Showing posts with label நானும் ரவுடிதான்-திரை விமர்சனம்:. Show all posts
Showing posts with label நானும் ரவுடிதான்-திரை விமர்சனம்:. Show all posts

Monday, October 26, 2015

நானும் ரவுடிதான்-திரை விமர்சனம்:

காவல் துறை ஆய்வாளர் மீனா குமாரிக்கு (ராதிகா) மகன் பாண்டியையும் (விஜய் சேதுபதி) காக்கிச் சட்டையில் பார்க்க ஆசை. மகனோ, ‘ரவுடியாக வேண்டும்’ என்னும் ‘உயர்ந்த’ லட்சியம் கொண்ட வர். நண்பர்களுடன் சேர்ந்து ‘நானும் ரவுடிதான்’ என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். செவித் திறன் குறைபாடுடைய காதம்பரியை (நயன் தாரா) பார்த்ததும் பாண்டிக்குக் காதல். அந்தக் காதலை ஏற்க காதம்பரி ஒரு நிபந்தனை விதிக்கிறார். தாதா கிள்ளி வளவனை (பார்த்திபன்) கொல்ல வேண்டும் என்பதுதான் அது. ரவுடிக்கான எந்தத் தன்மையும் இல்லாத விஜய் சேதுபதி ரவுடி ஆனாரா, இல்லையா, நயன்தாராவின் நிபந்தனையை ஏற்று வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது தான் கதை.
பாவனைகளிலேயே வாழும் மனிதர் களைப் பற்றிய பகடிதான் படத்தின் அடிநாதம். வாழ்வின் அபத்தத்தை அங்கதத்தின் மூலம் வெளிப்படுத்தும் நகைச்சுவையை திறமையாகப் பயன் படுத்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி குழு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டும் அசல் ரவுடிகளும் கேலிப்பொருளாக் கப்படுவது சிறந்த உதாரணம். பெரிய தாதாக்களாகக் காட்டப்படும் பார்த்திபன், மன்சூர் அலிகானும் விலக்கு அல்ல. ஆனால் இந்த தாதாக்கள் இடையே நடக்கும் போட்டி, பொறாமையில் தெறிக்கும் வன்முறை வெறியையும் பதிவுசெய்திருக்கிறார். அங்கதக் காட்சிகளுக்கு நடுவே நயன்தாராவின் சோகத்தைச் சற்றும் மலினப்படுத்தாமல் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.
தன் மகனை போலீஸாக்க ராதிகா செய்யும் முயற்சிகள், ஆனந்தராஜ் கோஷ்டி - விஜய் சேதுபதி கோஷ்டியை எதிர்கொள்ளும் காட்சி, இந்த இரண்டு கோஷ்டிகளும் சேர்ந்து போடும் திட்டங்கள் ஆகியவை வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. செவித் திறன் குறைந்தவராக நயன்தாராவைக் காட்டி னாலும் அதில் கழிவிரக்கத்தை ஏற்றி விடாமல் இயல்பாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர். நயன் தாராவை ஒரு ரவுடி துன்புறுத்தும் காட்சியில் விஜய் சேதுபதி பாத்திரத்தின் தன்மை மாறுகிறது.
சாது நாயகனை ஒரே காட்சியில் வீரத் திருமகனாக மாற்றவே இதுபோன்ற காட்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும். விக்னேஷ் சிவன் இதிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். காதலுக்காக நயன் தாரா நிபந்தனை விதிக்கும் காட்சியும் நிபந்தனையை விஜய் சேதுபதி ஏற்றுக் கொள்ளும் காட்சியும் நன்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. முத்தம் கொடுக்க வரும் காதலனிடம், காதலி நிபந்தனை விதிக்கும் காட்சியில் உதடுகளுக்கு மட்டும் குளோஸப் வைப்பதன் மூலம், வசனத்தின் வீரியத்தைத் துல்லியமாகக் காட்டிவிடுகிறார் இயக்குநர்.
நகைச்சுவை தாராளமாக இருந்தும் முதல் பாதி சற்று மந்தமாகவே நகரு கிறது. பார்த்திபனைக் கொல்ல எந்த ஏற்பாடும் இல்லாமல் நிராயுதபாணியாக நயன்தாரா வரும் காட்சியில் வலிந்து திணிக்கப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள்.
விஜய் சேதுபதி துறுதுறுவென இருக் கிறார். இதுவரை கிராமத்து இளைஞ னாக, லோக்கல் பையனாக வந்தவ ருக்கு மாடர்ன் இளைஞன் வேடம். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என பாத்திரத்துக்கு கச்சித மாகப் பொருந்திவிடுகிறார். வசன உச்சரிப்பிலும் தேறியிருக்கிறார். ரவுடி யாக இல்லாவிட்டாலும் ரவுடி போல பில்டப் கொடுப்பது, ரவுடியாவதற்கு ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் பயிற்சி எடுப்பது, நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு தாதா அளவுக்கு திட்டம் போடுவது, காதலி நயன்தாராவுக்காக உருகி மருகுவது என அசத்தியிருக் கிறார். தன் பாத்திரத்தின் அடியோட்ட மான அப்பாவித்தனத்தை நன்கு புரிந்து கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்.
வயது ஆகஆக நயன்தாராவுக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. பாத் திரத்தில் அப்படியே ஒன்றிவிடுகிறார். அப்பா உயிரோடு இருப்பதாக நினைத் துக் கொண்டிருக்கும்போது, அவர் இறந்த விஷயம் தெரியவருகிறது. அடக்க முடியாத அழுகையையும், நம்பிக்கை பொய்த்துப்போன விரக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தும் நயன்தாரா, நடிப்பில் சிக்ஸர் விளாசிவிடுகிறார். முதல்முறையாக சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பதும் நன்றாக உள்ளது.
பார்த்திபன் முழு நீள வில்லனாக வந்தாலும் அவருக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் கலக்குகிறார். ராதிகா, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம். அவர்களும் தம் பங்கை நன் றாகவே செய்திருக்கிறார்கள். அனிரூத் இசையில் ‘கண்ணான கண்ணே’, ‘வரவா வரவா’ பாடல்கள் கேட்கும்படி உள்ளன.
நயன்தாராவை மட்டுமல்லாமல் புதுச்சேரி, வடசென்னை கடலோரப் பகுதிகளையும் அழகாகக் காட்டியிருக் கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.
‘அது ஏன் அப்படி? இது ஏன் இப்படி?’ என்று காரண காரியங்களையும் சாத்தியங்களையும் யோசிக்காமல் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறான் ரவுடி!


தஹிந்து