தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களைப் போலவே எதார்த்தமாக பேசிப் பழகும் இயல்புடையவர் விஜய்சேதுபதி. ‘இறைவி’ படத்தின் படப்பிடிப்பு, ‘நானும் ரௌடிதான்’ படத்தின் டப்பிங் வேலைகள் என்று பரபரப்பாக சுற்றித் திரிந்துகொண்டிருந்தவரை சந்தித்து பேசினோம்...
நீங்கள் ஒன்று புதிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறீர்கள். அல்லது சீனுராமசாமி, கார்த்திக் சுப்பராஜ், நலன்குமாரசாமி, அருண்குமார் ஆகிய ஏற்கெனவே பணிபுரிந்த இயக்குநர்களோடு மட்டுமே இணைந்து பணிபுரிகிறீர்களே?
நான் முதலில் கதையின் அடிப்படையில் படத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். அடுத்து நட்பு, பழக்க வழக்கம், அவர்களின் திறமை ஆகிய காரணங்களால்தான் மீண்டும் அதே இயக்குநர்களோடு சேர்ந்து பணிபுரிகிறேன். சரியான வாய்ப்பு அமையும்போது மற்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்கவும் ஆர்வமாகத்தான் இருக்கிறேன்
நயன்தாராவுடன் முதன்முறையாக ‘நானும் ரௌடிதான்’ படத்தில் சேர்ந்து நடித் திருக்கிறீர்கள். படம் எப்படி வந்திருக் கிறது?
அந்தப் படத்தின் டப்பிங் போய்க் கொண்டிருக்கிறது. காதல், எமோஷனல், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு நல்ல கலவையாக இப்படம் இருக்கும். இதற்காக வேலை பார்த்த நாட்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நயன்தாரா சீனியர் நடிகை என்றபோதிலும் எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. வேலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் நல்ல மனுஷி அவர்.
இப்படியான கதைக்குத்தான் விஜய் சேதுபதி சரியாக இருப்பார் என்ற முத்திரை விழுந்துவிடாமல் அடுத்தடுத்து புதிய கதைக் களத்தை மாற்றிக்கொள்ளும் அனுபவம் எப்படி இருக்கிறது?
நடிகனாக இருப்பதால்தான் வெவ் வேறு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தை உருவாக்கும்போதும் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் வடிவமைத்திருப்பார். கொஞ்ச நாட்கள் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டு வருகிறோம். சில நேரத்தில் நம் இயற்கையான குணாதிசயம் வெளிப் பட்டுவிடும். அப்போதெல்லாம், ‘இது என் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பு இல்லையே?’ என்று இயக்குநர் கூறுவார். அவர் சொல்லும் அந்த வாழ்க்கைக்கு மாறும்போது ஒரு தனி த்ரில் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை.
ஒரு தயாரிப்பாளராக ‘ஆரஞ்சு மிட்டாய்’ உங்களுக்கு சொன்ன பாடம் என்ன?
புஸான் திரைப்படவிழாவுக்கு ‘ஆரஞ்சு மிட்டாய்’ தேர்வாகியிருக்கிறது. விரைவில் அந்த விழாவுக்காக இயக்குநருடன் கொரியா செல்லவிருக்கிறேன். வசன கர்த்தாவாகவும் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்த படம் அது. இந்தப்படத்தை வியாபாரம் செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. அதை பெரிதாக சொல்வதில் உடன்பாடில்லை. ஒரு பொருளை சந்தைக்கு கொண்டுபோகும்போது அதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். ‘ஆரஞ்சுமிட்டாய்’ மாதிரி ஒரு படத்தை தயாரித்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.
‘மெல்லிசை’ படத்தின் டீசர் வெளி யாகியுள்ளது. இதைப் பார்த்தால் நகரத்தின் பின்னணியை த்ரில்லரோடு முன்வைக்கும் கதைக்களம் மாதிரி தெரிகிறதே?
ஒரு ஆண், ஒரு பெண் மீது வைக்கும் உச்சபட்ச அன்பை சொல்கிற படமாக இது இருக்கும். அதே நேரத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் உன்னதமான கடமையையும் இந்தப்படம் வெளிப் படுத்தும். இது ரொமான்டிக் த்ரில்லர் படம். இந்தக் கதையை சொல்வதற்கு ஒரு நகரத்தின் பின்னணி தேவைப்பட்டது. ஒளிப்பதிவாளர் தினேஷ், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இருவரது உழைப்பும் பிரதானமாக படத்தில் தெரியும்.
‘இறைவி’ படத்தின் படப்பிடிப்பு எப்படி போகிறது?
‘இது நம்ம அம்மா, பாட்டி, சித்தி பத்தின கதை’ என்று கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ‘இறைவி’ படத்தைப் பற்றி இப்போதைக்கு நானும் அதைத்தான் சொல்ல முடியும். இதைத்தவிர நலன் குமாரசாமியுடன் இணைந்து வேலை பார்த்த புதிய படம் முடிந்துள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் ‘சேதுபதி’ படத்தின் படப்பிடிப்பை அடுத்து தொடங்கவிருக்கிறோம். இதற்கிடையே என் தயாரிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.
நடிப்பு, வசனம், தயாரிப்பு என்று பல அவதாரங்களை எடுத்துவிட்டீர்கள். அடுத்து இயக்குநர் அவதாரம்தானே?
‘ஆரஞ்சுமிட்டாய்’ படத்துக்கு வசனம் எழுதும் வேலை இயல்பாக அமைந்தது. அலுவலகத்தில் அமர்ந்து பேசுவதை அப்படியே ரெக்கார்ட் செய்து எழுதினேன். அதுவும் படத்தின் இயக்குநர் ஆசைப்பட்டதால் எழுதினேன். இயக்குநர் வேலை என்பது மிகவும் பொறுப்பானது. அதற்கு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அது நடக்குமா? என்று தெரியவில்லை. ஒரு விஷயத்தை செய்யும்போது அதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஒரு படத்தில் நடிக்கும்போதும் அப்படித்தான். ஒரு காட்சிக்கு முன் என்னை அதற்கு தயார் செய்துகொள்வேன். நான் எதையும் முன்பே தீர்மானித்துவிட்டு செய்வதில்லை.
நன்றி-தஇந்து