'அரசியல் கடையை மூடி வைத்திருக்கிறேன். மீண்டும் வந்தாலும் வரலாம்' என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார். மேலும், விஜய் நடிக்கும் 'புலி' படத்துக்கு 'எலி' போட்டி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். | வீடியோ இணைப்பு - கீழே |
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'எலி'. வித்யாசகார் இசையமைத்து இருக்கும் இப்படத்தை சதீஷ்குமார், அமர்நாத் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவது முடிவடைந்து இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.
'எலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், நடிகர் வடிவேலு பேசியது:
"ஜனங்க நிறைய பேர் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் இவ்வளவு கேப் விடுகிறீர்கள் என்று. இன்னும் கெட்ட வார்த்தை மட்டும்தான் போட்டு திட்டவில்லை. அதற்காகவே உடனே தொடங்கப்பட்ட படம்தான் 'எலி'. சமூகத்துக்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து பார்க்கலாம், சிரிக்கலாம்.
முதல் முறையாக ஒரு இந்திப் பாடலுக்கு வாய் அசைத்து நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் நான்தான் 'எலி'. அப்போ பூனை யார் என்று கேட்கிறீர்களா, இந்த 'கஜினி' படத்தில் நடித்த பிரதாப்தான் பூனை.
இப்படம் ஒரு பீரியட் படம் கிடையாது. 1960-70 காலகட்டங்களில் நடக்கும் கதையில் நடித்திருக்கிறேன். எப்போதுமே ஒல்ட் இஸ் கோல்ட் தான். இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ஒருவர் தான் சதா. நம்ம படம் எப்போதுமே ஒருபக்க காதலாகவே தானே இருக்கும். நம்ம படத்தில் கதை, காமெடி தான் முக்கியத்துவம். அதனால் நெருக்கமான காட்சிகள் எல்லாம் இல்லை.
நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தொடர்ந்து காமெடியன் வேடத்தில் நடிப்பேன். என்னோடு ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று நிறைய நாயகிகள் சொல்லி இருக்கிறார்கள். அவங்க இல்லைன்னா இன்னொருவர், இப்போது எல்லாம் வெளிமாநிலங்களில் இருந்து எல்லாம் காசு கொடுத்து கூட்டிட்டு வருகிறார்கள்.
'புலி' போட்டியாக 'எலி'யா என்கிறீர்கள். அடுத்த படம் 'கரப்பான் பூச்சி' என்றுகூட எடுப்பேன். அது ஒரு தலைப்பு அவ்வளவு தான். 'புலி'க்கு 'எலி' போட்டி கிடையாது. மற்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். நமக்கு சிங்கிள் பேக் தான். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க நான் என்ன அர்னால்டா?
தற்போது காமெடி டிராக் எல்லாம் படங்களில் அழிந்து வருகிறது. காமெடி டிராக் மாதிரியான காமெடியில் தற்போது நடிப்பதில்லை. அதனால் இனிமேல் படங்களில் முக்கிய பாத்திரங்கள் மாதிரியான வேடங்கள் வந்தால் நடிப்பேன். இப்போது 'எலி' மூலமாக மீண்டும் காமெடியன் கதவை திறந்தாச்சு. அவ்வளவு தான்.
ஒரு படத்தில் முதலமைச்சராக காமெடி வேடத்தில் நடிக்கவிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடிக்க 10 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். அனைத்து கதைகளிலும் நடிப்பேன். ரஜினியின் அடுத்த படத்திற்கு என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன். 'சந்திரமுகி' நேரத்தில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்" என்று வடிவேலு பேசினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். "சகாப்தம் படம் பார்த்தீர்களா" என்ற கேள்விக்கு "எனக்கு என்னோட படத்தைப் பார்க்கவே நேரமில்லை" என்றார்.
"சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிறது. அரசியலுக்கு வருவீர்களா" என்ற கேள்விக்கு, "அரசியல் கடையை தற்போதைக்கு மூடி வைத்திருக்கிறேன். காமெடி கடையை திறந்து வைத்திருக்கிறேன். அரசியலுக்கு வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார் நடிகர் வடிவேலு.
- ohanbabuவாடா வாடா வாடா ராசாPoints315
- [email protected]யார் என்ன சொன்னாலும் வடிவேல் என்னக்கு ரொம்ப பாவௌரிடே.அவர் காமெடி ஸ்டைல் தனி.அவர் மாதிரி காமெடி பண்ண இனி யாரும் இல்ல.வடிவேல் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.3 days ago · (0) · (0) · reply (0) ·
- Kumarஇப்போது எல்லாரும் பேசுவது... அடுத்த முதல்வர் நான்தான் ... இல்லை அடுத்த முதல்வர் எனது மகன் தான்....இனி நீங்களும் இந்த லிஸ்டுல உண்டு... அதுக்கு உடனடியாக நீங்க கர்நாடக முதல்வரை பார்த்து மனு கொடுக்கணும்....
thax