அரட்டைகளும் சவடால்களும் மலிந்த தமிழ்த் தொலைக்காட்சி சூழலில்
அறிவார்த்தமான விவாதக் களமாக உருப்பெற்றிருக்கும் 'நீயா நானா'
நிகழ்ச்சியின் வயது எட்டு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இதன் வீரியமோ
சுவாரஸ்யமோ குறையவில்லை.
வாரந்தோறும் காத்திரமான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்களையும்
எழுத்தாளர்களையும் துறை சார்ந்த நிபுணர்களையும் வரவழைத்துத் தமிழ் விவாதக்
களத்தைச் செழுமைப் படுத்திவரும் 'நீயா நானா'வின் மூளை அதன் இயக்குநர்
ஆண்டனி.
கேள்வி: இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு உந்துதல் எது?
நிறைய. நான் பிறந்து வளர்ந்தது நெல்லை, ஆரைக்குளத்தில். சின்ன வயதில்
எங்களுடைய விளையாட்டில் விவாதத்துக்கு முக்கியமான இடம் இருக்கும்.
எப்போதும் ஓயாத பேச்சு, வாதம். கட்சி பிரிந்து வாதம் செய்வோம். சில சமயம்
வாக்கெடுப்புகூட நடத்துவோம். ஊரில் பாட்டிமார்களைக்கூட விடாமல் இழுத்து
வந்து ஓட்டுப் போட வைத்தோம். இவையெல்லாம் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.
நான் படித்து ரசித்த, பிரமித்த ஏராளமான விஷயங்கள் இதற்குப் பின்னால்
இருக்கின்றன.
80-90-களில் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் டாரில் டி மோண்டே, திலீப்
பத்காவ்கர், டாம் மோரிஸ், கிர்லா ஜெயின், சாய்நாத், ஸ்வாமி நாத அங்க்லேசரீய
ஐயர் போன்றவர்கள் எழுதிவந்த கட்டுரைகளை மிகவும் விரும்பிப்
படித்திருக்கிறேன். 'இல்லஸ்டி ரேட்டட் வீக்லி' போன்ற இதழ்களையும் தீவிரமாக
வாசித்திருக்கிறேன். ஆஷிஷ் நந்தி, ப்ரிதிஷ் நந்தி, குஷ்வந்த் சிங், ராஃப்
அஹமத், காலித் முகம்மது ஆகியோரையும் படிப்பேன். அறிவுபூர்வமான விவாதம்
என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்திய ஆளுமைகள் இவர்கள். இந்தி, ஆங்கில
சானல்கள் நடத்தும் பல விவாத நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, தமிழில் இப்படி
ஒரு நிகழ்ச்சி இல்லையே என்ற எண்ணம் வரும். குறிப்பாக 'மிருணாள் கி
பைட்டக்'. எல்லா அனுபவங்கள், ஏக்கங்கள், உந்துதல்களையும் சேர்த்துதான்
இப்போது நீங்கள் நிகழ்ச்சியாகப் பார்க்கிறீர்கள்.
கே: நிகழ்ச்சியை நடத்திச் செல்வதில் உதவிகரமாக இருப்பவர்கள் யார்?
ப: கோபிநாத்தையும் என்னையும் சேர்த்து எங்கள் குழுவில் மொத்தம் 40 பேர்
இருக்கிறோம். திலீபன், அழகிரி, சாய்ராம் ஆகியோர் முக்கியமான
பங்காற்றிவருகிறார்கள். எழுத்தாளர் இமையம், பி.ஏ. கிருஷ்ணன், அழகரசன்,
தாவரவியல் அறிஞர் அழகேச பாண்டியன், மரபியல் மருத்துவர் மோகன், இயக்குநர்
ராம், பாலாஜி சக்திவேல்... இப்படி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்களும்
உதவுகிறார்கள். எந்த உரையாடலிலிருந்தும் விவாதத் துக்கான விஷயம்
கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் வாசிப்பு மிக உதவியாக இருக்கிறது.
