‘‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ என்று தொடர்ச்சியாக நகைச்சுவைப் படங்களை கொடுத்தேன். அந்த பின்னணியிலிருந்து ‘அலெக்ஸ்பாண்டியன்’ மூலம் ஆக்ஷன் களத்துக்கு மாறினேன். அது சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை. நம்முடைய பலம் எது? பலவீனம் எது என்று தெளிவாக உணர்ந்து இறங்க வேண்டும் என்ற யோசனைக்காகக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அந்த இடைவெளியில் உருவானதுதான் இந்த ‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ என்ற நகைச்சுவைக் களம்” என்கிறார், இயக்குநர் சுராஜ். தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து…
ஜெயம்ரவி, த்ரிஷா, சூரி, அஞ்சலி கூட்டணி எப்படி உருவானது?
இது ஒரு கிராமத்துக் கதை. படத்தின் இரண்டாம் பாதி நகரத்தில் நடக்கிறது. ‘ஜெயம்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி கிராமத்துக் கதையில் நடிக்கவில்லை. அவரைச் சந்தித்தபோது, ‘தொடர்ந்து ஆக்ஷன், காதல் பின்னணி படங்களில் நடிக்கிறீங்க. இடையில் நீங்கள் நகைச்சுவை படத்தில் நடிக்கவே இல்லை. இந்த நேரத்தில் நடித்தால் நல்லா இருக்கும்’ என்று கூறினேன். ‘எனக்கும் அந்த ஆசை இருக்கு’ என்றார். கதை சொன்னேன். அவருக்கும் பிடித்து விட்டது.
நாயகி தேர்வு என்று வந்தபோது த்ரிஷா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கச் சரியாக இருப்பார் என்று அவரைப் பிடித்தோம். மற்றொரு நாயகியாக அஞ்சலி சரியாக நடிப்பார் என்று தேடினால் அவரைப் பற்றித் தகவல் ஏதுமில்லை. அவரைத் தேடிப்பிடித்ததே பெரிய கதை. முதல் பாதிப்படத்தில் அஞ்சலியின் அட்டகாசமும், இரண்டாம் பாதியில் த்ரிஷாவின் கலகலப்பும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். படத்தில் சூரிக்கும் முக்கிய வேடம். படம் முழுக்க இருப்பார். அவரை வைத்துதான் நகைச்சுவையே நகரும். அவரது தோற்றத்தை மாற்றி உருவத்திலும் நடிப்பிலும் செம ரகளை செய்ய வைத்திருக்கிறோம். இனி படம் பார்த்துட்டு ரசிகர்கள்தான் சொல்லணும்.
த்ரிஷா, வருண் மணியன் பிரச்சினை, அஞ்சலி, களஞ்சியம் பிரச்சினை என்று உங்கள் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் பரபரப்பாக இருந்ததே?
எப்படிச் சமாளித்தேன் என்றுதானே கேட்கிறீர்கள். எல்லாம் அதிர்ஷ்டம்தான். ஒரு நாயகியை வைத்துப் படம் எடுப்பதே பெரிய விஷயம். நான் இரண்டு நாயகிகளை வைத்துப் படத்தை முடித்தேன். த்ரிஷா அப்போது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இருந்தார். இந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டுக் குடும்ப வாழ்க்கைக்குச் செல்லும் முடிவில் இருந்த நேரம் என்பதால் அவருடைய பகுதி படத்தை முதலில் முடித்தேன்.
படத்தின் கடைசிப் பாடல் படப்பிடிப்புக்கு வந்த அஞ்சலியை அப்படியே இரண்டு நாட்கள் பிடித்து டப்பிங் வேலையையும் முடித்தேன். நட்சத்திரங்களை குழந்தை மாதிரி வேலை வாங்குவேன். அதனால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் என் படங்களைக் குறித்த காலத்தில் முடித்துவிடுகிறேன்.
காமெடியை மையமாகக் கொண்டு படம் இயக்குகிறீர்கள். ஆனால் நகைச்சுவை நடிகரை நாயகனாக வைத்துப் படம் எடுக்க முன்வருவதில்லையே?
காமெடியனை இங்கே காமெடியனாக மட்டுமே பார்ப்பார்கள். படத்தில் ஊறுகாய் மாதிரிதான் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் முழு சாப்பாடு அளவுக்கு பெர்பாமென்ஸ் பண்ணும்போது அதைச் சாப்பிட முடியாது. காமெடியன்கள் அடிவாங்கும்போது ரசிப்பதைப் போல சண்டை போடும்போதோ, அழும்போதோ, சென்டிமென்ட் காட்சிகளில் தோன்றும்போதே ரசிக்க முடிவதில்லை. அந்தக் காலத்தில் நாகேஷ் ‘சர்வர் சுந்தரம்’, ‘நீர்க்குமிழி’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கேரக்டரிலும் நடித்தார்.
அது முடிந்து அடுத்தடுத்த படங்களிலேயே மீண்டும் பழைய டைப் காமெடிக்கு மாறினார். தொடர்ந்து ஒரு படம் அப்படியும், மறு படம் இப்படியும் நடித்தார். அதேபோல காமெடியன்களை வைத்து நாங்கள் கதை உருவாக்கும்போது அவர்களை சீரியஸான ஆளாக காட்டுவோம். அந்த சீரியஸ்னெஸ்ஸில் அவர்கள் எது செய்தாலும் ரசிகர்களுக்கு அது காமெடியாகவே இருக்கும்.
உதாரணம். ‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகர் கதாபாத்திரத்தில் அப்படித்தான் வடிவேலு நடித்திருப்பார். அதனால் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. நம் ரசிகர்களுக்கு காமெடியன் முழுநீளப் படத்தில் நடித்தாலும் காமெடி மட்டுமே செய்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டு அவர்கள் சண்டை, சென்டிமென்ட், அழுகை என்று இறங்கினால் சரியாக வராது. அதனால்தான் அந்த விஷப்பரீட்சைக்கு நான் போவதில்லை.
‘அப்பாடக்கர்’ என்ற தலைப்பு ஏன் ‘சகலகலாவல்லன் அப்பாடக்கர்’ என்று மாறியது?
இப்போதும் படத்தின் தலைப்பு ‘அப்பாடக்கர்’ என்றுதான் சொல்லிவருகிறேன். பேச்சு வழக்கு வார்த்தை என்பதால் அதை மட்டுமே பயன்படுத்த முடியவில்லை. ‘அப்பாடக்கர்’ என்றால் அனைத்தும் தெரிந்தவன் என்று அர்த்தம். அந்தத் தலைப்பை வைத்தால் யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.
அதனால்தான் அந்தத் தலைப்புக்கு முன் சகலகலாவல்லவன் என்று சேர்த்துக்கொண்டோம். ஏ.வி.எம். நிறுவனத்தில் பெரிய ஹிட் கொடுத்த படத்தின் தலைப்பு இது. நட்பு அடிப்படையில் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்கள்.
உங்களின் அடுத்த நாயகன்
விஷால். ஒருவரிக் கதை சொல்லிவிட்டேன். அவருக்கும் பிடித்துவிட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அந்தப் படத்தின் வேலைகளில் இறங்குவது திட்டம்.
அ
நன்றி - த இந்து