Showing posts with label தேனம்மை. Show all posts
Showing posts with label தேனம்மை. Show all posts

Friday, November 02, 2012

தேனம்மை - இயக்குநர் மகேந்திரன் - சிறுகதை






         முதலில், தனது குடும்பக் கதையைப் பத்திரிகையில் எழுதுவதற்கு சம்மதம் சொன்ன கான்ஸ்டபிள் புகழேந்திக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

""என்னதான் இது உங்களின் உண்மைக் கதை என்றாலும், கதை எழுதுகிறவர்களின் இயல்புப்படி கொஞ்சம் கற்பனையும் சேர்த்துக் கொள்வேன்... பரவாயில்லையா?'' என்று கேட்டபொழுது, ""அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் கதையையே யாரும் நம்பப்போறதில்லை... அதுக்கு நீங்க காது மூக்கு வச்சு எழுதினா மட்டும் என்ன ஆயிடப்போறது'' என்றார் புகழேந்தி... இன்றுதான் முதன்முதலாக  அவரை இப்படி விரக்தியுடன் பார்க்கிறேன்... நேற்றுவரை சிரித்த முகத்தோடு உலாவந்த அவர் யாரும் அறியாத அவருடைய கதையை என்னிடம் இன்று சொல்லவைத்திருப்பதும் இந்த திடீர் விரக்திதான்.

""சொன்னா நம்பமாட்டீங்க'' என்ற எச்சரிக்கையோடு அவர் ஆரம்பித்தாலும், அவர் சொல்வதை எல்லாம் நான் நம்பத் தயாராக இருந்தேன்... அவர்மீது நான் கொண்டுள்ள மரியாதை அதற்கு அடிப்படை என்றால், அவர் என் ஊர்க்காரர் என்ற வகையில் கூடுதலான ஒரு நெருக்கம். புகழேந்தியும் நானும் செட்டிநாட்டில் உள்ள கொத்தமங்கலம் ஆட்கள். நான் சென்னைவாசியாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஹோட்டலில் வைத்து தற்செயலாக அவரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் இருவருக்கும் சொந்த ஊர் ஒன்றுதான் எனத் தெரிந்ததும் நட்பாகிவிட்டோம். அவர் சென்னைக்கு மாற்றலாகி வந்து இரண்டு வருஷமே ஆகிறது.

அவர் இளைஞர். நான் நரைத்தவன்... இருந்தாலும் சகவயது நண்பனைப் போல் என்னைப் பாவித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து சந்தித்து சிரித்துச் சிரித்து பேசிவிட்டுப் போவார்... ஆனால் ஒரு தடவைகூட அவர் வீட்டிற்கு வரும்படி என்னை அவர் அழைத்ததே கிடையாது. அதற்கான காரணம் என்ன என்பதைத்தான் இன்று என்னிடம் சொல்லி என்னை அதிர்ச்சியும் வியப்பும் அடைய வைக்கிறார். இருந்தாலும் அவர் சொன்னதை எல்லாம் நிஜம்தான் என நான் நம்புவதற்கு, அவருக்கும் எனக்கும் உள்ள ஒரு பொதுவான குணாதிசயமே ஆதாரம்.

எல்லாரும் மதிக்கும் எழுத்தாளனாக என்னை நான் கற்பனை செய்து கொண்டு என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் போல, நேற்று வரை புகழேந்தியும்கூட ஒரு கற்பனை உலகில் வாழ்ந்திருக்கிறார்.


என் வீட்டில் உள்ளவர்கள் விடுமுறைக்கு கொத்தமங்கலம் போய் விட்டதால் வீட்டில் நிலவிய தனிமையும் நிசப்தமும் புகழேந்தியை மனம்விட்டுப் பேசவைத்தது.

புகழேந்தியின் என்றும் மாறாத சிரித்த முகத்தை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டு அவரது போலீஸ் காலனியைச் சேர்ந்த எல்லாரும் இன்று வரை "அதிசயப்படுவதற்கு'க் காரணமே புகழேந்தியை அவரது மனைவி சித்ரா தினம் தினம் சண்டையிட்டு வீட்டையே ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் கொடுமைதான்!

கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள்கூட விடுமுறை விடாமல் ட்யூட்டி முடித்து அன்பான கணவன் வீட்டிற்குள் வந்ததுமே சித்ரா ஏன் சண்டைக் கோழியாக மாறி அவனைக் குதறி எடுக்கிறாள் என்பதைவிட, காலனிக் காரர்கள் வியப்பது எல்லாம் காலையில் சிரித்தபடியே வெளியே வரும் புகழேந்தியைப் பற்றித்தான்.

அதுவும் வீட்டிற்குள் சித்ரா என்னதான்  கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் எதிர்க் குரலாக புகழேந்தியிடமிருந்து ஒரு முணு முணுப்புகூட வருவதில்லை. ட்யூட்டிக்குப் போக காலையில் வீட்டிலிருந்து வெளியே வரும் புகழேந்தி, குலப்பெருமை காத்து நிற்கும் குணவதியோடு குடும்பம் நடத்தும் மகா அதிர்ஷ்டசாலிபோல அவர்கள் எல்லாரிடமும் சிரித்துப் பேசும் அதிசயத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை; குழப்பமடைகிறார்கள்.

இப்படிப்பட்ட அருமையான புருஷனை அவன் மனைவி ஏன் தினம் தினம் வதைத்துக் கொல்லவேண்டும்? இப்படி சண்டை போடத் தெரிந்த வளுக்கு புருஷன் பிடிக்காவிட்டால் அவனை உதறிவிட்டு சொந்த ஊருக்குப் போய் வசதியாய் பிறந்த வீட்டில் உட்கார்ந்து கொள்ளத் தெரியவில்லையா? இப்படியெல்லாம் காலனிக்காரர்கள் நினைக்க முடியாதபடி சித்ராவின் இன்னொரு வகையான முகம்தான் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துவிடுகிறது.