தினசரிகள், வெகு ஜன இதழ்கள், சிற்றிதழ்கள், தீவிர இதழ்கள் எதையும் விட்டு
வைப்பதில்லை.
கே: வெகுஜன ஊடகங்களுக்கு அறிமுக மாகியிராத பலர் உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ப: வாசிப்பின் மூலம்தான். முத்துகிருஷ்ணனை 'உயிர்மை' இதழ் மூலம்தான்
எனக்குத் தெரியும். ஓவியாவைக் 'காலச்சுவடு' இதழ் மூலம் அறிந்துகொண்டேன்.
வெவ்வேறு அரசியல் பின்புலம் கொண்டவர்களும் பங்கேற்கிறார்கள். எந்த அரசியல்
கறையும் படாமல் நிகழ்ச்சியை எப்படி நடத்த முடிகிறது? நாங்கள்
தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் கட்சி அரசியலைச் சாராதவை என்பது ஒரு காரணம்.
தவிர, தனிநபர் தாக்குதல்கள், கட்சிகள் மீதான தாக்குதல்கள், புகழ்ச்சிகள்
ஆகியவை இடம்பெறாத வகையில் விவாதத்தை ஒருங்கிணைக்கிறோம். கே: பொதுமக்களின்
எதிர்வினை எப்படி இருக்கிறது?
ப: ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்த பிறகும் மக்களிடமிருந்து வரும்
குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் நேரில் சந்திக்கும்போது அவர்கள்
கூறும் கருத்துகளும் இந்த நிகழ்ச்சி எவ்வளவு கவனமாகவும் ஆர்வமாகவும்
பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன. நாங்கள் செய்யும் தவறுகளையும்
சுட்டிக்காட்டுகிறார்கள். விவாதங்களின் போதாமைகளையும் உணர்த்துகிறார்கள்.
விவாதத்தில் விமர்சிக்கப்படும் தரப்பினர் எங்கள் மீது கோபம் கொள்கிறார்கள்.
பிற துறையினர் விமர்சிக்கப்படும்போது இவர்களே பாராட்டவும் செய்கிறார்கள்.
கே: சிலரைச் சில சமயங்களில் அதிக நேரம் பேச அனுமதிப்பதாக விமர்சனம் எழுகிறது...
ப: இது சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கான வெளி. ஒருவருக்கு அவர்
சார்ந்த துறையில் அல்லது அவருடைய அக்கறை சார்ந்து, சொல்வதற்கு அதிக
விஷயங்கள் இருந்தால் அவரைக் கூடியவரையிலும் தடுப்பதில்லை. விவாதத்தின்
குவிமையத்திலிருந்து விலகிச் சென்றால் மட்டுமே நெறிப்படுத்துகிறோம். சில
சமயம் விருந்தினரைக் காட்டிலும் விவாத அரங்கில் இருப்பவர்களில் யாரேனும்
அதிகமாகப் பேசவும் வாய்ப்பிருக்கிறது. விருந்தினர் பேசுவதை மறுத்துப்
பேசவும் வாய்ப்பளிக்கிறோம். யாருடைய வார்த்தையும் இறுதியானதல்ல.
கே: விருந்தினர்கள் மனம் புண்படும் அளவுக்குச் சிலர் நடந்துகொண்டு
விடுகிறார்கள். உதாரணமாக மருத்துவர் கு. சிவராமன் வந்தபோது கிளம்பிய
சூடு...
ப: எவ்வளவு நல்ல நோக்கம் கொண்ட அமைப்பாக இருந்தாலும், எவ்வளவு சிறிய
அமைப்பாக இருந்தாலும் அவையும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான்
எங்கள் பார்வை. இயற்கை உணவுக் கண்காட்சி குறித்து தலித் கண்ணோட்டத்தில்
எழுப்பப்பட்ட கேள்வியை சிவராமனே ஆக்கபூர்வ மாகத்தான் எடுத்துக்கொண்டார்.
நீயா நானா நிகழ்ச்சியே கத்தி முனையில் நடப்பது போலத்தான்.
அரவிந்தன் - தொடர்புக்கு: [email protected]