ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம், பிட்டு படம் பார்க்காம சும்மா இருப்பியா? என தமிழ் சினிமா ஹீரோயின் ஆனந்தி கேட்கும் ஒற்றைக் கேள்வி, எல்லாவற்றுக்கும் மேலாக டீஸர், ட்ரெய்லர் கொடுத்திருக்கும் ஹைப் என்ற இந்த காரணங்களே ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
” நம்புங்கப்பா இது பிட்டு படம் இல்லப்பா ” என்று ட்ரெய்லரில் ஜி.வி.பிரகாஷ் சொன்னார்.
’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ எப்படிப்பட்ட படம்?
கதை: ஜி.வி.பிரகாஷ் ஸ்கூல் படிக்கும்போதே ஆனந்தியைக் காதலிக்கிறார். ஆனந்தியும் ஜி.வி.யை லவ்வுகிறார். தவறான புரிதலால் ஆனந்தி பிரிந்து செல்கிறார். அந்த கோபத்தில் மனிஷாவைக் காதலிக்கிறார். மனிஷாவும் காதலைக் கை கழுவுகிறார். அதற்குப் பிறகு ஆனந்தியைத் துரத்தும் ஜி.வி என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
ஸ்கூல் பையனுக்கே உரிய தோற்றத்தில் ஜி.வி.பிரகாஷ் ஓ.கே. ஆனால், வெகுளியாக தன்னை காட்டிக்கொள்வதற்காக முகத்தில் பரவவிடும் ரியாக்ஷன்கள்தான் பொருந்தவில்லை. டயலாக் டெலிவரியில் உறுத்தாமல் இருக்கிறார். சரக்கடித்து சலம்புவது, பெண்கள் பற்றி பேசுவது என டயலாக் வைத்தே எஸ்கேப் ஆகும் ஜி.வி.இனிவரும் காலங்களில் கொஞ்சமாவது நடிப்பார் என்று எதிர்பார்ப்போமாக.
அழுகையும், சோகமும், ஈகோவில் வெடிப்பதுமாக ஆனந்தி நடிப்பில் ஈர்க்கிறார். வழக்கம்போல ஒரு கெஸ்ட் ரோல் என்றதும் உள்ளேன் ஐயா என அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார் ஆர்யா.
மனிஷா யாதவ், சிம்ரன், யூகி சேது, மாரிமுத்து, விடிவி கணேஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு. விடிவி கணேஷ் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.
படம் முழுக்க இச்சையும், பச்சையும் கலந்து இருப்பதால் திரைக்கதை பற்றி அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். ஆண்டனி எல். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பிட்டு படம்டி, டகால்டி பாடல்களுக்கு ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளியது.
குடிக்குற பசங்க படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. படிக்குற பசங்க குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க என்பதைப் போல பல வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறந்தது.
படத்துக்கு மூணு கிளைமாக்ஸ் இருப்பதைப் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி வரும்போது இன்ன்ன்னுமா.... லிஸ்ட் பெரிசா போகுதே என யோசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் காட்சிகளில் எந்தக் கோர்வையும், தொடர்ச்சியும் இல்லாமல் பிட்டு பிட்டாக இருக்கிறது.
நன்றி-தஹிந்து