Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Thursday, July 30, 2015

கத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம்?- இயக்குநர் பேட்டி

  • ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
    ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
  • ஸ்ருஷ்டி டாங்கே
    ஸ்ருஷ்டி டாங்கே
படத்தில் ஒரு இடத்தில்கூட கட் இல்லை. புகை சம்பந்தமான விளம்பரம்கூட தேவையில்லை’ என தணிக்கை அதிகாரிகள் கொடுத்த பாராட்டாலும், ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களாலும் கோடம்பாக்கத்தின் கவனத்தை திருப்பி இருக்கிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.
இதை இயக்கியிருக்கும் இரா.சரவணன் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். இனி அவருடன்..
எப்படி வந்திருக்கிறது ‘கத்துக்குட்டி’?
படம் பண்ணப்போறேன்னு சொன் னப்ப அக்கறையா திட்டினதும் ஆத ரவா நின்னதும் ரெண்டு அண்ணன்கள். மூத்த அண்ணன் அமீர். இளையவர் சசிகுமார். படம் தயாரானதும் சசி சாருக்கு மட்டும் போட்டுக் காட்டி னேன். என்ன சொல்லப் போறார்னு பயங்கர பதற்றம். கார்ல என்னைக் கூட்டிட்டுப்போய் அவர் கையால சாப்பாடு போட்டு இரவு ஒரு மணி வரைக்கும் உட்காரவைச்சுப் பேசி னார். ‘நல்ல கதைன்னு தெரியும். ஆனா, இவ்வளவு நுட்பமா, காமெ டியா நீ பண்ணியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு’ன்னார். சில சீன், வசனங்களைக் குறிப்பிட்டு சொல்லி, ‘இதையெல்லாம் நான் எதிர்பார்க் கவே இல்லை’ன்னு பாராட்டினார். சின்ன அண்ணன்கிட்ட பாஸாய்ட் டேன். பெரிய அண்ணன்கிட்ட காட்ட பயமா இருக்கு!
ஆக் ஷன், த்ரில்லர் என மிஷ்கின் தோட்டத்தில் உருவானவர் நரேன். கிராமம், காமெடி என அவரை எப்படி மாற்றினீர்கள்?
கதை ரொம்ப பிடிச்சதால, எனக் காக முழுசா கால்ஷீட் ஒதுக்கி னார் நரேன். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய சேட்டையும் சில்லுண்டித்தன முமா நவரச நடிப்பில் விளையாடித் தீர்த்திருக்கார். சேறு, சகதின்னு புரண்டிருக்கார். ஒரு காட்சிக்காக ‘பாழடைஞ்ச கிணத்துக்குள்ள குதிக் கணும்’னு சொன்னேன். தயக்கமே இல்லாமல் குதிச்சார். ஆவேசமா வசனம் பேசுற ஒன்றரை நிமிஷக் காட்சியை ரவுண்ட் ட்ராலி போட்டு ஒரே ஷாட்டில் எடுக்கிற‌ ப்ளான். ரொம்ப சிரமம்தான். நரேன் விடாம முயற்சி பண்ணினார். கடைசியில மொத்த யூனிட்டும் கைதட்டி ஆரவாரிக்கிற அள வுக்கு பக்காவா பேசிட்டார். அந்த ஒரு ஷாட்டுக்காக நாள் முழுக்க செலவு பண்ணினோம். நரேனோட அர்ப்பணிப்பு அவரை தஞ்சாவூர் இளைஞராவே மாத்திடுச்சு.
சூரிக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்க.. எல்லா இடத்திலயும் ‘கத்துக்குட்டி’ புகழ் பாடுறாரே?
‘நான் நடிக்கிற படங்களிலேயே தனித்துவமானது கத்துக்குட்டி’ன்னு சூரி அண்ணன் கொடுத்த பேட்டி யைப் பார்த்துட்டு நானே அவர்கிட்ட ஆச்சரியமா கேட்டேன். ‘மீடியாக் கள்கிட்ட மட்டுமில்லாம, சிவகார்த்தி கேயன், விமல், சுந்தர்.சி, சுராஜ், மனோபாலான்னு கண்ணுல படுற அத்தனை பேர்கிட்டயும் கத்துக் குட்டியைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருக்கேன். இந்த படம் ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்!’னு சொன்னார். படத்துல ஜிஞ்சர்ங்கிற கேரக்டர்ல சூறாவளியா சுழன்று ஆடியிருக்கார் சூரி. பெரிய கம்பெனி களுக்கே தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியா இருக்கிறவர், ‘கத்துக்குட்டி’க்காக‌ 32 நாட்களைக் கொடுத்தார். மறக்கவே கூடாத உதவி. இன்னிக்கு சினிமா எடுக்கிறது சுலபம். ரிலீஸ் பண்றது மரண அவஸ்தை. அப்படியொரு சூழலில் சூரி அண்ணன் செய்த உதவிதான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் நகர்த்திட்டு வந்து, நாலு பேர் தேடிவந்து பிசினஸ் பேசுற அளவுக்கு கம்பீரமா நிறுத்தியிருக்கு.
யாரிடமும் உதவியாளராக இல் லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந் திருக்கீங்க. யாரிடமாவது வேலை பார்த்திருந்தால் நல்லா இருந்திருக் குமோன்னு நினைச்சீங்களா?
எடிட்டிங் ப்ளானோடு எழுதிய திரைக்கதை இது. அதனால, சிரமம் தெரியல. இன்றைய தொழில்நுட் பத்தை வைச்சு, ஷூட்டிங்கில் நாம தப்பு பண்ணினாலும் போஸ்ட் புரொடக் ஷன்ல சரிபண்ணிடலாம். எடிட் டிங், டப்பிங், மியூசிக்ல சரிபண்ண முடியாத தவறுகளைக்கூட டிஜிட்டல், கிராபிக்ஸ்ல சரிபண்ணிட முடியும். ஆனாலும், யாரிடமாவது வேலை பார்த்த அனுபவத்தோடு வந்திருந் தால் இன்னும் சீக்கிரமாவே படத்தை முடிச்சிருக்கலாம். மண் சார்ந்த படைப்பா வரணும்றதுக்காக தஞ்சை மக்களையே நடிக்க வைச்சேன். வட்டார வழக்கு நல்லா வரணுங்கிற தால, டப்பிங் மட்டும் 90 நாட்களைத் தாண்டி போச்சு. படம் முடிச்சுப் பார்க் குறப்ப தாமதமானது தப்பாத் தெரி யலை. அவ்ளோ நிறைவா வந்திருக்கு!
அடுத்த இலக்கு?
‘அடுத்த படத்துக்கும் இப்பவே ரெடி’ங்கிறார் நரேன். சூழல் சரியா வந்தால் ‘கத்துக்குட்டி-2’ பண்ணலாம் னார் சசி சார். 2-ம் பாகம் எப்படி இருக் கும்னு அவர் விவரிச்சப்ப அசந்து போயிட்டேன். நேர்ல அழைச்சுப் பேசிய கார்த்தி, ‘நல்ல போலீஸ் ஸ்க்ரிப் டோட வாங்க’ன்னார். முதல் படம் ரிலீ ஸாகுறதுக்கு முன்னாலேயே இதெல் லாம் கிடைக்கிறது பெரிய அங்கீகாரம்.
சினிமாங்கிறது பெரிய பாக்கியம். கோடி பேர்ல ஒருத்தருக்கு கிடைக் கிற வரம். ஆனா, சினிமாவுல தன் மானத்தைப் பறிச்சு, அழவைக்கிற விஷயங்கள் அதிகம். இங்கு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. பத்து ரூபாய்க்காக இழந்த மரி யாதை, லட்ச ரூபாய்ல கிடைச்சிடுமா? ஆனாலும், எல்லா சிரமங்களுக்கும் தயாராகித்தான் சினிமாவுக்கு வந்திருக்கேன். அமீர் அண்ணன் ஹீரோ, சமுத்திரகனி வில்லன். அதுதான் அடுத்த இலக்கு!
a

thanx - the hindu

Monday, July 27, 2015

சிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்டி+அனிருத் = பிரம்மாண்டமான புதுப்படம்

