அமாவாசை ரிட்டர்ன்ஸ் !
அதே லொள்ளு, அதே தில்லு, அதே ஜொள்ளு... 'அமைதிப் படை’யில்
அதகளப்படுத்திய 'அமாவாசை’, 18 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் அதன்
இரண்டாம் பாகம் 'நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ’-விலும் அப்படியே
இருக்கிறார். 'அல்லக்கை’ டு 'அலேக்’ அரசியல்வாதி கதையின் பின்னணியை
'அமைதிப்படை’ அளவுக்கு எந்தத் தமிழ்ப் படமும் கிண்டல்அடித்தது இல்லை.
சத்யராஜ், சீமானை வைத்து சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்திவரும்
இயக்குநர் மணிவண்ணன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறார்.
துரத்திப் பிடித்துப் பேசியதில் இருந்து.
''என்ன சார்... எப்பவும் நாட் ரீச்சபிள்லயே இருக்கீங்களே..?''
''சந்தோஷமான விஷயம்தானுங்களே... செல்போன் டவர் இல்லாத 'நாட் ரீச்சபிள்’
ஏரியா இந்தியாவுக்குள் இப்போ காட்டுக்குள்ள மட்டும்தானே இருக்கு. நம்ம
இயற்கை வளத்தை அரசியல்வாதிங்க எப்படிலாம் அழிக்கிறாங்க - இதுதான் 'அமைதிப்
படை’ இரண்டாம் பாகத்தின் கதை. அதனாலதான் ஒழுங்கான ரோடுகூட இல்லாத
காட்டுக்குள்ள படத்தை எடுத்துட்டு இருக்கோம்.
சத்யராஜ் இந்தப் படத்திலும்
அதே அமாவாசைதான். நாகராஜசோழன் எம்.எல்.ஏ-வோட அல்லக்கைதான் நான். முன்னைக்
காட்டிலும் மோசமா இருக்குற சத்யராஜைத் திருத்த முயற்சிக்கிற லாரி டிரைவர்
கேரக்டரில் சீமான் நடிச்சிருக்கார். என் மகன் ரகுவண்ணனும் நடிக்கிறான்.
கோமல், வர்ஷா, மிருதுளானு மூணு பொண்ணுங்க இருக்காங்க. கஸ்தூரி, ரஞ்சிதா,
சுஜாதா, மகன் சத்யராஜ் கேரக்டர் கள் இந்தப் படத்துல இல்லை. ஆனா, அவங்க
இல்லாதது தெரியாத அளவுக்கு புது திரைக்கதை அமைச்சிருக்கேன்.
அரசியல்வாதிகளின் சேட்டையும் கொள்ளையும் இப்போ கோடிகளில் ஓடிட்டு இருக்கு.
அப்படியான குள்ளநரி அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா நாகராஜசோழன்
இருப்பான். அவன் என்ன ஆகுறான்கிறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்!''
''வாரிசு அரசியல், அப்பாவுக்கு விஷம்வைக்க முயற்சிக்கும் மகன்னு படத்தோட கதையைப் பத்தி ஏதேதோ பரபரப்பா தகவல் உலவுதே?''
''இதுலாம் உங்க லொள்ளு சார். எப்பவுமே இந்த மணிவண்ணன் தனி நபரைக்
குறிவெச்சு விமர்சிக்க மாட்டான். நாம சாப்பிடுற சாப்பாட்டுல, குடிக்கிற
தண்ணியில... ஏன் சுவாசிக்குற காத்துலகூட அரசியல் இருக்கு. காலையில
எந்திரிச்சதுல இருந்து தூங்கப்போற வரை அரசியலோடுதான் நாம வாழறோம். அந்த
அரசியலைத்தான் படத்துல பேசப் போறேனே தவிர, தனி நபர் தாக்குதல் எதுவும்
படத்துல இருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்த வரை சத்யராஜ் பண்ற அக்குறும்பு
உங்களைச் சுத்தி இருக்கிற அரசியலை மறந்து சிரிக்கவைக்கும்!''
''நடுவுல உடல்நிலை சரியில்லாம இருந்தீங்களே... இப்போ ஒரு படம் இயக்கும் அளவுக்கு உற்சாகமா உணர்றீங்களா?''
''50 வயசுக்கு மேலதான் ஆக்டிவ்வா வேலை பார்க்கு றான் ஹாலிவுட்காரன்.
முதுகுத் தண்டுவடத்துல அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து, இப்போதான் ஓரளவு
தேறி இருக்கேன். தொண்டாமுத்தூர் பக்கத்துல க்ரீன் வேலி க்ளப்புனு ஒரு
இடத்துல தங்கி இருக்கோம். குளிர் பின்னுது. அதிகாலையில நான்தான் முதல் ஆளா
எந்திரிச் சுப் போய் எல்லோர் ரூம் கதவை யும் தட்டி எழுப்புவேன். 'ஏனுங்
மணி... இன்னும் அரை மணி நேரம் தூங்கிக்குறேனே’னு சதாய்ப்பார் சத்யராஜ்.
பதிலுக்கு நடுராத்திரி நான் அசந்து தூங்குறப்போ தலை முழுக்க மப்ளர்
போர்த்திக்கிட்டு வந்து, 'வாங்க மணி... வாக்கிங் போயிட்டு வரலாம்’னு லந்து
கொடுப்பார். இதெல்லாம் என்னை உற்சாகமாவெச்சுக்க அவர் காட்டுற அக்கறை!''
''இப்போ ம.தி.மு.க. முகாம் பக்கம் உங்களைப் பார்க்க முடியலையே?''
''அந்தப் பக்கம் போனாத்தானே பார்க்க முடியும். 2006-ல ம.தி.மு.க-வுக்கு
ஆதரவா பிரசாரம் பண்ணப்போ, நான் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூடக்
கிடையாது. ஆனா, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்குறப்போ, வைகோ, சீமான்,
நெடுமாறன்லாம் எந்த மேடையில் இருந்தாலும் நானும் அங்கே இருப்பேன். சீமானோட
கருத்து கள், போராட்ட வழிமுறைகள் பிடிச்சுப்போய் 'நாம் தமிழர்’ இயக்கத்துல
உறுப்பினராகி இருக்கேன். ஆமாம்... இப்போ தம்பி சீமான் இல்லே... தலைவர்
சீமான்!''
நன்றி - விகடன்
அ
டிஸ்கி - கலைஞர் , அழகிரி ,ஸ்டாலின் வாரிசு சண்டை பற்றிய படம் போல் தெரிகிறது