்புகளை டி.என்.ஏ சோதனைக்கு வழங்க வேண்டும் என்று வழக்கு போட்டனர் குடும்பத்தினர். இதற்கும் மியூசியக நிர்வாகம் மறுத்துவிட்டட்து. இந்த வரலாற்று சந்தேகம் இன்றளவும் தொடர்கிறது.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]
நன்றி - த இந்து