ஆர்.டி.ராஜா
ஆர்.டி.ராஜா
ஹாலிவுட் திரைப்படங்களில் நட்சத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறுவது திரைக்கதை. அங்கு பிரதான வேலையாக ‘ஸ்க்ரிப்ட் டாக்டர்’ என்ற கதை விவாதப் பணி பின்பற்றப்பட்டு வருகிறது. இது தமிழ் சினிமாவில் முன்பே இருந்ததுதான். இடையில் சில காலம் இதன் முக்கியத்துவம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அது முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அந்த வகையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களின் படப்பிடிப்புக்கு பின் அதை சரியே முறைப்படுத்துவது, படத்தின் புரோமோஷனுக்கு யோசனைகள் கொடுப்பது என்று பிஸியாக இருந்து வருபவர், ஆர்.டி.ராஜா. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ‘ஐ’ பட மேக்கப்மேன் ஸீன் ஃபுட், அனிருத் எனப் பிரமிக்க வைக்கும் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘24 ஏ.எம். ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவை சந்தித்தோம்:
சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
‘மெரினா’ படம் முடித்த உடனேயே, “அடுத்த படத்தை நீங்களே தயாரிக்கலாமே” என்று சிவா என்னிடம் கூறினார். அதன் பிறகும் பலமுறை கூறினார். சில காரணங்களால் தள்ளிப்போன அந்த விஷயம் இப்போது கைகூடி வந்திருக்கிறது. சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் ஒரு உதவி இயக்குநரும்கூட. திரைக்கு வருவதற்கு முன்பே சின்னத் திரையிலும் பெரிய திரையிலுமாக, பல படைப்புகளில் அவர் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக் கிறார். அவரை வைத்து ஒரு படம் தயாரிப் பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
அவர்தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் என்றும் ஒரு பேச்சு இருக்கிறதே?
இந்திய அளவில் இன்றைக்கு 90 சதவீத நடிகர்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். தமிழிலும் தனுஷ், ஆர்யா, விஷால், ஜீவா, விஜய் சேதுபதி என்று நிறைய ஹீரோக்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். அப்படி யிருக்க சிவாவும் தயாரிப்பாளராக மாறுவதில் தப்பில்லை. ஆனால் அவருக்குத் தயாரிப் பாளராகும் எண்ணமில்லை. சிவா இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றால் அதை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.
பி.சி.ஸ்ரீராம் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரையிலான பிரமாண்ட கூட்டணியை எப்படி அமைத்தீர்கள்?
பி.சி.ஸ்ரீராமுக்கு நாங்கள் ஸ்க்ரிப்ட் புக்கையே கொடுத்தோம். அவருக்கு கதை மிகவும் பிடித்ததிருந்தால் சம்பளத்தைக்கூட ஒரு பொருட்டாக அவர் நினைக்கவில்லை. ‘இது உங்களோட முதல் படம் ராஜா. நல்ல டீம். அதனால எனக்குப் பெரிய சம்பளம் வேணாம்’ என்று சொன்னார். சிவாவின் மேக்கப் டெஸ்டுக்காக ஆறரை மணிக்கு மேக்கப்மேன் ஸீன் ஃபுட் வருவார் என்றால் பி.சி.சார் அங்கே ஐந்தரைக்கே வந்திடுவார்.
‘மொழிங்கிறது அறிவு கிடையாது. நீ என்ன விரும்பினாலும் என்கிட்ட சொல்லு. நான் மேக்கப்மேனுக்கு அதை இங்கிலீஷ்ல சொல்லிடுறேன்’ன்னு புது இயக்குநர் பாக்யராஜுக்கு தைரியம் கொடுக்குறார். யார் கொடுப்பாங்க இப்படியொரு உற் சாகத்தை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் பி.சி.சார்.
மும்பைக்குப் போய் ரசூல் பூக்குட்டிக்கு கதை சொன்னோம். ‘இந்தக் கதையில எனக் கான வேலை அதிகம். நிச்சயம் பண்றேன்’ என்று அவர் சொன்னார். மேக்கப் மேன் ஸீன் ஃபுட்டுக்கு மொத்த ஸ்க்ரிப்டையும் மெயில் பண்ணினோம். அவருக்கும் பிடித்திருந்தது. இப்படித்தான் கதைக்கு ஏற்ற டெக்னீஷியன்களை ஒருங்கிணைத்தோம்.
நீங்கள் பல நிறுவனங்களுக்கு ஸ்க்ரிப்ட் டாக்டராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். எடுத்த படத்தை பிறரிடம் காட்டி சரி செய்யும் இந்த ஹாலிவுட் ஐடியா இப்போது தமிழ்த் திரையுலகுக்கும் வந்துவிட்டதா?
இந்த ஐடியா ஹாலிவுட்டுக்கு எப்போது வந்ததோ தெரியாது. ஆனால், தமிழில் இது பல காலமாகப் பின்பற்றப்பட்ட ஐடியாதான். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் கதை இலாகாவையே உருவாக்கி வைத்திருந்தார்கள். ஒரு கதையை செய்து பலரும் பலவிதமாக விவாதிச்சு ஓகே செய்த பிறகே படங்களை எடுத்தார்கள். படம் முடிந்த பிறகும் அந்தக் கதை இலாகா வினர் படத்தைப் பார்ப்பார்கள்.
ஒரு ரசிகனின் மனநிலையோடு படத்தை சரிசெய்வார் கள். இடையில் காணாமல்போன அதே வழக்கம்தான் இப்போது மறுபடியும் வந்திருக் கிறது. ரசிகனோட பார்வைக்குப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் ஒரு படத்தைச் சரிசெய்ய தொழில்நுட்பம் நிறைய வசதி களைச் செய்து கொடுத்திருக்கிறது. அதனால் மாற்றுப் பார்வைக்கு ஒரு படத்தைக் காட்டுவது தப்பில்லை. நான் நிறைய படங்களை அப்படிப் பார்த்து என் மனதில் பட்ட கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன். ஃபாக்ஸ் ஸ்டார், திருப்பதி பிரதர்ஸ், ஸ்டுடியோ க்ரீன், ரெட் ஜெயன்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பசங்க புரொடக்சன்ஸ் என பல நிறுவனங்களில் சில ஐடியாக்களுக்காக என்னை அழைத்திருக்கிறார்கள்.
படம் பற்றி கருத்து சொல்வதோடு புரோமோஷன் சம்பந்த மான ஐடியாக்களையும் நிறைய கொடுத்திருக் கிறேன். முறையான அனுபவத்துக்காக அறிவுமதி, செல்வபாரதின்னு பலரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். நிறைய விளம்பரப் படைப்புகள் பண்ணியிருக் கிறேன் ‘மான் கராத்தே’ உள்ளிட்ட படங் களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். ஒரு இயக்குநருக்கான எல்லா வேலைகளையும் தெரிந்துகொண்டுதான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன்.
எப்பவுமே திரைக்கதைதான் முதல் ஹீரோ. நல்ல திரைக்கதை எப்போதும் தோற்காது. ஹாலிவுட்டில் இப்பவும் முதலில் ஒரு நாவலைத்தான் தேர்வு செய்கிறார்கள். அதன் பிறகுதான் அதற்கேற்ற நடிகர்களை யும் டெக்னீஷியன்களையும் தேர்வு செய்வார்கள். இந்த முறையை எங்கள் ‘24 ஏ.எம். ஸ்டூடியோஸ்’ நிறுவனம் பின்பற்றும்.
தமிழ் சினிமா மீண்டும் கதாசிரியர்களின் கையில் வரும். அதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். என்னுடைய இந்த நிறுவனத்தில் லயோலா கல்லூரிப் பேரா சிரியர் ராஜநாயகம், அண்ணன் அறிவுமதி, இன்னும் சில பத்திரிகை நண்பர்கள் அடங் கிய ஆலோசனைக்குழு இருக்கிறது. இவங் களோட வழிகாட்டலில் சரியான திரைக்கதை கொண்ட சிறந்த படங்களை ‘24 ஏ.எம்.’ நிறுவனம் தேர்ந்தெடுத்து தயாரிக்கும்.

