Showing posts with label தொழில்முனைவோர். Show all posts
Showing posts with label தொழில்முனைவோர். Show all posts

Tuesday, November 17, 2015

ஆர்வத்துக்கு தடையில்லை...

பத்மா ஹரிஷ், ஸ்ரீதர்மா புட்ஸ்.

பத்மா ஹரிஷ், ஸ்ரீதர்மா புட்ஸ்.

சொந்த ஊர் புதுக்கோட்டை. படித்தது நாமக்கல். வசிப்பது சென்னை என பன்முக அடையாளங்களைக் கொண்டுள்ளார் பத்மா ஹரிஷ். எம்எஸ்சி புட் பிராஸசிங் படித்த இந்த பட்டதாரி. சென்னையின் புறநகரான காரணையில் பதப்படுத்தபட்ட உணவுகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வாரம் அங்கீகாரம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். பிடித்த வேலையை, குடும்பத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்வது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது என்று தனது தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பொறுப்பான குடும்பத் தலைவியாக வீட்டுப் பணிகளையும் பார்த்துக் கொண்டே, இயந்திரத்தில் ரெசிபிகளுக்கான கலவையைக் கண்காணிக்கிறார். உணவுத்துறை சார்ந்த எனது படிப்புதான் இந்த துறையில் தொழில் தொடங்குமளவுக்கு என்னை ஈடுபடுத்தியது என்று தனது தொழில் அனுபவத்துக்கு ஒரு முன்னுரை கொடுத்தார்.

படித்து முடித்ததும் பல நிறுவனங் களுக்கு வேலை தேடி அலைந் திருக்கிறேன். கடைசியில் ஒரு ஊறுகாய் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கிருந்து பிராக்டிக்கலாக உணவுபொருட்கள் தயாரிப்பு சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். கூடவே ஒரே வேலையை செய்து கொண்டிருக்காமல், வேறு ஏதாவது புதிய முயற்சிகளையும் இந்த துறையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது.

உணவு பொருள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதுதான் எனக்கு பிடித்தமான வேலையாக உணர்ந்த சமயத்தில் திருமணம் முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு இதே வேலையை தொடரமுடியுமா என்ப தெல்லாம் தெரியாது. ஆனாலும் எனது திறமையை பார்த்து எனது கணவர் மற்றும் கணவரது வீட்டில் இதற்கான ஒத்துழைப்பும் அதிகமாகவே இருந்தது. இன்னொன்று எனது மாமனார் சிறிய அளவில் ஹோம் மேட் உணவு தயாரிப்புகளையும் செய்து கொடுத்து கொண்டிருந்தார்.

இதனால் எனது உணவுதுறை சார்ந்த ஆராய்ச்சியும், கணவரது வீட்டினர் மேற்கொண்டிருந்த ஹோம் மேட் தொழிலுமாக சேர்ந்து புதிய வடிவம் எடுத்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது இந்த துறையில் ஈடுபட வீட்டினர் அளித்த ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. என்னால் முடியாது என்று நான் நினைக்கும் வேலைகளைக்கூட, உன்னால் செய்ய முடியும் செய் என குடும்பம் மொத்தமும் ஊக்கப்படுத்தும். அதுதான் என்னை ஒரு தொழில்முனைவோவராக மாற்றியது. சிறிய அளவில் வீட்டில் செய்துகொண்டிருந்த ரெசிபிகளை ஒரு தொழில் வடிவத்துக்கு மாற்றியது.
சென்னையில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய அரசின் மேம்பாட்டு மையத்தில் சேர்ந்து உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி பெற்று அவர்கள் வழிகாட்டுதல்படி தனியாக தொழிலை தொடங்கினேன்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கும் தொழில் கடன், மானியம் குறித்த வழிகாட்டுதல்கள் எல்லாம் அவர்களே ஏற்பாடு செய்து கொடுத் தனர்.

கணவர் மார்கெட்டிங் கவனித்துக் கொள்கிறார், எனது மாமனார் தயாரிப்புக்கு உதவுகிறார். அவசர உணவு வகைகள் தவிர சாம்பார், காரட் பாயாசம் உள்ளிட்டவைகூட தயாரிக்கிறேன். உணவு பொருளுக்கு ஏற்ப இவற்றை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். சுற்றுலா செல்பவர்கள், தொடர்ச்சியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறேன்.

பெரிய அளவில் உற்பத்தி, சந்தை யிடுதல் இல்லை என்றாலும் மாதம் ரூ.1 லட்சம் வரையிலுமான ஆர்டர்கள் கிடைக்கிறது. வழக்கமாக கொடுக்கும் தயாரிப்புகள் தவிர புதிய ரெசிபிகளை முயற்சித்துக் கொண்டே இருப்பது பிடித்திருக்கிறது.

