Showing posts with label பஞ்ச பூதங்களின் ரெப்ரசெண்டிவ்ஸ் பேட்டி. Show all posts
Showing posts with label பஞ்ச பூதங்களின் ரெப்ரசெண்டிவ்ஸ் பேட்டி. Show all posts

Tuesday, February 18, 2014

பஞ்ச பூதங்களின் ரெப்ரசெண்டிவ்ஸ் பேட்டி

சூற்றுச்சூழல் சிக்கல்களை நமது மரபு சார்ந்த பார்வையில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் விழாக்களைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு (வானம்) ஆகியவற்றைப் பற்றிய ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. லயோலா கல்லூரி என்விரோ கிளப் உடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட அந்தக் கருத்தரங்கில் துறை சார்ந்த அறிஞர்கள் எளிமையாகவும், ஆழமாகவும் கருத்துகளை முன்வைத்தனர். அதன் தொகுப்பு: 



பேராசிரியர் நெடுஞ்செழியன்: ஐம்பூதங்களின் அடிப்படையில்தான் இந்தப் பூவுலகும், அதில் உள்ள உயிரினங்களும் தோன்றின என்பது தமிழர் கோட்பாடு. இது அறிவியல்பூர்வமானது. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம், இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது. இந்தியத் தத்துவ மரபில் இரண்டு போக்குகளைக் காணலாம். ஒன்று அறிவைப் பரவலாக்குவது, மற்றொன்று அறிவைத் தடை செய்வது. தமிழ் மரபு அறிவைப் பரவலாக்கும் பணியைச் செய்தது. ஐம்பூதங்களின் தன்மையை, இயல்பை ஆராய்ந்த நூல் தொல்காப்பியம். அதனால்தான் தொல்காப்பியருக்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்று பெயர். மேலும் விசும்பை (வானம்) தமிழ் மரபு மட்டுமே ஐம்பூதமாக ஏற்றுக்கொண்டிருந்தது. 



நிலம் 


 
சூழலியல் எழுத்தாளர் பாமயன்: ஐம்பூதம் என்பது முழுக்கத் தமிழ்க் கொள்கைதான். பூ என்றால் பூத்தல், விரிதல் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பூ என்ற சொல் 33 இடங்களில் வருகிறது. 



நமது பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலெனப்படுவது நிலமும் பொழுதும் என்று கூறியுள்ளது. எனவே, நிலமே அனைத்துக்கும் ஆதாரம். கடந்த நூற்றாண்டில் ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகா கூறிய, உழாத விவசாயத்தைப் பண்டைக் காலத்திலேயே தமிழர்கள் செய்து வந்துள்ளனர். இதை, புறநானூறும் மலைபடுகடாமும் கூறுகின்றன. மழை நீரைச் சேகரிப்பதிலும், நீரை வேளாண்மைக்குப் பங்கிட்டுக் கொள்ளும் தொழில்நுட்பமும் நமது மூதாதையர்களிடம் இருந்திருக்கிறது. தண்ணீர் நிர்வாகம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், தென்னிந்தியா (தமிழகம்) செல்லுங்கள் என்று உலக நீரியல் அறிஞர் சாண்ட்ரா போஸ்டல் கூறியுள்ளார். வைகையில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் தண்ணீர் கடலிலேயே கலக்காது, கடைசியாக எஞ்சியுள்ள நீரும் ராமநாதபுரம் பெரிய ஏரிக்கே செல்லும். 



அரச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி: மண்ணுக்கு மேல்தான் உயிர்கள் வாழ்வதாக நினைக்கிறோம். இது தவறு, மண்ணுக்கு மேல் இருப்பதைப் போல அடியில் 100 மடங்கு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. ஒரு தக்காளிதான் பூமிப் பந்து என்று வைத்துக்கொண்டால், அதில் கால்வாசி மட்டுமே நிலம், முக்கால் பங்கு கடல். அந்த ஒரு பங்கு நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கை விவசாயம் செய்யப் பயன்படுத்த முடியாது. எஞ்சிய ஒரு பங்கில், பாதியில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். அதிலும் அந்தச் சிறிய பகுதி தக்காளியின் மேல் தோல் அளவுக்கே வளமான மேல் மண் இருக்கிறது. அந்த மேல் மண்ணில்தான் பயிரும், காயும் விளையும். ஆனால், அந்த மேல் மண்ணின் மீதுதான் உரம், பூச்சிக்கொல்லி என்று நஞ்சை தெளித்து வேளாண் உற்பத்தி செய்கிறோம். நஞ்சைத் விதைத்து, நஞ்சையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். 



