'அஜித் சொன்னா நடக்கும்!' - சிவா பேட்டி
பத்தாவது படமான 'வணக்கம் சென்னை' வெளியான உற்சாகத்தில் இருக்கிறார் சிவா. அதனாலேயே தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினார்.
'சென்னை -28', 'வணக்கம் சென்னை' இந்த சென்னை உங்களை விடாது போலிருக்கே?
“இந்தப் பேர் பொருத்தமே ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது. எல்லாருக்கும் இப்படி அமையுமான்னு தெரியலை. எனக்கு வாழ்க்கையையும் நிறைய நண்பர்களையும் கொடுத்தது இந்த நகரம்தான். எனக்குப் பிடித்த இந்த ஊரின் பெயர் என் படங்களின் தலைப்பாக வருவதில் ரொம்ப சந்தோஷம்.”
தமிழ்ப்படம் மாதிரியான படங்களை தொடர்வீங்களா?
“அந்த மாதிரி படங்களை அடிக்கடி பண்ணமுடியாது. இதுவரைக்கும் வந்த என் படங்களின் பார்முலாவிலிருந்து மாறி புதுவிதமான முயற்சிகளில் இனி படம் பண்ணப் போகிறேன்.”
சென்னை 28, சரோஜா குழு நண்பர்கள் எல்லாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வீங்களா?
“சந்தோஷமான, எதாவது பிரச்சினையான நேரங்கள்ல எல்லோரும் கண்டிப்பா ஒண்ணா இருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் இப்போ பிஸியாயிட்டாங்க. வெங்கட்பிரபு, ஜெய் எல்லாரையும் பார்க்கமுடியலைன்னாலும் அப்பப்போ போன் பண்ணி பேசிடுவோம். எல்லோரும் சேர்ந்து திரும்பவும் படம் பண்ணணும்னு ஆசையா இருக்கு. பார்ப்போம்”
உங்க மனைவி பிரியாவும், ஷாலினி அஜித்தும் பேட்மிட்டன் தோழிகளாமே?
“ஆமாம். இப்பவும் ரெண்டு பேரும் அவ்ளோ ஆர்வமாக விளையாட்டுல கவனம் செலுத்துறாங்க. அஜித்தும் என்னை அவரோட சகோதரராதான் எங்கேயும் அறிமுகப்படுத்துவார். நான் நல்லா வளரணும்னு நினைக்கிற மனிதர் அவர். சென்னை 28 படத்தை முதல் நாளே பார்த்துட்டு வாழ்த்தினார். இப்போ, வணக்கம் சென்னை பாட்டு கேட்டுட்டு.. 'இந்த படம் உனக்கு புது கலர் கொடுக்கும். இனி நல்லா வருவே'னு பாராட்டினார். அவர் சொன்னா நடக்கும்.
”
கிருத்திகா உதயநிதி, ஜஸ்வர்யா தனுஷ், நடிகர் விஷ்ணு மனைவி ரஜினி இப்படி பலரும் படம் இயக்கத் தொடங்கிட்டாங்களே? உங்க மனைவிவையும் எதிர்பார்க்கலாமா?
“அவங்க ஆர்வம் எல்லாம் பேட்மிட்டன்ல மட்டும்தான்.”
கிருத்திகா உதயநிதியின் முதல் படம் இது. எப்படி பண்ணியிருக்காங்க?
“கதை சொல்லும்போதே கேட்க புதுசா இருந்துச்சி. படத்தில் எமோஷனல் பகுதி எல்லாம் ரொம்பவே அழகா நகர்த்தி யிருக்காங்க. விஸ்காம் படிச்சுட்டு சினிமால எவ்வளவு ஆர்வமா இருந்திருக்காங்கனு படப்பிடிப்பில் தெரிந்துகொள்ள முடிந்தது.”
பாடலாசிரியர், பாடகர்னு உங்களுக்குள்ளே இருக்கிற மற்ற திறமைகளை மறைத்தே வைத்திருக்கீங்களே?
“படம் இயக்குறதுதான் எனக்கு ரொம்ப இஷ்டம். அது சரியான நேரத்தில் வெளிப்படும். 'வா' படத்தின் ஷூட்டிங்ல திடீர்னு ஒரு பாட்டு தேவைப்பட்டுது. அதுதான் அப்போ எழுதினேன். ரேடியோ சேனலில் வேலைப்பார்க்கும்போது நிறைய பாட்டு எழுதியிருக்கேன். நேரம் கிடைக்கும்போது எல்லாமும் செய்வோம்! கடவுள் இருக்கார். நம்பிக்கையும் இருக்கு!”
thanx - the tamil hindu
'வணக்கம் சென்னை' படத்திற்கு வரி விலக்கு கிடையாது என்று தமிழக அரசு அறிவிப்பு.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்த படம் 'வணக்கம் சென்னை'. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தயாரித்திருந்தார்.
படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'U' சான்றிதழ் அளித்திருந்தார்கள். அதற்கு பிறகு வரி விலக்கிற்கு தமிழக அரசிற்கு படம் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரி விலக்கு இல்லாவிட்டாலும் படம் வெளியாகும் என்று அறிவித்து படத்தினையும் வெளியிட்டுவிட்டார்கள்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், “'வணக்கம் சென்னை' படத்திற்கு எதிர்பார்த்தது போலவே வரிவிலக்கு கிடைக்கவில்லை. வரிவிலக்கு கொடுக்கலாம் என்று கையெழுத்திட்ட அதிகாரியை பணியிட மாற்றம் செய்துவிட்டார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். “ என்று ட்விட்டியுள்ளார்.