Showing posts with label நெம்பர் ஒன். Show all posts
Showing posts with label நெம்பர் ஒன். Show all posts

Saturday, February 22, 2014

நெம்பர் ஒன் பனியன் சிட்டி திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மக்களின் நெம்பர் 2 பிரச்சனை

இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு கோரிக்கையா? என அதிர்ச்சியடையவைக்கிறார்கள். ஊரில் கழிப்பறை இல்லாததால், இருளை எதிர்பார்த்து வாழ்கிறார்கள் அப்பகுதி பெண்கள். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி 9வது வார்டு இந்திரா நகர் பொதுமக்களின் பரிதாப நிலைதான் இது. 


தாகம் தணிக்கும் உப்பு நீர் 

 
தண்ணீர் பிரச்சினைக்காக 10 நாட்களுக்கு முன்பு, திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். கடந்த 6 மாதங்களாக தண்ணீரின்றி அவதிப்பட்டவர்களுக்கு, மனு அளித்தபின் ஆறுதலாக, தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை உப்புத் தண்ணீர் மட்டும் கிடைக்கிறது. தண்ணீருக்கு ஊரில் சிக்கல் நீடித்த நிலையில், விலைக்கு வாங்கி பயன்படுத்துவது, அக்கம் பக்கத்தில் உள்ள சாலைகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து தாகம் தணித்துள்ளனர். 


இரவில் விநியோகம் 

 
‘எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது வீடுகட்டிக் கொடுத்தாங்க. அப்பயிருந்து நாங்க இங்க தான் குடியிருக்கோம். மின்சாரத்துக்கே ரொம்பக் கஷ்டப்பட்டு போராடி வாங்கினோம். இப்ப தண்ணீர் தட்டுப்பாடு ரொம்ப அதிகமாக இருக்கு. கலெக்டருகிட்ட மனு கொடுக்க, பத்து நாளைக்கு ஒருக்கா தண்ணீர் வருது. அதுவும் நேரங்கெட்ட நேரத்துல தான் வருகிறது. இரவு 11 மணிக்கு மேலதான் உப்புத் தண்ணீர் வருது’ என்கிறார் மூதாட்டி கண்ணாள். 



இருளை எதிர்பார்த்து 

 
‘இந்திரா காலனியில 300 பேர் குடியிருக்கோம். ஆனா எந்த வீட்டுலயும் கழிப்பறை வசதி கிடையாது. அன்னாடம் இருட்டை எதிர்பாத்துட்டு வாழ்றோம். காலை யில ஆம்பளைக நடக்க, அக்கம் பக்கம் காட்டுக்கு போகணும். இல்லைன்னா சாயங்காலம் பொழுதோட தான் போயாகணும். கழிப்பறை இல்லாதால பொண்டு புள்ளை, கொழந்தை குட்டினு எல்லாரும் கஷ்டப்படுறோம். ஒரு கழிப்பறை கட்டுனாங்க. அதுல கரையான்தான் குடியிருக்குது. காலனியில யாருக்கும் உதவாம கெடக்கு’ என வேதனையை பகிர்ந்துகொண்டார் கண்ணாள். 



மூடிய கழிப்பறை 


 
2006-07ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் எ.ஏஸ். மணி ரூ.1.50 லட்சம் ஒதுக்கி கழிப்பறை கட்டிக் கொடுத்தார். அப்போது நெடுநாள் குறை தீரப்போகிறது என மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், 7 ஆண்டுகள் முடிந்தும் திறப்பு விழா காணாமல், தண்ணீர் பிரச்சினையால் புழக்கத்திற்கும் கொண்டுவரமுடியாமல் போன தால், கழிப்பறை மூடிவைக்கப்பட்டுள்ளது. 



கழிப்பறைக்கு செலவு செய்யப்பட்ட மக்களின் வரிப் பணம், மக்களுக்கு பயன்படா மல் வீணாகிவிட்டது. கழிப்பறைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், அதை கடைசிவரை யாரும் செய்யவில்லை. தண்ணிருக்காக கழிப்பறையை மூடி வைத்திருப்பது வேறு எங்கும் பார்த்திராத விநோதம். இந்த கழிப்பறை உடனடியாக திறக்கப்பட்டால் பெண்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்கிறார் திமுகவைச் சேர்ந்த முருகேசன். 



பூட்டப்பட்ட சமுதாயக்கூடம் 

 
ரூ.5 லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தில், பலருக்கும் திருமணம் தொடங்கி காலனியில் யாராவது இறந்துவிட்டால், அவர்களை சமுதாயக்கூடத்தில் வைப்பது வரை ஊரின் அனைத்து நல்லது கெட்டதுக்கும் சமுதாயக்கூடத்தை பயன்படுத்தினோம். 


அதையும் தற்போது பூட்டி வைத்துவிட்டனர். முன்பு எப்போதும் திறந்தே இருக்கும். தற்போது அப்படியொரு நிலை இல்லை. சமுதாயக்கூடத்தை சுற்றித்தான் ஊரின் கழிவு நீர் தேங்கி உள்ளது. கொசுக்களின் கூடாரமாக கழிவுநீர் தேக்கம் காணப்படுகிறது என்கின்றனர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர்கள். 



திறந்தவெளி குப்பைத்தொட்டி 

 
இந்திரா காலனி முகப்பில் குப்பைகள் தான் குடியிருக்கின்றன. எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. வீட்டின் காய்கறிக் கழிவு தொடங்கி அனைத்துக் கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால் குடியிருப்புப் பகுதியில் எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி கூட வைக்கப்படாமல் துர்நாற்றத்தோடு வாழ்ந்து வருவோம் என்கிறார் இந்திரா காலனியைச் சேர்ந்த தங்கராஜ். 



சாபத்தில் இந்திரா காலனி


 
ஊரின் 2 பக்கமும் தண்ணீர்த் தொட்டி இருக்கு. ஆனால், தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கு. கழிப்பறைக்கு தண்ணீரின்றி கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகி யும் தண்ணீரின்றி பூட்டி வைக்கப் பட்டே உள்ளது. கழிவுநீர் செல்வ தற்கு வழியின்றி குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலன வர்கள் விவசாயக் கூலிகள். ஆனால், கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து வருமானமின்றி பலரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு செல்கின்றனர். 


கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்வதைப்போல், இன்னமும் இருளை எதிர்பார்த்து பெண்கள் வாழ்வது என பல்வேறு பிரச்சினைகள். ஒட்டுமொத்தமாக, மாவட்ட நிர்வாகம் தெற்கு அவி நாசிப்பாளையம் வினோபா நகர் இந்திராகாலனி பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் முருகேசன். 


 நன்றி - த தமிழ் இந்து