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, விருப்பமான வேலையை, தொழில் முறையில் செய்து வருவதும் எல்லா பெண்களுக்கும் அமைந்துவிடாதுதானே என்கிறார். உண்மைதான் நீங்கள் இன்னும் வளருவதே எல்லோருக்கும் சொல்லும் பாடமாக இருக்கும்.

thanks the hindu

Friday, November 13, 2015

சொந்த அடையாளத்தை உருவாக்குவது சவாலானது

  • செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.
    செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.
எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ முடித்து விட்டு சுமார் பத்து வருடங்கள் எலெக்ட்ரிக்கல் துறையில் பணி யாற்றியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார். தொழிலில் வளர வேண்டும், புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அனுபவத்துடன் கல்வித் தகுதியும் தேவை என்பதை உணர்ந்து மீண்டும் கல்லூரி சென்று பி டெக் பட்டம் வாங்கினார்.


பிடெக் பட்டம் வாங்கிய பிறகு சொந்தமாக சோலார் பொருட்கள் தயாரிக்கும் யூனிட் தொடங்கி இன்று ஆண்டுக்கு ரூ. 1.50 கோடிவரை வர்த்தகம் செய்து வருகிறார். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் (திருநெல்வேலி) பகுதி நேரமாக எம்இ படித்துக் கொண்டே தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


விடா முயற்சிக்கு எடுத்துக் காட்டாக, உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி சோலார் நிறுவனத்தின் முத்துக்குமார் இந்த வாரம் அங்கீகாரம் பகுதியில் இடம் பெறுகிறார்.

``எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்த அடிப்படையில் எலெக்ரிக்கல் துறை சார்ந்த வேலைகளைத்தான் மேற் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி மாணவராக இருந்த அனுபவமும் கை கொடுத்தது. ஆனால் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் வேறு ஒரு தேவை என்னை விரட்டிக் கொண்டே இருந்தது. அதுதான் என்னை சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுக்க வைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் தொழில்முனைவோராக ஆனது உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. கல்வித் தகுதி தேவையாக இருந்தது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிடெக் சேர்ந்து என் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டேன். அந்த படிப்பு முடிந்ததும், பிறகு ஒரு வருடம் மின் பொறியியல் துறையில் தற்காலிக பேராசிரியராக ஒரு கல்லூரியில் பணியாற்றினேன்.

ஆனால் அதைத்தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்த போது சோலார் தயாரிப்புகளின் பக்கம் கவனம் திரும்பியது. வீட்டில் சின்ன சின்ன மின் தேவைகளுக்கு சோலார் பயன்படுத்தியதை ஏன் பெரிய அளவில் மேற்கொள்ளக் கூடாது என்கிற யோசனை வந்தது.

உடனே சொந்த ஊரான ராஜ பாளையத்திலேயே சின்னதாக ஒரு யூனிட் தொடங்கினேன். ஆரம்ப முதலீடாக ரூ.10 லட்சம் செலவானது. அதற்கு பிறகு வங்கிக் கடன் மத்திய அரசின் தொழிற்கடன் போன்றவை கிடைத்து தொழிலை விரிவாக்கினேன்.

சோலார் தயாரிப்புகளை பொறுத்த வரை பல வகைகளில் மக்களுக்கு கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் நான் அதை வாங்கி விற்கும் வேலை களைச் செய்யாமல் சொந்தமாக சர்க்யூட் தயாரிக்கிறேன். சின்ன சின்ன மூல பாகங்களை வாங்கி அதை ஒருங்கிணைத்து தயாரிக்கும் வேலைகளை செய்கிறேன். இன்வெர் ட்டர்கள், பேட்டரிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணை யாக எங்கள் யூனிட்டில் சோலார் இன் வெர்ட்டர்கள் உற்பத்தி செய்கிறோம்.

தற்போது ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்து வருகிறேன். சோலார் பயன்பாடு குறித்து மக்கள் அதிகமாக தெரிந்து கொள்ளும்போது எங்களது விற்பனை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். மேலும் அடுத்த இரண்டு வருடங்களில் விற்பனை ரூ.5 கோடி எட்ட வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.

நான் ஒரு இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் போல, தற்போது பல கனவுகளுடன் என்னிடமும் பத்து நபர்கள் வேலைபார்த்துக் கொண் டிருக்கிறார்கள். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு சோலார் மின்சார வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.

சோலார் இன்வெர்ட்டர் உற்பத்தி தாண்டி மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைத்து சோலார் தயாரிப்புகளுக்கான பயிற்சிகளும் கொடுத்து வருகிறேன்’’ என்றார்.

ஒரு தொழிலை உருவாக்கி அதில் வெற்றிகரமாக நிற்பது சவாலானதுதான் என்பது இவரது பேச்சிலிருந்து புரிந்தது.

thanks the hindu