நீர் 


 
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்: தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்வார்கள். அதேபோல உலக வங்கியும், ஐ.எம்.எஃப்பும் (சர்வதேச நிதியம்) புகுந்த நாடு உருப்படாது. ஏனென்றால், அந்த அமைப்புகள் ஒப்பந்தம் போடும்போது தண்ணீர் வியாபாரிகளைக் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். நம்முடைய நிலத்தில் இருந்து எடுத்த தண்ணீரை, நமக்கே விற்றுக் கோடி கோடியாகத் தனியார் பெரு நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகின்றன. 



ஒரு கோழி முட்டையை உருவாக்க 200 லிட்டர் மறைநீர் (Virtual Water) தேவை. ஆனால், அந்நியச் செலாவணிக்காகக் கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி நம்மிடம் இருந்து நீர் பறிபோகிறது. குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 10 பைசா கொடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரை வாங்கி, நம்மிடம் 20 ரூபாய்க்கு விற்கின்றன. பாதுகாப்பான, தூய்மையான குடிநீரை அரசு தர வேண்டும் என்ற அடிப்படை உரிமையை மறந்துவிட்டோம். இனியும் தாகம் எடுக்கும்போது பாட்டில் நீரை வாங்கிக் குடித்தால், நாம் உருப்படாமல் போய்விடுவோம். 



பேராசிரியர் சாமுவேல் ஆசிர்ராஜ்: காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பாக்கம் என்ற பெயரில் நிறைய ஊர்கள் உண்டு. பாக்கம் என்றால் நீர் மிகுந்த பகுதி என்று பொருள். ஆனால் இப்போதோ சென்னையில் எங்கும் தண்ணீர் கிடையாது. ஏரியும், ஆறும் இருந்தவரை நமக்கு உணவு பாதுகாப்பு இருந்தது. இன்றைக்கு அது பறிபோய் விட்டது. 



மழைநீர் கடலில் வீணாகக் கலப்பது பற்றி இப்போது பேசப்படுகிறது. மழைநீர் கடலில் கலந்தால்தான் அனைத்து உப்புகளும் கடலில் கலக்கும், அதில் வாழும் பல்லுயிர்கள் நன்றாக இருக்கும், அவையே நமக்கு உணவாகக் கிடைக்கும். சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அணைகள் கட்டப்படுவது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஏரி, குளங்களைப் பாதுகாப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. 1975க்கு முன்னால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருந்ததேயில்லை. ஆனால், இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. 



நெருப்பு 


 
பொறியாளர் சி.இ. கருணாகரன்: நாம் இன்றைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல்-எரிசக்தி ஆதாரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்து போகக் கூடியவை. பெட்ரோல் 20-30 ஆண்டுகளிலும், நிலக்கரி 100 ஆண்டுகளிலும் தீர்ந்து போய்விடக்கூடும். இந்தியாவில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரியையே அதிகம் நம்பி இருக்கிறோம். இது அதிகம் மாசுபடுத்தக்கூடியது. மின்னுற்பத்தியில், நேரடியாக உற்பத்தி செலவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மின்னுற்பத்தி காரணமாக ஏற்படும் மாசுபாடு, அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான செலவு போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அந்த வகையில் காற்றாலை மின்னுற்பத்தியில்தான் மின்சாரம் குறைந்த சமூகப் பாதிப்பைக் கொண்டிருக்கிறது. 