நன்றி - த இந்து

‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா? - விஜய்சேதுபதி பேட்டி

ஆக்‌ஷன் மசாலா படங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் அதிகரித்துவரும் தமிழ்சினிமாவில் விஜய்சேதுபதியின் பாதை வேறாக இருக்கிறது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற மென்னுணர்வுத் திரைப்படத்தைத் தயாரித்து அதில் 55 வயது முதியவராக ‘கைலாசம்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படம், இரண்டு சர்வதேசப் படவிழாக்களுக்குத் தேர்வாகியிருக்கிறது என்ற செய்தியை முதன்முதலாக பகிர்ந்தபடி நம்மிடம் உரையாடினார் விஜய் சேதுபதி…
இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் எது?
எமலிங்கம். ரசிகர்கள், இயக்குநர்கள் என இரண்டு தரப்பிலும் ‘புறம்போக்கு’ படத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ‘புறம்போக்கு’ ஒரு தோல்விப்படம் என்று ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்துகொள்ளத் திரையரங்குகளுக்குப் பயணம் செய்துவிட்டு வந்தவன் நான். படப்பிடிப்புக்காகச் செல்லும் எல்லா ஊர்களிலும் ‘எமலிங்கம்… எமலிங்கம்’ என்று ரசிகர்கள் என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறார்கள். எமலிங்கத்துக்கு அவ்வளவு ரீச் கிடைத்திருக்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஜனநாதன் சார் என்னைக் கூப்பிடுவார் என்று நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அவர் எனக்கு இத்தனை பெரிய கதாபாத்திரம் கொடுத்தது எனக்குப் பெரிய கவுரவம் என்று சொல்ல வேண்டும். அவரது அரசியல் அறிவாகட்டும், நடிகனுக்கு அவர் தரும் சுதந்திரமாகட்டும், யார் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்பதிலாகட்டும், அவரைப் போன்ற இயக்குநர்கள் நம்மிடம் அபூர்வம். எமலிங்கம் நான் மிகவும் விரும்பி நடித்த கதாபாத்திரம்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறீர்கள்?
படப்பிடிப்பில் நடிக்கும்போது சில வசனங்கள் நம்மையும் அறியாமல் வந்து விழும். இயக்குநரின் அனுமதியோடு, அவருக்கு உவப்பாகவும் காட்சிக்குப் பொருத்தமாகவும் இருந்தால் அதைப் பயன்படுத்துவோம். இது எல்லா நடிகர்களும் செய்வதுதான். ஆனால், இந்தப் படத்தின் காட்சிகளைப் பற்றி இயக்குநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு என் மீது நம்பிக்கை வந்துவிட்டது.
“நீங்கள் வசனம் எழுதுங்கள் சரியாக வரும்” என்றார், இயக்குநர் பிஜூ சார். வசனம் எழுதுவதற்கான தகுதி இதுவல்ல என்று நான் மறுத்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாகயில்லை. நாம உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியாகப் பேசுவோம் என்றார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியாகப் பேசினோம். சில காட்சிகளை நடித்துப் பார்த்தோம். அப்படி இந்தப் படத்தில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களையும் நான் நடித்துப் பார்த்தேன். காட்சிகளைப் பேசும்போதும் நடிக்கும்போதும் ரெக்கார்ட் செய்தோம். பிறகு அதைப் போட்டுப் பார்த்து வசனம் எழுதினேன். இந்த முறை எல்லாப் படத்துக்கும் அல்லது எல்லாருக்கும் சரியாக வருமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் பிஜு. விஸ்வநாத்தை நீங்கள்தான் அழைத்து வந்தீர்களா?
இல்லை. அவருக்கு அறிமுகமே தேவையில்லை. ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பவன். ‘பீட்சா’ படத்துக்கு முன்பு நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அவர் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். அப்போது வேறோரு கதையை அவர் இயக்க இருந்தார். தயாரிப்பாளர் கூட முடிவான நிலையில் அந்தப் படம் நடக்காமல் போய்விட்டது. பிறகுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ கதையை அவரிடம் கேட்டு அதை நான் தயாரிக்கிறேன் என்று அழைத்துவந்தேன்.
இயக்குநருக்கு எடிட்டிங் தெரியவில்லை என்றும், படத்தை நீங்கள்தான் எடிட் செய்தீர்கள் என்று செய்தி வெளியானதே?
அப்பட்டமான பொய். பிஜூ சாரின் திறமை, படைப்புக்கு அவர் காட்டும் நேர்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தப் படத்தை தயாரித்தது, நடித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் நான் மூக்கை நுழைக்கவில்லை. அவர்தான் இந்தப் படத்தை எடிட்செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதுதான் உண்மை.
55 வயது முதியவர் தோற்றத்தை விரும்பி ஏற்க என்ன காரணம்?
‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயது தோற்றத்தில் நடித்தது தானாக அமைந்த ஒன்று. ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோரைவிட எனது கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நலன் குமாரசாமி விரும்பினார். இந்தப் படத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன் என்பது முதலில் முடிவாகவில்லை. வசனமெல்லாம் எழுதி முடித்துவிட்டேன்.
முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த நடிகர் வேறொரு படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அவர்தான் நடிக்க வேண்டும் என்று நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். ஆனால், குறித்த காலத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை. படத்தையும் உடனே தொடங்கவேண்டும். அதனால் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா, மேக் அப் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா என்றேன். அவர் சம்மதித்தார். ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்றுதான் இந்தக் கதாபாத்திரத்தை முயன்றேன். அது சரியாக வந்திருக்கிறது என நம்புகிறேன்.
இந்தப் படம் முதுமையைப் பற்றிப் பேசுகிற படமா?
நிச்சயமாக இல்லை. இதுதான் இந்தப் படத்தின் கதை என்று வரையறுத்துச் சொல்லவே முடியாது. 55 வயது முதியவரின் ‘பேபிஸ் டே அவுட்’. அப்பாவை இழந்து ஒரு மாதமே ஆன ரமேஷ் திலக். அவசரகால அழைப்புக்கு ஆம்புலன்சில் வரும் மருத்துவ உதவியாளர். அவரது அப்பாவைப் போலவே அடம்பிடிக்கும் 55 வயது கைலாசத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருகிறார். அந்தப் பெரியவரிடம் அவன் மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவனுக்கு சவாலாகிறது. அவர்களுக்குள் உணர்வு ரீதியான இணைப்பும் கிடையாது. ஆனால் அந்தப் பயணத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் நம் ஒவ்வொருவரையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
பயணம் நெடுகிலும் கொட்டிக் கிடக்கும் அபத்த நகைச்சுவை ரசிகர்களுக்கு அனுபவமாக இருக்கும். பயணத்தின் முடிவு என்ன என்பதும் இந்தப் படத்துக்கு முக்கியமானது. ரசிகர்களுக்கு அது நிச்சயமாகப் பிடிக்கும். இந்தப் படத்தை என் அம்மாவுக்கு போட்டுக்காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு “உங்க அப்பனைப் பார்க்கிற மாதிரியே இருக்குடா!” என்று சொன்னார். அண்ணன், தங்கை ஆகியோரும் அதையேதான் சொன்னார்கள். கைலாசம் ரசிகர்களுக்கு நெருக்கமான மனிதனாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.


நன்றி- த இந்து

Thursday, July 02, 2015

மாரி -பக்கா கமர்ஷியல் கலக்கல் - இயக்குநர் பாலாஜி மோகன் சிறப்புப் பேட்டி

  • பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
    பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
  • ‘மாரி’ படத்தில் தனுஷ்.
    ‘மாரி’ படத்தில் தனுஷ்.
‘மாரி’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே கிடைத் துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
‘மாரி’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?
ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் ‘மாரி’ யில் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்க்கும் வழக்கமான கமர்ஷியல் படப்பாணியில் இல்லாமல் வேறு மாதிரி இருக் கும். என் முந்தைய இரண்டு படங்களிலும் கதையை முழு மையாக எழுதி முடித்துவிட்டு, அதன் பிறகு நாயகனைத் தேர்வு செய்தேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது தனுஷ் சாரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு ரசிகனாக தனுஷ் சாரை எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே இந்தக் கதையை எழுதி இயக்குகிறேன்.
உங்கள் முதல் இரண்டு படங் களை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். நட்சத்திரங்களும் அதிகம். அது கஷ்டமாக இல்லையா?
அதை நான் ஒரு பெரிய விஷயமாக மனதில் ஏற்றிக் கொள் ளவில்லை. என் முந்தைய படங் களைப் போல இதன் படப்பிடிப் புக்கு போனேன், கதையில் எழுதப்பட்ட காட்சிகளை இயக்கி னேன். அவ்வளவுதான். பெரிய செட், பெரிய நடிகர்கள் என்று மனதில் எதையும் ஏற்றிக் கொள் ளாமல் முந்தைய படங்கள் போலவே மிக வேகமாக எடுத்து விட்டேன்.
குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக முதலில் மாறியது உங்களின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். இப்போது பலரும் அதைக் கடைப்பிடிக்கிறார்களே?
வெள்ளித்திரை படங்கள் என் றால், ஒரு சின்ன யோசனையை வைத்துக் கொண்டு அதை படமாக பண்ணுவதுதான். அதையே இப்போது ஒரு குறும்படத்தை வைத்து வெள்ளித்திரை படமாக மாற்றுகிறார்கள். குறும் படத்தை வைத்துக் கொண்டு இயக்குநராகும் வாய்ப்பை பெறு வது ஹாலிவுட்டில் சாதாரணமாக நடக்கிறது. ஒரு புதிய இயக்கு நரின் குறும்படங்கள், அதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் ஆகியவை தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும். இதை ஒரு நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
‘மாரி’ படத்தின் பாடல்கள் எல்லாமே குத்துப் பாடல் ரகத்திலேயே இருக்கிறதே?
இப்படத்தின் கதை அப்படி. இதில் வேறு மாதிரியான பாடல் கள் எதையுமே திணிக்க முடி யாது. படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தனுஷ் - ரோபோ சங்கர் காமெடிக் கூட்டணி எப்படி வந்திருக்கிறது?
இப்படம் முழுக்க தனுஷ் சாருடன் ரோபோ சங்கர் வருவார். இருவரின் வசனங்கள், காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அதே போல, இப்படம் ரோபோ சங்கருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் .
உங்கள் முந்தைய படங்களைவிட ‘மாரி’ படத்தின் டிரெயிலர் கமர்ஷியலாக இருக்கிறதே. உங்களுக்கு கமர்ஷியல் இயக்குநராக வேண்டும் என்று ஆசையா?
வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு வேறு மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டேன். சூழ்நிலை காரணங் களால் ‘வாயை மூடி பேசவும்’ அமைந்து விட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் பண்ணி யிருக்க வேண்டிய படம் ‘மாரி’. ஒன்றரை வருடங்கள் கழித்து பண் ணலாம் என்று தனுஷ் சார் சொன்னதால் இப்படம் தாமதம் ஆனது அவ்வளவுதான். ‘மாரி’ படத் துக்கு பிறகும் நான் வெவ்வேறு களங்களில்தான் படம் பண் ணுவேன்.
‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே. அதற்கு என்ன காரணம்?
அப்படத்தின் இரண்டாம் பாதி யில் வசனங்களே இருக்காது. இதை எவ்வளவு சரியாக பண்ணி னாலும், அப்படம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே போய் சேரும் என்று தொடங்கும்போதே தெரியும். தயாரிப்பாளர் சசிகாந் திடம் நாலு கதைகளை நான் கொடுத்திருந்தேன்.
அவற்றில் இருந்து அவர் ‘வாயை மூடி பேசவும்’ கதையைத்தான் தேர்வு செய்தார். அதைத்தான் படமாக எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் நான் நினைத்ததை விட அதிகப்படியான மக்களிடம் போய் அப்படம் சேர்ந்தது.


