முதல் படம் என்பது எந்த இயக்குநருக்கும் ஒரு மகத்தான கனவு. அதில் தன் திறமையை, ஆளுமையைக் காட்டிவிட வேண்டும் என்று நினைப்பது இயல்பு. வாய்ப்பே கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் ஆண்டுக் கணக்கில் அல்லாடும் சூழலில் இள வயதிலேயே வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. அத்தகைய அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆதிக் ரவிச்சந்திரனின் மனதில் என்ன இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் படம் அவரது கனவின் வெளிப்பாடு என்றால் அவரைக் குறித்து அனுதாபமும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் அவரது முதல் படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் தரத்தை அலசுவதற்கு முன்பு அதன் கதையை, அதாவது கதை என்ற பாவனையை பார்த்துவிடுவோம். படத்தின் தலைப்பு ஒரு ஆணின் பார்வையின் வெளிப்பாடு. ஆணின் பார்வையில் மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்ப்பது தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. எனவே அதை விட்டுவிடுவோம். தலைப்பின் பொருள் சொல்லும் சேதி முக்கியமானது. பெண்களைப் பண்டங்களைப் போலத் தேர்வுசெய்யும் ஒரு ஆணின் மனப்பான்மையை அது வெளிப்படுத்துகிறது.
படத்தின் கதை அல்லது அதுபோன்ற ஒன்று இதுதான்: விடலைப் பருவத்தில் இருக்கும் ஒரு பையன் தன்னுடைய இரண்டு தோழிகளில் ஒருத்தியைத் தன் காதலியாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். சித்தப்பாவின் வழிகாட்டுதலின்படி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். அவளும் காதலை ஏற்கிறாள். அந்தக் காதல் தோல்வியில் முடிய, அவன் உடனே இன்னொரு தோழியைச் சந்தித்துத் தன் காதலைச் சொல்கிறான். அந்தக் காதலும் முறிந்துபோக, அவன் மீண்டும் தன் பழைய காதலியிடம் திரும்புகிறான். அதற்குள் இன்னொரு காதலில் விழுந்து எழுந்திருக்கும் அந்தப் பெண் இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் வர, இந்தப் பையன் முற்றிலும் புதிய பெண்ணிடம் தன் காதல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தயாராகிறான்.
காதல் ஏற்படுவது, பிரிவது, புதிய துணை கிடைப்பது என எதையும் நம்பகமாகவோ நேர்த்தியாகவோ சித்தரிக்க இயக்குநர் துளியும் மெனக்கெடவில்லை. காதல் உணர்வைக் காட்டுவதற்கோ பிரிவின் வலியைச் சொல்வதற்கோ ஒரு வலுவான காட்சியைக்கூட இயக்குநரால் யோசிக்க முடியவில்லை. காதல் சமாச்சாரம் இருக்கட்டும். நாயகனின் சித்தப்பாவின் கடை (மதுக் கடைதான்) அவர் கையை விட்டுப் போகிறது. இதை நாயகன் மீட்டுத் தருகிறான். நாயகன் தன் பழைய காதலியை மீண்டும் நெருங்க, காதலியின் உறவினரின் துணையை நாடுகிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவருக்கு ஒரு உதவி செய்கிறான். இதுபோன்ற காட்சிகளிலும் துளியும் நம்பகத்தன்மை இல்லை.
அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார். நேரடியான, நெருக்கமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரு ஆபாசப் படம் எடுக்கும் திறமை இயக்குநருக்குக் கைவந்திருக்கிறது. சொல்லப்போனால், பெண் உடலைக் காட்சிப் பொருளாக மாற்றாமலேயே, உறவின் நெருக்கத்தைக் காட்சிப்படுத்தாமலேயே ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாலுறவைத் தவிர வேறு எந்த உறவும் சாத்தியமில்லை என்னும் பார்வையை வசனங்கள் மூலமும் காட்சிகளாலும் திரும்பத் திரும்பச் சொல்கிறது இந்தப் படம். பாலுறவைத் தவிர வேறு சிந்தனையற்ற விடலைச் சிறுவனின் பார்வையிலேயே படம் நகருகிறது. திரையரங்கில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! பெண்கள் சார்ந்தும் பாலுறவு சார்ந்தும் பல இளைஞர்களுக்கு இருக்கும் ஆழ் மன ஆசைகளுக்கும் பாவனைகளுக்கும் திரையில் ஒரு வடிவம் கிடைக்கும்போது அவர்கள் அதைக் கொண்டாடத்தானே செய்வார்கள்?