திரைப்பட இயக்குநர் ம. செந்தமிழன்:


 
வெப்பம் மனிதர்களுக்கு மிகவும் அவசியம். எப்போது உடலில் வெப்பம் குறைகிறதோ, உடல் சில்லிடுகிறதோ அப்போது மனிதன் இறந்து விடுகிறான். அதனால் வெப்பத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம் என்பதும் இதில் அடங்குவதுதான். 



மரம் பிடிக்கும், அதனால் மரம் வளர்க்கி றேன் என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. மரம் நட்டால் மழை வரும் என்கிறார்கள். இது தர்க்கம், சுயநலம். உண்மையில் பூமியில் முதன்முதலில் மழை பெய்தபோது மரமே கிடையாது. மனிதர்கள் மரங்களை நடுவதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இயற்கை இல்லை. அதை மனிதர்களான நாம் புரிந்துகொள்ள வேண்டும். 


காற்று 



கி. வெங்கட்ராமன், தமிழர் உழவர் முன்னணி ஆலோசகர்: நம் அண்டை மாநிலமான கேரளாவில் மணல் எடுக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் மணல் வியாபாரிகள்தான் அரசியல் கட்சித் தலை வர்களாக உள்ளனர். சுற்றுச்சூழலைக் காக்க மாற்று தொழில்நுட்பம் வேண்டும் என்று மாற்றுக் கருத்து முன்வைக்கப்படுகிறது. சமூக மாற்றம் இல்லாமல் எந்த மாற்றமும் சாத்தியமில்லை. மாற்றம் என்பது வெறுமனே தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்க முடி யாது. அது மொழி சார்ந்த மாற்றமாக இருக்க வேண்டும். ஐம்பூதங்களைக் காக்க வேண்டும் என்றால், கையில் அதிகாரமின்றி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. 



மருத்துவர் பாரதி செல்வன்: ஆறாவதாக ஒரு பூதம் இருக்கிறது. அது முதலாளித் துவப் பூதம். மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எடுக்கப் பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கரி படிமங்களுக்கு இடையில் உள்ள மீத்தேனை எடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். இதில் மீத்தேனை பிரித்தெடுப்பதற்காக நிலத்துக்குள் பெரும் துளையிடப்பட்டு ரசாயனக் கரைசல் செலுத்தப்படும். இந்த ரசாயனக் கரைசல் மூலம், சுற்றுவட்டார நிலம் முழுவதும் நாசமாகி விடும். அந்தப் பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை வந்துவிடும். அந்தக் கரைசலில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங் கள் உள்ளன. இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் டெல்டா பகுதி நாசமாகும். 



விசும்பு (வானம்) 


 
சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன்: பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடு. இதில் 2 டிகிரி சென்டிகிரேடு அதிகரித்தாலும் உலகில் பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். அதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார் கள். புவி வெப்பமடைந்தால் என்னவாகும்? துருவப் பிரதேசங்களில் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும். புவி வெப்பமடையக் காரணமாக இருப்பது கார்பன் டை ஆக்சைடு. இதை அதிகமாக வெளியிடும் பெட்ரோலிய வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்த்து, மெட்ரோ ரயில், பஸ் போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்து வாகன நெரிசலையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கலாம். 



சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சி.மா.பிரித்விராஜ்: 1906 முதல் 2006 வரை பதிவு செய்யப்பட்ட வெப்பநிலைகளில் இருந்து, பூமி வெப்பமடைந்து வருவது உறுதியாகிறது. அது மட்டுமில்லாமல் புவி வெப்பமடைவதற்கு ஆதாரமாக 10 அறிகுறிகள் உள்ளன. சுற்றுச்சூழல் குறித்துப் படிப்பது, கருத்தரங்குகளில் பங்கேற்பது மட்டுமில்லாமல், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மை நோக்கித் திரும்ப வேண்டும். அனைவரும் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரே வரியில் சொல்வதானால், நாம் அனைவரும் இயற்கை நோக்கித் திரும்பினால்தான், இந்தப் பூவுலகம் புவி வெப்பமடைதலால் சந்தித்துவரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். 


நன்றி - த ஹிந்து