thanx - thehindu

Saturday, May 23, 2015

இன்று நேற்று நாளை’ - ஃபேண்டசி காமெடி த்ரில்லர் - ஜீரோ கிலோமீட்டர்’ இயக்குநர் திருப்பூர் ரவிக்குமார் பேட்டி

இணையத்தில் பிரபலமான குறும்படங்களில் ஒன்று ‘ஜீரோ கிலோமீட்டர்’. அதில், திருப்பூரில் கதவைத் திறக்கும் நாயகன் சென்னையில் இறங்கி நடக்கும் அதிசயம் நடக்கும். அந்தக் குறும்படத்தின் இயக்குநர் ரவிக்குமாருக்கு, கோடம்பாக்கம் தன் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்..
திருப்பூரில் நூல் விற்பனை செய்யும் சாதாரண குடும்பத்துப் பையன். பள்ளியில் படிக்கிறப்போ ‘கனவு’ என்ற அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் படங்களை ரசித்துப் பார்த்தேன். இதேமாதிரி நாமளும் குறும்படம் எடுக்கலாம்ணு தோணுச்சு.
10 நிமிடம் மட்டும் பேட்டரி நிற்கும் ஒரு வீடியோ கேமரா கிடைச்சது. அத வச்சு ‘லீவு’ன்னு ஒரு குறும்படம் பண்ணேன். அதுக்குக் கிடைச்ச கைதட்டல், பாராட்டுனால அதைவிட நல்ல படங்களை எடுக்க முடியும்ணு தோணுச்சு. அப்படித்தான் ‘ஜீரோ கிலோமீட்டர்’ குறும்படத்தை எடுத்தேன். அது என்னை சினிமா வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திடுச்சு.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?
‘முண்டாசுப்பட்டி’ பட இயக்குநர் ராம், பால்ய நண்பன். சிறுகதைகளும் நிறைய படிப்பேன். ஒரு சிறுகதையைத் தேர்வு செஞ்சு அதை எழுதின எழுத்தாளரிடம் அனுமதி வாங்கி, குறும்படமா எடுத்து நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். என்னோட படத்தைக் காத்திருப்பு பட்டியலில் வச்சுருந்தாங்க. ஆனா, ராம் படம் தேர்வாயிருச்சு. ராமோட நிகழ்ச்சியில பங்கேற்க சென்னை வந்தேன்.
அப்போ 32 படங்கள்தான் நாளைய இயக்குநர்ல திரையிடுவாங்க. என் படத்தைவிட மோசமா எடுத்த படங்களுக்கு திரையிடல்ல இடம் கிடைச்சிருந்தது. அதனால நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கிட்ட பேசினேன். கூடுதலா நான்கு படங்களைத் திரையிட்டாங்க. என்னோடதும் அதுல ஒண்ணு. அப்படியே இறுதிச் சுற்றுவரைக்கும் வந்தோம். என்னோட `ஜீரோ கிலோமீட்டர்’ படம் 3-வது இடத்தைப் பிடிச்சது. முதல் பரிசு கிடைக்கலேன்னாலும் அங்கே நலன் குமரசாமி நட்பு கிடைச்சது.
இடையில் `கனாக் காணும் காலங்கள்’ தொலைக்காட்சி தொடர் இயக்கியது நீங்கள்தானே?
ஆமாம். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியோட இறுதிச் சுற்றுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தார் இயக்குநர் பாண்டியராஜ். முதல் மூன்று இடங்களைப் பிடிச்ச யாராவது ஒருவரை உதவி இயக்குநரா சேர்த்துக்கிறதா சொல்லியிருந்தார். அவர் கிட்டப் பேசினேன். அவர் அடுத்த படத்துக்கு கூப்பிடுறதா சொன்னார். அப்போ நலன் குமரசாமி, `கனாக் காணும் காலங்கள்’ வாய்ப்பு இருக்கு போலாமான்னு கேட்டார். ஒப்புகிட்டேன்.
அதுல நான் இணை இயக்குநர். சில நாட்கள்லயே தனியா ஷூட் பண்ண ஆரம்பிச்சேன். நலன் தனியா ஷூட் பண்ணுவார். முதல் நாள் செஞ்ச தப்ப அடுத்த நாள் சரி பண்ணிக்குவோம். அப்புறம் நலன் தொடர்லேர்ந்து வெளியே போயிட்டாரு. நான் தனியா தொடர்ந்தேன். மாசம் முடிஞ்சா கணிசமான சம்பளம் கைக்கு வரும். அதனால் லகான் கட்டின குதிரை மாதிரி மண்டை முழுக்க எபிசோட்கள்தான் ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு கட்டத்துல எங்க இப்படியே தேங்கிருவோமோன்னு நெனச்சு, அங்க இருந்து வெளியே ஓடியாந்துட்டேன்.
வந்த உடனே வாய்ப்பு கிடைச்சதா?
அதுக்கும் நலன்தான் காரணம். அவர் `சூது கவ்வும்’ படம் பண்ணினப்போ அதுல நான் இணை இயக்குநர். அப்போ அந்தப் படத்தோட தயாரிப்பாளர் சி.வி. குமார் “உங்ககிட்ட கதை இருக்கா”ன்னு” கேட்டார். இருக்கு சார் ஒன்லைன்தான், டெவலப் பண்ணணும் அப்படின்னேன். அவர் “சீக்கிரமா ரெடி பண்ணுங்க”ன்னு உற்சாகப்படுத்தினார். அப்படி உருவான கதைதான் இது.
இது என்ன கதை?
டைம் மெஷின் மூலமா சுதந்திரப் போராட்ட காலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் செல்லும் விஷ்ணுவும் கருணாகரனும் அடிக்கும் லூட்டிகள்தான் கதை. ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார். இது ஹியூமர் ஃபேன்டஸி.
முதல் படத்திலேயே ஃபேன்டஸி கதையைக் கையாளுவது கடினமாக இல்லையா?
எனக்கு அது ஈஸியான சப்ஜெக்ட்தான். ஆடியன்ஸும் ஈஸியா புரிஞ்சு ரசிக்கிற மாதிரி திரைக்கதை இருக்கும். என்னோட அடுத்த படமும் ஃபேன்டஸி படம்தான்.
நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு உங்களுக்கு விருப்பமான தேர்வை செய்ய முடிஞ்சதா?
இந்தப் படத்தோட மதிப்பு எவ்வளவு, யார் இருந்தா எவ்வளவு ஜெயிக்கும் அப்டின்னுதான் தயாரிப்பாளர் பார்ப்பார். நானும் அறிமுக இயக்குநர்தான். பெரிய நட்சத்திரங்கள், இசையமைப்பாளர், கேமராமேன் அப்படின்னு எடுக்கறதா இருந்தா, பெரிய இயக்குநரை வச்சே படம் எடுத்துருவாங்களே! மற்றபடி, நாம சினிமா எடுக்கணும்னுதான் வந்திருக்கோமே தவிர, குறிப்பிட்ட சிலரை வச்சு சினிமா எடுக்கணும்னு வரலையே.