புகழேந்திபோலவே சித்ராவும் ஒரு வினோதப் பிறப்புதான். புகழேந்தி வீட்டில் இல்லாதபோது பல தேவைகளை முன்னிட்டு மற்றவர்கள் மாதிரி வீட்டிலிருந்து வெளியே வரும் சித்ரா, "மணாளனே மங்கையின் பாக்கியம்' என வாழ்கிற உத்தமக் குலவிளக்காய், காலனிப் பெண்களிடம் அன்பும் கருணையும் பொங்க அவள் இனிமையாகப் பேசிப் பழகும் வினோதம் எல்லார் வாயையும் அடைத்துவிடும். ""இவளுக்கே தெரியாமல் இவளுக்குள்ளே புகுந்துவிடும் மோகினிப் பிசாசுதான் புகழேந்தி யைக் குதறி எடுத்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. பாவம், புருஷனிடம் சண்டைக்கோழியாக தான் உருமாறுவதெல்லாம் இவளுக்குத் தெரியாது என்றுகூட அந்தக் காலனிவாசிகள் பயத்துடன் சந்தேகப்படத் தொடங்கினார்கள். இப்படி, சித்ராவைக் குறித்துப் பரிதாபப் படுகிறவர்களாகவும் புகழேந்தியைக் குறித்து அதிசயப்படுகிறவர்களாகவும் இரண்டு கோணங்களில் அல்லாடிக் கொண்டிருந்த காலனிக்கு வெளியூரிலிருந்து விருந்தாளியாக வந்த பெண் ஒருத்தி புகழேந்தி குடும்பத்தைப் பற்றி சகலத்தையும் கேட்டுவிட்டு புதிதாக ஒரு புதிரை அந்தப் பெண்களிடம் விதைத்து விட்டாள்.

""எனக்கும் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் பிள்ளை பிறக்கா மல் ஊருக்குள் நான் அவமானப்பட்டப்ப, இந்த சித்ரா மாதிரித் தான் எனக்கும் என் புருஷன்மேல ஆவேசம் வந்து தினசரிக்கும் அந்த ஆளை கொதிக்கிற எண்ணெயில் போடாத குறையாக வறுத்துக் கொண்டி ருந்தேன். ஆனா அந்த ஆளு இந்த அப்புராணி புகழேந்தி மாதிரி இல்லே... என்னைப் போட்டு காட்டடி மாட்டடியாய் உதை பின்னிப்பிடுவாரு. ஆனா என்னைக்கு எங்களுக்கு ஒரு புள்ளை பொறந்துச்சோ அந்த நிமிஷத்திலிருந்து நாங்க ரெண்டுபேரும் அடியோட மாறிட்டோம். இன்னிக்கும்கூட, நேத்துத் தான் தாலி கட்டினமாதிரி நாங்க நடத்துக்கிறதைப் பார்த்து ஊரே மூக்கில விரல் வைக்குது...'' என்று சொல்லி வைத்தாள் அந்த விருந்தாளி.

இதற்குப் பிறகு "எதைக் குடித்தால் பித்தம் தீரும்' என்றிருந்த காலனிப் பெண்களுக்கு இப்போது தற்காலிகமாக ஒருவித ஆறுதல் கிடைத்தது. சித்ராவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் புது மனுஷியாகிவிடுவாள்... அப்புறம் புருஷனை வதைப்பதை நிறுத்திவிடுவாள் என்று தீர்மானித்து கொஞ்சம் மௌனிக்கத் தொடங்கினார்கள்.

-இப்படி புகழேந்தி சொல்லிவரும்போது நான் அவசர மாய்க் குறுக்கிட்டேன்.

""புகழ்... இதுவரைக்கும் நீங்க சொல்லிவர்றதெல்லாம் சங்கீத வித்வான் ராக ஆலாபனை பண்றமாதிரித்தான் எனக்குத் தோணுது. நீங்கள் இன்னும் பாடத்தொடங்கவே இல்லையே.'

""என்னசார் சொல்றீங்க?''

""புகழ்! நீங்க இதுவரை சொன்னதுலே எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சுக்கிற மாதிரி தெளிவா இல்லே. உங்க சம்சாரம் ரெண்டு வருஷமா உங்களோட சண்டை போடுறாங்கன்னா, எதைக் காரணம் சொல்லி சண்டை போடுறாங்க? இந்தமாதிரி பொஞ்சாதியாலே வீட்டுக் குள்ளே அவஸ்தைப் படுற நீங்க வெளியே எப்படி சிரிச்ச படி நடந்துக்க முடியுது? இதெல்லாம் எனக்கு காத்துல கை வீசுறமாதிரி இருக்கு.''

""அடுத்தாப்ல அதைத்தான் சார் சொல்ல இருந்தேன். நீங்க பொறுமை இழந்துட்டீங்க.''

""சாரி புகழேந்தி...''

""எங்கிட்ட சண்டைபோடுறப்ப எல்லாம் சித்ரா திரும்பத் திரும்ப ரெண்டே ரெண்டு விஷயங்களைத்தான் குத்திக்காட்டுவா... "நீ பொழைக்கத் தெரியாத ஆம்பி ளைய்யா... நீ சம்பாதிச்சு கொண்டு வர்றதெல்லாம் ஒரு சம்பாத்தியமா?' ரெண்டாவது, நீ ஒரு கொலைகாரன்... உன் ஜாதக தோஷம்தானே என் புள்ளையைக் கொன் னுச்சு... எம் முன்னாலேயே வராதே....'' இந்த ரெண்டை வச்சே  எல்லாத்துக்கும் வம்புக்கு இழுப்பா... உன்னை மாதிரி ஒருத்தனுக்கு சட்டை எதுக்கு? சாப்பாடு எதுக்கு? இப்படி தொடுத்துக்கிட்டே போவா''

""என்ன புகழேந்தி.... உங்களுக்கு குழந்தை பெறந்து இறந்தது உண்மையா?''