நான் கன்னி கழியாதவன், எனக்கு அப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்கிறான் நாயகன். அதெல்லாம் டைனோசர் காலத்திலேயே முடிந்துபோன விஷயம் என்கிறார் சித்தப்பா. திரையரங்கம் அதிர்கிறது! இப்படிப் பல வசனங்களை ஆண்களும் பெண்களும் பேசுகிறார்கள். பெண்களை நம்பாதே, நம்பாதே என்று படம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. பெண்ணை நம்பி உருகும் அப்பாவியாக ஆணைச் சித்தரிக்க முயல்கிறது. ஆனால் படத்தின்படியே பார்த்தாலும் அந்தப் பையன் வாய்ப்புக் கிடைக்காததாலேயே ‘சுத்தமாக’ இருக்கிறான். ஓயாமல் வாய்ப்புக்காக ஏங்குகிறான். இவனை மட்டும் எப்படி நம்புவது? பெண்களை நம்பாதே என்று சொல்ல இவனுக்கும் இவன் சித்தப்பாவுக்கும் என்ன யோக்யதை இருக்கிறது? (மேற்கொண்டு படத்தின் காட்சிகளையோ வசனங்களையோ உதாரணம் காட்டுவது நோய்க் கிருமிகளைப் பரப்புவதற்கு ஒப்பானது என்பதால் அது இங்கே தவிர்க்கப்படுகிறது.)
பாலுறவு விழைவும் பெண்ணின வெறுப்பும் படத்தின் ஆதாரமான அம்சங்கள். கூடவே போதை நாட்டம். போதையிலும் பாலுறவு தொடர்பான பேச்சே இடம்பெறுகிறது. படத்தில் வரும் ஆண்(கள்) விரும்புவது பாலுறவை. ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் சாடுகிறார்கள். பெண் வெறுப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். பாலுறவை நாடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம் என்றால் என்ன பொருள்? பெண்ணின் உடல் மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்று பொருள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொல்ல விரும்பும் செய்தியும் இதுதான் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
படம் தன்னை அறியாமலேயே ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. படம் பார்க்க வரும் ஆண்களின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. பாலுறவு விழைவும் பெண் வெறுப்பும் வெளிப்படும்போதெல்லாம் அவர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுகிறார்கள். இத்தகைய இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்திருக்கும் இயக்குநர், அவர்களது உளவியலை, அடி மன ஆசைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்குத் தீனிபோடுகிறார். இதன் மூலம் பார்வையாளர்களின் மலினமான இயல்புகளை வெட்கமின்றிச் சுரண்டுகிறார்.
பாலுறவு வேட்கை கொண்ட விடலைச் சிறுவனின் கதையைப் படமாக்கக் கூடாது என்பதல்ல. ஆனால் விடலைச் சிறுவன் என்றாலே அவனுடைய ஒட்டுமொத்த உளவியலும் பெண் உடல் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் பிரச்சினை. பாலுறவு சார்ந்த உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘பாய்ஸ்’ முதலான பல படங்களில் தமிழ்த் திரையுலகம் பார்த்திருக்கிறது. அந்தப் படங்கள் விடலைச் சிறுவர்களின் வாழ்வின் வேறு பரிமாணங்களையும் காட்டின. இந்தப் படமோ அவர்களை முழுக்க முழுக்கப் பாலியல் பிண்டங்களாகச் சித்தரிக்கிறது.
