சென்னை:பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன், நேற்று
கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து, தற்கொலை
செய்து கொண்டார்.பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி
நித்யஸ்ரீ, 39. இவரும் கர்நாடக இசை உலகில் மிக பிரபலமாக விளங்குகிறார்.
திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.
விருப்ப
ஓய்வு:
இவரது கணவர் மகாதேவன், 45. மென்பொருள் பொறியாளரான
இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்
விருப்ப ஓய்வு பெற்றார்.தந்தை விஸ்வநாதன், மனைவி மற்றும் குழந்தைகளுடன்
கோட்டூர்புரத்தில் மகாதேவன் வசித்து வந்தார். மகாதேவன்-நித்யஸ்ரீக்கு
இரண்டு மகள்கள் உள்ளனர்.
மகாதேவன், நேற்று காலை 8:00 மணிக்கு மகள்களை
ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று, கொண்டு விட்டு வீடு திரும்பினார்.
பின் காலை 11:00 மணிக்கு, அவரது ஓட்டுனர் தண்டபாணி, 30, என்பவரை அழைத்து
காரை எடுக்கும் படி கூறினார்.
அடையாற்றில் குதித்தார்:
இருவரும் அருகில் உள்ள டென்னிஸ்
அரங்கம் ஒன்றிற்கு சென்றனர். அங்கிருந்து கோட்டூர்புரம் வழியாக வீடு
திரும்பும்போது, மகாதேவன் காரை ஓட்டியுள்ளார்.நண்பகல் 12:30 மணிக்கு,
பாலத்தின் நடுவில் திடீரென காரை நிறுத்தி, சாவியை எடுத்து கொண்டார்.
திடீரென பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்தார். இதை கண்டு
அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் தண்டபாணி, உடனடியாக நித்யஸ்ரீயை அலைபேசியில்
அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்த சிலர்,
உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
காரில் வந்த நபர் ஆற்றில் குதித்த தகவலால் அந்த சாலையில் போக்குவரத்து
ஸ்தம்பித்தது.
உடல் மீட்பு:
தகவலறிந்து,
கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்க
முயன்றனர். அதற்குள் மகாதேவனில் உடல் ஆற்றில் மிதந்தது. அதை கயிறு கட்டி
மேலே இழுத்தனர்.அப்போது, ஆட்டோ மூலம் அங்கு விரைந்து வந்த நித்யஸ்ரீ,
கணவர் குதித்த இடத்தை பார்த்து கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய
போலீசார், ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மகாதேவனின்
உடலை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவன் இறந்ததை
டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது உடல், பிரேத
பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது
குறித்து கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை
நடத்தி வருகிறார்.
நன்றி - தினமலர்