""ஆமா சார்... ஆனா அது இங்கே இல்ல. ஊர்லே...''

""சாரி புகழ்... சரி, உங்க கல்யாணம் ஆனப்ப சித்ரா எப்படி?''

""எல்லாரும் அதிசயப்படற அளவுக்கு அன்பானவ  சார்... சித்ரா என் சொந்த மாமா பொண்ணு...  எங்க மாமாவுக்கு விவசாயம்தான் பிரதானம்... தவிர ஜோசியம் சொல்றது ஜாதகம் பாக்குறதுலே ஊருக்குள்ளே அவருக்கு பெரிய பேரு... நல்ல வசதியான வீட்ல பொறந்தும் சித்ராவுக்கு மட்டும் ஆடுங்களை மேய்க்கிறதுலேதான் அலாதிப்பிரியம்... ஆடுங்ககிட்டே காட்டுற அன்பை எல்லாம் ஊரிலே இருக்குற எல்லார்கிட்டேயும் காட்டுவா... அப்படி ஒரு பாசக்காரி... இப்படி இனிமையான ஒருத்திக்கு சித்ரான்னு பெயர் வச்சதுக்குப் பதிலா, எங்க நகரத்தார் பெண்களோட அழகான பெயர்கள்லே ஒண்ணான "தேனம்மை'ன்னு பெயர் வச்சுக்கலாமேன்னு நினைச்சுக்குவேன். எல்லாத்துக்கும் மேலே அவளோட அழகு...! காட்டுப் பக்கம் அவ ஆடு மேய்க்கிறதே பார்த்தா, "ஆடு மேய்க்கிற ராஜகுமாரி' மாதிரி இருப்பா. இதெல்லாம்தான் நான் அவளைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கக் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடியே நானும் சித்ராவும் புருஷன் பெஞ்சாதி மாதிரித்தான் நடந்துக்கிட்டோம். கல்யாணமாகி அஞ்சாவது மாசமே பெறந்த எங்க குழந்தை யைக் கையிலே ஏந்துறதுக் குள்ளே கண்ணை மூடிருச்சு. ஜோசியம் ஜாதகத்துல பெரிய ஆள்னு பேர் வாங்குன மாமாவுக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியாமப் போச்சா? இதெல் லாம் நடந்து ஒரு வருஷம் ஆனப்பதான் ஏதோ மந்திரம் போட்ட மாதிரி சித்ரா திடுதிப் புன்னு அடியோட இப்படி ஆளே மாறிட்டா...  அப்பதான் சென்னைக்கு மாத்தல் ஆகி இங்கே வந்தேன்...

சித்ராவுக்கு இந்த மாதிரி எதிர்பாராம எப்படி திடீர் குண மாற்றம் ஏற்பட்டுச்சோ, அதே போல என்னைக்காச்சும் ஒருநாள் அவ மறுபடியும் அதிசயம்போல பழைய அன்பான சித்ராவா மாறுவாங்குற நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்கு. அவளை ஒரு மனநோயாளியா நினைச்சு அனுதாபத்தோடதான் அவளைப் பார்த்தேனே தவிர அவளை வெறுக்குறதுக்கு என் அறிவு இடம் குடுக்கலே. ஆனா என்னைச் சுத்தி உள்ளவங்க என் சிரிச்ச முகத்தைப் பார்த்து சந்தேகப்படுறதுலே தப்பே இல்லே... என்னோட மகிழ்ச்சிகரமான கற்பனை வாழ்க்கையைப் பத்தி அவங் களுக்கு என்ன தெரியும்?''.

புகழேந்தி தனது கற்பனை வாழ்க்கையின் மர்மத்தை இப்போது உடைத்தபொழுது அந்த உண்மையை நான் ஜீரணிக்கவில்லை என்பதும் என் மனதிற்குள் அவநம்பிக்கை முளைத்துவிட்டது என்பதும் என் முக மாற்றத்தை வைத்தே புத்திசாலியான புகழ் புரிந்துகொண்டார்.

""என்ன சார்... போலீஸ்காரங்க பொய்க்கேசு போடுவாங்கன்னு சொல்ற மாதிரி நான் சொன்னதையும்

அந்த லிஸ்ட்லே சேர்த்துட்டீங்களா?''.

""அப்படி இல்லே புகழேந்தி. உங்களுடைய இந்த மானசீகமான வாழ்க்கை மட்டும் நடைமுறைக்கு சாத்தியம்னா, உங்களை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு யாருமே விவாகரத் துக்காக கோர்ட்டுக்கு ஓடமாட்டாங்க. மொத்தத்துலே புருஷன் பெஞ்சாதி பிரிவுக்கே உலகத்துலே அவசியம் இல்லாமப் போயிடும்''.

""சார்... நீங்க எந்த வெளிநாட்டுக்காவது போயிருக்கீங்களா?''.

""போனதில்லே... ஏன் கேக்குறீங்க?''.

""நீங்க போனதில்லே, பார்த்ததில்லேங்குறதுக்காக, இந்த ஜப்பான், சைனா, ரஷ்யா, அமெரிக்கா எல்லாம் இந்த பூமியிலே இல்லேன்னு ஆயிருமா?''.

""இது விதண்டாவாதம்''.