இதே விடலைப் பருவத்தில்தான் பெரும்பாலான இளைஞர்கள் கல்வியை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதே விடலைப் பருவத்தில்தான் பல இளைஞர்கள் கலை, விளையாட்டு, பயணம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதே விடலைப் பருவத்தில் பல்வேறு துறைகளில் உலக சாதனை செய்தவர்களும் இருக்கிறார்கள். உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக்கின் விடலைகளுக்கோ பாலுறவு, மது ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. முதிரா இளைஞர்களின் அரைவேக்காட்டுத்தனமான குரலையே தன் முதல் படத்தின் அடையாளமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக்.
கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, மணிகண்டன், பிரம்மா போன்ற பல இளைஞர்கள் தங்கள் முதல் படத்தில் தமிழ் சினிமாவின் எல்லைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் அர்த்தபூர்வமாகவும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகளுக்கு நடுவே இப்படி ஒரு முதல் படம் வருவது சூழலை மாசுபடுத்தும் முயற்சி. ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.
தொடர்புக்கு: [email protected]
நன்றி-தஹிந்து
- அன்புசரியா சொல்றிங்க தலைவா.. A படங்கள் மட்டும் திரையிடும் திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம். மற்ற தமிழ் படங்களை போல் அனைத்து திரையரைங்கிலும் வெளியிட்டதே எனக்குள்ள கோபம்.about 5 hours ago(1) · (1)reply (0)
- Mநான் கூட விமர்சனத்துக்கே லாயக்கில்லாத குப்பை , இதை பற்றி எழுதி நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்று எண்ணினேன். ஆனால், இப்படி ஒரு சாடல் இல்லாது போனால் இந்த கும்பலுக்கு அங்கீகாரம் கொடுத்த மாதிரி ஆகிவிடும். தமிழ் இந்துவுக்கு வாழ்த்துக்கள்.Points2125
- Sவெளிபடையாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எடுத்துகொள்ள முடியாது... அதன் விளைவுதான் படத்தின் வசனத்தில் வெளிப்பட்டு இருக்கிறது... "பள்ளி அறை போகலாம் பக்கம் ஓடிவா" என்பதற்கும்.... "படுக்க போலாம் வரியா" என்பதற்கும் வித்தியாசம் இருக்கு நண்பர்களே......Points375
- Kஊரில் சாராயக் கடைகள் அதிகம், அதனால் தான் அனைவருக் குடிக்கிறார்கள் என்று ஒரு பக்கம் போராடுகிறார்கள்... மறுபக்கம் இது போன்ற சீரழிவு படங்களுக்கு கைதட்டல்... சரி அது தான் A சான்றிதழ் தானே கொடுத்திருக்காங்க என்றால் இதற்க்கு விளம்பரம் ஏன் தொலைகாட்சிகளில் வருகிறது? ஹீரோ போடும் சட்டையை அப்படியே காப்பி அடிக்கும் இளைஞர் கூட்டம் தமிழகத்தில் இருக்கும் நிலையை இப்படிக் பட்ட படங்களை என்ன நோக்கத்தில் எடுக்கிறார்கள்? இது தான் கலை துறையா? அணைத்து செயலுக்கும் பின் விளைவு உண்டு... இது போன்ற கேடுகெட்ட படங்கள் உண்டாகும் பாதிப்புகள் இந்த படக்குழுவினரையும் ஒருநாள் சென்றடையும்... அப்போது உணருவார்கள்...குடி குடி என்று சொல்லி குடிப்பதை ஹீரோயிசம் ஆக்கி ஒரு தலைமுறையை அளித்தார்கள்... இப்போது பெண்களை கொச்சைப் படுத்து அதில் அடுத்த அடியை எடுத்து வைதிருக்கிறார்கள்... வளரட்டும் கலைத் துறை...Points12625
- Rசற்று முன் வந்த செய்தி. பள்ளி மாணவியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர். பற்றி எரிந்த சேலம்! இது எதனால்? திரிஷா இல்லேன்னா நயன்தாரா மாதிரியான படங்களை பார்த்தால் இப்படி தான் நடக்கும். உங்கள் வீட்டிலும் விடலை குழந்தைகள் உள்ளனர் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
- Uதங்க மீன்கள் , பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் ஓடுச்சா என்ன .. அப்பறம் எதுக்கு புது இயக்குனர் தரமான படம் எடுத்து பல்பு வாங்கணும் .. அதான் தெளிவா படம் எடுத்து ஹிட் அடிக்கிறார் ... கெடச்ச வாய்ப்ப கரெக்டா பயன்படுத்தி இருக்காறு.. பெண்ணியம் மட்டும்தான் பேசணுமா ... ஆணியம் பேசகூடதாமா...
