நான் நுட்பமானவன்.
ஒரு பூவை விட நான் அதிகம் நேசிப்பது
அதன் தண்டும்,சில இலைகளும்.
ஒரு கவிதையை விட நான் அதிகம் ரசிப்பது
அதை எழுதியவனின்
எனக்குப்பரிச்சயமான கவிதைக்காரனின் பெயரை,
அருவியில் நனைவதை விட எனக்கு அதிக
மகிழ்ச்சி தருவது அதில் நனைபவர்களின் ”ஹா”ரிரைச்சல்.
காதலர்களின் செல்ல சீண்டல்களை விட
எனக்கு பரவசத்தை ஏற்படுத்துவது
காதலை அவர்கள் வெளிப்படுத்தும் முதல் தருணம்.
நல்ல காலம் பிறந்திருச்சு என
எல்லோருக்கும் நல்வாக்கு அளிக்கும்
குடுகுடுப்பைக்காரனின் பேச்சை விட
என்னை அதிகம் கவனிக்க வைப்பது
அவனது நம்பிக்கையும்,அணுகுமுறையும்.
மழை பெய்யும்போது ஏற்படும் சாரலின் தீண்டலை விட
எனக்கு அதிக உற்சாகம் வரவழைப்பது
மழை கிளப்பும் மண்ணின் வாசம்.
பாம்புக்கும்.கீரிக்கும் சண்டை நடப்பதாக வாக்குதரும்
சந்தையின் லேகிய விற்பவனின்
பொய் வாக்குமூலத்தை விட
என்னை அதிகம் கவனிக்க வைப்பது
கூட்டத்தை அவன் கட்டுக்குள்
கொண்டு வரும் லாவகம்.
எல்லாவற்றையும் விட
என்னை அதிகம் பாதிப்பது
ஒரு நண்பனின் மரணத்தை விட
ஒரு நட்பின் மரணம்.
டிஸ்கி 1 - கணையாழி இதழில் 1999 ஆம் ஆண்டு வந்த எனது 2வது கவிதை.இந்தக்கவிதையில் ஏதேனும் குறை இருந்தால் கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர் போன்ற நல்ல கவிஞர்கள் என்னை மன்னிக்க.