""அப்ப, சுய உணர்வோட நான் வாழ்ற கற்பனை வாழ்க்கை மட்டும் உங்களுக்கு சாத்தியமில்லாத ஒண்ணாகவும் கட்டுக்கதையாகவும் ஏன் தோணுது? பல வருஷங்களுக்கு முன்னாலே, கால் இல்லாத ஒரு மனிதனுடைய "ஒலிம் பிக்ஸ்லே ஓடணும்'ங்குற எண்ணத்தை சாத்தியமில்லாத ஒண்ணுன்னுதான் எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. ஆனா கால்கள் இல்லாத "ஆஸ்கர் பிஸ்டோரி யஸ்' செயற்கைக் கால்களோட ஓடி, போன ரெண்டுமுறை  தனக்கான பிரிவுள்ள ஒலிம்பிக்ஸ்லே உலக சாதனை படைச்சப்ப, ஆச்சரியப்பட்ட உலகத்துல நீங்களும் ஒருத்தர். இல்லியா சார்? என்னுடைய செயற்கையான வாழ்க்கைக் கான நியாயத்தை மட்டும் நீங்க புரிஞ்சுக்கிட்டா, என் கற்பனை உலகம் எனக்கு எப்படி சாத்தியமாச்சுன்னு தெரிஞ்சுக்குவீங்க. துரதிர்ஷ்ட வசமா என் அன்பு மனைவி சித்ரா இப்படி வேற ஒருத்தியா மாறினதைப் பொறுக்காம அவளை நான் பொறந்த வீட்டுக்குத் துரத்தி அடிக்கலே. இந்த விவாகரத்தைப் பத்தி நான் கற்பனைகூடப் பண்ணதில்லே. இன்னொரு பெண் ணைத் தேடி நான் ஓடவும் இல்லே... இதெல்லாம் எப்படி எனக்கு சாத்தியமாச்சு? இப்பவும் என் சித்ராவெ நேசிக்கிறேன். அவளுக்காகப் பரிதாபப்படுறேன். மறுபடியும் பழைய சித்ராவா அவ ஒருநாள் புதுப்பிறவி எடுப்பான்னு முழு நம்பிக்கையோட இருக்கேன். அந்த அற்புதமான நாள் வரும்போது வரட்டும்னு நான் முடிவு எடுத்தப்பதான்,

அப்படி ஒரு கனவு எனக்கு வந்துச்சு.''

""பகல் கனவா?''.

""இல்லே சார்... சத்தியமா இல்லே... நான் ஆரம்ப காலத்து அன்பான சித்ராவ நினைச்சபடியே தூங்கப்போன ஒரு ராத்திரிதான் அந்த மாதிரி விநோதக் கனவு கண்டேன். எங்க ஊர் வயக்காட்டு வேப்பமரத்தடியிலே நான் களைச்சுப்போய் உக்காந்திருக்கிற மாதிரியும், என் பக்கத்துலே என் மனைவிபோல ஒரு பெண்- முகம் தெளிவாத் தெரியலே- எனக்கு நெருக்கமா உட்கார்ந்தபடி ஆசையோட உரிமை யோட என் கைவிரல்களை எடுத்து நீவி விடுறா. இப்படி அந்தக் கனவுலே வந்தவ மாதிரித்தான் என் சித்ராவும் நாங்க காதலிச்ச காலத்துலேயும், கல்யாணம் பண்ணிக்கிட்டப்பவும் என் கைவிரல்களை நீவிவிட்டு சந்தோஷப்படுவா.

அதே கனவுல சித்ராவும் தூரத்துலே நின்னு ஆடுங்களை மேய்ச்சபடி எங்க ரெண்டுபேரையும் பார்த்து ஏதோ பரிகாசம் பண்ணிச் சிரிக்கிறா.  ஆனா என் மனைவியாக என்னோட இருக்கறவள் என் விரல்களை நீவி விடுறதை நிறுத்தலே... அப்போ சித்ராவின் முரட்டு ஆடு ஒன்று எங்களைப் பார்த்து முட்டுவதுபோல பாய்ந்து வருகிறது. அவ்வளவுதான், கனவு மறைஞ்சிடுச்சு. விடிந்தபிறகும் அந்தக் கனவு எனக்கு இனம்புரியாத ஒருவித ஆறுதலைக் கொடுப் பதுபோல உணர்ந்தேன். நம்முடைய கஷ்டங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் சொல்லி நிம்மதி அடைகிறோமே...!

அதுபோலவே... இன்னார் முகம் என்று சொல்ல முடியாத படி அந்தக் கனவில் என் மனைவியாக வந்தவள் எனக் குள்ளிருந்த மன இறுக்கத்தைத் தளர்த்தி விட்டாள் என்றுதான் சொல்வேன். பிறகு அந்தக் கனவு மனைவியே பகலிலும் எனக்கான பணிவிடைகளை ஆத்மார்த்தமான அன்போடும் பரிவோடும் செல்வதுபோல நான் விளையாட்டாக கற்பனை செய்ய அந்தக் கற்பனையே எனக் குள் இனம்புரியாத மலர்ச்சியைத் தோற்றுவித்தது. பிறகென்ன? அந்தக் கற்பனையே எனது நிரந்தரமான- செயற்கையான வாழ்க்கையாகிவிட்டது. என் மகிழ்ச்சியும் நிரந்தரமானது; சாத்தியமானது. என் கற்பனை மனைவிக்கு "தேனம்மை' எனப் பெயர் வைத்தேன். என் மனைவி சித்ராவைக்கூட கல்யாணத்திற்கு முன்னால் "தேனம்மை' என்று அழைக்க ஆசைப்பட்டவன் அல்லவா நான்?

தேனம்மை இரவு பகல் எந்நேரமும் என்னிடம் அன்பைப் பொழியும் மனைவியாக வாழ்வதுபோலவும், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத வாழ்வு வாழ்வதாகவும் என் மனம் குதூகலப் பட்டது.