- Pபருத்தி வீரன் படத்தை கொண்டாடிய பத்திரிகைகள் ஒன்றை மறந்து விட கூடாது .அதில் நாயகன் திருமணதிற்கு முன் பெண்களிடம் தொடர்ப்பு உள்ளது போல் அமைத்து இருப்பர் .இதை ஒரு பெரிய இயக்குனர் செய்து இருந்தால் நீங்களே இதுதான் இன்றைய சமுகம் என்று சொல்லி இருப்பிர்கள்Points3485
- Rசற்று முன் வந்த செய்தி. பள்ளி மாணவியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர். இது எதனால்? இப்படி எல்லாம் படம் எடுத்தால் இப்படி தான் சமூகத்தில் நடக்கும். சக்தி வாய்ந்த ஊக்கத்தை சிறிதளவாவது நல்லதுக்கு பயன்படுத்துங்கள். உங்கள் விடலை குழந்தைகளும் இந்த சமூகத்தில் தான் உள்ளனர்.
- Sஇந்த படத்தை நடித்தவர்களும் பிடித்தவர்களும் தயாரித்தவர்களும் குடும்பத்துடன் பார்க்க இயலுமா? என்னால் இந்த படத்தை இறுதிவரை பார்க்க அசிங்கமாக இருந்தது .... gv, ananthi இவர்களின் மீது நல்ல மனிதர்கள் என்ற எண்ணம் இருந்தது.... இவர்கள் இப்படி பணதுக்காக நடிப்பார்கள் என்று எதிர்பார்கவில்லை ...... நல்ல ஒரு நகைச்சுவை படமாக இருக்கும் என்று தன எண்ணினேன் ...............
- KAdult Comedy Genre எனப்படும் இதுபோன்ற படங்களை ஹாலிவுட்-ல் American Pie ,There is something about Mary போன்ற படங்களும் , இன்னும் பல படங்களும் நிறையவே எடுத்துவிட்டார்கள் , பாலிவுட்-ல் Delhi Belly, Vicky டோனர் போன்ற படங்களும் வந்திருகின்றன வெற்றியும் பெற்றிருக்கின்றன, தமிழிலும் துள்ளுவதோ இளமை படமும் , எஸ்.ஜே.சூர்யா படங்களில் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும், உங்கள் கட்டுரையில் சொன்னது போல "திரையரங்கில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! பெண்கள் சார்ந்தும் பாலுறவு சார்ந்தும் பல இளைஞர்களுக்கு இருக்கும் ஆழ் மன ஆசைகளுக்கும் பாவனைகளுக்கும் திரையில் ஒரு வடிவம் கிடைக்கும்போது அவர்கள் அதைக் கொண்டாடத்தானே செய்வார்கள்?" இனியும் இதுபோல படங்கள் வரும்... இதுவும் கடந்து போகும்....
- Kஇந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவது ??? சரியா கன்னி பெண்கள் டினோசர் காலத்தில் அழிந்து பொய் விட்டார்கள் என்று ஒரு வசனம் tv யில் தினமும் 50 முறை வருகிறது . இடன் அர்த்தம் ennavendru புரியவில்லை . இதற்கு பதில் a செர்டிபிகாடே படம் என்பதால் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள் . ஒரு வேளை 3 எ என்றால் இன்னும் கீல்தரமஹா படம் எடுக்கலாமா . தமிழஹா முக்கிய talaivargal இடு pattri இன்னும் ஏன் karuthu தெரிவிக்கவில்லை ? ஆண்டவனால் கூட தமிழர்களை காக்க முடியாது .
