வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய காணாமல் போன புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வருவாய்த்துறை அலுவலரிடமோ தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு அமைச்சர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டும், நிவாரணம் வழங்கியும் வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளி மாணவ - மாணவியர்களின் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள் வெள்ளத்தால் காணாமல் போனதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் முதல்வரின் உத்தரவின்படி, இதுவரை மாவட்டத்தில் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு 10,769 புத்தகங்களும், 4,555 சீருடைகளும், 687 புத்தக பைகளும், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டை தவறவிட்டவர்கள் வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 974 குடும்ப அட்டை வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்த ரசீதினை வழங்கி குடும்ப அட்டை நகல்கள் அச்சிடப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களது சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மகளிர்குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கணக்கெடுப்பு முடிந்த பின்பு சான்றிதழ்கள் காணாமல் போனவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய காணாமல் போன புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் விவரங்களை கணக்கெடுத்து வருபவர்களிடமோ அல்லது சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வருவாய்த்துறை அலுவலரிடமோ தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் கேட்டுக்கொள்கிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் அளிப்பு
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் சீருடைகளை இன்று (21.11.2015) திருப்பாதிரிபுலியூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கிய பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
83 பேருக்கு விலையில்லா பொருட்கள்
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகளை இழந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் 10,769 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இன்று 83 பேருக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
287 பேருக்கு நகல் குடும்ப அட்டைகள்
வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த நபர்களுக்கு நகல் குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில், மொத்தம் 984 குடும்ப அட்டைகள் வேண்டி மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அவற்றில் முதற்கட்டமாக 287 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நபர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் நகல் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போர்க்கால நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது'' என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
thanks the hindu