இப்படி என் கற்பனை வாழ்க்கை என்னை எப்போதும் சிரித்தபடி வைத்திருக்க, சித்ரா என்னதான் கூச்சல் போட்டு ரகளை செய்தாலும் அவள் செய்கை எல்லாம் எனக்கு மௌனப்படம் பார்க்கிற மாதிரிதான் ஆனது. இப்படி என் அந்தரங்கம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது என் முகத்திலும் புன்னகையும் மலர்ச்சியும் நிரந்தரமாகிவிட்டது. இந்த என்னுடைய ரகசிய வாழ்க்கை பற்றி வேறு யாருக்கு என்ன தெரியும்? சித்ராவை ஒரு கொடுமைக்காரி என்றும் என்னை ஒரு அப்பாவி என்றும் நினைப்பவர்கள் எப்பேர்ப்பட்ட ஏமாளிகள்? இரவு பகல் எந்நேரமும் தேனம்மை அடிக்கடி என் காதுகளில் இதழ் பதித்து "எல்லாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுங்கள். உங்களுக்கு எந்தக் குறையும் வரவே வராது' என்று மந்திரம் சொல்லும்போதெல்லாம் பழைய சித்ராவைத்தான் தேனம்மை எனக்கு நினைவூட்டுவாள். இப்போதும் சித்ராவை நான் நேசிப்பதற்கு இந்தக் கற்பனை தேனம்மைதான் காரணம்...''.

""வீட்டுலே உங்களுக்குச் சமைச்சுப் பரிமாறுறதும் அந்தத் தேனம்மை தானா புகழ்?''.

""ஏன் சார் சுத்தி வளைக்கிறீங்க. இப்படி? நேரிடையாவே கேளுங்களேன். கனவுலே மனைவியாத் தெரிஞ்சவளை தேனம்மைன்னு பேர் வச்ச குடும்பம் நடத்துறதாச் சொல்றியே. நீ சிரிச்சபடி வாழ்றதுக்கு அவ தான்னு வேறே கதை விடுறியே... இப்படி எல்லாம் பித்துக் குளித்தனமாய் பேசுறதுக்கு உனக்கு வெக்கமா இல்லே?ன்னு கேக்க நினைக்கிறீங்க...

இல்லியா சார்''.

""நோ... நோ... அப்படி இல்லே புகழேந்தி''.

""இப்படி நீங்கள் இல்லேன்னு சொல்றது என் மேலே நீங்க வச்சிருக்கிற மரியாதையாலே சார். எனக் குப் புரியாதா என்ன. ஏன் சார்... "திருப்பதிக்குப் போய் ஏழுமலையானை வேண்டிக் கிட்டேன். என் வியாதி குண மாயிடுச்சு. வேளாங்கண்ணி போனேன், என் கஷ்டமெல் லாம் நீங்கிடுச்சு. பழனிக்குப் போய் நேந்துக்கிட்டேன். கோர்ட்டுலே என் கேஸ் ஜெயிச்சிடுச்சு...' இப்படி ஒவ்வொருத் தரும் தங்களோட கஷ்டம் தீர்ந்ததுக்கு ஆளுக்கொரு கடவுள் பேரைச் சொல்லுவாங்க. நீங்களும் நம்புவீங்க. ஆனா நான் உண்டாக்கின தேனம்மை எனக்கு சந்தோஷத்தைக் குடுக்கு றாள்னு சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்க. எல்லா தெய்வங்களுக்கும் பேர் வச்சதே நாம்பதான் சார்... இப்ப நான் ஒரு தெய்வத்துக்கு தேனம்மைன்னு பேர் வச்சேன். நீங்க பரிகாசமாப் பார்க்குறீங்க. இதையே நான் கொஞ்சம் மாத்தி பக்கத்து ஊருலே இருக்குற "தேனாண்ட அம்மன்' கோயிலுக்குப் போயி தினமும் விளக்கு ஏத்துனேன்.

அதுதான் என்னோட சந்தோஷத்துக்கும் சிரிப்புக்கும் காரணம்னு சொல்லியிருந்தா நம்புவீங்க, இல்லே?''

""புகழேந்தி... என் கேள்விகள் எல்லாம் வெளிச்சத்தை அதிகமாக்க விளக்கின் திரியைத் தூண்டி விடுகிற மாதிரிதான்... இப்பொழுது நான் உங்களிடமிருந்து இன்னும் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறேன். தேனம்மையுடன் நேற்று வரை மகிழ்ச்சிகரமாக இருந்த நீங்கள் இன்று திடீரென

அந்த விளக்கே அணைந்தமாதிரி விரக்தியோடு என்னிடம் வந்தது ஏன்?''.""நேத்து ராத்திரி என் தேனம்மை இறந்துட்டாள் சார்''.

""புகழேந்தி...?!''

""கற்பனை மனைவி எப்படி சாக முடியும்னுதானே நினைக்கிறீங்க? கனவுல வந்த பெண்ணைத்தானே என் மனைவியா பாவிச்சு ஏத்துக்கிட்டேன். அப்போ, கனவுலே தேனம்மை இறந்ததையும் ஏத்துக்க வேண்டியவன்தானே நான்?''.

""அந்தக் கற்பனைப் பெண்ணுக்கு நீங்கள் நினைத்தால் உயிர் கொடுக்கலாமே?''.

""தேனம்மையைக் கொன்றவனே நான்தான் சார்...

அவளுக்கு நானே எப்படி உயிர் கொடுக்க முடியும்?''.

""எனக்குப் புரியலே''.

