வருமான வரி கணக்கு ஃபைலுக்கு டூப்ளிகேட் வாங்க முடியுமா?
கேள்வி-பதில்
1. நான் இன்னும் சில வருடங்களில் ஓய்வுபெறப் போகிறேன். இறுதியாக வரும் ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். எந்த வகையான முதலீடு எனக்கு பாதுகாப்பானதாக இருக்கும்?
''மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் மன்த்லி இன்கம் பிளான் போன்ற ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யுங்கள். 8 முதல் 10% வரை டிவிடெண்ட் வரும். இது வரியில்லா வருமானமாகவும் இருக்கும்.
80 சதவிகிதத் தொகையை மேற்கூறிய மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 20 சதவிகிதத் தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிலும் பிரித்துப் போடுவது நல்லது.''
2. நான் நான்கு வருடங்களாகக் கட்டிய வருமான வரிக் கணக்கு ஃபைலை காணவில்லை, அதன் நகலை வாங்க முடியுமா?
''வாங்க முடியும். உங்களுடைய பான் எண் மற்றும் விவரங்களைக் குறிப்பிட்டு வருமான வரித்துறை அதிகாரியிடம் நேரில் விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும். இந்த காரணத்தின் பொருட்டு வருமான வரி கட்டிய 'கம்ப்யூட்டரைஸ்டு ஸ்டேட்மென்ட்’ தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட வேண்டும். வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து முந்தைய ரிட்டர்ன் ஃபைல் இல்லாமலிருப்பதால் ஏற்படும் சிக்கல்களை விளக்குவீர்கள் என்றால் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.''
3. பொருட்களின் விலையை எம்.ஆர்.பி.க்கு மேல் விற்றால் யாரிடம் புகார் செய்வது?
''எம்.ஆர்.பி.யைவிட குறைவாக விற்பனை செய்யலாம். ஆனால், எம்.ஆர்.பி.க்கு மேல் அதிக விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். எம்.ஆர்.பி.க்கு மேல் அதிக விலை விற்பவர் மீது கீழ்க்கண்ட அதிகாரியிடம் புகார் செய்யலாம். Packaged commodity rules-ன்படி எம்.ஆர்.பி.யைவிட அதிக விலை விற்கும் வியாபாரிகள் மீது 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அதிக விலை கொடுக்க நேர்ந்தால் உரிய ரசீதுடன், நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.
Controller of Legal Metrology
(Weights & Measures)
office of the Commissioner of labour,
DMS Compound,
Teynampet, Chennai - 600 006
Ph: 044-24321438
4. ''பங்குச் சந்தையில் 25,000 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,500 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும், இதற்கு அக்ரிமென்ட் தருவதாகவும் சொல்கிறார் நண்பர் ஒருவர். இதை நம்பலாமா?
''பங்குச் சந்தை குறித்து உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டாம். எந்த மாதிரியான நிறுவனமாக இருந்தாலும் உங்கள் நண்பர் சொல்வதுபோல பத்து சதவிகித வருமானம் ஒவ்வொரு மாதமும் நிச்சயமாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏமாற்று வேலையாகக்கூட இருக்கலாம். அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்துவிட வேண்டாம்.''
5. நான் வெளிநாட்டில் இருப்பதால் எனது சகோதரர் மூலம் வங்கிக் கடனில் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். நான் வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு என் பெயருக்கு கடனை மாற்றி கொள்ள முடியுமா? மேலும், என் சகோதரர் பெயரில் வாங்கினாலும், நான் அந்த வீட்டிற்கு எதிர்கால உடைமையாளன் என்பதை வங்கிக் கடன் ஆவணங்களில் சேர்க்க முடியுமா ?
''நேரடியாக உங்கள் பெயரிலேயே வீட்டுக் கடன் வாங்குவதற்கு ஏற்ப வங்கி நடைமுறைகள் உள்ளன. அதனால், உங்கள் பெயரிலேயே வாங்கலாம். ஒருவேளை உங்கள் சகோதரரின் பெயரில் வாங்க விரும்பினால் நீங்கள் பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க வேண்டும். இந்த பவரை நீங்கள் எந்த நாட்டில் வேலை செய்கிறீர்களோ, அங்குள்ள இந்தியத் தூதரகத்திலும், உங்கள் சொந்த ஊரிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
இதன் பேரில் உங்கள் சகோதரர் உங்களது பெயரில் வீடு மற்றும் சொத்துக்கள் வாங்க முடியும். நீங்கள் இந்தியா திரும்பி விட்டால் இந்த பவர் தானாகவே காலாவதியாகிவிடும். மேற்சொன்ன பவர் ஆஃப் அட்டர்னி இல்லாமல், உங்கள் சகோதரர் பெயரில் சொத்து வாங்கும்பட்சத்தில் அவரது வருமான வரம்புக்கு உட்பட்டே வங்கிக் கடன் கிடைக்கும்.''
6. எனக்கு வயது 45. என் குழந்தைகளின் உயர்கல்வி செலவுக்காக மாதம் 25,000 ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். நான் எந்த வகை ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது?
''முதலீட்டுக் காலம் ஐந்து வருடம் என்பதால் பேலன்ஸ்ட் ஃபண்டுகள் அல்லது லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி டைவர்சிபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஹெச்.டி.எஃப்.சி.புரூடென்ஸ், பிர்லா சன் லைஃப் 95 போன்ற பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் ஏதாவது ஒன்றில் 15,000மும், ஃபிடிலிட்டி ஈக்விட்டி, டி.எஸ்.பி. டாப் 100 போன்ற ஈக்விட்டி டைவர்சிபைட் ஃபண்டுகளில் ஒன்றில் 7,500மும், சிறந்த எம்.ஐ.பி. பிளானாகப் பார்த்து அதில் ரூபாய் 2,500 எனவும் பிரித்து முதலீடு செய்யலாம்.
7. என் கணவர் அவருடைய தம்பியின் டீமேட் கணக்கின் மூலம் பங்குகளை வாங்கி வருகிறார். எனது பெயரில் டீமேட் கணக்கு தொடங்கி அந்த பங்குகளை என் பெயருக்கு மாற்ற முடியுமா?
''மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு உங்கள் கணவரின் தம்பி டீமேட் கணக்கு வைத்திருக்கும் இடத்தில் டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்லிப் எழுதி கொடுக்க வேண்டும். புதிதாக எந்த கணக்கில் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இப்படி பங்குகள் மாற்றப்படுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.''
நன்றி - நாணயம் விகடன்
டிஸ்கி - அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களால் அளிக்கப்பட்ட பதில்கள் இவை