நன்றி - த இந்து

Saturday, March 28, 2015

கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன்? - சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் பேட்டி

  • சிம்பு, யுவனுடன்
    சிம்பு, யுவனுடன்
  • படம். எல்.சீனிவாசன்
    படம். எல்.சீனிவாசன்
  • மனைவி கீதாஞ்சலியுடன்..
    மனைவி கீதாஞ்சலியுடன்..
‘‘உண்மை இதுதான். தற்போதைய சினிமாவில் சுதந்திரம் அறவே இல்லை. நான் படம் எடுக்கத் தொடங்கிய 2000-ல் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. 100 படங்களில் 99 படங்கள் காமெடிப் படங்கள்தான் விற்கும் என்ற நிலை அப்போது இருந்ததில்லை ’’
ஒவ்வொரு முறையும் வெப்பம் தெறிக்கக் கோபத்தோடு பேட்டிக்குத் தயாராவதுதான் இயக்குநர் செல்வராகவன் ஸ்பெஷல். சிம்புவை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து’வுக்காக அளித்த பேட்டியிலிருந்து...
‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இடைவெளியை எப்படி உணர்கிறீர்கள்?
தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஓடிக்கொண்டே இருக்கும்போது நின்று மூச்சு வாங்கிக்கொள்வோம் இல்லையா.. அப்படித்தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன்.
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வழியே ஏற்படுத்திய தாக்கத்தை, நீங்கள் புதிய களங்களில் உருவாக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் ஏற்படுத்தவில்லையே?
தொடர்ந்து காதல் படங்களையே கொடுக்க முடியாது. நான் இங்கே காதல் படங்கள் மட்டும் எடுப்பதற்காக வரவில்லை. அப்போது எனக்கு 22, 23 வயது இருக்கும். அதனால் சில படங்கள் அந்த வயது அனுபவத்தில் இருந்திருக்கலாம். அதையே தொடர்ந்தால் பணத்துக்காக மட்டுமே இயங்கும் ஆளாக மாறிவிடுவோம். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஃபிலிம்மேக்கர் பல வகைப்படங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.
உங்கள் படங்களைப் படமாக்கும்போது திரைக்கதையின் முதல் காட்சியில் தொடங்கி வரிசையான முறையில் படமாக்குவீர்கள் என்பது உண்மைதானா?
சில படங்களை அப்படித் தொட்டுத் தொடர்ந்திருக்கிறேன். அதுமாதிரி செய்யும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. படக்குழுவினர் எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்கு முக்கியம். எல்லா தருணங்களிலும் அப்படிச் செய்ய முடியாத சூழலும் உருவாகும். தொடக்கத்தில் 15 முதல் 20 காட்சிகள் வரைக்குமாவது வரிசையாக எடுக்கும்போது கதையோடு நம்மை இணைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படைப்பாளியின் சுதந்திரத்திற்குள் தணிக்கைக் குழு அதிகம் தலையிடுவதாகவும், படத்தை ஆராய்ந்து தேர்ந்த விமர்சனம் வைப்பவர்கள் அங்கே குறைவு என்றும் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீகள்?
என் படங்களுக்கு சென்சாரில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. அவர்கள் முன் வைக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.
உங்கள் படங்களை மணிரத்னம் தொடர்ந்து பாராட்டிவந்திருக்கிறார். தற்போது அவரும் காதல் கதைக்குத் திரும்பியிருக்கிறார் என்று தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. வேறுவேறு மனநிலைகளில் கிரியேட்டர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காதல் கதைகளைக் கொடுக்க இது சரியான நேரம்தான். தற்போதைய சூழலில் காதல் படங்கள் எதுவும் இல்லை. காமெடிப் படங்களைத்தான் இழுத்துப்போட்டு இயக்குகிறார்கள். இப்போது காதலைத் தொட்டால் புதிதாகத்தான் இருக்கும்.
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்ற முடிவெடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளில் இணைந்திருந்தீர்கள். திடீரென ஒரு கட்டத்தில் விலகியும் விட்டீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நடக்காததைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. சினிமா எல்லோரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய விஷயம். சரியாக இல்லை என்றால் அதன் உறுதி கம்மியாக இருக்கும். ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்ததை நோக்கி நகர்வதுதானே சரி.
இனி திரைப்படமே எடுக்க வேண்டாம் என்ற மனநிலையோடு பேட்டி கொடுத்தவர், நீங்கள். அந்த கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா?
எப்போதுமே என் கோபங்களுக்குச் சரியான காரணம் இருக்கும். இங்கே இருக்கும் சூழ்நிலை மீதுதான் என் கோபம். மும்பையில் சினிமா வேலை செய்யும்போது மரியாதை இருக்கிறது. இங்கே இல்லை. இது பணத்துக்கான தொழில் என்று 90 சதவீதம் ஆட்கள் பார்க்கிறார்கள். பணம் மட்டும்தான் சினிமாவா? பணம் அவசியம்தான். அதுவே முழுக்க அவசியமாகிவிடக் கூடாதே. என் கோபம் இதுதான்.
தனுஷின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது. ஒரு அண்ணனாகத் தற்போது அவருடைய ஓட்டத்தை எப்படி கவனிக்கிறீர்கள்?
சின்ன வயதில் இப்படி இருந்தோம், அப்படிச் சுட்டித்தனம் செய்தோம் என்ற ஏக்கங்கள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து எல்லோருக்கும் தனித் தனிக் குடும்பம், திசைகள் வந்துவிட்டன. அதைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு எல்லைக்கோடும் உருவாகியுள்ளது. அண்ணன், தம்பி என்பதை எல்லாம் கடந்து தனித் தனி இடம் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும்.
சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறீர்களே?
கூட்டமாக இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சுற்றி நின்றாலே எனக்குப் பிரச்சினை. நான் எனக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறேன்.
ட்விட்டரில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது தொடர்பான பதிவுகளையே நிரப்புகிறீர்களே?
அது ஒரு வரம்தான். எவ்வளவு பேர் குழந்தையின் அருமையைப் புரிந்துகொள்கிறோம். பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக நேரத்தை வீணாக்குவது விசேஷமானது. அதை விட்டுவிடக் கூடாது.
அவ்வளவு எளிதாகப் படப்பிடிப்புக்கு அழைத்து வர முடியாதவர் என்று கூறப்படும் சிம்புவை நீங்கள் இயக்க இருப்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது..
‘காதல் கொண்டேன்’ படம் இயக்கிய நாட்களில் இருந்தே சிம்புவைத் தெரியும். என்னையும்கூட, ‘இவன் அப்படி, இப்படி’ என்று கூறுகிறார்கள். சிம்புவையும் அதுமாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நெருக்கமான இரண்டு நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தினை உங்கள் மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார். படப்பிடிப்பில் உங்களையும் பார்க்க முடிகிறதே?
நான் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள், ‘நான் படம் இயக்கப்போகிறேன்’ என்று ஒரு டீமோடு வந்து கேட்டாங்க. ‘ஓ தாராளமாக’ என்று கதையைக் கொடுத்துவிட்டேன். திரைக்கதை என்னோடது என்பதால் படப்பிடிப்பில் கதையில் ஏதாவது மாற்றம் வரும்போது நான் அங்கே இருந்துதானே ஆக வேண்டும்?
சிம்புவை வைத்துத் தொடங்கும் படத்தின் கதைதான் என்ன?
ஒவ்வொரு முறை ஒரு படம் செய்யும்போதும் நிறைய யோசிப்பேன். இதைத் தொடுவோம் எனும்போது எனக்கு முதலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். மீண்டும் ஒரு சோகமான காதல் கதையோ, பாதிக்கப்பட்ட மனதின் கதையோ எடுக்க முடியாது. இந்தப் படத்தில் என்னவெல்லாம் ஈர்க்க முடியும் என்று பார்க்கும்போது என்னோட தேடலும் அதை நோக்கியதாக இருக்கிறது. அப்படி ஒரு படமாகத்தான் இதுவும் வரும்.
விக்ரமை இயக்கப் புறப்பட்டு ‘லடாக்’ வரை படப்பிடிப்புக்கு போய் படத்தைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன். சிம்பிள். அவ்வளவுதான்.