""கடந்த ரெண்டு வருஷமா என்னை சந்தோஷமா வச்சிருந்த தேனம்மை நேத்து ராத்திரிகூட "எந்தக் கவலையும் இல்லாமத் தூக்குங்க ராஜா' என்று தட்டிக் கொடுத்துதான் என்னைத் தூங்க வைத்தாள். விடியல் கருக்கலில் ஒரு கனவு. அந்தக் கனவில் தேனம்மை இரண்டு பெண்களாக எனக்கு மாறி மாறித் தெரிகிறாள். என்னைப் பார்த்து ஆத்திரப்பட்டுச் சண்டையிடும்போது அவள் சித்ராபோலவும், அவளே எனக்கருகில் வந்து சிரிக்கும் போது தேனம்மையாகவும் தெரிகிறாள். நான் குழப்ப மடைகிறேன். இனிமேலும் உன்னோடு வாழத் தயாராய் இல்லை. உன்னுடைய ஜாதக தோஷத்தினால்தானே என் பிள்ளை செத்தது. நீ ஒரு கொலைகாரன். நிரந்தரமாக உன்னை விட்டுப் போகிறேன். என் பின்னால் வராதே...' என்று அவள் சித்ராவாக மாறிக் கூச்சலிட்டபடி தலைவிரிகோலமாகத் தெருவைப் பார்த்து ஓடுகிறாள்.

தெருவில் படுவேகமாகப் போய்க்கொண்டிருக்கும் வாகனங்களில் அடிபட்டுச் சாகவேண்டும் என்பதற்காகவே தெருவின் குறுக்கே வேகமாகப் போகிறாள். என்னால் சித்ராவைப் பின்தொடர முடியவில்லை. என் கால்கள் கட்டிப் போட்டதுபோல  உணர்கிறேன். "போகாதே' என்று கத்திக் கூப்பிடவும் எனக்கு வாய் வரவில்லை. ஆணி அடித்ததுபோல் நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்த போதுதான் வெளியே ஒரு லாரியில் சித்ரா அடிபட்டுத் தூக்கி எறியப் படுகிறாள். இப்போது என் கால்கள் நகரத் தொடங்க தெருவிற்கு ஓடுகிறேன். ரத்தச் சேற்றில் இறந்து கிடக்கும் சித்ராவைத் தூக்கி என் மடியில் கிடத்தி  அவள் முகத்தைப் பார்க்கிறேன். அது சித்ரா இல்லை. தேனம்மை. "எல்லாரையும் நேசியுங்கள்' என்பதுபோல அவள் முகத்தில் அந்தப் புன்னகை மட்டும் உயிரோடு இருக்கிறது.

"எந்தப் பிரதிபலனும் பாராமல் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்' என்று இரண்டாண்டு காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த தேனம்மையின் மந்திரத்தை மறந்துவிட்டு, கனவில் தெருவை நோக்கி ஓடிய சித்ராவைத் தடுத்து நிறுத்த முடியாமல், "செத்தால் சாகட்டும்' என்று நினைத்து நின்று விட்டேனா? அப்படியா அவளை நான் வெறுத்தேன்? கிடையவே கிடையாது. தெருவில் அடிபட்டுச் செத்தவள் சித்ரா என்று பதறித்தானே அவளை எடுத்து என் மடிமீது போட்டேன். அப்புறம்தானே இறந்தவள் தேனம்மை என்று தெரிந்தது. அத்துடன் அந்தக் கனவு கலையவில்லை. தொடர்கிறது. ஒரு  மயானத்தில் நான் கண்ணீருடன் நிற்கிறேன். எனக்கு அன்பைப் போதித்த தேவதை சிதையில் எரிந்துகொண்டிருக்கிறாள்.

அப்போது, யாரோ ஒரு பெண் ணின் வளையல்கரங்கள் என் கண்ணீரைத் துடைத்து விடுகிறது. அவள் யாரென்று எனக்குத்  தெரியவில்லை. எரியும் கொள்ளியிலிருந்து ஒரு தீப்பொறி பறந்து வந்து என் முகத்தில் விழுந்து நீர்த் துளியாக மாறுகிறது. இத்து டன் அந்தக் கனவும் செத்து விட்டது. அவசரமாக எழுந்து உட்கார்ந்தேன். என் உடம்பெல்லாம் நடுங்கியது. ஏதோ கருகித் தீய்ந்த நெடி என்னைச் சுற்றிலும் பரவி யிருப்பது மாதிரி உணர்வு. கொஞ்சம் தள்ளியிருந்த சித்ரா வின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தேன். அங்கே சித்ரா வைக் காணோம். அவளைத் தேடவேண்டும் என்ற வழக் கத்திற்கு மாறான அவசரத் தூண்டுதல் எனக்குள்ளே.

அடுக்களைப் பக்கம் போனேன். அங்கேயும் அவள் இல்லை. புழக்கடையிலோ, வாசல் பக்கமோ எங்கேயும் அவள் தட்டுப் படவில்லை. என்னை மீறிய பதற்றம் எனக்குள் தொற்றிக் கொண்டது.

ஸ்டோர் ரூம் கதவுகள் திறந்து கிடந்தன. அவநம்பிக்கை யோடு எட்டிப் பார்த்தேன். அங்கே இருட்டில் சுவர் ஓரமாக தரையில் உட்கார்ந்து மேல் நோக்கி மடக்கியிருந்த கால் களைக் கட்டிக்கொண்டு முழங்கால்களில் முகம் பதித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள் சித்ரா. நான் எதுவும் கேட்கவில்லை. என் கனவுதான் என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறதே... கனவில் இடுகாடுவரை போய்த் திரும்பியிருக்கிறேன் என்பதால் அவசரமாகக் குளித்து முடித்தேன். இந்த இரண்டு வருஷத்தில் முதன்முறையாக என் தேனம்மை பக்கத்தில் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தேன்.''