- Kகாக்க முட்டையும், குற்றம் கடிதலும் சினிமாவின் சில எல்லைகளை விரிவு படுத்தியது என்று சொன்னால் தி.இ. நயன். படம் வேறு சில எல்லைகளை விரிவு படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட வகை படங்கள் மட்டுமே நல்ல சினிமா என்று சொல்ல முடியாது. யானை உலவும் காட்டில் அணில்களுக்கும் இடமுண்டு. ரசனை என்பது பல தரப்பட்டது. மனதில் நெகிழ்வை உருவாக்கி வியக்க வைக்கும் படங்களைப் போலவே மனதை இலகுவாக்கி, அபத்தமாக சிரிக்க வைத்து நிஜ வாழ்வின் அழுத்தங்களைக் குறைக்கும் படங்கும் நமது மக்களுக்குத் தேவை. இது எல்லா நாடுகளிலும் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. ஹாலிவுட்டில் அமெரிக்கன் பை போன்ற படங்கள் பெரும் வரவேற்பு பெறுகின்றன. அதனால் அமெரிக்க இளைஞர்கள் அனைவரும் சிந்தனையும் பாலுறவில் மூழ்கி இருக்கிறதா என்றெல்லாம் யாரும் அபத்தமாக ஆராய்ச்சி செய்வதில்லை ஒருபக்க, ஆணாதிக்க மற்றும் அபத்த சிந்தனைகள் மற்றும் அது சார்ந்த நகைச்சுவை என்பது மிக மிக மேலோட்டமான தன்மையிலேதான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதை சீரியஸாக எடுத்து மூளையைக் குழப்பிக் கொள்வது நேர விரயம்.
- Rஅமெரிக்க இளைஞர்கள் சினிமாவ சினிமாவா மட்டும் பார்த்துட்டு அவங்க அவங்க வேலைய பாக்க போயிடுவாங்க ஆனா நாம அப்படி இல்லையே நாப்பது வருசமா சினிமால நடிப்பவர்களைத்தான் நம் தலையெழுத்தை தீர்மானிப்பவர்களாக தமிழ்நாட்டில் உட்கார வைத்திருக்கிறோம், வெட்ககேடு இப்படிப்பட்ட சினிமாவிற்கும் ஆதரவாக பேசுவதற்கு.
- Rநல்ல கட்டுரை. மக்களிடம் கை தட்டு வாங்க வேண்டும், விசில் சத்தம் பறக்க வேண்டும் என்பதெல்லாம் நல்ல விஷயம் தான். அதற்காக எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் சரி என்ற எண்ணம் இருந்தால் படம் இப்படி தான் வரும். காக்க முட்டை படத்தின் இறுதியில் பெங்களூரில் உள்ள பெரிய திரை அரங்கில் வேற்று மொழி ஆட்கள் நபர்கள் கூட கர கோஷம் எழுப்பியது எனக்கு நினைவிருக்கிறது. எந்த மாதிரி கை தட்டல் வாங்க வேண்டும் என்று தேர்வு செய்வது இயக்குனர் தேர்வு. குடி, காதல் இல்லாத வாழ்க்கை வீண், உபயோகம் இல்லாதது என்று நினைக்கும் சமூகத்தை மாற்ற முடியாது.Points240
- உஅது தான் படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப் பட்டிருக்கிறதே! வயது வந்தோருக்கான நகைச்சுவை உங்களுக்குப் பிடிக்காவிடில் அந்த மாதிரியான படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பதே உத்தமம். இதில் இயக்குனருக்கு அறிவுரை எதற்கு?Points5410
- JSநீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.. ஆனால் இந்த படத்தை யாருமே எதிர்க்கவில்லையே அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இந்த புது இயக்குனரை எதிர்த்தால் அவர்களுக்கு விளம்பரம் கிடைகாது.. இதுவே கமல் மற்றும் பெரிய இயக்குனர்கள் என்றால் பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கும்...Points335