நன்றி  - த  இந்து

Sunday, March 08, 2015

புறம்போக்கு -ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா யார் டாப்?-இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். பேட்டி

  • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
    ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
  • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
    ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
‘‘இந்த சமூகத்தின் எல்லா பிரதிபலிப்புகளும் சிறைச்சாலைக்குள்ளும் இருக்கிறது. சிறைக்குள் ஒரு பயங்கரவாதியும் இருந்திருக்கிறான். உலகை மாற்றி அமைக்க முயற்சித்த ஒரு புரட்சியாளனும் இருந்திருக்கிறான். ‘சிறைச்சாலைக்குள் நுழையும்போது ஒரு கிராமத்துக்குள் நுழையும் மனநிலையோடு செல்’ என்கிறார் மாவோ.
‘புறம்போக்கு’ படத்தின் வழியே நானும் அப்படித்தான் நுழைய முயற்சி செய்திருக்கிறேன்’’ என்று பேசத் தொடங்குகிறார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பை முடித்து, டப்பிங் மற்றும் ஒலி, ஒளிக் கலவை பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து…
இந்தப் படத்துக்காக ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
குலுமணாலியில் பனிப்பொழிவோடு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி னோம். வாசல் கடந்து இறங்கினால் 2 அடி முதல் 3 அடி வரை பனி இருக்கும். 60 பேர் கொண்ட குழுவோடு சரியாக திட்டமிட்டு புறப்பட்ட பயணம் அது. கிட்டத்தட்ட 50 நாட்கள்.
ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கப் பட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டோம். எந்த பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அந்த பாதிப்புக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி பயனுள்ளதாக இருந்தது.
இரவு மரங்கள் மீது தூங்கும் பனி காலை 7 மணிக்கு சூரியன் உதித்ததும் உருகிவிடும். மரங்களில் பூத்திருக்கும் அந்த பனித் துளிகளை படமாக்குவது எனது திட்டம். அதனால் அதிகாலை நேரத்திலேயே ஆர்யாவும், கார்த்திகாவும் மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருந்தனர். ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையிலான தயாரிப்பு என்பதால் எல்லா முடிவு களையும் நானே எடுக்க முடிந்தது.
இப்படத்துக்கு இயல்பான ஆட்கள் அமைந்தது இலகுவாக படப்பிடிப்பை நகர்த்த உதவியது. ஆர்யாவுக்கு ஷூட்டிங் இல்லை என்றால்கூட அன்று செட்டில் இருப்பார். இதனால் யாருடைய பகுதியையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் சூழல் அமைந்தது.
அரசியலை ஆழமாக உற்று நோக்கு பவர் நீங்கள். நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட் டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்தில் ஆண்டொன் றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள். அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள். நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது.
அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும், அதை ஆடுகளுக்கு உணவாக்கி, வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும், இந்தப் பணிக்கு 5000 பேர் தேவையில்லை. கிராமத்தில் இருக் கும் 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையையும் முன் வைக்கிறது.
நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆண்டின் முடிவில் வங்கி கூறியதுபோல நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், அந்த கிராமத் தில் வேலையில்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயம் உருவாகிறது.
ஏங்கெல்ஸ் இங்கே, ‘ஆடுகள் மனிதனை துரத்தி விட்டன’ என்று முடித்திருப்பார். சரியான பொருளாதார அறிஞர்களால் நாடு வழிநடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் இன்றைக்கு பூதாகரமாக வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நாம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகிறது. எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு. இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்துக்குத் தள்ளிவிடும்.
தற்போதைய சினிமா லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?
சினிமாவின் மூலம் சமூக மாற் றத்துக்கு வித்திட முடியும் என்கிற போக்கு மாறி லாபம் மற்றும் வரு மானத்தை நோக்கிய பயணமாக இது மாறிவிட்டது. இது சரியாகப் படவில்லை. இது தொடர்ந்தால் தெருக்களை திரையரங்குகளாக மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று படுகிறது. படத்தை வெளியிட திரையரங்குகளே கிடைக்கவில்லை என்றால் சாலையோரத்தில் வேட்டி கட்டி படம் காட்ட வேண்டியதுதான்.
மலையாள இயக்குநர் ஜான் ஆப்ரஹாம், ‘அம்ம அறியான்’ என்ற ஒரு படத்தை எடுத்தார். கிராமம் தோறும் நிதி வசூல் செய்து, படத்தை எடுத்து, அதே மக்களிடம் போட்டுக் காட்டினார். அதற்கென ஒரு அமைப்பை உருவாக்கி கேரளா முழுக்க படத்தை திரையிட்டார். திரையில் தோன்றும் அவர்கள்தான் நேரிலும் வந்து தெருவில் திரைப்படத்தை போட்டுக் காட்டிவிட்டு செல்வார்கள். ஜான் ஆப்ரஹாம் கஷ்டப்பட்டு செய்ததை இன்றைய டிஜிட்டல் வளர்ச்சியால் எளிதாக செய்ய முடியும்.
மெகா சினிமாவில் புதிய அனுபவங்களோடு மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது சாத்தியமே இல்லை என்றால் ஜான் ஆப்ரஹாம் செய்தது மாதிரி கிளம்ப வேண்டியதுதான்.
‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் படத் தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட காரணம் என்ன?
தாமதம் எல்லாம் இல்லை. குறித்த காலத்தில் படத்தை முடித்திருப்பதாகவே கருதுகிறேன். மூன்று ஹீரோக்கள், மும்பையில் உள்ள நாயகி என்று எல்லோரையும் ஒன்றிணைத்து. பணி யாற்ற வேண்டும். குலுமணாலி, ஜெய் சால்மர், பெங்களூரு, சென்னையில் சிறைச்சாலை செட் என்று லொக்கேஷன் களை அமைக்கவே நிறைய காலம் ஆனது.
நான் இமாச்சல பிரதேசத்தில் ஷுட்டிங்கில் இருக்கும்போது சென்னை யில் சிறைச்சாலை செட்டை போட முடி யாது. ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து அறைகள் தொடங்கி அறை யின் வண்ணம் வரைக்கும் சரியாக கவனிக்க வேண்டும். இந்த சிறைச் சாலை செட்டுக்கே 2 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் படப் பிடிப்பு 2 மாதங்கள். ஆகமொத்தம் 4 மாதங்கள் ஆனது.
அப்படி பார்க்கும்போது சரியான நேரம்தான் எடுத்துக்கொண்டோம். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதைக்களத்தை அமைத்திருந்தேன்.
விவசாயத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கவிருப்பதாக கூறினீர் களே?
விவசாயத்துக்கு உகந்த நிலப்பரப்பு நம்முடையது. அதை சரியாக பயன் படுத்தவில்லை. விளை நிலங்களின் உற்பத்தி இந்த ஆண்டு மட்டும் 6 சதவீதம் குறைந்திருப்பதாக கணக் கெடுப்பு கூறுகிறது. பாரம்பரிய விதை களை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழலை இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் உருவாக்கி வைத்திருக் கிறது.
ஒவ்வொரு பகுதி மண்ணின் வெப் பத்துக்கும், குளிர்ச்சிக்கும் விதைகளின் பரிணாம மாற்றம் உண்டு. இதெல்லாம் இப்போது நமக்கு மட்டுமே என்று இல்லை. யாரிடமோ பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் மர்மமான பிரச்சினைகள்தான்.
இப்படி விவசாயப் பின்னணியில் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அது அடுத்த படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.
எஸ்.பி.ஜனநாதன்


நன்றி- த  இந்து

Tuesday, March 03, 2015

திருட்டு பயலே, பிசாசு ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர்.(பி சி ஸ்ரீராம் சிஷ்யர்) சிறப்பு பேட்டி

  • பி.சி. ஸ்ரீராமுடன்...
    பி.சி. ஸ்ரீராமுடன்...
  • ‘பிசாசு’ படப்பிடிப்பில்...
    ‘பிசாசு’ படப்பிடிப்பில்...
  • ‘பிசாசு’ படப்பிடிப்பில்...
    ‘பிசாசு’ படப்பிடிப்பில்...