புகழேந்தியிடம் உடனே என்னால் எதுவும் பேசமுடிய வில்லை. தேனம்மை பற்றி அவர் கடைசியாகக் கண்ட கனவு என்னையும் கொஞ்சம் பதற்றம் கொள்ள வைத்தது. அதேசமயம் புகழேந்தியின் வினோத சொப்பனம் என்னை யோசிக்கவும் வைத்தது. தேனம்மையே சித்ராபோல ஒரே உருவத்தில் மாறிமாறி அநிதக் கனவில் தெரிந்ததாக புகழேந்தி சொன்னார். ஆக, கனவில் இரண்டு பெண்கள் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது. தேனம்மையின் அன்பு நிறைந்த உள்ளம் ஆரம்ப காலத்து சித்ராவைப்போலவே இருந்ததாக புகழேந்தி சொல்லியிருக்கிறார். தனக்குப் பரிச்சய மான எந்த ஒரு பெண்ணின் முகத்தையும் தேனம்மைக்கு ஒட்டவைத்துப் பார்க்காதது புகழேந்தியின் கண்ணியம். சித்ராவிற்கும் தேனம்மைக்கும் உடல் அமைப்பில் என்ன மாதிரி ஒற்றுமை அல்லது வித்தியாசம் இருந்தது என்ற நுணுக்கங்கள் எல்லாம் புகழேந்தி சொல்லவே இல்லை. அதை அவருடைய நாகரீகமாக எடுத்துக்கொள்ளலாம். சித்ராவிட மும் தேனம்மையிடமும் அவர் கண்ட பேரழகு அவர்களின் பரிசுத்தமான அன்பு மட்டும்தான் என்பதை புகழேந்தியின் வாக்குமூலம் மிக அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது. இந்த ஒரு வலுவான மன ஓட்டத்தின்படி பார்த்தால் அன்பே உருவான அந்தப் பழைய சித்ராவைத்தான் அவர் தேனம்மையாக கற்பனையில் உருவாக்கிக்கொண்டு, "இப்படி ஒருத்தியாக

 -அதாவது அந்தப் பழைய சித்ராவாக இன்றைய சித்ரா எப்போது மாறுவாள்?' என்ற அவரது ஆழ்மன ஏக்கமே அவரது கற்பனை வாழ்க்கையாக அமைந்துவிட்டதா? இந்தக் கற்பனை வாழ்விற்கு தூண்டுதலாக அவர் சொன்ன கனவில்கூட அவரது விரல்களை நீவிவிட்ட "மனைவி'யைப் பற்றிச் சொல்லும்போதுகூட "ஆரம்பத்தில் சித்ராவும் இப்படித்தான் என் விரல்களை ஆசையாக நீவிவிடுவாள் என்று குறிப்பிட்டாரே... நேற்று ராத்திரி அவருக்கு வந்த விபரீதமான கனவுகூட அவரது ஆழ்மன பயத்தின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.

தன் மனதில் இருப்பதையெல்லாம் என்னிடம் இறக்கி வைத்துவிட்டு என் முன்னால் புகழேந்தி அமைதியாக உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றினாலும், அது உண்மை யான அமைதி அல்ல என்பதும், அதற்கான காரணமும் எனக்கு விளங்குகிறது.

""புகழேந்தி... உங்களிடம் அதீத அன்பு காட்டிய தேனம்மையை நினைத்துக்கொண்டு உடனே வீட்டிற்குச் செல்லுங்கள். சித்ரா இப்போதும் தனி அறையில் அமைதி யாக உட்கார்ந்திருந்தால், ஏன், என்னாச்சு... உடம்புக்கு ஏதாவது?'' என்று கனிவுடன் விசாரியுங்கள். கனவில் தெருவை நோக்கி ஓடிய சித்ராவைத் தடுக்க இயலாமல் நின்றுவிட்டதுபோல இப்போதும் நடந்துகொள்ளாதீர்கள். உடனே புறப்படுங்கள். பிறகு மறக்காமல் எனக்கு போன் பண்ணி விவரம் சொல்லுங்கள். வழக்கத்திற்கு மாறாக சித்ராவின் இன்றைய அமைதி எனக்குப் பயத்தைக் கொடுக்கி றது'. என் வேண்டுகோளை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல உடனே புறப்பட்டார் புகழேந்தி.

புகழேந்தி போன பிறகு புகழேந்தி சொன்னதையெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை திரட்டி வைத்துக்கொண்டு என் மனம் ஏதேதோ கற்பனைகளை யூகிக்கத் தொடங்கியது.

கொத்தமங்கலத்தில் சித்ராவின் குடும்பத்தைப்போல புகழேந்தியின் குடும்பம் வசதி படைத்த ஒன்றாக இருக்க முடியாது. அதனால்தான் போலீஸ் வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டாயம் புகழேந்திக்கு வந்தி ருக்கிறது. சித்ராவின் தகப்பனாருடைய ஜாதக ஜோசிய மெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அவர் வசதி யானவர் என்பதால் சித்ராவிற்குப் பெரிய இடத்து மாப்பிள்ளை யைத்தான் எதிர்பார்த்திருப்பார். ஆனால் காதலோ அவர் களைக் கணவனும் மனைவியும்போல் பழகவைத்துவிட்டது. மகள் சித்ரா கருவைச் சுமக்கிறாள் என்று அறிய நேர்ந்ததும் அவரால், அவர்களின் கல்யாணத்தை தடுக்க முடியாது போயிருக்கும். ஆனால் குழந்தை பிறந்தவுடனேயே  இறந்த தும் சித்ரா மனம் நொறுங்கிப்போன தருணத்தில், மகளை ஆறுதல் படுத்தும் சாக்கில் புகழேந்தியின் ஜாதக தோஷம் தான் குழந்தை இறக்கக் காரணம் என்பதை எல்லாம் ஒன்றுக்கு பத்தாகச் சொல்லி மருமகன் மீதிருந்த வெறுப்பையும் ஆத்தி ரத்தையும் காட்டியிருப்பார். குழந்தையைப் பறிகொடுத்து நொந்திருந்த சித்ராவின் பலவீனமான மனம், அப்பாவின் ஜாதக விளக்கத்தை நம்பியதன் விளைவு புகழேந்திதான் கொலைகாரன் என நம்பிவிட்டாள். மருமகனைப் பழிவாங்கு வதாக நினைத்து மகளிடம் திரும்பத் திரும்ப புகழேந்தி

அவளுக்குப் பொருத்தமில்லாத கணவன் என்பதாக அவர் சொன்ன கட்டுக்கதைகள் எல்லாம் உலகம் அறியாத அந்தப் பெண்ணை மனம் பேதலிக்கச் செய்திருக்க வேண்டும்.