வெற்றிக் கூட்டணி எப்படி இருக்க வேண்டும்?- ரவிராய் சிறப்புப் பேட்டி



புகழ்பெற்ற புகைப்படப் பத்திரிகையாளராக இருந்து, ரவிராய் என்ற பெயருடன் 'பிசாசு’ படத்தின் ஒளிப்பதிவாளராகக் கவனம் ஈர்த்திருக்கிறார் வைட் ஆங்கிள் ரவிசங்கர். பி.சி. ஸ்ரீராம் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட ரவிராயைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
புகைப்படக் கலையைத் தேர்ந்துகொண்ட நாட்கள் பற்றி ஒரு சின்ன ப்ளாஷ் பேக் கூறுங்களேன்..
எனது அப்பா காமராஜுலு முழுநேரப் பத்திரிகையாளர். தினத்தந்தி, தமிழ்நாடு, மக்கள் குரல் பத்திரிகைகளில் செய்தி ஆசிரியராக இருந்தவர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனது சித்தப்பா கணல்மைந்தன் என்னைத் திரைப்படக் கல்லூரியில் சேரும்படி சொன்னார். அவர் தமிழ்ப் பேராசிரியர். வானம்பாடி இயக்கக் கவிஞர். அவர்தான் “எல்லோரையும்போல் என்ஜினியரிங் படிக்காதே. கலைசார்ந்த ஒரு துறையை எடுத்துக்கொள் உன் வாழ்க்கைக்குப் புதுப் பரிமாணம் கிடைக்கும் ” என்றார்.
அவர் சொன்னது என்னைக் கவர்ந்துவிட்டது. புதுக் கல்லூரியில் பி. ஏ. சோசியாலஜி படித்தேன். பிறகு கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், செய்தியாளராக இருந்து பின்னர் பத்திரிகைப் புகைப்படக் கலைஞராகப் புகழ்பெற்ற சுபா சுந்தரத்திடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவர் என் அப்பாவின் உயிர் நண்பர். அவரை மாமா என்றுதான் அழைப்பேன். ஆறே மாதத்தில் என்னை போட்டோகிராபர் ஆக்கிவிட்டார்.
விகடன் பத்திரிகைக்குச் சுபா சுந்தரம் அவர்கள்தான் அட்டைப்படக் கட்டுரைக்குப் புகைப்படம் எடுப்பார். புகைப்படங்களைக் கொடுக்க நான் விகடன் அலுவலகத்துக்குச் செல்வேன். அப்படிச் செல்லும்போது அங்கே பத்திரிகையாளர் சுதாங்கனைச் சந்தித்தேன். அவர்தான் எனக்கு முதல் அசைன்மெண்ட் கொடுத்தார். அன்று தொடங்கிய பணி என்னை வைட் ஆங்கிள் ரவிசங்கராக மாற்றியது.
வைட் ஆங்கிள் என்ற பெயர் உங்களுடன் எப்படி ஒட்டிக்கொண்டது என்பதைச் சொல்லவில்லையே?
முழுநேர புகைப்படப் பத்திரிகையாளன் ஆன பிறகு ஒரு கட்டத்தில் திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்கிறோமே என்ற எண்ணம் வந்தது. இப்படி எந்தப் புதுமையும் இல்லாமல் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தால் நாம் காணாமல் போய்விடுவோம் என்று உள்ளுணர்வு என்னை எச்சரிக்கை செய்தது.
அப்போதுதான் இந்தியா டுடே ஆங்கிலப் பத்திரிகையின் போட்டோ எடிட்டர் ரகு ராய் எடுத்த படங்களை கவனித்தேன். அந்த இதழில் அவைப் புகைப்படக் கட்டுரைகளாக வெளியாகும். அவை என்னைக் கவர்ந்தன. அவர் ப்ளாஷ் இல்லாமல் இயற்கை ஒளியில் படமெடுப்பவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் இவரது பாணியை நாம் பின்பற்றினால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
உடனடியாக அவரது பாணிக்கு மாறினேன். இயற்கையாகக் கிடைக்கும் வெளிச்சத்தை மட்டும் பயன்படுத்தினேன். படங்களில் இடம்பெறும் மனிதர்கள் மீதும் பொருட்கள், இயற்கை ஆகியவற்றின் மீது ஒளி, நிழல் இரண்டும் சரிசமமாக இழையும் பாணியில் படங்களை எடுக்கத் தொடங்கினேன் அந்தப் பாணிக்குப் பாராட்டுகள் குவிந்தன.
தவிர அகன்ற கோணங்களில் படம்பிடிப்பதில் ஆர்வம் உந்திட வைட் ஆங்கிள் லென்ஸ்களைப் பயன்படுத்தி அதிகப் படங்களை எடுத்துவந்தேன். கொஞ்சம் பூடகமான தண்மையையும் குழைத்துக்கொண்டு நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்து பாராட்டிய நெருக்கமான ஊடக நண்பர்கள் என்னை ’ வைட் ஆங்கிள் ரவிசங்கர்’ என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளிலிருந்து விலகிப் பின்னர் தனியே புகைப்பட ஏஜென்ஸி தொடங்கியபோது அதற்கும் ‘வைட் ஆங்கிள்’ என்றே பெயர் வைத்தேன்.
புகைப்பட இதழியலிருந்து திடீரென்று சினிமா ஒளிப்பதிவுக்குத் தாவியது ஏன்?
கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த ’சுபமங்களா’ இதழுக்காக நண்பர் இளையபாரதி விரிவான இலக்கிய நேர்காணல்களைச் செய்தார். இதற்காக நவீன தமிழ் இலக்கியவாதிகளை, அவர்கள் அன்றாடப் பொழுதுகளில் எப்படி இருப்பார்களோ அப்படியே இயல்பாகப் பதிவுசெய்தேன். அது மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதேபோல முன்னணி அரசியல் தலைவர்கள் பலரையும் புகைப்படமெடுத்தேன். கலைஞர் மு. கருணாநிதியை தரையில் அமரவைத்துப் படமெடுத்தேன். முதலில் மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட அவர், படங்களைப் பார்த்த பின் தன்னை லுங்கி மற்றும் பனியனுடன் படமெடுக்க என்னை அனுமதித்தார்.
ஒரு புகைப்படக்காரனாக என்னைக் கவனித்துக் கொண்டிருந்த பி.சி. ஸ்ரீராம் சார் மனம் திறந்து பாராட்டுவார். இத்தனை பெரிய மேதை நம்மைப் பாராட்டுவதா என்று ஒவ்வொரு முறையும் நெகிழ்ந்துபோவேன். ஒருமுறை என்னிடம் “கண்காட்சி வைக்கிற மாதிரி ஏதாவது செய்” என்றார். மார்கழி இசை விழாவில் பாடும் பாடகர்கள் கலாச்சார இசையை லயித்துப் பாடும்போது அவர்களின் உடல்மொழியும், முகபாவங்களும் என்னைக் கவர, பல கலைஞர்களை மணிக் கணக்கில் படமெடுத்து அவற்றைக் கண்காட்சியாக வைத்தேன்.
என் அழைப்பை ஏற்றுக் கண்காட்சியைக் காண இரவு பதினோரு மணிக்கு வந்த அவர், நள்ளிரவு தாண்டியும் படங்களை ஆழ்ந்து ரசித்தார். படங்களை அவர் சிலாகித்த விதம் என்னை உருக்கியது. சுபா சுந்தரத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு குருவைக் கண்டுகொண்டதை உணர்ந்து மறுநாளே அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். 6 ஆண்டுகள். பி.சி. எனும் ஒளிப் பள்ளியில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது.
ஒளிப்பதிவில் அவரது சாதனைகளைப் பேச நேரம் போதாது. அதைவிட அவரது மனிதாபிமானம் உயர்வானது. தனது எல்லா உதவியாளர்களுக்கும் முதல் பட வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துவிடும் அபூர்வக் கலைஞன். சமீபத்தில் அவரைக் காணச் சென்றிருந்தேன். அப்போது பிரபல பத்திரிகையிலிருந்து அவரை வீடியோ பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் மெல்ல ஒதுங்கினேன்.
அத்தனை பரபரப்பிலும் என்னைக் கண்டு அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டவர், “இவனைப் பேட்டி எடுங்கள். ‘பிசாசு’ படத்தின் ஒளிப்பதிவாளன். என் மாணவன். என்னைவிடச் சிறந்த ஒளிப்பதிவாளன்.” என்று வந்தவர்களிடம் என்னைப் பேட்டி எடுக்குமாறு செய்துவிட்டார். அந்தப்பேட்டிக்கு என்னைப் பற்றி அவரே முன்னுரையும் அளித்தார். அவர்தான் பி.சி.
திருட்டுப் பயலே படத்துக்குப் பிறகு ஏன் இத்தனை இடைவெளி?
வலுவான கதைகள் கொண்ட படங்கள் அமையவில்லை. எனவே நிறையப் படங்களை மறுத்துவிட்டுக் காத்திருந்தேன். காட்சிமொழியை நம்பிக் கதைசொல்லும் இயக்குநர்களோடு அதிகம் பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான வாய்ப்பை மிஷ்கினும் பாலாவும் எனக்கு அளித்தார்கள்.
மிஷ்கினிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு ஒளிப்பதிவாளனிடமிருந்து இயக்குநரும், இயக்குநரிடமிருந்து ஒளிப்பதிவாளனும் கற்றுக்கொள்ளும் விதமாகக் கூட்டணி அமைய வேண்டும். ஒரு வெற்றிப் படத்துக்கான கூட்டணிக்கு இது முக்கியம் என்பது என் தனிப்பட்ட கருத்து.


நன்றி  - த  இந்து

Sunday, March 01, 2015

ஒய் திஸ் கொலை வெறி நாயகனின் நிலா அது வானத்து மேல வின் காப்பியா?-ஆண்ட்ரியாவின் ஃபேமிலி (லிப் லாக் ) ஃபிரண்ட் பேட்டி

அனிருத் படம்: எல்.சீனிவாசன்
அனிருத் படம்: எல்.சீனிவாசன்
குருவி தலையில் பனங்காயை வைத்தது போல மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற புகழைச் சுமந்து நிற்கிறார் அனிருத்.
‘3’ படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவரைச் சந்தித்தோம். பியானோவில் விரல்களை ஓடவிட்டவாறு நம் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனிருத்.
இவ்வளவு சீக்கிரம்... இத்தனை உயரம்... எதிர்பார்த்தீர்களா?
இல்லை. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். பள்ளி யில் பஜன்ஸ் குழு, கல்லூரியில் ராக் குழு என்று நிறைய இசைக்குழுக்களில் இருந்த தால் இசையில் அதிக ஆர்வம் இருந்தது.
ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்தே எனக்கு இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இசைய மைப்பாளர் ஆவேன் என்று நினைக்க வில்லை. இன்னும் நிறைய கற்றுக்கொண்ட பிறகுதான் இசையமைப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்ததற்கு என்னுடைய நல்ல நேரம்தான் காரணம் என்று சொல்லவேண்டும்.
சிறு வயதிலேயே இசையமைப்பாளர் ஆனதால் இளமைக் கால கலாட்டாக்களை தவறவிட்ட வருத்தம் இருக்கிறதா?
கண்டிப்பாக இருக்கிறது. நான் கல்லூரி யில் படிக்கும் போது என்னுடைய வருகைப் பதிவேடு மிகவும் மோசமாக இருக்கும். நான் அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதால் வகுப்புக்கு அதிகம் போகமாட்டேன். ஆனால், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்வானேன்.
படிப்பு, கலை நிகழ்ச்சிகள் என்று ஓடிக் கொண்டே இருந்ததால் என்னால் கல்லூரி கலாட்டாக் களை அனுபவிக்க முடியவில்லை. கல்லூரியில் எனக்கு நிறைய நண்பர்களும் இல்லை. இப்போதும் எனக்கு நண்பர்கள் என்றால் என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னுடன் பணிபுரிபவர்களும்தான்.
தனுஷ், சிம்பு இருவருக்கும் நீங்கள் நண்பராக இருக்கிறீர்கள். இருவருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது?
இரண்டு பேருக்குமே அவ்வளவாக ஆகாது என்று நான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இருவரிடமும் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர்களிடையே எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. இருவருமே நெருங்கிய நண்பர்கள்தான்.
பள்ளி நாட்களில் நான் கலை நிகழ்ச்சியில் இசைப் பிரிவில் இருக்கும்போது சிம்பு வேறு பள்ளியின் நடனப்பிரிவில் இருப்பார். அதனால் அவரை எனக்கு அப்போதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு மிகவும் சீனியர்.
‘நானும் ரவுடிதான்’ படத்தில் நீங்கள் நாயக னாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்ததே?
அந்தச் செய்தி எப்படி வந்தது என்று தெரிய வில்லை. ‘3’ படத்துக்கு கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து நிறையப் பேர் எனக்கு கதை சொல்ல வந்தார்கள். கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘நீங்கள்தான் படத்தில் நாயகன்’ என்று சொல்வார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாது.
நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. கடந்த 3 வருடங்களில் என்னுடைய 7 ஆல்பங்கள் வெளிவந்திருக்கிறது. எனக்கு கிடைத்திருக் கும் இந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது இருக் கிறது. இசைக்காக வீடியோ தயார் பண்ணும் போதே, அதில் எப்படி ஆடுகிறோம், நடித்திருக்கிறோம், அழகாக இருக்கிறோமா என்றுதான் எண்ணம் போகிறது. என்னால் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. அதனால் எனக்கு நடிப்பில் விருப்பமில்லை.
அப்படியென்றால் நாயகனாக நடிக்கவே மாட்டீர்களா?
இசைக்கான வீடியோ ஆல்பங்களில் மட்டும் நடிப்பேன். இரண்டு மூன்று நாட்கள் இசை ஆல்பத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை.
உங்களுடைய இசைக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்ன?
மறக்க முடியாத பாராட்டு என்றால் ‘எதிர் நீச்சல்’ படத்துக்கு கிடைத்ததுதான். நான் இசையமைத்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ‘எதிர் நீச்சல்’ படத்தை முதல் ஷோ பார்த்தேன். அதில் பெயர் போடும்போது, என் பெயர் இசையமைப்பாளர் அனிருத் என்று வந்தது.
அப்போது ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் மற்றும் விசிலைக் கேட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என்னுடைய இரண்டாவது படத்துக்கே இப்படி ஒரு வரவேற்பா என்று ஒரு பிரமிப்பு இருந்தது.
திரையுலகில் எனக்கு எல்லாமே ரஜினிகாந்த்தான். என் இசை வெளியாவதற்கு முன்பே அதன் சிடியை ரஜினிகாந்துக்கு அனுப்பிவிடுவேன். என்னுடைய இசை வெளியாவதற்கு முந்தைய நாளே அவரு டைய விமர்சனம் கிடைக்கும்.
அது தான் திரையுலகத்தில் எனக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு. ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் அனுப்ப மறந்து விட்டேன். அப்போதுகூட அவராகவே போன் செய்து ஆல்பத்தைக் கேட்டு வாங்கினார். எப்போதுமே அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் அளவுக்கு நன்றாக இசையமைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
மறுபடியும் ‘கொலவெறி’ பாடல் மாதிரி ஒரு பாடலை உங்களால் கொடுக்க முடியவில்லையே?
அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். எனக்கு முதல் படத்திலேயே அப்படி ஒரு பாடல் அமைந்தது. அதுபோன்ற ஒரு பாடல் மீண்டும் எப்போது அமையும் என்று யாருக்குமே தெரியாது. அப்போது கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்ளத்தான் உழைக்கிறேன், போராடுகிறேன்.
இளம் வயதில் பெரிய இசையமைப்பாளர் என்ற புகழ் கிடைத்தாலும் மறுபுறம் காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறீர்கள். அப்படி காதல் சர்ச்சையில் சிக்கும்போது இருந்த மனநிலை என்ன?
முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அடி என்று அதைச் சொல்லலாம். ஏனென்றால் அது வரைக்கும் எல்லாருமே என்னுடைய இசையைக் கொண்டாடினார்கள். முதல் தடவையாக என்னைப் பற்றி ஒரு எதிர்மறையான செய்தி வந்தது.
இரண்டு நாட்கள் மனநிம்மதி இல்லாமலேயே இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு வெளியே தலைகாட்டா மலேயே இருந்தேன். என் பொழுதை தனிமையில் இசையோடு கழித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது பண்ணிய பாடல்கள் தான் ‘வணக்கம் சென்னை’ படத்தின் பாடல்கள். இப்போது எதிர்மறைச் செய்தி களை தாங்கிக்கொள்ள மனம் பக்குவப் பட்டுள்ளது. அதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.
இவ்வளவு ஒல்லியாக இருப்பதற்கு அப்படி என்னதான் சாப்பிடுகிறீர்கள்?
நீங்கள் ஒருநாள் என்னுடன் இருந்து, நான் சாப்பிடுவதைப் பாருங்கள். சாப்பாட்டை சும்மா வெளுத்துக் கட்டுவேன். ஒரு வேளை, சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால் எடை கூடாமல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.




நன்றி - த இந்து

  • Seetharaman  
    காப்பி அடிச்சு மியூசிக்ல பெரிய ஆளு ஆயிடிங்க , அது போல விக்ரம் , கமல் மாதிரி பெரியே ஆளுங்கள காப்பி அடிச்சு இன்னும் பெரியே ஆள் ஆயிடுங்க அனிருத்... நமக்கு தான் புதுசா யோசிக்க தெரியாதே
    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Gnanasekaran  
      "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." -திருவள்ளுவ நாயனார். கமெண்ட்: அனிருத் அய்யா அவர்களே, முதலில் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நடிப்பை பற்றி யோசிக்கலாம். அது மட்டுமின்றி இப்போவே சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் அப்படி இப்படின்னு பேச்சு அடி படுத்து. நீங்களும் நடிக்க வந்துடீங்கன்ன நிலைமை இன்னும் சூப்பர். முதலில் நீங்கள் சொந்தமாக மியூசிக் போட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி காமெடி எல்லாம் பண்ணாதீங்க. "சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால்..." இது தவறு. இதற்கு பின்னால் ஒரு அரசியல் தென்படுகிறது. வீணான குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டாம். " (கொலைவெறி) அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்." கமெண்ட்: கொலைவெறி பாடல் இசைத்தாய் இசைஅமைத்த "நாயகன்" படத்தில் இடம்பெற்ற, "நிலா அது வானத்து மேல" பாடலின் காபிதான். "ஓடுற நரியில ஒரு கிழ நரி தான்" = "why திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி" காபி அடிங்க, ஆனா தெரியாத மாதிரி காபி அடிங்க... நன்றி. தமிழ் வாழ்க.