இப்படி நேரான வழியில் போன என் கற்பனை விபரீத மாகவும் யோசித்தது. புகழேந்தியிடம் சண்டை போடுகிறவள் காலனிப் பெண்களிடம் அசாத்திய அன்பு காட்டி அவர் களை அதிர்ச்சியடைய வைத்ததாக புகழேந்தி சொன்னாரே. வீட்டினுள் ஒருத்தியாகவும், உலகத்திற்கு ஒருத்தியாகவும் இரட்டை வேடம் போடுவது மனச்சிதைவு கொண்ட ஒரு பெண்ணிற்கு சாத்தியமா? இதுதான் எனது வினோதக் கற்பனைக்கு வழிகாட்டியது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு தேனம்மையுடன் இரண்டு வருடங்கள் புகழேந்தி வாழ்ந்ததுபோல... (இந்த நொடியே எல்லாம் புரிந்துகொண்டு வாசகர்கள் மனதில் கசப்பு உதயமாகியிருக்கும். சித்ராவை இழிவுபடுத்தும் வக்கிரம் எனக்கு இல்லை.)

சித்ராவும் ஏன் ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்ந்திருக்கக் கூடாது? மருமகன் தகுதியைக் கேவலமாகப் பேசிய அப்பா விற்குப் பதிலடியாக, அவளது  ஆழ்மனம் சாதாரண கான்ஸ்டபிளான புகழேந்தியை ஒரு உதவி கமிஷனராக கற்பித்துக்கொண்டு, சித்ராவின் மடி நிறையச் சம்பாதித்துக் கொட்டும் கணவனாக இருக்கும் புகழேந்தியின் பெருமைக் குரிய மனைவியாகப் பூரிப்படைந்தவளாய் காலனிப் பெண்களிடம் எந்தக் குறையும் இல்லாதவளாக இனிமை யாகப் பழகியிருக்கலாம். "எல்லாம் நம்ம மனசைப் பொறுத்தது' என்று சும்மாவா சொல்கிறார்கள்.

உதவி கமிஷனராக புகழேந்தி இப்போது கை நிறையச் சம்பாதிக்கிறான் என்ற பொய்யான மகிழ்ச்சியில் தனக்குப் பிறந்த குழந்தையின் இழப்பைக் கூட அவள் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கலாம். அல்லது மறந்திருக்கலாம்.

ஆனால் டியூட்டி முடிந்து வெறும் கான்ஸ்டபிள் புகழேந்தியாக கணவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவளின் கனவு கள் இடிந்து நொறுங்கி, தகப்பனால் புருஷனை வெறுக்கப் பழகிவிட்ட சித்ராவாக மாறிவிடுகிறாளா? புகழேந்தி சொன்னதையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படி நான் தர்க்க சாஸ்திரத்திற்கு முரணாக யோசிப்பது முட்டாள்த்தனமாக இருக்கலாம். ஆனால் சித்ரா ஒரு விசித்திரமான மன நோயாளி. அதே சமயம், நேற்று ராத்திரி புகழேந்திக்கு வந்த விபரீதக் கனவு மாதிரியே சித்ராவிற்கும் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே? அவளது அந்தக் கனவில் முதல் முறையாக சித்ராவை, புகழேந்தி கடுமையாகத் திட்டியிருக்கலாம்.

"இனிமேலும் உன்னைப்போல ஒரு அரக்கியிடம் நான் வாழ விரும்பவில்லை' என்று கூச்சலிட்டுக்கொண்டு தெருவை நோக்கி ஓடியிருக்கலாம். லாரியில் அடிபட்டும்

அவன் செத்திருக்கலாம். பின்னாலேயே பதறி ஓடிய சித்ரா இறந்த புருஷனை மடியில் போட்டுக் கதறியிருக்கலாம். மயானத்தில் அவன் சிதையில் எரியும் கொடுமையைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு அவள் அழுது மயங்கி யிருக்கலாம்.

-மிகப் மிகப் புராதானச் சிறப்பு கொண்டது மனிதனின் கற்பனைதான் என்றாலும், என் கற்பனை ஏன் இப்படித் தாறுமாறாகப் போகிறது?

புகழேந்தியிடமிருந்து நிச்சயம் போன்வரும். அப்போது இந்தக் கற்பனைக்கு எல்லாம் முடிவு தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம். எந்த ஒரு கதைக்கும் இது தான் முடிவு  என்று ஒன்று இருக்கவே முடியாது. முடிவு என்று சொல்லப்படும் இடத்திலிருந்து புதிதாக இன்னொன்று ஆரம்பமாகும் என்பது என்னுடைய நம்பிக்கை.

போன் ஒலிக்கிறது. ஆமாம்... புகழேந்தியேதான்.

""வணக்கம்... சொல்லுங்க மிஸ்டர் புகழேந்தி... சொல்லுங்க.

ம்... ம்... அப்படியா? அப்படியா...?! அப்புறம்...?''






















நன்றி - நக்கீரன் -